valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 13 October 2022

 ஷீர்டி சாயி சத்சரிதம்


அன்னதானம் இல்லாது செய்யப்படும் தருமத்தைப் பிரேமை இல்லாத பஜனைக்கும் குங்குமத் திலகம் இட்டுக்கொள்ளாத சுமங்கலிக்கும் குரலினிமை இல்லாதவனின் பாட்டுக்கும் உப்பு இடப்படாத மோருக்கும் ஒப்பிடலாம்.

அன்னதானம் செய்யும்போது, வியாதியஸ்தர்களுக்கும் பலம் குன்றியவர்களுக்கும் குருடர்களுக்கும் முடவர்களுக்கும் செவிடர்களுக்கும் ஏழை எளியவர்களுக்கும் முதலில் உணவு அளிக்கப்படவேண்டும். உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் அதன் பின்னரே அளிக்க வேண்டும்.

இப்பொழுது, பாபாவின் ஹண்டியைப்பற்றிய விவரங்களை அறிய ஆர்வமாக இருப்பவர்களை பிரீதிசெய்யும் வகையில் விவரம் சொல்ல முயல்கிறேன்.

மசூதியின் முற்றத்தில் ஒரு பெரிய மண் அடுப்பு நிறுவப்பட்டிருந்தது. அதன்மீது ஒரு வாயகன்ற பாத்திரம் வைக்கப்பட்டுத் தேவையான தண்ணீர் நிரப்பப்படும்.

சிலசமயங்களில் சர்க்கரைப் பொங்கலும் சிலசமயங்களில் மாமிசம் கலந்த புலாவும் செய்யப்படும். சிலசமயம் மாவைப் பிசைந்து வடைபோல் கையால் உருச்செய்து பருப்பு சூப்புடன் சேர்த்து சமையல் செய்யப்படும்.

சிலசமயங்களில், கொதிக்கும் பருப்பு சூப்பில், மாவால் செய்யப்பட்ட பானக்காக்களையோ ரோடக்காக்களையோ பாபா லாவகமாக மிதக்க விடுவார்.

மசாலாப் பொருள்களைத் தாமே அம்மியில் அரைத்துச் சமையலுக்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்வார். பயத்தம் பருப்பு மாவால் தம் கையாலேயே சின்னச் சின்ன வடைகள் தட்டி லாவகமாக ஹண்டியில் நழுவ விடுவார்.

சொர்க்கம் கிடைக்கவேண்டுமென்ற நோக்கத்தில் சிலர், மிருகங்களை சடங்குபூர்வமாக கொன்று யாகத்தீயில் சமர்பிக்கின்றனர். பிராமணர்களும் இம் மாமிசத்தில் சிறிது பிரசாதமாக உண்கின்றனர். இதற்கு 'சாஸ்திரத்தால் அனுமதிக்கப்பட்ட ஹிம்சை' என்று பெயர்.

அவ்வாறே, பாபாவும் முல்லாவுக்குச் சொல்லியனுப்புவார். இஸ்லாமிய சாஸ்திர விதிகளின்படி குரான் மந்திரங்களை ஓதிய பின்னரே, விதிக்கப்பட்ட சடங்குமுறையில் ஆடு கொல்லப்படும்.

ஹண்டிகள் இரண்டு இருந்தன; ஒன்று சிறியது. மற்றது பெரியது. இந்த ஹண்டிகளில் சமைத்து, அன்னத்தை நாடியவர்களுக்குப் போஜனம் செய்துவைத்தார் பாபா.

இரண்டு ஹண்டிகளில் சிறியது, ஐம்பது ஜனங்களுக்கு உணவளிக்கக்கூடிய கொள்ளளவு வாய்ந்தது. நூறு ஜனங்களுக்கு உணவளித்த பிறகும், சிறிது மீதம் இருக்கக்கூடிய அளவிற்குப் பெரிய ஹண்டி இருந்தது.

அவரே மளிகைக்கடைக்கு சென்று சாமான்கள் வாங்கி கணக்கைக் காட்டுவார். கடன் என்ற பேச்சுக்கே இடமில்லை. எப்பொழுதுமே கைமேல் காசுதான்!