valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Friday 6 December 2019

ஷீர்டி சாயி சத்சரிதம்

இக் காரணம் பற்றியே பக்தர்கள் நாமஸ்மரண அப்பியாசம் செய்யும்படி ஊக்குவிக்கப் படுகின்றனர். கடைசி நேரம் வரும்போது அரண்டுபோகாமல் பகவானின் நாமத்தைப் பற்றிக்கொள்ளலாம்.

வாழ்நாள் முழுவதும் விழிப்புடன் இருந்துவிட்டுக் கடைசி நேரத்தில் ஒரு மனிதன் தூங்கிவிட்டானானால், எந்த முக்கியமான காரணத்திற்காக சத்சங்கம் வளர்த்தானோ, அந்த சத்சங்கம் உபயோகமின்றி போகிறது.

ஆகவே, கள்ளங்கபடமற்ற, எளிமையான பக்தர்கள் தங்களுடைய வாழ்வை ஞானியரின் கைகளில் ஒப்படைத்துவிடுகிறார்கள். நமக்கு மறுபிறவி உண்டா இல்லையா என்பது அவர்களுக்குத் தெரியும். அந்திமகாலத்தில் ஞானியரே நமக்குத் துணை.

இது சம்பந்தமாக, சாயியின் சன்னிதியிலேயே நடந்த ஒரு அருமையான நிகழ்ச்சியையும் கேளுங்கள். பக்தர்களின்பால் சாயி எவ்வளவு வாத்சல்யம் (தாயன்பு) காட்டினார் என்பதைக் காண்பீர்கள்.

மதராஸ் எங்கே, ஷீர்டி எங்கே, இமயமலையில் இருக்கும் மானஸ சரோவர் எங்கே! ஆயினும் பக்தரின் ஆயுள் முடிந்துவிட்டதென்று தெரிந்தால், பாபா அவரை எப்படியாவது இழுத்துத் தம்முடைய பாதங்களுக்குக் கொண்டுவருவார்.

ஒரு சமயம், விஜயானந்த் என்ற பெயர்கொண்ட சந்நியாசி மதராஸிலிருந்து மானச சரோவருக்கு மிகுந்த உற்சாகத்துடன் புனிதப் பயணம் கிளம்பினார்.

ஒரு ஜப்பானிய யாத்திரிகர் வைத்திருந்த வரைபடத்தை பார்த்துவிட்டு, மானஸ சரோவர் ஏரியை தரிசனம் செய்தே தீருவது என்று உறுதி பூண்டார்.

வழியில் பாபாவின் பிரபாவத்தை கேள்விப்பட்டு ஷிரிடிக்கு வந்தார். பாபாவை தரிசனம் செய்யவேண்டுமென்ற பேராவல் கொண்டு அவர் வாழ்ந்துகொண்டிருந்த இடத்தைத் தேடிக்கொண்டு வந்தார்.

சாயிமஹாராஜ் ஒரு பெரிய ஞானி, உலகளாவிய கீர்த்தி பெற்றவர், என்று கேள்விப்பட்டு அவரை தரிசனம் செய்வதற்காகத் தமது புனிதப் பயணத்தை ஷிரிடியில் நிறுத்தினார்.

அந்த சமயத்தில், ஹரித்துவாரைச் சேர்ந்த சோமதேவ்ஜி சுவாமி ஷிர்டியில் இருந்தார். பக்தர்கள் கோஷ்டியில் அவர்கள் இருவரின் சந்திப்பு இயல்பாக நேர்ந்தது.

மதராஸ் சந்நியாசி அவரைக் கேட்டார், "மானஸ சரோவர் எவ்வளவு தூரத்தில் இருக்கிறது?" சுவாமி பதில் கூறினார், "கங்கை உற்பத்தியாகும் கங்கோத்திரியிலிருந்து 500 மைல் தூரத்தில் உயரே இருக்கிறது. -

"அங்கே பனிமழை அதிகம். நூறு மைலுக்கு ஒரு பாஷையாக மாறுகிறது. பூட்டானிய மக்களின் சந்தேகங்கள் வேறு. வெளிதேசத்து யாத்திரிகர்கள் பல தொல்லைகளுக்கு உள்ளாகின்றனர்."

சுவாமியிடமிருந்து இந்த விவரங்களை கேட்ட சன்னியாசி மனமுடைந்து போனார். அவருடைய உறுதி கலைந்து கவலையில் மூழ்கினார்.

அவர் சாயி பாபாவை தரிசனம் செய்தார். பாபாவுக்கு நமஸ்காரம் செய்தார். மனம் அமைதியடைந்து மகிழ்ச்சியுற்றார். ஆசனம் போட்டு அருகில் அமர்ந்தார்.