valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 23 July 2020

ஷீர்டி சாயி சத்சரிதம் 

என்னுடைய கைகளோ வாயோ நீர்மட்டத்தை எட்டாதவரையில் என்னைக் கிணற்றினுள் தொங்கவிட்டார். -

கிணற்றங்கரையில் ஒரு மரம் இருந்தது. கயிற்றின் மறு நுனி அந்த மரத்தில் கட்டப்பட்டது. குருராயர் சஞ்சலம் ஏதுமின்றி எங்கோ சென்றுவிட்டார். அவர் எங்கே சென்றார் என்பதை யாரறிவார்?-

இவ்வாறு நான்கைந்து மணி நேரம் கழிந்தது; அதன் பின் குரு திரும்பி வந்தார். உடனே என்னை வெளியே எடுத்து, 'நீ நலமாக இருக்கிறாயா?' என்று கேட்டார்.-

நான் பதில் சொன்னேன், 'நான் ஆனந்தம் நிரம்பிவழிந்தேன். நான் அனுபவித்த சுகத்தை என் போன்ற பாமரன் எப்படி வர்ணிக்க முடியும்?'-

குருராயர் என்னுடைய பதிலைக் கேட்டு மகிழ்ச்சியடைந்தார். அவர் என்னுடைய முதுகை வாஞ்சையுடன் தடவிக்கொடுத்து, என்னைத் தம்முடன் வைத்துக் கொண்டார். -

இதை நான் (பாபா) உங்களிடம் சொல்லும்போதே என் மனத்தில் அன்பு அலைமோதுகிறது. பின்னர் குரு என்னைத் தம்முடைய பாடசாலைக்கு அழைத்துச் சென்றார். தாய்ப்பறவை தன் குஞ்சைச் சிறகுகளுக்குள் வைத்துக் காப்பாற்றுவதை போல் என்னை அரவணைத்துப் பாதுகாத்தார். -

ஆஹா! குருவின் பாடசாலை எவ்வளவு கவர்ச்சிகரமானது! நான் என் பெற்றோர்களின் பாசப்பிணைப்பையே மறந்துவிட்டேன். மோகம், மமதை ஆகிய சங்கிலிகளிலிருந்து சுலபமாக விடுபட்டேன்-

கெட்டஆசாபாசங்கள் சகலமும் அறுக்கப்பட்டன. ஆன்மீக முன்னேற்றத்தை தடை செய்யும் பந்தம் வெட்டப்பட்டது. குருவின் உருவத்தைக் கண்களிலேயே நிறுத்தி அவரை அணைத்துக்கொள்ள விரும்பினேன். -

குருவின் பிரதிபிம்பம் எந்நேரமும் கண்களில் வாசம் செய்யாவிட்டால், கண்களை இரண்டு மாமிசக் கோலங்களாகத்தான் கருதவேண்டும். அவருடைய பிம்பம் கண்களில் நிலைக்காதுபோகுமானால், நான் குருடனாக இருப்பதே நல்லது. குருவின் பாடசாலை எனக்கு அவ்வளவு சிறப்பாக அமைந்தது. -

ஒருமுறை அந்தப் பாடசாலையில் காலெடுத்து வைத்தபின், திரும்பிப் போக வேண்டும் என்று நினைக்கும் தூரதிருஷ்டசாலி எவனும் உளனோ! குருராயரே எனக்கு வீடும் குடும்பமும் பெற்றோரும் ஆனார்.-

மற்ற இந்திரியங்களோடு மனமும் சேர்ந்துகொண்டு தம் தம் இடங்களை விட்டுவிட்டு குருவின்மேல் தியானம் செய்வதற்காக என் கண்களில் வந்து தங்கின.-

குருவுக்குப் புறம்பாக வேறெதுவுமின்றி, எல்லாமே குருவாகித் தெரியுமாறு குருவை மாத்திரம் தியானத்தின் இலக்காகக் கொண்டு செய்யப்படும் தியானம், 'அனன்னிய அவதானம்' (மன ஒருமைப்பாடு) என்றழைக்கப்படும்.-

குருவின் சொரூபத்தை தியானம் செய்யும்போது மனமும் புத்தியும் உறைந்து போகின்றன. ஆகவே, அவருடைய திருவடிகளுக்கு வணக்கம் செலுத்திவிட்டு சத்தமில்லாத மௌனத்தில் கரைந்து விட வேண்டும்.-