valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 21 March 2019

ஷீர்டி சாயி சத்சரிதம்

இன்னுமொரு சிட்டுக்குருவியும் பாபாவால் நூல் கட்டி இழுக்கப்பட்டு ஷிர்டிக்கு கொண்டுவரப்பட்டது. பக்தைக்கு நேருக்கு நேராக தரிசனம் செய்யும் நல்லநேரம் வந்தபோது இது நடந்தது. அவ்வம்மையாருடைய அற்புதமான காதையைக் கேளுங்கள்.

இந்தச் சிட்டுக்குருவி ஓர் அன்பார்ந்த பெண்மணி. அவருடைய காதை மிக சுவாரஸ்யமானது. பர்ஹான்ப்பூரில் அவருக்கு ஒரு தெய்வீகக் காட்சி கிடைத்தது; அதில் சாயி மஹாராஜை பார்த்தார்.

அவர் அதற்குமுன் பாபாவைப் பிரத்தியட்சமாக தரிசனம் செய்ததில்லை. ஆயினும், பாபா தம் வீட்டு வாயிற்படிக்கு வந்து, கிச்சடி உணவு தருமாறு கேட்கின்ற காட்சியைக் கனவில் கண்டார்.

உடனே தூக்கத்திலிருந்து எழுந்து வீட்டைச் சுற்றிச் தேடிப்பார்த்தார். வெளியில் யாரும் தென்படவில்லை. எல்லாருக்கும் தம் கனவுக் காட்சியைப்பற்றி ஆவலுடன் தெரிவித்தார்.

அம்மையாரின் கணவர் அப்பொழுது பர்ஹான்ப்பூரிலேயே தபால் இலாகாவில் அதிகாரியாக வேலை பார்த்துவந்தார். பின்னர் அவருக்கு அகோலாவுக்கு பணிமாற்றம் ஏற்பட்டது. அகோலாவுக்கு மாறியவுடன் ஷீர்டி செல்வதற்கு அம்மையார் ஆயத்தம் செய்தார்.

கணவனும் மனைவியும் பக்தி பாவம் மிகுந்தவர்கள். சாயியை தரிசனம் செய்யவேண்டுமென்று பேராவல் கொண்டனர். கனவில் வந்த காட்சியை போற்றி பெருமிதம் அடைந்தனர். சாயியினுடைய லீலை இவ்வுலக நடப்பிற்கு அப்பாற்பட்டதன்றோ!

ஒரு தகுந்த நாளைத் தேர்ந்தெடுத்து இருவரும் ஷிர்டிக்கு கிளம்பினர். வழியில் கோமதி தீர்த்தத்திற்கு (கோதாவரி நதிக்கு) வந்தனம் செலுத்திவிட்டு ஷிர்டிக்கு வந்துசேர்ந்தனர்.

பிரேமையுடன் பாபாவை தரிசனம் செய்து பக்தியுடன் பூஜையும் செய்தனர். பாபாவின் பாதங்களை தினமும் சேவித்துக்கொண்டு மகிழ்ச்சியுடன் திருப்தியுடனும் ஷிர்டியில் தங்கினர்.

இவ்வாறு கணவனும் மனைவியும் ஷிர்டியில் ஆனந்தமாக இரண்டு மாதங்கள் தங்கினர். பாபாவும் அவர்கள் அத்தியந்த பக்தியுடன் அளித்த கிச்சடி போஜனத்தை ஏற்றுக்கொண்டதில் பரிபூரணமாகத் திருப்தியடைந்தார்.

கணவனும் மனைவியும் கிச்சடியை பாபாவுக்கு நைவேத்தியமாக அளிப்பதற்காகவே ஷிர்டிக்குப் பயணமாக வந்திருந்தனர். ஆனால், பதினான்கு நாள்கள் கடந்தும் கிச்சடியை சமர்ப்பணம் செய்யமுடியாத நிலைமையாக இருந்தது.

அப்பெண்மணிக்குத் தாம் செய்துகொண்ட சங்கற்பம் இவ்வாறு காலம் கடந்துகொண்டே போனது பொறுக்கவில்லை. ஆகவே, பதினான்காவது நாள் மதியவேளை வந்தவுடனே கிச்சடியுடன் மசூதிக்கு வந்தார்.

வந்துசேர்ந்தவுடன், பாபா தமது பக்தர்களுடன் உணவருந்த அமர்ந்துவிட்டதை அறிவிக்கும் வகையில் மசூதியில் படுதா போடப்பட்டிருந்ததை கண்டார். 



Sunday 17 March 2019


ஷீர்டி சாயி சத்சரிதம் 

ஷிர்டிக்கு யாராவது செல்வது தெரிந்தால், அவரிடம் மாலை, தக்ஷிணை, ஊதுவத்தி, கற்பூரம் ஆகிய பொருள்களைத் தவறாது கொடுத்தனுப்பும் அளவிற்கு லக்மீச்சந்தின் பக்தி ஆழமாகியது. 

ஷிர்டிக்கு எவர் போனாலும் சரி, அது லக்மீச்சந்துக்கு தெரிந்தவுடனே அவரிடம் இம்மூன்று பொருள்களையும் தக்ஷிணையையும் பாபாவிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்ற வேண்டுகோளுடன் கட்டாயம் கொடுத்தனுப்புவார். 

இதுவரை விவரிக்கப்பட்ட விஜயத்தில்தான், பாபா சாவடிக்குச் செல்லும் இரவு ஒன்றில், அந்தக் கோலாகலத்தைப் பார்க்க லக்மீச்சந்த் சென்றார். திடீரென்று பாபா குக்கிக் குக்கி இருமினார். இருமல் துன்பத்தையளித்து அவரை நிலைதடுமாறச் செய்தது. 

லக்மீச்சந்த் தமக்குள் சொல்லிக்கொண்டார், "ஓ, என்ன வேதனை இந்த இருமல்; ஜனங்களுடைய கண்ணேறுதான் இதற்கு காரணம் என்று தோன்றுகிறது!"

இது லக்மீசந்த்தின் மனத்தில் எழுந்த ஓர் எண்ண அலையே. ஆயினும், அவர் காலையில் மசூதிக்கு வந்தபோது பாபா என்ன சொன்னார் என்னும் அற்புதத்தைப் பாருங்கள். 

மாதவராவும் அப்பொழுது அங்கு வந்திருந்தார். பாபா அவரிடம் தம்மிச்சையாயாக சொன்னார், "நேற்று நான் குக்கி குக்கி இருமி அவஸ்தைப்பட்டேன். இது கண்ணேறு காரணமாக ஏற்பட்டிருக்குமோ?-

"யாரோ ஒருவன் என்மீது கெட்ட திருஷ்டியை போட்டுவிட்டான் போலிருக்கிறது. அதனால்தான் இந்த இருமல் என் உயிரை வாங்குகிறது".

லக்மீசந்த்தின் மனத்தில் மின்னலடித்தது. "இது என்னுடைய எண்ணத்தின் எதிரொலியே ! ஆயினும் பாபாவுக்கு இதெல்லாம் எப்படித் தெரிந்தது? எல்லாருடைய உடல்களிலும் வாசம் செய்கிறார் அல்லரோ!"

கைகளைக் கூப்பிக்கொண்டு பாபாவை வேண்டினார், "மஹராஜ், உங்களுடைய தரிசனத்தால் ஆனந்தமடைந்தேன். இதுபோலவே கருணை கூர்ந்து எப்பொழுதும் என்னைக் காப்பாற்றுங்கள். -

"தங்களுடைய பாதகமலங்களை தவிர இவ்வுலகில் இப்பொழுது வேறெந்தெக் கடவுளையும் யான் அறியேன். என்னுடைய மனம் உங்களுடைய பாதங்களிலும் வழிபாட்டிலும் எப்பொழுதும் லயிக்கட்டும். -

"ஓ சமர்த்த சாயி, உங்களுடைய பாதங்களில் வணங்கி வீடு திரும்ப அனுமதி வேண்டுகிறேன். எங்களுக்கு அனுமதி தந்து அனாதைகளாகிய எங்களை ரட்சிப்பீராக.-

"இவ்வுலக வாழ்வில் நாங்கள் மாட்டிக்கொண்டு கஷ்டப்படாதவாறு எப்பொழுதும் உங்கள் கடைக்கண்பார்வையைச் செலுத்துங்கள். உங்கள் நாமத்தைக் கீர்த்தனம் செய்யும் வழக்கம் புஷ்டியடைந்து எங்களை சுற்றி சுகமும் திருப்தியும் நிலவட்டும்."

சாயியின் ஆசீர்வாதங்களையும் உதியையும் வாங்கிக்கொண்டு, வழிநெடுக சாயியின் புகழைப் பாடிக்கொண்டு லக்மீச்சந்த் ஆனந்தமாக வீட்டிற்கு வந்துசேர்ந்தார்.