valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 2 May 2019

ஷீர்டி சாயி சரிதம்

ஆனால், மேகா இதையெல்லாம் கேட்கத் தயாராக இல்லை. அவருக்குத் தெரிந்தது ஒன்றே ஒன்றுதான். அவரைப் பொறுத்தவரை பாபாவும் சங்கரரும் (சிவனும்) ஒன்றே; சங்கரர் கங்கை நீர் அபிஷேகத்தால் பிரீதி அடைகிறார்.

மேகா சொன்னார், "பாபா, இன்று மகர ஸங்க்ராந்திப் பண்டிகை நாள் (பொங்கல் திருநாள்). இன்று கங்கை நீரால் அபிஷேகம் செய்தால் சங்கரர் பிரீதி அடைகிறார்."

மேகாவின் அளவுகடந்த பிரேமையையும் தூய உள்ளத்தையும் திடமான தீர்மானத்தையும் கண்டு பாபா சொன்னார், "சரி, உம்முடைய ஆசையைப் பூர்த்தி செய்து கொள்ளும்".

இவ்வாறு சொல்லிக்கொண்டே, இருக்கையிலிருந்து எழுந்துவந்து குளிப்பதற்காக இடப்பட்டிருந்த குட்டையான ஆசனத்தில் பாபா அமர்ந்தார். மேகாவுக்கெதிரே தலையை நீட்டிகொண்டே சொன்னார், "இங்கே சிறிது ஜலம் தெளியும்.-

'எண்சாண் உடம்பிற்கு சிரசே பிரதானம். தலையில் சிறிது நீர் தெளித்து விட்டீரானால் , அது உடம்பு முழுக்க ஸ்நானம் செய்ததற்கு சமானம். இந்த அளவிற்காவது நான் சொல்வதைக் கேளும்."

"சரி, சரி" என்று சொல்லிவிட்டுக் கலசத்தை பிரேமையுடன் உயர்த்தி, பாபாவின் தலைமீது கோதாவரி நீரை மேகா அபிஷேகம் செய்தார். "ஹர் கங்கே " என்று கோஷமிட்டுக்கொண்டே நீரைத் தலையில் மட்டுமின்றி உடல் முழுவதும் அபிஷேகம் செய்துவிட்டார்.

"என் சிவனை ஆடைகளுடன் சேர்த்து முழுமையாகவே அபிஷேகம் செய்துவிட்டேன்" என்று நினைத்து, மேகா தம்முடைய செய்கையைத் தாமே பாராட்டிக்கொண்டு ஆனந்தம் அடைந்தார். ஆனால், என்னே அதிசயம்! காலிக் குடத்தை கீழே வைத்துவிட்டு பாபாவைப் பார்த்தார்; பெருவியப்படைந்தார்.

உடம்பு முழுவதும் நீரை அபிஷேகம் செய்திருந்த போதிலும், பாபாவின் தலை மாத்திரமே நனைந்திருந்தது. உடலின் மற்ற பாகங்கள் நனையவே இல்லை. உடைகளின் மீது ஒரு சொட்டு நீரும் இல்லை!

மேகா தலைகுனிய நேரிட்டது. சுற்றியிருந்தவர்கள் ஆச்சரியத்தில் வாயைப் பிளந்தனர். பக்தர்களின் ஆசைகளை பாபா பூர்த்தி செய்துவைக்கும் வினோதம் இவ்வாறே.

"நீர் என்னைக் குளிப்பாட்ட விரும்பினீர். உம்முடைய விருப்பப்படி செயல்படும். ஆனால், அதிலும் என் மனத்துள் இருக்கும் சூக்குமத்தை சுலபமாகவே அறிந்து கொள்வீர். "

இதுதான் சாயிபக்தியின் ரஹஸ்யம். அவருடைய அருகில் இருக்கும் பாக்கியம் கிடைக்க வேண்டும்; அதன் பிறகு, தாண்டமுடியாது எதுவுமே இல்லை. கொஞ்சம் கொஞ்சமாக அனைத்து விஷயங்களுக்கும் ஓர் ஒழுங்கிற்கு வந்து நிற்கும்.

ஓய்வெடுப்பதோ, பேசுவதோ, நடப்பதோ, காலையிலும் மாலையிலும் ஒரு சுற்று எங்காவது போய்வருவதோ, எந்தக் காரியமாக இருந்தாலும் சரி, ஒவ்வொரு கணமும் அசைக்கமுடியாத சிரத்தையை கடைபிடித்தால், பக்தன் தான் விரும்பிய மனோரதங்கள் அனைத்திலும் நிறைவு பெறுவான்.