valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday, 5 March 2026

 ஷீர்டி சாயி சத்சரிதம் 


அவரை சூரியனுக்கு உபமானமாகக் கூறமுடியாது.  ஏனெனில், சூரியன் மாலையில் மறைந்துவிடுகிறான்.  சந்திரனுக்கும் ஒப்பிடமுடியாது.  ஏனெனில், சந்திரன் தேய்ந்து வளர்பவன்.  சாயி எப்பொழுதும் சம்பூர்ணமானவர் அல்லரோ!

அவருடைய பாதங்களில் ஹேமாட் பணிவுடன் வணங்குகிறேன்.  இந்தக் கதையை சிரத்தையுடனும் குவிந்த மனத்துடனும் ஆர்வத்துடனும் கேட்கும்படி கதை கேட்பவர்களை அன்புடன் வேண்டுகிறேன். 

நிலத்தைச் சீர்பட உழுதாகிவிட்டது. விதைகளையும் விதைத்தாகிவிட்டது .  ஆயினும், கிருபை நிரம்பிய மேகங்களாகிய நீங்கள் மழையாகப் பொழியாவிட்டால், விதைகள் முளைத்து, விளைச்சல் காண்பது எவ்வாறு?

ஞானியரின் கதைகள் காதில் விழும்போது, பாதகங்கள் விலகும்.  கதை கேட்பவர்களுக்குப் புண்ணியம் விளையும்.  ஆஹா! அந்த அமோகமான விளைச்சலை அறுவடை செய்து லாபமடையுங்கள்!

சாலோக்யம் (இஷ்ட தேவதையின் உலகத்தில் உறைதல்)   போன்ற நான்கு வகை முக்திகளின்மீது நமக்கு ஆசை ஏதும் இல்லை.  சாயியிடம் நிச்சலமான பக்தி நிலவட்டும்.  அதுவே நாம் அடையக்கூடிய பரம பிராப்தி (சிறப்பான பெரும்பேறு).

அடிப்படையாகச் சிந்தித்தால், நாம் கட்டுப்பட்டவர்கள் அல்லர்! ஆகவே, விடுதலைக்கும் (முக்திக்கும்) நமக்கும் என்ன சம்பந்தம்?  'ஞானிகளின் மீது பக்தி' என்னும் விழிப்புணர்ச்சி ஏற்படட்டும். அதுவே, இதயத்தைப் பரிசுத்தமாகிவிடும். 

'நான்/நீ' என்னும் எண்ணத்திலிருந்து விடுபடுவோமாக.  அதுவே நமக்கு இயல்பான நிலையை அளிக்கும்.  அதுவே நமக்கு பேதமில்லாத பக்தியையும் அளிக்கும்.  சாயியிடம் நாம் வேண்டுவது இதையே. 

போதியைப் பாராயணம் செய்பவர், படிப்பதற்காகப் புத்தகத்தைக் கையில் எடுக்கும்போது, வாசிக்கப்படும் விஷயத்தையும் வாசிக்கும் செய்கையையும் தம்மையும் ஒன்றாகக் காணவேண்டும்.  இதுவே கதை கேட்பவர்களுக்கு யான் விநயமாக விடுக்கும் வேண்டுகோள். 

ஹேமாட் பந்தை விட்டுத்தள்ளுங்கள்;  காரணம், சத் சரித்திரத்தை இயற்றியவர் அவர் அல்லர். பக்தர்களின் நன்மைக்காக சாயியால் உபயோகப்படுத்தப்பட்ட ஒரு கருவி மாத்திரமே அவர். 

தெய்வாதீனமாகக் கண்டெடுத்த முத்துசிப்பையைத் தூக்கியெறிப்பவர் அதுனுள் இருக்கும் முத்தையும் இழந்துவிடுகிறார்.  நன்மை பயக்கக்கூடிய விஷயங்களில் எவரும் உதாசீனம் காட்டக்கூடாது.  அரசமரம் எப்படி உற்பத்தியாகியிருந்தால் நமக்கென்ன? நிழலை அனுபவித்தால் போதுமே!