valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday, 27 August 2026

 ஷீர்டி சாயி சத்சரிதம் 


எண்ணற்ற சாதகப் பறவைகள் மேகத்துக்காக ஏங்குகின்றன; ஆயினும், அத்தனை சாதகப் பறவைகளுக்கும் கிடைக்கக்கூடிய மேகம் ஒன்றே.  அதுபோலவே, அவருக்கு அநேக பக்தர்கள் உள்ளனர்;  ஆயினும், தந்தையும் தாயும் ஆனவர் அவர் ஒருவரே. 

எவரெவர்கள் ஸத்பாவத்துடனும் இயல்பாகவும் சரணடைகிறார்களோ, அவரவர்களுடைய மானத்தை ரட்சித்து மட்டுமல்லாமல் வேலைகளையும் வெற்றிகரமாக முடித்து வைக்கிறார்.  இதை இன்றும் (மஹாசமாதி அடைந்த பிறகும்) பிரத்யட்சமாகக் (கண்கூடாகக்) காணலாம். 

இவ்வுலகில் எந்தெந்தப் பிராணிகள் உயிருடனும் இருக்கின்றனவோ, அவை அனைத்திற்கும் மரணம் முடிவை உண்டாக்கும்.  ஆயினும், சாயி, தீக்ஷிதருக்கு அபயம் அளித்தார், "உம்மை நான் ஓர் ஆகாயவிமானத்தில் அழைத்துச் செல்கிறேன்."

சாயி எவ்விதமாக வாக்களித்தரோ, அவ்விதமாகவே தீக்ஷிதரின் அந்தம் (முடிவு)  ஏற்பட்டது.  சாயியின் குணநலன்களைப் பாடிக்கொண்டே  தீக்ஷிதர் உயிர்நீத்தார். இதை நான் என்னுடைய கண்களாலேயே பார்த்தேன். 

நாங்கள் இருவரும் ஒரு ரயில்வண்டியில் அமர்ந்து சமர்த்த சாயியின் பெருமைகளைப் பரஸ்பரம் பேசிக்கொண்டே பயணம் செய்துகொண்டிருந்தபோது, யாரோ அவரைச் சட்டென்று ஓர் ஆகாயவிமானத்தில் ஏற்றிக்கொண்டு சென்றதுபோல் தோன்றியது. 

சரியான சந்தர்பத்தைச் சட்டெனப் பயன்படுத்தித் தம்முடைய தலையை என் தோளின்மேல் சாய்த்தவாறு, எதிர்பாராதவிதமாக ஆகாயவிமானத்தில் ஏறி தீக்ஷிதர் எல்லையற்ற சுகத்தை அடைந்தார். 

முக்கவோ முனகவோ இல்லை; தொண்டையில் 'கர்புர்' என்று இழுக்கவுமில்லை;  வலி ஏதும் இல்லை. எல்லாரும் பார்த்துக்கொண்டிருந்தபோதே, பேசிக்கொண்டிருந்தவரின் உடல் அசைவற்றுப் போயிற்று. 

இவ்விதமாக, மனிதர்கள் வாழும் இப்பூமியை உதறிவிட்டு, நிஜமான ரூபமும் நிஜமான ஜோதியும் கிடைத்த காரணத்தால், ஆகாயமார்க்கத்தில் சென்று பரஞ்சோதியுடன் இரண்டற கலந்துவிட்டார். 

உயிர் பிரியும் தருவாயில் சாயிபாத தியானத்தில் லயித்திருந்ததால், அவருடைய தேகாபிமானமும் முழுவதுமாக துறக்கப்பட்டது.  மனம் ஒருமைப்பட்ட நிலையில், தேகத்தைப் பூரணமாக ஸ்ரீகிருஷ்ணனுக்கு அர்ப்பணம் செய்தார். 

1926 ஆம் ஆண்டு ஆனிமாதத்துத் தேய்பிறை ஏகாதசி நாளன்று, இந்தக் கர்மபூமியை விடுத்து பிரம்மபதம் அடைந்தார் தீக்ஷிதர். 

அவர் மரணமடைந்தார் என்றோ, ஆகாயவிமானத்தில் ஏறிச் சென்று விட்டார் என்றோ சொல்லலாம். ஆனால், அவர் சாயி பாதங்களில் இரண்டற கலந்துவிட்டார். இதை சாயிபக்தர்கள் அனைவரும் பிரமாணமாக ஏற்றுக்கொள்வர். 

இம்மாதிரியான உபகாரத்திற்கு கைம்மாறு செய்துவிடமுடியும் என்று நினைப்பவன் முழுமையான அபக்தன் (பக்தியே இல்லாதவன்). ஏனெனில், இக் கடனைக் கண்ணுக்குத் தெரியும் எப்பொருளையும் கொடுத்துக் கனவிலும் அடைக்கமுடியாது.