ஷீர்டி சாயி சத்சரிதம்
பஞ்சீகரணம் (ஐம்பூதக் கூறுகளின் சேர்க்கை) என்று எது அழைக்கப்படுகிறதோ அது மாயையின் ரூபதரிசனம். அதைப் புரிந்துகொள்ள உதவுவன அத்யாரோபம்! அபவாதம் என்னும் இரண்டு தத்துவங்களே.
பஞ்சபூதங்கள் ஒன்றோடொன்று கலக்காத நிலையில், பஞ்சதன்மாத்திரைகள் என்று அழைக்கப்படுகின்றன. இந்திரியங்களையும் மனத்தையும் புத்தியையும் ஆத்மாவின் சூக்கும சரீரத்தையும் பிராணனுடன் ஒன்றுசேர்ப்பதே அவற்றின் செயல்.
பஞ்ச பூதங்களும் ஒன்று சேர்ந்த நிலையைப் பாருங்கள். அந் நிலையில்தான் விராட்புருஷன் உதயமானான். பரமாத்மாவின் ஸ்தூல தேகத்தையே (பருவுடலையே) ஞானியர் விராட்புருஷன் என்று அழைக்கின்றனர்.
பருவுடல், சூக்குமவுடல் ஆகிய மனத்தோற்றங்களுக்கு காரணம், சுயசொரூபம் பற்றிய அஞ்ஞானமே. பருவுடல், அனைத்துப் படைப்பிற்கும் ஆதாரமான பொருளிலிருந்த தோன்றியது என்பதையும் உடலுக்குக் காரணம் ஆத்மாவே என்பதையும் அறிவீர்களாக.
கியாதிபெற்ற (புகழ்பெற்ற) காரண சரீரம் (ஐம்பூதச் சேர்க்கையால் பருவுடலுக்குக் காரணமாயுள்ள நுண்ணுடல்) சைதன்னியத்தின் பிரதிபிம்பமே. அது கேவலம் அஞ்ஞானத்தால் விளைந்தது. அதன் உண்மையான பெயர், அனைத்துப் படைப்பிற்கும் ஆதாரமான பொருளின் தோன்றாநிலை என்பதே.
இதற்கு காரணம் ஆத்மா பற்றிய அஞ்ஞானமே. ஆத்மா, அவயங்களுடன் சேர்ந்ததும் இல்லை; சேராததும் இல்லை; இரண்டுமே இல்லை. பிரம்மமும் ஆத்மாவும் ஒன்றே எனும் ஞானத்தால்தான் இந்த தேகத்தை அழிக்க முடியும்.
தன்னில் மூழ்கியிருப்பதே மோட்சம். இதைத் தவிர மோட்சம் ஏதும் இல்லை. தன்னை அறிவதே மோட்சம்!
பிரம்மமும் ஆத்மாவும் ஒன்றேயெனும் ஞானத்தால்தான் அஞ்ஞானத்திலிருந்து விடுதலை கிடைக்கும். ஆகவே, அஞ்ஞானம் எது என்பதைப் புரிந்துகொள்ள அதுபற்றிய விவரணம் அவசியமாகிறது.
அஞ்ஞானத்தால் சபல் விளைந்தது. சபல் (பல வர்ணங்களால் சாயம் பூசப்பட்ட நிலை என்று பொருள்) பிரம்மத்திற்கு மாறுபாட்டைக் கொணர்ந்தது. பிரம்மம், 'சத்' என்று பெயரிடப்பட்டது. இவ்வாறாக அது பேசுவதற்கு உரிய பொருளாகியது!
