valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday, 9 July 2026

 ஷீர்டி சாயி சத்சரிதம் 

மோகம் என்பது அஞ்ஞானமே.  சொற்கள் வெவ்வேறாக இருப்பினும், பொருளில் வேறுபாடு ஏதும் இல்லை என்பதை நன்றாகப் புரிந்துகொண்டவர்கள் அறிவர். 

கீதையின் பதினொன்றாவது அத்தியாயத்தின் முதல் சுலோகத்திலும் அர்ஜுனன் சொல்லியிருக்கிறான், "என்னைக் காத்தருளுவதற்கு உம்மால் உரைக்கப்பட்ட மேலானதும் மறைபொருளுமாகிய ஆத்ம தத்துவத்தைப்பற்றிய உபதேசத்தால் என் மோகம் ஒழிந்தது" என்று. 

இப்பொழுது, இந்தப் புதிய அத்தியாயத்தின் ஆரம்பத்தில், பாபா, காகா சாஹேப் தீக்ஷிதரை வரவழைத்து எவ்வாறு ஷிர்டியில் ஸ்தாபனம் செய்தார் (நிலைநிறுத்தினார்)  என்ற ஆச்சரியமளிக்கும் விவரத்தைச் சொல்வோமாக. 

ஷிர்டியுடன் அவருக்கிருந்த ருணானுபந்தமும் (முன்ஜன்ம பந்தமும்) சாயியுடன் இருந்த திடமான சம்பந்தமும் இந்த நிகழ்வுக்கு எவ்வாறு மூலகாரணமாயிற்று என்பதை ஆரம்பத்திலிருந்து கேளுங்கள். 

காகா சாஹேப் சம்பந்தப்பட்ட பல கதைகள் சிறுவர்களிலிந்து கிழவர்கள்வரை சகலருக்கும் தெரியும்.  ஆனால், அவர் எப்படி முதன்முதலாக ஷிர்டிக்கு வந்தார் என்ற விவரம் எல்லாருக்கும் தெரியாது; ஒரு சிலருக்கே தெரியும். 

பூர்வபுண்ணியங்களின் சேமிப்பு பரமேச்வரனின் கடைக்கண்பார்வையை அளிக்கிறது. அதிலிருந்து விளைவது சத்குரு  சந்திப்பு.  அதிலிருந்து பெறுவது சிஷ்யனின் சுயானந்த புஷ்டி. 

இந்த அத்தியாயத்தின் பின்னணி இதுவே.  அபூர்வ அதிர்ஷ்டசாலிகளாகிய மூன்று பக்தர்களின் காதைகளை கதைகேட்பவர்களுக்குச் சொல்கிறேன்.  கேட்பவர்களின் இதயத்தில் ஆனந்தம் நிரம்பும். 

வீடுபேறு அடைவதற்கு கோடானுகோடி இதர உபாயங்கள் உள்ளன.  ஆனாலும், சத் குருவின் கடைக்கண்பார்வை இல்லாமல் அவற்றால் ஒரு பயனும் கிடைக்காது. 

இது விஷயமாக ஒரு சுவையான காதையைக் கேளுங்கள். கேட்பவர்களுடைய ஆவலை இக் கதை திருப்தி செய்யும்.  தாங்களும் சேமமடைய வேண்டும் என்னும் வேட்கை அவர்களுடைய மனத்தில் எழும். 

பரம புனிதமானதும் நன்மையளிப்பதுமான இந்த அத்தியாயத்தைக் கதைகேட்பவர்கள் ஒருமுகப்பட்ட மனத்துடன் கேட்பார்களாக.  குருபக்தி உள்ளவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள். 

சாயி பாபாவின் பக்தர்கள் அனைவருமே அன்புடனும் மரியாதையுடனும் நினைவுகூரும் ஹரி சீதாராம் தீக்ஷிதர், காகா சாஹேப் என்னும் பெயரால் பிரபலமாக அறியப்பட்டவர். 

கேள்விஞானம் மிகுந்த ரசிக்கப் பெருமக்களுக்கு ஆனந்தமளிக்கும் அவருடைய ஆரம்பகால வரலாற்றை, சரித்திரம் கேட்பதில் உற்சாகம் காட்டும் பக்தர்கள் ஆனந்தம் அடைவதற்காக பயபக்தியுடன் சொல்கிறேன்; கேளுங்கள். 

1909  ஆண்டு வரை சாயி என்ற பெயரையே கேட்டறியாதவர், பிற்காலத்தில் எல்லாருக்கும் நன்கு தெரிந்த பரம பக்தரானார்.