valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday, 5 November 2026

 ஷீர்டி சாயி சத்சரிதம் 

இக் காவியத்தின் முப்பத்தேழாவது அத்தியாயத்தில் சாவடி ஊர்வலத்தின் கோலாகலம் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.  இவ்விடத்திலும் விவரித்தால், 'கூறியது கூறல்' என்னும் குற்றம் விளையும். 

ஒருநாள் மசூதியிலும் மறுநாள் சாவடியிலும் இரவைக் கழிப்பது பாபாவின் நியமம்.  மஹாசமாதி அடையும்வரை இந்த நியமத்தைத் தடையின்றிக் கடைபிடித்தார். 

பிரேமை மிகுந்த பக்தரான பாலாராம், சாவடி ஊர்வலத்தின் கண்கொள்ளாக் காட்சியைக் காண விரும்பினார். ஆகவே, துரந்தர் சகோதரர்கள் சாவடி ஊர்வல நேரத்தில் மறுபடியும் வந்தனர். 

ஷீர்டி க்ஷேத்திரத்தின் (திருத்தலத்தின்)  ஆடவரும் பெண்டிரும் பாபாவுடன் சேர்ந்து சாவடிக்கு கிளம்பினர்.  உல்லாசமாகவும் 'ஜய ஜய' கோஷம் போட்டுக்கொண்டும் ஊர்வலமாகச் சென்றனர். 

ஷியாம்சுந்தர் என்றழைக்கப்பட்ட குதிரை, ஜரிகை வேலைப்பாட்டுடன் கூடிய துணியால் அலங்காரம் செய்யப்பட்டு ஊர்வலத்தில் முன்னோடியாக நடனமாடிக்கொண்டும் கனைத்துக்கொண்டும் சென்றது. 

கொம்புகளும் பலவகையான குழல் வாத்தியங்களும் ஊதப்பட்டன.  பல்லக்கும் சிங்காரிக்கப்பட்ட சியாம் கர்ணாவும் பக்தர்களும் புடைசூழ, பக்தர் ஒருவர் ஏந்திய கொற்றக்குடையின் கீழ் பாபா பவனி வந்தார். 

கொடிகளையும் பதாகைகளையும் ஏந்தியவாறும், சாயியின் தலைக்குமேல் கொற்றக்குடையைப் பிடித்துக்கொண்டும், சவரி வீசியவாறும், நான்கு பக்கங்களிலும் தீவட்டி ஏந்தியவாறும், பக்தர்கள் ஊர்வலத்தில் கலந்துகொள்வர். 

சேகண்டி , மிருதங்கம், யாழ் ஆகிய இன்னிசைக் கருவிகளை இசைத்தவாறு பஜனை பாடிக்கொண்டு மக்கட்கூட்டம் பாபாவின் இருமருங்குகளிலும் செல்லும். 

இவ்வாறு அந்த ரம்மியமான ஊர்வலம் சாவடிக்கு வந்து சேர்ந்தவுடன் பாபா நிற்பார்.  வடக்கு நோக்கியவாறு, விதிகளின்படி கைகளை அசைத்துச் சில கிரியைகளைச் (சடங்குச் செய்கைகளை) செய்வார். 

அவருக்கு வலப்பக்கத்தில், பகத் (பக்தர்) மகால்சாபதி, பாபாவின் தோள்களின்மேல் தொங்கிய ஆடையின் நுனியைத் தம் கைகளால் தூக்கிப்பிடித்தவாறு நடப்பார்.  இடப்பக்கத்தில், தாத்யா பாடீல் கையில் லாந்தரை ஏந்தியவாறு நடப்பார். 

ஆதியிலேயே பாபாவின் முகம் வெளிறிய  மஞ்சள் நிறமானது.  தீபங்களின் ஒளியும் சேர்ந்து, கொஞ்சம் தாமிரம் கலந்த பொன்னைபோல் முகம் ஜொலிக்கும்.  அந்த சமயத்தில் பாபாவின் முகம் உதயசூரியனின் பிரபையை ஒத்திருக்கும். 

அந் நேரத்து பவித்திரமான தரிசனம் பெரும்பேறு பெற்றது! வடக்கு நோக்கி நின்றுகொண்டு, ஒன்றிய மனத்துடன் வலக்கையை பாதி தூக்கி, யாரையோ அழைப்பது போன்று பாபா தோற்றமளிப்பார். 

அங்கிருந்து பாபா மரியாதையாகச் சாவடிக்குள் அழைத்துச் செல்லப்பட்டு உட்காரவைக்கப்படுவார்.  திவ்வியாலங்காரமான வஸ்திரங்கள் அர்ப்பணம் செய்யப்படும்.  உடலுக்குச் சந்தனம் பூசப்படும்.