ஷீர்டி சாயி சத்சரிதம்
அந்தச் சிறந்த அனுபவத்தைத் தாங்களும் பெற்று, ஒப்புவமையற்ற தரிசனத்தில் லாபத்தையும் அடையவேண்டும் என்னும் நோக்கத்துடன் பாலாரமும் மற்ற சகோதரர்களும் ஷிர்டிக்குச் சென்றனர்.
அவர்கள் வருவதற்கு முன்பாகவே பாபா எல்லாரும் கேட்கும்படி சொன்னார், "என்னுடைய தர்பாரைச் சார்ந்த அநேக மக்கள் இன்று இங்கு வரப்போகின்றனர்."
பிரேமையுடன் சொல்லப்பட்ட இந்த வார்த்தைகளைப் பின்னர்க் கேள்வியுற்ற துரந்தர் சகோதரர்கள் வியப்பிலாழ்ந்தனர், "ஷீர்டி செல்வதுபற்றி நாம் யாருக்குமே தெரிவிக்கவில்லையே! பாபாவுக்கு இந்தச் செய்தி எப்படிக் கிடைத்தது?"
பிறகு, சாயியைக் கண்களால் கண்டவுடன் தாவிச்சென்று பாதங்களைப் பிடித்துக்கொண்டனர். மெல்லிய குரலில் சம்பாஷணை தொடர்ந்தது. எல்லாரும் திருப்தியும் மகிழ்ச்சியும் அடைந்தனர்.
மேலும், துரந்தர் சகோதரர்கள் வந்துசேர்ந்தவுடன் பாபா திருவாய்மொழி மலர்ந்தார், "பாருங்கள், என் தர்பாரின்மக்கள் வந்துவிட்டனர் - யார் வரப் போகின்றனர் என்று நான் சொன்னேனோ, அவர்கள்".
பாபா மேலும் என்ன சொன்னார் என்பதில் ஒவ்வொரு வார்த்தையையும் கவனமாகக் கேளுங்கள், "நீங்களும் நானும் அறுபது ஜன்மங்களாக ஒருவரையொருவர் அறிவோம்."
பாலாராமும் மற்ற சகோதர்களும் மிகுந்த பணிவுடன் பாபாவின் சன்னிதியில் கைகட்டி நின்று பாபாவின் பாதங்களையே பார்த்துக்கொண்டிருந்தனர்.
ஸ்ரீ சாயி தரிசனம் ஆன பிறகு, பாலாராமும் மற்றவர்களும் பிரேமையில் மூழ்கிய, தடுத்து நிறுத்தமுடியாத உள்ளக்களிப்பை அடைந்தனர். ஷிர்டிக்கு வந்தது, பெரும்பயன் அளித்ததை உணர்ந்தனர்.
கண்களில் நீர் நிறைந்தது; உணர்ச்சிவசத்தால் தொண்டை அடைத்தது; எல்லா அங்கங்களிலும் மயிர்கூச்செறிந்தது; இதயம் அஷ்ட பாவத்தால் நிரம்பியது.
பாலாராமின் நிலையைப் பார்த்த சாயி களிப்புற்றார். பொதுவாகப் பேச ஆரம்பித்தார். பிரேமையுடன் உபதேச மொழிகளைச் சொன்னார்.
"சுக்கிலபக்ஷத்து (வளர்பிறைச்) சந்திரனின் கலையைப்போன்று என்னை வழிபட்டுத் தம்முடைய மனோதர்மத்தை என்னிடம் முழுமையாக ஒப்படைத்தவர் பெரும்பேறு பெற்றவர் என்பதை அறிவீர்களாக.-
"திடமான விசுவாசத்தை மனத்தில் தரித்து, எவர் தம்முடைய குருவை வழிபடுகிறாரோ, அவருக்கு இறைவன் எக்காலமும் கடன்பட்டவன். அவரை யாரும் வக்கிரமாகப் பார்க்க (கேடு செய்ய) முடியாது. -
"எவர் ஹரிகுரு வழிபாட்டில் விருப்பம் கொண்டு அரை நிமிடத்தையும் வீணாக்க மாட்டாரோ, அவருக்கு குரு எல்லையற்ற ஆனந்தத்தை அளிப்பார்; பிறவிக்கடலைத் தாண்டி அழைத்துச் செல்வார்."
இந்த வசனத்தைக் கேட்ட எல்லாருடைய விழிகளிலும் ஆனந்தக்கண்ணீர் பெருகியது; சித்தம் மகிழ்ந்தது; அந்தக்கரணம் நற்பாதை கண்டது.
