valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday, 8 October 2026

 ஷீர்டி சாயி சத்சரிதம் 


சாயி மேலும் சொன்னார், "நீர் எதனை தேங்காய்களைக் கொண்டுவந்தாலும் அந்தத் தேங்காயின் யோக்கியதைக்கு (சிறப்புக்கு) மற்றவை இணையாகா. எது நடக்கவிருந்ததோ அது நடந்துவிட்டது. அதைப்பற்றி வருத்தப்படுவதில் அர்த்தமென்ன இருக்கிறது?-

"சுவாமி உம்மிடம் தேங்காயைக் கொடுத்தது என்னுடைய சங்கல்பத்தால்.  தேங்காய் உடைக்கப்பட்டதும் என்னுடைய சங்கற்பத்தாலாயே!  உம்மை ஏன் அதற்குப் பொறுப்பாளர் ஆக்கிக்கொள்கிறீர்?-

"உமது புத்தியில் அகங்காரம் ('நான்' என்னும் செருக்கு) அமர்ந்திருக்கிறது.  அதனால்தான், நீர் உம்மை அபராதியாகக் (குற்றவாளியாகக்) கருதுகிறீர்.  'செயல் புரிபவன் நானில்லை' என்னும் மனப்போக்கை ஏற்றுக்கொள்ளுங்கள்.  உம்முடைய உபாதிகள் அனைத்தும் தவிடுபொடியாகிவிடும்.-

"புண்ணியங்கள் அனைத்தும் தமதாக இருக்க வேண்டும் என்றும், பாவங்கள் எதுவும் தமதாக இருக்கக் கூடாது என்றும் மக்கள் ஏன் நினைக்கின்றனர்?  அவை இரண்டின் பிரதாபமும் (வீரமும்)  சரிசமானமே.  ஆகவே, 'நான் செய்கிறேன்' என்னும் எண்ணத்தை விடுக.-

"நீர் என்னைப் பேட்டி காணவேண்டும் என்று என்னுடைய மனத்தில் எண்ணம் விழுந்தால்தான், அந்தத் தேங்காய் உம்முடைய கைகளில் வந்து விழுந்தது. இச் சொல் முக்காலமும் சத்தியம். -

"நீங்களும் எனது குழந்தைகளே.  உங்களுடைய வாய்களில் இடப்பட்ட தேங்காயை உங்களுக்குத் தெரியாமலேயே எனக்கு அர்ப்பணம் செய்துவிட்டீர்கள்! அது என்னிடம் வந்துசேர்ந்துவிட்டது என்பதைத் திட்டவட்டமாக அறிந்துகொள்ளுங்கள்."

இவ்வாறு பாபாவால் சமாதானப்படுத்தப்பட்ட பின்பே புண்டலீக ராவின் மனம் சாந்தமடைந்தது.  சோகம் கொஞ்சங்கொஞ்சமாக விலகியது. 

தேங்காய் நஷ்டம் என்னவோ ஒரு சாக்குபோக்குத்தான்.  பாபாவின் உபதேசத்தால், அவருடைய நடுங்கிக்கொண்டிருந்த மனம் மலர்ச்சி அடைந்தது.  'நான்' என்னும் செருக்கால் சூழப்பட்டிருந்த ஐவரும் அச் செருக்கை விடுத்து, தோஷம் (குற்றம்) நீங்கியவர்கள் ஆயினர். 

'நான்' என்னும் செருக்கை மனம் விடுத்தால்,  அதற்கு ஆன்மீக வாழ்வில் முன்னேற அதிகாரம் கிடைக்கிறது.  பிறவிக்கடலையும் இயல்பாகக் கடந்துவிடலாம்.  இதுவே இக் கதையின் சாரம். 

இப்பொழுது, மூன்றாம் பக்தரின் புதினமானதும் தனித்தன்மை வாய்ந்ததுமான சிறந்த அனுபவத்தைப்பற்றிக் கேளுங்கள். பாபாவின் இணையிலா வைபவத்தையும் சக்தியின் காம்பீர்யத்தையும் (பெருமிதத்தையும்) படிப்படியாக அறிந்துகொள்வீர்கள். 

பாந்த்ரா தாலுகாவின் வடபகுதியில், பாந்த்ரா நகரை அடுத்து சாந்தாகுரூஜ் என்றழைக்கப்படும் நகரம் இருக்கிறது. அங்கு 'துரந்தர்' என்னும் பெயர் கொண்ட குடும்பம் ஒன்று வசித்துவந்தது.  குடும்பத்தினர் ஹரிபக்தர்கள். 

எல்லா சகோதரர்களும் ஞானிகளிடம் அன்பு செலுத்தினர்.  ஸ்ரீ ராமனின் மேல் திடமான நிட்டை வைத்திருந்தனர்.  ராமநாமத்தின் மீது அனன்னியமான சிரத்தை கொண்டிருந்தனர். மற்றவர்களுடைய வாழ்வில் தலையிடுவதில் விருப்பமற்றிருந்தனர்.