ஷீர்டி சாயி சத்சரிதம்
ஓம் ஸ்ரீ விநாயகனே போற்றி! ஸ்ரீ சரஸ்வதியே போற்றி!
ஸ்ரீ குரு மஹாராஜனே போற்றி! குலதேவதைக்கும் ஸ்ரீ சீதாராமச்சந்திரனுக்கும்
என்னுடைய பணிவான வணக்கங்கள். பூஜ்யகுரு ஸ்ரீசாயிநாதனை
பக்தியுடன் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.
இப்பொழுது சிம்ம அவலோகனம் செய்வோம். அதன் பிறகு, ஒரு பொருளடக்கம் எழுதி சாராம்சத்தை அளித்தபின் இக் காவியத்தை சம்பூர்ணம் செய்வோம்.
தேகத்துடன் வாழ்ந்தபோது தம் பக்தர்களுக்கு அவ்வப்பொழுது ஈந்த அனுபவங்களை 'ஸ்ரீ சாயி லீலா' என்னும் பத்திரிக்கையில் ஒரு தொடராக எழுதவைத்து, பக்தர்கள் என்றும் நினைவுகூர ஓர் அழியாத வழியைச் செய்துவிட்டார் சமர்த்த சாயி.
'ஸ்ரீ சாயி லீலா' பரம பவித்திரமான பத்திரிகை. நம் குருவின் சரித்திரத்தின் உருவத்தில், இகத்தைப் பற்றியும் பரத்தைப் பற்றியும் போதனைகளை அளிக்கும் பல காதைகளை அதில் எல்லாரும் படிக்கலாம்.
எண்ணற்ற நிகழ்ச்சிகளைச் சேகரித்து வைத்திருந்தவனாயினும், கற்பனைவளமோ உயர்கல்வியோ இல்லாத ஹேமாட் பந்தின் கையைப் பிடித்தவாறு, தம்முடைய சத் சரித்திரத்தைத் தாமே எழுதிக்கொண்டார்.
சில குருமார்கள் தங்களுடைய கியாதியைத் தாங்களே மொழிந்து சிஷ்யர்களைச் செவிமடுக்க வைக்கிறார்கள். இதுதான், குரு சித்தியடைந்த பிறகு அவருடைய சரித்திரத்தை எழுதுவதற்கு அடித்தளமாகவும் உணர்வூட்டாகவும் அமைகிறது.
ஆழ்ந்த முக்கியத்துவம் வாய்ந்த உன்னதமான கதைகளை பாபா சொன்னபோது, கேட்டவர்கள் பசியையும் தாகத்தையும் மறந்து முழுமனத்தையும் ஈடுபடுத்திக் கவனமாகச் செவிமடுத்தனர்.
எவரெவரெல்லாம் சாயியின் சொரூபத்தைக் கண்டனரோ, அவரவரெல்லாம் முவ்வித தாபங்களிலிருந்தும் விடுபட்டனர். அந்த சக்தி ஏற்படுத்திய தாக்கத்தின் பிரதாபத்தை எப்படிப் போதிய அளவிற்கு வர்ணிக்க முடியும்?
