ஷீர்டி சாயி சத்சரிதம்
பாக்கெட்டில் இருக்கும் டார்ச்சு விளக்கில் மின்சார விசையைப் பாயச்செய்தால், அஞ்ஞானம் மறைந்து உண்மையான சொரூபம் வெளிப்படுகிறது. பாம்பென்னும் மாயத் தோற்றம் விலகிவிடுகிறது.
ஆகவே, அஞ்ஞானத்தால் ஏற்படக்கூடிய அபாயத்தை விலக்க, உபதேசமே உபாயம். ஞானிகள் அதன்பொருட்டே அஞ்ஞானம் எது என்பதை உபதேசம் செய்வதில் தங்களுடைய உடல்களைத் தேய்க்கின்றனர்.
உலகவாழ்வில் ஏற்படும் நல்லதும் கெட்டதுமான நிகழ்வுகளுக்கு அஞ்ஞானத்தால் நாம் செய்த பலவினைகளே காரணம். இதனை முதலிலேயே அறியவேண்டியது அவசியம்.
'சத்யம் ஞானம் அனந்தம் ப்ரம்ம.' (முழுமுதற்பொருள் சத்தியமானது; ஞானமயமானது; என்றும் நிலைத்திருப்பது) மாயையும் அவித்யையும் மற்றவை அனைத்தும் பிரமைகள். எப்பொழுது பிரம்மைகள் விலக்கப்படுகின்றனவோ, அப்பொழுதுதான் ஞானத்தைப்பற்றிய குழப்பங்கள் அகலும்.
தேகாபிமானத்தை ஜெயிக்காத மனிதரை ஞானமுள்ளவர் என்று யார் சொல்லுவார்? அபிமானத்தின் (பற்றின்) அதிஷ்டானத்திற்கு (நிலைக்களத்திற்கு), 'அஞ்ஞானமே உருவானது' என்று பெயர்.
நாம் காணும் இந்த வசீகரமான உலகம் மாயையால் நிறைந்தது என்றும், மாயையில் மூழ்கியது என்றும் சொல்லப்படுகிறது. இவ்வுலகுக்கு மூலாதாரம் அஞ்ஞானமே.
உலகம் அஞ்ஞானத்தால் உற்பத்தி ஆகியது; அதன் வைபவமும் அஞ்ஞானத்தால் விளைந்ததே. இருப்பது ஒன்றே எனினும், அநேக வஸ்துக்கள் இருக்கின்றன என்னும் உணர்வின் விளைநிலம் அஞ்ஞானமே.
ஒளியும் இருளும் கலக்கும் அந்திநேரத்தில், போகும் வழியில் இருக்கும் கயிறு பாம்பாகத் தெரிகிறது. இருப்பது கயிறானாலும் பாம்புபோலத் தெரிந்து பெரும்பயத்தை விளைவிக்கிறது.
பாம்பென்னும் தோற்றத்தை உண்டுபண்ணுவது ஞானத்தை மறைக்கும் அஞ்ஞானமே. அந்த அஞ்ஞானத்தை அகற்றாத வரையில் மனம் பயத்திலிருந்து விடுபடாது.
சிலருக்குப் பூமாலையாக தெரிகிறது; சிலருடைய கண்களுக்குக் குச்சியாகத் தெரிகிறது. இவ்வாறே சகலமான பொருள்களும் தெரிகின்றன. அனைத்தும் பிரமையின் எல்லையற்ற விளைவுகளே.
ஆகம வசனங்களை (வேதசாஸ்திரங்களை) அனுசரித்துச் சிரத்தையுடன் செயல்புரியும் ஆஸ்திகரே பிரம்ம ஞானம் பெறத் தகுதியுள்ளவர். நாஸ்திகர் எத்தனை ஜன்மங்கள் எடுத்தாலும் அதை பெற இயலாது.
இவ்வுலகை விபரீதமாகப் (எல்லாப் பொருள்களிலும் இறைவன் உறைகின்றான் என்பதை ஏற்காமல் ) பார்ப்பவர்கள் பிரம்மை பிடித்தவர்கள். இவர்களால் ஜனனமரணச் சுழலிருந்து விடுபடமுடியாது. ஆன்மீக நாட்டமுடைய சான்றோர்களால் சுலபமாக அடையக்கூடிய பிரம்ம தத்துவம், இவர்களுக்கு எட்டாக்கனி.

No comments:
Post a Comment