ஷீர்டி சாயி சத்சரிதம்
இங்கு, வெறும் சொற்பொழிவு உதவாது; வேதங்களை முழுக்க முழுக்க மனப்பாடம் செய்வதும் உதவாது; நூல் பல கற்கப் பயன்படும் மேதையும் உதவாது; நூல் பல கற்றவர்களிடமிருந்து பெறும் கேள்வி அறிவும் உதவாது.
சொற்களிலிருந்து அவற்றின் பொருளைத்தான் அறிய முடியும். அவற்றின் மூலமாக வஸ்து விஞ்ஞானத்தை (இறைவனது உண்மைத் தன்மையை) எப்படி அறிய முடியும்? புத்தி அதிவிவேகமுடையது. ஆனால், இறைவனோ புத்தியின் சக்திக்கு அப்பாற்பட்டவன்.
சுருதிகள் (வேதங்கள்) பேராவலுடன் முயன்று இறைவனைத் தேடின; ஆயினும் வஸ்து (இறைவன்)இருக்கும் இடத்தைக் காணமுடியவில்லை. இதுவே வஸ்துவின் வைபவம் (பெருமை). புத்திசக்தியால் ஓர் எல்லைக்குமேல் செல்ல இயலாது.
வஸ்துவைப்பற்றி ஆறுசாஸ்திரங்களும் ஒன்றுகூடி, வாதங்களும் பிரதிவாதங்களும் செய்து சோர்வடைந்தன. ஆத்மவஸ்துவோ தான் இருக்கும் இடத்திலேயே இருந்தது. சொற்களால் அதை புரிந்துகொள்ளமுடியவில்லை.
அதன் முன்னிலையில், பெரும் பண்டிதர்களும் சூரியவெளிச்சத்தில் இருக்கும் விளக்குப்பூச்சிபோல் ஒளியிழந்துவிடுவர். ஒருமுறை வஸ்துவை அடைந்துவிட்டால் எல்லா சப்தஜாலங்களும் (சொற்சிலம்பங்களும்) அடங்கிவிடும்.
பாருங்கள்! இவ்வுலகில், இரவின் இருட்டில், அனைத்து வேலைகளும் விளக்கொளியின் உதவிகொண்டு செய்யப்படுகின்றன. சூரியன் உதித்தபின் விளக்கு யாருக்கு வேண்டும்?
இவ்வாறாக, பேசும் சக்திக்கு உட்படாத விஷயத்தை உபதேசம் செய்வது எப்படி? இக் காரணத்தால், உருவகக் கதை சொல்பவரின் நோக்கம் அஞ்ஞானத்தை அகற்றுவதாகவே இருக்க வேண்டும்.
'இருப்பது ஒன்றே' என்னும் புத்தியுடன் செயல்பட்டு உபாசனை (தீவிர வழிபாடு)செய்பவருக்கே ஆத்மா பிரசன்னமாகிறது. உண்மையான தத்துவப் பிரகாசத்தை அளித்துத் தன்னை நெருங்க உபாசகரை அனுமதிக்கிறது.
ஆத்மாவையே பரமாத்வாக தியானம் செய்து, இரண்டும் ஒன்றே என்ற சிந்தனையில் திளைத்தவாறு எவர் உபாசனை செய்கிறாரோ, அவருக்கு ஆத்மா பிரசன்னமாகிறது (காட்சியளிக்கிறது)
ஆத்மாவுக்கு வேறு வழியே இல்லை. அது பிரசன்னம் ஆகியே தீரவேண்டும். சாதகர் தமக்குள்ளேயே தேடுகிறார் என்பதைக் காணும் ஆத்மா, அவருக்குக் கிருபை செய்கிறது.
ஒரு சமயச் சொற்பொழிவுத்தொடரை முடிக்கும் தருவாயில், கேட்டதால் ஏற்பட்ட சிரமத்திற்காக தம்மை மன்னிக்கும்படி சொற்பொழிவாளர் சபையை வேண்டுவார். இது சான்றோர்களால் எங்கும் அனுசரிக்கப்படும் சம்பிரதாயம்.
ஆனால், சத் சரித்திரத்திற்கு இந்தத் தொன்றுதொட்ட வழக்கம் பொருந்தாது. இதை ஆக்கிய பெருமை என்னைச் சாராது. பேனாவை என்னுடைய கையில் கொடுத்து, சாயி தம்முடைய சரித்திரத்தைத் தாமே எழுதிக்கொண்டார்.

No comments:
Post a Comment