ஷீர்டி சாயி சத்சரிதம்
'ஞானத்தால்தான் மோட்சம் அடையப்படுகிறது' என்னும் வேத சித்தாந்தம் அப்பட்டமான உண்மை. ஆனால், பாவச்செயல்கள் நாசமாகாதவரையில் ஞானம் உதயமாகாது.
தூய ஞானத்தில் மூழ்கியவரிடமிருந்து விருப்பங்கள் விலகிவிடும். மாயையின் பந்தங்கள் அவருக்கு கிடையா. தீய குணங்களுக்கும் அவரிடம் இடமில்லை.
பரம ஞானியான சுகதேவருக்கும் விகற்பத்தால் (சந்தேகத்தால்) கேடு விளைந்தது. விகற்பத்தால் விளையும் அஞ்ஞானத்தை குருவைத் தவிர வேறு எவராலும் அகற்றமுடியாது.
விகற்பம் (கோணல் சிந்தனை) ஞானத்துள் புகுந்தவுடன், ஞானியும் பற்றுடையவர் ஆகிறார். ஒரு குடம் பாலில் ஒருதுளி புளித்த கஞ்சி விழுந்துவிட்டாலும், பால் முழுவதும் திரிந்து போகின்றதன்றோ?
ஆதலின், முதலில் அஞ்ஞானத்தை அடையாளம் கண்டுகொள். அதிலிருந்து விடுபட்டால் மனம் தூய்மையடைகிறது. அதன் பிறகே எல்லையற்ற ஞானம் தோன்றும்; பேதமில்லாத சமாதி நிலை கிடைக்கும்.
எந்நேரமும் செல்வத்தின் மாட்சிமையைப்பற்றியே நினைத்துக்கொண்டு, உலகியல் சுகங்களில் திருப்தி அடையாமல், மனைவியையும் மக்களையும்பற்றி இடைவிடாது சிந்தனை செய்பவரின் ஞானம் ஞானமன்று; அது அஞ்ஞானம்.
செல்வம், மனைவி, மக்கள் ஆகியவற்றில் மோகம் கொண்டவர் ஞானியாக இருப்பினும் , தமக்கு எது நல்லது என்பதை அறியாதவர். ஆகவே, பக்தி இல்லாத அவருடைய ஞானம் அஞ்ஞானத்தால் மறைக்கப்பட்டிருக்கிறது.
ஜீவசமுதாயமே அஞ்ஞானத்தால் மூழ்கிக் கிடக்கிறது. அஞ்ஞானத்திலிருந்து விடுபட்டு ஞானியாகி, ஞானத்தையும் கடந்த நிலையை அடைவதே முழுமுதற்பொருளுடன் ஒன்றிய நிலை என்பது உறுதி.
அஞ்ஞானம் வெளியே சென்றுவிட்டால், ஞானம் தோன்றும். மன்னிப்பதில் விரைவு காட்டுபவர் ஞானமுள்ளவர். ஆனால், பற்றுகளை விடாதவரையில் அவர் மாயைக்கு வசப்பட்டே வாழ்கிறார்.
மற்ற எல்லா மனிதர்களையும் மயக்கிய மாயை, ராமர் கிருஷ்ணர் போன்ற அவதார புருஷர்களுக்கும், சனகர் சனத்குமாரர் போன்ற முனிவர்களுக்கும், ஆணைக்கு அடிபணிந்த வேலையாளாக இருந்தது.
அனைத்து உயிர்களிலும் இதயவாசியாக இறைவன் உறைகின்றான். ஆயினும், யாருமே இந் நிலையை அறிந்தாரில்லை! மாயையின் கற்பனைக்கப்பாற்பட்ட அந்தஸ்தும் அளவிடமுடியாத சக்தியும் அத்தகையன!
ஆதலால், 'நான்தான் செய்வோன்; நான்தான் செயலால் விளையும் இன்பங்களை அனுபவிப்பவன்' என்னும் பொய்யான அகந்தையைத் தூக்கியெறிந்துவிட்டு இதயவாசியிடம் சரணடையாதவரையில், நாம் முக்தி அடையமுடியாது.

No comments:
Post a Comment