ஷீர்டி சாயி சத்சரிதம்
ஜீவன் ஆசையாலும் கோவத்தாலும் பீடிக்கப்பட்டிருக்கிறது. இவ்வுணர்ச்சிகள் ஞானத்துடன் கூடவே இருந்து, அதை மறைத்தவாறு, பிரம்ம சொரூபத்தின்மேல் வட்டமிடுகின்றன.
இவ்வுணர்ச்சிகள் நம்மைத் தண்ணீரில்லாமலேயே மூழ்கடிக்கின்றன; அக்கினி இல்லாமலேயே எரித்துவிடுகின்றன; ஆயுதம் இல்லாமலேயே கொன்றுவிடுகின்றன; கயிறு இல்லாமலேயே கட்டிவிடுகின்றன.
இவற்றுக்கு எதிராக எந்த ஞானியாலும் தாக்குப்பிடிக்க இயலாது. இவை எந்த ஞானியையும் பந்தயத்தில் வென்றுவிடும். ஒரு பிராணிக்குத் தெரியாமலேயே அதை விழுங்கிவிடும். இவை ஊழிக்காலத்தையும் உண்டாக்கும் சாமர்த்தியம் படைத்தவை.
சந்தனமரத்தின் வேரில் காலசர்ப்பம் (பாம்புருவில் மரணம்) சுருட்டிக்கொண்டு படுத்திருப்பதைப்போல, ஞானமெனும் கர்ப்பத்தை ஆசையும் கோவமும் பனிக்குடமாய்ச் சூழ்ந்திருக்கின்றன.
புலனுறுப்புகளும் புத்தியும் மனமும் ஆசையின் இல்லங்கள். மாயை, அவற்றின் மூலமாகச் செயலாற்றி ஞானத்தை மறைத்து ஜீவனை மோகவசப்படுத்துகிறது.
உமக்குச் சந்தனம் வேண்டுமென்றால், பாம்பை அழிக்கவும். ஆசை, கோவம் ஆகிய உணர்ச்சிகள் வேய்ந்திருக்கும் முகமூடியை எடுத்தெறிந்து ஞானபொக்கிஷத்தைப் பெறவும்.
பாம்பைக் கொல்லாமல் யாராலாவது சந்தனத்தை அடைய முடியுமா? கருநாகத்தை சம்ஹாரம் செய்யாமல் (அழிக்காமல்) யாரால் பூமிக்குள் இருக்கும் புதையலை எடுத்து லாபமடைய முடியும்?
அதுபோலவே, ஆத்ம ஞானம் பெறவும் பரம்பொருளை அடையவும் அவற்றை மறைத்திருக்கும் மாயையாகிய திரையை விலக்குவதுதான், அதற்காக நாம் செய்ய வேண்டிய ஒரே சாதனை.
ஆதலால், முதலாவதாகப் புலன்களை வெல்லவேண்டும். அந்த வெற்றி, ஆசையையும் கோபத்தையும் நிர்த்துளியாக்கும் (முற்றும் அழிக்கும்). ஆசை , கோவம் இவற்றின் ஆதீனத்தில் ஜீவன் இருப்பதால், அஞ்ஞானம் ஞானத்தை முழுவதுமாக மூடியிருக்கிறது.
தேகத்தைக் காட்டிலும் புலன்கள் சூக்குமம்; புலன்களைக் காட்டிலும் மனம் சூக்குமம்; மனத்தைக் காட்டிலும் புத்தி சூக்குமம்; புத்தியைக் காட்டிலும் பரம்பொருள் சூக்குமம்.
உலகியல் தருமநீதிகள் அனைத்திற்கும் அப்பால் இருப்பது, உயர்ந்ததிலும் உயர்ந்ததான, என்றும் நிலைத்திருக்கும் பரம சத்தியம். அதுவே, மிகச் சிறந்த நன்மையை அளிக்கும் பரமாத்மா. அதுவே, அமிருதம் போன்ற நம் உண்மையான உருவம்.
அந்தத் தத்துவமே தூயதும் ஞானமடைந்ததும் என்றும் அழியாததும் தளைகளிலிருந்து விடுபட்டதுமாகிய பேதமற்று நிற்கும் நிலை. அந்தத் தத்துவமே பரமானந்தத்தில் உறைகிறது. அதுவே நம்முள் இருக்கும் சைதன்னியம்.

No comments:
Post a Comment