valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 3 September 2015

ஷிர்டி சாயி சத்சரிதம்

ஐந்து ரூபாய் என்ன பெரிய தொகை அவருக்கு? அதைகூடக் கடனாக கொடுக்க அவருக்கு மனமில்லை. பாபாவுக்கு அச் சிறிய தொகையை கொடுக்க மனமில்லாத அவர், வாஸ்தவத்தில் பேராசையின் வடிவமே.

அவரே பாபாவிடம் அன்புகொண்ட, கள்ளங்கபடமற்ற, விசுவாசமுள்ள அடியவராக இருந்திருந்தால், தம்முடைய கண்ணுக்கு எதிரிலேயே இந்தக் கடன் வாங்கிக் கடன் கொடுக்கும் காட்சியை சகித்துக்கொண்டு இருந்திருக்கமாட்டார்.

பிரம்ம ஞான தாஹம் அவ்வளவு இருந்தவர், கேள்வியைப் புரிந்துகொண்டிருக்க மாட்டாரா? இல்லை, நான் அவ்வாறு நினைக்கவே இல்லை! செல்வத்தின் மீதிருந்த மோஹம் அவரை ஆட்கொண்டு விட்டது.

இந்நிகழ்ச்சிகள் எல்லாம் நடந்து முடிந்த பிறகு, அவர் வெருமனெயாவது உட்கார்ந்திருக்கலாம்! அதுவும் இல்லை! திரும்பிச் செல்வதற்கு இருந்த அதீதமான (அதிகமான) அவசரத்தில் பொறுமையை இழந்து சொன்னார், "ஓ பாபா சாயி, பிரம்மத்தை எனக்கு சீக்கிரம் காட்டுங்கள்!"

பாபா அப்பொழுது சொன்னார், "நீர் இருந்த இடத்திலேயே பிரம்மத்தை உமக்குக் காட்ட நான் பல முயற்சிகள் செய்யவில்லையா? இதிலிருந்து  நீர் ஒன்றுமே புரிந்து கொள்ள வில்லையா?"

பிரம்மத்தை நாடுபவர் , பஞ்சப் பிராணன்களையும் ஐந்து ஞானேந்திரியங்களையும் ஐந்து கர்மேந்திரியங்களையும் அஹங்காரத்தையும் புத்தியையும் மனதையும் (பிரம்மத்திற்கு) சமர்ப்பணம் செய்து விட வேண்டும்.

பிரம்ம ஞானம் தேடும் பாதை கஷ்டமானது; எல்லாராலும் சுலபமாக அடைந்து விட முடியாது. பாக்கியசாலிக்கு நல்ல நேரம் வாய்க்கும்போது, பிரம்மம் தன்னையே திடீரென்று வெளிப்படுத்திக் கொள்கிறது.

எவன் பற்றற்றருத்தவனோ, எவன் இறைவனோடு ஐக்கியமாகி விடுவதைப் பற்றியும் கூடப் பெருமைப்படாதவனோ, அவனே பிரம்ம வித்தைக்கு அதிகாரியாவான்; ஏனெனில் அவன் எதிலும் பற்றில்லாதவன்.

லவலேசமும் பற்றறுக்கும் சுபாவமும் இல்லாதவனுக்கு, பிரம்ம தத்துவத்தை எவர் எவ்வளவு முழுமையாக உபதேசம் செய்தாலும், அவர் (உபதேசம் செய்பவர்) வெற்றி பெறுவாரா?

உத்தமமான அதிகாரிகளுக்கு பிரம்ம ஞானம் அதிக சிரமம் இன்றி சுலபமாகக் கிடைத்துவிடும். மத்திம அதிகாரிகள் படிப்படியாக சாஸ்திர விதிகளின்படி முன்னேற வேண்டும்.

முன்னவருக்கு சிறகடித்துப் பறக்கும் பறவையை போன்று வேகமாகக் கிடைக்கும்; பின்னவருக்கு ஏணியின் படிகளில் ஏறுவது போன்று மெதுவாக நடக்கும். ஆன்மீக அதிகாரமே இல்லாதவர்கள் பிரம்மத்தை அறிவதற்காக செய்யும் முயற்சிகள் வியர்த்தமே . 


No comments:

Post a Comment