valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 15 April 2021

 ஷீர்டி சாய் சத்சரிதம்

பின்னர், பக்கீர் அளித்த விபூதியைப் பார்க்கவேண்டுமென்று ஆப்பாசாஹெப் விரும்பினார். அது ஒரு பொட்டலமாக இருந்தது; பிரேமையுடன் பொட்டலத்தைப் பிரித்தார்.


பொட்டலத்தில் விபூதியுடன் மலர்களும் அக்ஷதையும் இருந்தன. அவற்றைப் போற்றுதற்குரிய பொருள்களாக ஏற்று, ஒரு தாயத்தில் இட்டு புஜத்தில் பயபக்தியுடன் கட்டிக்கொண்டார்.


பின்னர், அவர் பாபாவை தரிசனம் செய்யச் சென்றபோது பாபாவின் ரோமம் ஒன்று கிடைத்தது. அதை அவர் பிரேமையுடன் ஏற்கெனவே அணிந்திருந்த தாயத்தினுள் சேர்த்து அணிந்துகொண்டார்.


பாபாவின் உதீயின் மஹிமைதான் என்னே! உதீ சிவனுக்கு பூஷணம் (அணிகலன்), உதீயை நம்பிக்கையுடன் பூசிக்கொள்பவரின் பாதையிலுள்ள விக்கினங்கள் உடனே விலக்கப்படுகின்றன!


காலை ஸ்நானத்தை முடித்தபின் எவர் தினமும் நெற்றியில் உதீ பூசி, சிறிது உதீயைப் பாபாவின் பாததீர்த்ததுடன் கலந்து அருந்துகிறாரோ, அவர் பரிசுத்தமடைகிறார்; புண்ணியம் சேர்க்கிறார்.


அதுமாத்திரமன்றி, உதீயின் மேலுமொரு விசேஷமான குணம் என்னவென்றால், அது பூரணமான ஆயுளை அளிக்கும். எல்லாப் பாதகங்களையும் மிச்சமின்றி முழுவதுமாக அழிக்கும். சுகமும் சந்தோஷமும் எப்பொழுதும் நிலவும்.


ஆப்பாவைச் சாக்காக வைத்து தேவாமிருதத்தையொத்த சுவையுடைய இக் காதை விருந்தை சாயி அளித்திருக்கிறார். நாமும், அழையாத விருந்தாளிகளாக இருந்த போதிலும், பந்தியில் உட்கார்ந்து திருப்தியாக விருந்துண்டோம்.


விருந்தாளியும் விருந்தளித்தவரும் எல்லாருமே ஒரே விருந்தைத்தான் உண்டோம்; இனிமையையும் சுவையையும் பொறுத்தவரை வித்தியாசம் ஏதுமில்லை. இந்த ஆத்மானந்த போஜனத்தை உண்டு திருப்தி அடையுங்கள்.


ஹேமாட் சாயி பாதங்களை சரணடைகிறேன். நாம் இதுவரை கேட்டது தற்சமயத்திற்குப் போதும். அடுத்த அத்தியாயத்தில் உதீயின் பிரபாவம் தொடரும்.


சாயிதரிசனம் செய்து உதீயைப் பூசியதால், நெடுநாள்களாக ஆறாது புரையோடிய ரணம் பூரணமாக குணமடைந்த காதையையும் நரம்புச் சிலந்தி வியாதியும் பிளேக் நோயும் நிவாரணம் ஆனா காதைகளையும் சொல்லப்போகிறேன். பூரணமான மனவொன்றிப்புடன் கேளுங்கள்.


எல்லோருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்! ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு, சாயி பக்தன் ஹேமட் பந்தால் இயற்றப்பட்ட, 'ஸ்ரீ சமர்த்த சாயி சத் சரித்திரம்' என்னும் காவியத்தில், 'உதீயின் பிரபாவம்' என்னும் முப்பத்துமூன்றாவது அத்தியாயம் முற்றும்.


ஸ்ரீ சத்குரு  சாயிநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.


சுபம் உண்டாகட்டும். 


 

 

No comments:

Post a Comment