valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday, 19 June 2014

ஷிர்டி சாயி சத்சரிதம் 

திடீரென்று பாபா சொன்னார், "இன்று வந்த பிராமணரிடமிருந்து தக்ஷிணை வாங்கிக் கொண்டு வாருங்கள்." உடனே, ஸ்ரீமான் புட்டியே தக்ஷிணை வாங்கிக் கொண்டு  வருவதற்குக் கிளம்பினார். 

முலே ஸ்நானத்தை முடித்து விட்டு, மடி ஆசாரமான ஆடைகளை அணிந்து கொண்டு யோகாசமான நிலையில் நிம்மதியான மனதுடன் உட்கார்ந்து கொண்டிருந்தார். 

பாபா அனுப்பிய செய்தியைக் கேட்டவுடன் அவருடைய மனதை சந்தேகம் தாக்கியது. "நான் எதற்காக தக்ஷிணை கொடுக்க வேண்டும்? நான் தினமும் அக்கினிஹோத்திரம் செய்யும் நிர்மலமான பிராமணன். -

"பாபா ஓர் உயர்ந்த ஞானியாக இருக்கலாம். ஆனால், நான் அவருக்கு எவ்விதத்திலும் கடமைப் பட்டவன் அல்லேன்! என்னை ஏன் அவர் தக்ஷிணை கேட்கிறார்? அவருடைய மனம் தத்தளித்தது. 

" அதே சமயம், ஒரு சிறந்த ஞானி தக்ஷிணை கேட்கிறார்; இச்செய்தியை  ஒரு கோடீச்வரர் எனக்குக் கொண்டு வருகிறார்." முலே சாஸ்திரிக்கு மனதில் சந்தியம் இருந்தபோதிலும் கொஞ்சம் தக்ஷிணை எடுத்துக் கொண்டார். 

இன்னும் ஒரு சந்தேகமும் இருந்தது. ஆரம்பித்து விட்ட சடங்குகளை முடிக்காமல் மசூதிக்கு எப்படிச் செல்வது? ஆனால், (பாபாவுக்கு தக்ஷிணை) இல்லை என்று சொல்லவும் மனமில்லை. 

சந்தேகம் கொண்ட மனதிற்கு முடிவெடுக்கும் உறுதி இருக்காது. ஏதாவது ஒரு வழியில் செல்லாது; அவர் 1 திரிசங்கு நிலையிலிருந்தார். 

ஆயினும், அவர் போவதற்கு முடிவு செய்து, சபா மண்டபத்தினுள் நுழைந்து தூரத்திலேயே நின்று கொண்டார். 

"நான் மடி ஆசாரமாக உடை உடுத்திக் கொண்டிருக்கிறேன்; மசொதி ஓர் ஆசரமில்லாத இடம்; பாபாவின் அருகில் நான் எப்படிப் போக முடியும்?" இவ்வாறு நினைத்துக் கொண்டு கூப்பிய கைகளுக்குள் இருந்த பூக்களை பாபாவின் மீது புஷ்பாஞ்சலி செய்தார். ஈதனைத்தும் தூரத்தில் இருந்துதான் நடந்தது. 

ஓ! அவருடைய கண்ணெதிரிலேயே ஓர் அற்புதம் நிகழ்ந்தது! அமர்ந்திருந்த ஆசனத்தில் பாபா தெரியவில்லை; மாறாகத் தம் பூஜ்யகுரு கோலப் மகாராஜையே பார்த்தார். 

மற்றவர்கள் எப்பொழுதும்போல் சமர்த்த சாயியே பார்த்தனர். முலே சாஸ்த்ரியின் கண்களுக்கோ, எப்பொழுதோ சமாதியடைந்து விட்ட குரு கோலப் நாதரே தெரிந்தார். முலே சாஸ்த்ரி மிக ஆச்சரியமடைந்தார். 

அவருக்கு குரு வாஸ்தவத்தில் எப்பொழுதோ சமாதியாகி விட்டிருந்தாலும், தம் எதிரில் அவரை பூத உடலுடன் பார்த்த முலே, மிக வியப்படைந்தார். புதிய சந்தேகங்கள் பல முளைத்தன. 

----------------------------------------------------------------------------------------------------------
1 சூரிய   குலத்து அரசர். விசுவாமித்திர முனிவர் தம்முடைய தவ வலிமையால் அவரை மனித உடலுடன் சொர்கத்திற்கு அனுப்பினார். நுழையும்போது இந்திரன் அவரைப் பிடித்து கீழே தள்ளிவிட்டார். விசுவாமித்திரர் தவ வலிமையால் அவரைக் கீழே விழாது நிறுத்தினார். இதன் விளைவாக அவர் பூமிக்கும் சொர்க்கத்திற்கும் நடுவில் தலை கீழாக தொங்கும்படி நேர்ந்தது!  



Thursday, 12 June 2014

ஷிர்டி சாயி சத்சரிதம் 

சிறிது நேரம் அங்கு மௌனமாக அமர்ந்து கொண்டிருந்துவிட்டு, மற்றவர்களுடன் வாடாவிற்கு திரும்பிவிட்டார்.  ஸ்நானம் செய்த பின், சோவலாவை (மடி ஆடைகளை) உடுத்துக் கொண்டு, தாம் தினமும் செய்யும் அக்கினி ஹோத்திரதைச் செய்ய ஆரம்பித்தார். 

பாபா, "இன்று நம்முடன் கொஞ்சம் காவிச்சாயம் எடுத்துக் கொண்டு செல்லலாம். இன்று காவி உடை உடுத்துக் கொள்ளலாம்" என்று சொல்லிக்கொண்டே எப்பொழுதும் போல லெண்டிக்கு கிளம்பினார். 

காவிச்சாயத்தை வைத்துக் கொண்டு பாபா என்ன செய்யப் போகிறார் என்றும், என்றுமில்லாமல் திடீரென்று இன்று ஏன் காவி உடையைப் பற்றி நினைக்கிறார் என்றும் அனைவரும் வியப்படைந்தார். 

இம்மாதிரி சங்கேத பாஷையில் பேசுவது பாபாவுக்கே கைவந்த கலை. இதிலிருந்து என்ன புரிந்து கொள்ள முடியும்? ஆனால், அவ்வார்த்தைகளை ஞாபகத்தில் ஏற்றிக் கொண்டு அதைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தால் பலவிதமான விளக்கங்களை கண்டு பிடிக்கலாம். 

மேலும், ஒரு ஞானியினுடைய   திருவாய் மொழி என்றுமே அர்த்தமற்றதாக ஆகாது. அவர்களுடைய சொற்கள் பொருள் பொதிந்தவை, யாரால் அச்சொற்களை எடை போட முடியும்?

முதலில் கவனமுள்ள எண்ணம், பிறகு பேச்சு. இதுவே ஞானிகளின் வழி முறை . பிறகு, அவர்களுடைய சொல் நேர்மையான முறையில் செயலாகவும் மாற்றமடைகிறது. 

இந்த சித்தாந்தத்தின் அடைப்படையில் ஞானிகளின் சொல் என்றுமே அர்த்தமில்லாமல் போகாது. ஆழமான தியானம் அச்சொற்களின் முழுப் பரிமாணத்தையும் வெளிப்படுத்தும். 

பாபா லெண்டியிலிருந்து திரும்பி வந்தார். முரசுகளும் கொம்புகளும் ஒலிக்க ஆரம்பித்தன. பாபு சாஹேப் ஜோக் சட்டென்று முலே சாஸ்திரிக்கு யோசனை சொன்னார்,-

"ஹாரதி நேரம் நெருங்கிவிட்டது. நீங்கள் மசூதிக்கு வருகிறீர்களா?" மடி ஆசாரத்தை விடாபிடியாக கடைப் பிடித்த முலே சாஸ்திரி, தம்முடைய தர்மசங்கடமான நிலையை உணர்ந்தார். 

ஆகவே அவர் பதிலுரைத்தார், "நான் அப்புறமாகப் பிற்பகலில் தரிசனம் செய்து கொள்கிறேன்". ஜோக் ஹாரதிக்கு  ஏற்பாடு செய்ய ஆரம்பித்தார். 

பாபா திரும்பி வந்து விட்டிருந்தார்; ஆசனத்தில் அமர்துகொண்டு ஜனங்களோடு பேசிகொண்டிருந்தார். ஒவ்வொருவராக தங்கள் பூஜையை முடித்தனர்; ஹாரதி ஆரம்பிப்பதற்கு  எல்லாம் தயாராக இருந்தன. 

*ஜோக் -  P.W.D  இலாகாவில் மேற்பார்வையாளராக வேலை பார்த்த இவர், 1909 ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற பின் மனைவியுடன் ஷீரடியில் குடியேறிவிட்டார். தினமும் பாபாவுக்கு பூஜை செய்து ஹாரதி எடுக்கும் சேவையை செய்தார். 



Thursday, 5 June 2014

ஷிர்டி சாயி சத்சரிதம் 

வாழைப் பழங்களை அவர் கையாண்ட விதம் அபூர்வமானது. பக்தர்களுக்கு உள்ளிருக்கும் பழத்தை கொடுத்துவிட்டுத் தாம் தோலைத் தின்பார். ஓ, அவருடைய விளையாட்டுகள் அற்புதமானவை!

பழங்களைஎல்லாம் தம்முடைய கைகளாலேயே பக்தர்களுக்கு விநியோகம் செய்துவிடுவார். அவர் உண்பதென்னவோ எப்போதோ ஒரே ஒரு பழம்.

எப்பொழுதும் போல, பாபா அன்று கூடை கூடையாக வாழைப் பழங்கள் வாங்கி விநியோகம் செய்து கொண்டிருந்தார்.

முலே சாஸ்திரி பாபாவினுடைய திருவடிகளை கண்டு ஆச்சரியமடைந்து, கொடி, வஜ்ராயுதம், அங்குசம் போன்ற ரேகைகள் இருக்கின்றனவா என்று பார்த்தறிய விரும்பினார். 

காக சாஹேப் தீட்சிதர் அப்பொழுது  அருகிலிருந்தார்; நான்கு வாழைப் பழங்களை எடுத்து பாபாவின் கைகளில் வைத்தார். 

"பாபா, இவர் புண்ணிய ஷேத்திரமாகிய நாசிக்கில் வசிக்கும் முலே சாஸ்திரி, புண்ணிய பலத்தால் உம்முடைய திருவடிகளை தொழுவதற்கு இங்கு வந்திருக்கிறார். இந்தப் பழங்களை அவருக்குப் பிரசாதமாகக் கொடுங்கள்" என்று சொல்லி, யாரோ ஒருவர் பாபாவை உந்தினார். 

யார் கெஞ்சினாலும் கெஞ்சா விட்டாலும், தமக்கு விருப்பமில்லை என்றால் பாபா யாருக்கும் எதுவும் தரமாட்டார்! ஆகவே, அவர்களால் என்ன செய்ய முடிந்தது? 

மேலும், முலே சாஸ்திரிக்கு வாழைப் பழம் வேண்டா; பாபவினுடைய கைரேகைகளை பார்க்கவே விரும்பினார். இதற்காகவே அவர் தம்முடைய கையை நீட்டினார். பாபா இதைக் கண்டு கொள்ள வில்லை; பிரசாதம் விநியோகிப்பதிலேயே கவனம் செலுத்தினார். 

முலே பாபாவிடம் வேண்டினார், "எனக்கு பழம் வேண்டா; உங்களுடைய கையைக் காட்டுங்கள். சாமுத்திரிகா (லக்ஷனத்தின்படி) பலன் சொல்கிறேன்". ஆனால், பாபா கையைக் காட்ட அடியோடு மறுத்துவிட்டார். 

ஆயினும், முலே சாஸ்திரி தம்முடைய கரத்தை நீட்டிக் கொண்டே சாமுதிரிக்கா பலன்கள் சொல்வதற்காக பாபாவின் கரத்தை நாடி முன்னேறினார். அம்மாதிரி அவர் முன்னேறியதை தாம் பார்க்கவே இல்லாதது போல பாபா அதைக் கண்டு கொள்ளவில்லை. 

முலே சாஸ்திரியின் நீட்டிய கரங்களில் நான்கு வாழைப் பழங்களை  வைத்துவிட்டு அவரை அமரும்படி சொன்னாரே தவிர, கையைக் காட்ட மறுத்து விட்டார். 

இறைவனின் சேவையில் வாழ்நாள் முழுவதும் உடம்பை தேய்த்தவருக்கு சாமுதிரிக்கா லக்ஷன சாஸ்திரம் என்ன பலன் தரும்! பக்தர்களுக்கு தாயும் தந்தையும் ஆன சாயி, சகல் விருப்பங்களும் நிறைவேறியவர் அல்லரோ!

பாபாவினுடைய விருப்பமற்ற நிலையையும் சாமுதிரிக்கா லக்ஷண சாஸ்திரத்தை உதாசீனம் செய்ததையும் பார்த்த முலே சாஸ்திரி, இது வீண் முயற்சி என்று தீர்மானித்து, மேலும் முயற்சி செய்வதை நிறுத்திக் கொண்டார். 

   

Thursday, 29 May 2014

ஷிர்டி சாயி சத்சரிதம் 

சுருங்கச்சொன்னால், நாமெல்லோருமே திட்டங்கள் தீட்டுகிறோம். ஆனால், நமக்கு ஆதியும் தெரிவதில்லை. அந்தமும் தெரிவதில்லை. நமக்கு எது நன்மை, எது தீமை என்பது ஞானிகளுக்கே தெரியும். அவர்களுக்குத் தெரியாதது எதுவுமே இல்லை. 

நடந்தது, நடப்பது, நடக்கப் போவது அனைத்தும் அவர்களுக்கு உள்ளங்கை நெல்லிகனிப் போல் தெரியும். அவர்களுடைய ஆக்கைக்கு கீழ்ப்படிந்து நடந்து கொண்டால், பக்தர்கள் சுகத்தையும் சாந்தியையும் பெறுவார். 

ஏற்கெனவே சொல்லப்பட்டதை தொடரும் வகையில், நான் முக்கிய காதையை மேற்கொண்டு சொல்கிறேன். சாயி, முலே சாஸ்திரிக்கு அவர்தம் குருவின் தரிசனத்தையே கொடுத்து அருள்செய்த காதையை கேளுங்கள். 

முலே, ஸ்ரீமான் புட்டியை சந்தித்துவிட்டு உடனே திரும்பிவிடும் எண்ணத்துடன் ஷீரடிக்கு வந்தார். 

அவருடைய நோக்கம் அவ்வாறு இருந்த போதிலும், பாபா இவ்விஜயத்திற்கு வேறு திட்டம் வைத்திருந்தார். அந்த ரஹசியமான திட்டம் என்ன என்பதை கவனமாக கேளுங்கள். 

முலே சாஸ்திரி தாம் திட்டமிட்டவாறு ஸ்ரீமான் புட்டியை சந்தித்து முடித்தார். அதன் பிறகு, ஸ்ரீமான் புட்டியும் இன்னும் சிலரும் மசூதிக்கு போவதற்காக எழுந்தனர். இதைப் பார்த்த முலே சாஸ்திரிக்கு அவர்களுடன் செல்ல வேண்டுமென்ற ஆவல் எழுந்தது. அவர்களுடன்கூடச் சென்றார். 

முலே சாஸ்திரி ஆறு சாஸ்திரங்களையும் கரைத்துக் குடித்தவர்; ஜோதிட சாஸ்திர விற்பன்னர்; சாமுத்திரிக்கா லக்ஷணமும் பூரணமாக அறிந்தவர்; பாபாவை தரிசனம் செய்ததில் மனம் மகிழ்ந்து போனார். 

அன்புள்ள பக்தர்கள் ஆத்துமார்த்தமாக பாபாவுக்கு பழவகைகள், தூத்பேடா, பர்பி, தேங்காய்  போன்ற தின்பண்டங்களை அர்ப்பணம் செய்தனர். 

மேலும், கொய்யாப் பழம், வாழைப் பழம், கரும்பு போன்ற பொருள்களை விற்பதற்காக கிராமப் பெண்கள் மசூதியின் வாயிலுக்கு வந்தனர். பாபா விருப்பப் பட்டபோது, தாமே பாக்கெட்டிலிருந்து பணம் எடுத்துக் கொடுத்து இப்பொருள்களை வாங்குவார். 

தம்முடைய பணத்தை செலவு செய்து கூடை கூடையாக மாம்பழங்களோ அல்லது குலை குலையாக வாழைப் பழங்களோ வாங்கி, அவருடைய ஆசை தீருமட்டும் பக்தர்களுக்கு விநியோகம் செய்வார். 

ஒவ்வொரு மாம்பழமாக கையில் எடுத்துக் கொள்வார். இரு உள்ளைங்கைகளாலும் அழுத்திக் தேய்த்து கொளகொள வென்று செய்து விடுவார். அதன்பிறகு ரசத்தை உறிஞ்சுவதற்காக பக்தர்களிடம் கொடுப்பார். 

இவ்வாறு பாபாவால் கொளகொளவென்று ஆக்கப் பட்ட மாம்பழத்தை வாயில் வைத்து ரசத்தைஎல்லாம் ஒரு பாத்திரத்திலிருந்து குடிப்பது போலக் குடித்துவிடலாம். தோலையும் கோட்டையும் மாத்திரம் எறிந்து விடலாம். 

Thursday, 22 May 2014

ஷிர்டி சாயி சத் சரிதம் 

நானா அவ்வாறு சொன்னதற்கு நல்ல காரணங்கள் இருக்கவே செய்தன. ஆகவே, அவர் சொன்னார், "போ, ஆனால் உடனே திரும்பி விடு". இதைக் கேட்ட அம்மையார் குடும்ப விசாரத்தால் சோகமடைந்தார். 

அடுத்த நாள் புரட்டாசி மாதத்து அமாவாசை; அம்மையார் அந்த நாளில் பேலாபூரில் இருக்க வேண்டுமென்று விரும்பினார். இல்லை, மிகத் தீவிரமாக ஆவலுற்றார். ஆனால், நானா அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. 

மேலும் , அமாவாசையன்று பயணம் மேற்கொள்வது  அவ்வளவு உசிதமான செயல் அன்று. இந்தப் பிரச்னையை சமாளிப்பது எப்படி என்பது பற்றி அம்மையார் மிகக் கவலையுற்றார். 

பேலாபூருக்கு செல்லவில்லை என்றால் மனம் சமாதானம் அடையாது. ஆயினும், கணவருடைய மனதைப் புண்படுத்தவும் விரும்பவில்லை. எப்படி அவருடைய ஆணையை மீற முடியும்?

எப்படியோ, பெலாபூருக்கு செல்வதற்குத் தம்மை தயார் செய்து கொண்டு, புறப்படுவதற்கு முன் பாபாவை நமஸ்காரம் செய்து விட்டுப் போவதற்காக வந்தார். பாபா அப்பொழுது லெண்டிக்கு கிளம்பிக் கொண்டிருந்தார். 

ஜனங்கள் எப்பொழுது பிரயாணமாகக் கிளம்பினாலும் நிர்விக்கினமாகப் போய்வர வேண்டுமென்று கடவுளை வணங்கிவிட்டு செல்வர். இப்பழக்கம் ஷிர்டியிலும் அனுசரிக்கப் பட்டது. 

சாயி ஷிர்டி மக்களுக்கு கடவுள் ஆதலால், எவ்வளவு அவசரமாக பயணப் பட்டாலும், கிளம்புவதற்கு முன்பு பாபாவின் திருவடிகளை வணங்கிவிட்டே சென்றனர். 

இக்கிரமத்தின்படி, அம்மையார், பாபா சாடி வாடாவிற்கு  எய்த்ரில் ஒரு கணம் நின்றபோது  பாபாவினுடைய பாதங்களுக்கு நமஸ்காரம் செய்தார். 

சிறியவர்களும் பெரியவர்களுமாக நானா சாஹேப் நிமோன்கர் உட்பட, தரிசனத்திற்கு வந்தவர்கள் அனைவரும் பாபாவுக்கு நமஸ்காரம் செய்தனர். 

அங்கிருந்த மக்களின் முன்னிலையில், குறிப்பாக நானாவின் முன்பாக, பாபா அவ்வம்மையாரிடம் சமயோசிதமான வார்த்தைகளைக் கூறினார். 

பாபாவினுடைய பாதங்களில் சிரம் தாழ்த்திப் பிரயாணத்திற்கு அனுமதி கேட்ட உடனே, "போம், சீக்கிரமாகப் போம்; அமைதியான மனதுடன் இரும்.

"அவ்வளவு தூரம் போவதால், மூன்று நான்கு நாள்கள் சந்தோஷமாக பேலா பூரில் தங்கி எல்லாரையும் சந்தித்து விட்டு ஷீரடிக்கு திரும்பி வாரும்". 

எதிர்பாராதவிதமாக வந்த பாபாவின் திருவாய் மொழியைக் கேட்டுத் திருமதி நிமோன்கர் நிம்மதிப் பெருமூச்சு விட்டார். நிமோன்கரும் பாபாவின் சூசகத்தை புரிந்து கொண்டார். இவ்விதமாக, இருவருமே சமாதனமடைந்தனர். 

Thursday, 15 May 2014

ஷிர்டி சாயி சத்சரிதம் 

நிமோன் என்னும் கிராமத்தின் வதந்தாரான நிமொன்கருக்கு பிரிட்டிஷ் அரசாங்கம் கௌரவ மாஜிஸ்ட்ரேட் பதவியையும் அதிகாரத்தையும் கொடுத்திருந்தது. ஆகவே, அவர் மிகச் செல்வாக்கு உள்ளவராக இருந்தார். 

மாதவராவ் தேச்பாண்டாவின் ஒன்றுவிட்ட அண்ணன்களிலேயே மூத்தவரான அவர், மிக வயோதிகர்; எல்லாராலும் சிரேஷ்டமாக மதிக்கப் பட்டார். நிமோன்கரின் மனைவியும் ஒரு பக்தை; சாயியே அவர்களுக்கு இஷ்ட தெய்வம். 

தங்களுடைய வதனியை (ஜமீன் கிராமத்தை) விட்டுவிட்டு  ஷீரடியில் வாழ வந்து விட்டனர். சாயியின் பாதங்களில் சரணடைந்து, சுகமாகத் தங்களுடைய வாழ்நாளைக் கழித்துக் கொண்டிருந்ததனர். 

விடியற் காலையிலேயே எழுந்து, ஸ்நானம், பூஜை இவற்றைச் செய்து முடித்து விட்டுப் பொழுது விடியும் நேரத்தில் ஹாரதி எடுப்பதற்குச் சாவடிக்கு நாள் தவறாது வந்தனர். 

அதன் பிறகு, சூரிய அஸ்தமன காலம் வரை பாபாவுடனேயே இருந்து கொண்டு மனதுக்கு உள்ளேயே தம்முடைய தோத்திரங்களை ஜெபித்து கொண்டே நிமோன்கர் பாபாவுக்கு சேவை செய்வார். 

தினமும் பாபா லெண்டிக்கு (கிராம எல்லையிலிருந்த ஓடை) போகும் சுற்றில் தாமும் கூடச் சென்று பாபாவை மசூதிக்கு திரும்பக் கொண்டு வந்து சேர்ப்பார். அவரால் செய்ய முடிந்த சேவைகள் அனைத்தையும்  பிரேமை ததும்பிய மனத்துடன் செய்தார். 

நிமோன்கரின் மனைவியும் மிகுந்த பிரேமையுடன் பகல் நேரத்தில் அவரால் செய்ய முடிந்த உபகாரங்களை உபயோகமான முறையில் செய்து பாபாவுக்கு சேவை செய்தார். 

ஸ்நானம் செய்வதற்கும் சமையல் செய்து கொள்வதற்கும் இரவில் தூங்குவதற்குமே அவர் தம்முடைய இருப்பிடத்திற்கு சென்றார். 

மீதி நேரத்தையெல்லாம் காலையிலும் மதியத்திலும் மாலையிலும் இந்த தம்பதி பாபாவின் அண்மையிலேயே பிரேமையுடன் கழித்தனர். 

இவர்களிருவர் செய்த சேவையை எல்லாம் விரிவாகச் சொல்ல வேண்டுமெனில், இக்காவியம் வெகுவிச்தாரமாக ஆகி விடும். ஆகவே, இந்த அத்தியாயத்திற்கு சம்பத்தப் பட்ட நிகழ்ச்சியை மட்டும் விவரிக்கிறேன். 

தம் மகன் சிறிது உடல் நலமற்று இருந்ததால், நிமோன்கரின் மனைவி பெலாபூருக்கு செல்ல விரும்பினார். கணவரோடு ஆலோசனை செய்த பிறகு, அங்கே போவதற்குத் தயார் செய்து கொண்டார். 

பிறகு, எப்பொழுதும் செய்வது போல் பாபாவிடம் அனுமதி கேட்டார். பாபா சம்மதம் அளித்ததை தம் கணவருக்குத் தெரிவித்தார். 

இவ்வாறாக அம்மையார் பெலாபூருக்கு செல்வதென்பது நிச்சயம் செய்யப் பட்டது. ஆனால், நிமோன்கர் அவரை மறுநாளே திரும்பி வந்து விட வேண்டும் என்று சொன்னார். 


Thursday, 10 April 2014

ஷிர்டி சாயி சத் சரிதம் 

தபால் காரர் காகாவைப் பற்றி விசாரித்துக் கொண்டு வந்தபோது, காகா ஷிரிடியிலிருந்து கிளம்பிவிட்டிருந்தார். கடிதம் பம்பாய்க்கு திருப்பி அனுப்பப் பட்டது. காகாவுக்கு இந்தக் கடிதம் வீட்டில் கிடைத்தது. 

இந்நிகழ்ச்சிக்கு நேர்மாறாக, எவ்வாறு பக்தர்களுக்கே தங்களுடைய நலன் தெரியாதிருந்த போதும், பாபாவுக்கு நன்கு தெரிந்திருந்தது  என்பது பற்றி ஒரு சின்ன கதை சொல்கிறேன்; கேளுங்கள்!

ஒருமுறை நாசிக்கிலிருந்து , புகழ்பெற்ற வக்கீலும் பாபாவுக்கு  பக்தருமான பாபு சாஹேப் துமால் என்பவர் பாபாவை தரிசனம் செய்வதற்காகவே ஷீரடிக்கு வந்தார். 

சீக்கிரமாக தரிசனம் செய்து கொண்டு, பாபாவின் திருவடிகளுக்கு நமஸ்காரம் செய்துவிட்டு பாபாவின் ஆசீர்வாதங்களையும் உதீயையும் பெற்றுக் கொண்டு உடனே திரும்பி விடவேண்டும் என்று நினைத்துக் கொண்டு வந்தார். 

திரும்பும் வழியில் நிபாட் என்னுமிடத்தில் இறங்கிக் கோர்ட்டில் வழக்கு ஒன்றை வாதாட வேண்டிய அவசியம் இருந்தது. 

அவர் அவ்வாறு திட்டமிட்டுக் கொண்டு வந்திருந்தாலும், அவருக்கு எது உசிதம் எது உசிதமில்லை என்று பாபாவுக்கு தெரிந்திருந்தது. ஆகவே, அவர் வீடு திரும்ப அனுமதி கேட்டபோது பாபா மறுத்து விட்டார். 

அனுமதி கொடுக்கத் திட்டவட்டமாக மறுத்து, அவரை ஒரு வாரம் ஷீரடியில் தங்கும்படி செய்துவிட்டார். கோர்ட்டில் வழக்கு விசாரணை மூன்று முறைகள் தள்ளிப் போடப் பட்டு தாமதமேற்பட்டது. 

துமால் ஒரு வாரத்திற்கு மேலாகவே, ஷிரிடியில் தங்கவைக்கப் பட்டார். வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நாள்களில் நீதிபதிக்கு உடல் நலம் பாதிக்கப் பட்டது. 

நீதிபதிக்கு அம்மாதிரியான, பொறுக்க முடியாத வயிற்று வலி அதுவரை வந்ததே இல்லை. அதன் காரணமாக, வேறு வழியில்லாமல் வழக்கு தள்ளிப் போடப்பட்டது. வக்கீல் துமாலை பொறுத்தவரை அவருடைய நேரம் மிகச் சிரத முறையில் உபயோகப் படுத்தப் பட்டது. 


துமாலுக்கு சாயியின் சஹவாசம் என்னும் பெரும் பாக்கியம் கிடைத்தது. துமாலின் கட்சிக்காரருக்கோ கவலையிலிருந்து விடுதலை கிடைத்தது. சாயியின் மீது வைத்த விசுவாத்தினால் எல்லாமே பிரயாசையின்றி நடந்தது. 

பிறகு, பொருத்தமான காலத்தில் துமால் வீடு திரும்ப அனுமதிக்கப் பட்டார். அவருடைய வேலையும் திருப்தி கரமாக முடிக்கப் பட்டது. இதுவே சாயியின் லீலை; ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டது. 

இந்த வழக்கு, நீதிமன்றத்தில் நான்கு மாதங்கள் நடந்தது. நான்கு நீதிபதிகள் ஒருவர்பின் ஒருவராக இவ்வழக்கை விசாரிக்கும்படி ஆயிற்று. முடிவில் வக்கீல் துமால் தம் கட்சிகாரர் குற்றமற்றவர் என்று நிரூபிப்பதில் வெற்றி பெற்றார். 

சாயி ஒருமுறை பரம பக்தரான நானா சாஹேப் நிமோன்கரின் மனைவியின் கட்சிக்காக வாதாடிய நிகழ்ச்சியை சொல்கிறேன்; கேளுங்கள்.