ஷீர்டி சாயி சத்சரிதம்
தேங்காய் என்று சொன்னவுடனே தேங்காய் தயாராக இருந்தது! அதை உடைப்பதில் என்ன தாமதம்? தேங்காயைக் கலந்தவுடன் சிவ்டா ருசிகரமாகியது. சிவ்டாவைத் தின்றபின் தண்ணீர் குடித்தனர்.
தேங்காய் என்று சொன்னவுடன் தேங்காய் வந்தது. அது யாருடையது என்ற கேள்வியே எழவில்லை. பசியின் கடுமை வேறெதையும்பற்றி சிந்திக்கவிடாமல் தடுத்துவிட்டது!
பின்னர், ரயில் நிலையத்திற்குத் திரும்பிவந்து கோபர்காங்வ் ரயிலில் ஏறிய பிறகு பயணத்தின்போது புண்டலீக ராவுக்குத் திடீரென்று தேங்காய்பற்றிய நினைவு வந்தது.
ஷிர்டியை நெருங்கியபோது புண்டலீக ராவின் மனம் குழம்பித் தத்தளித்தது. வாசுதேவானந்தா அளித்த தேங்காய், தவறுதலாகச் சிவ்டாவுடன் கலக்கப்பட்டுவிட்டது.
தேங்காய் உடைக்கப்பட்டு உண்ணப்பட்டுவிட்டது, என்பதை உணர்ந்த புண்டலீக ராவைப் பயம் பிடித்துக்கொண்டது. உடல் நடுங்க ஆரம்பித்தது. ஒரு ஞானிக்கு அபசாரம் (மரியாதைக் குற்றம்) நடந்துவிட்டது.
அவர் பெரிதும் வருத்தமுற்றார், "அடாடா நான் எத்தகைய பாவம் செய்துவிட்டேன்! சுவாமியின் சாபத்திற்கு நான் ஆளாவேன். நான் அவரிடம் பிரலாபித்ததெல்லாம் (பிதற்றியதெல்லாம்) வீணாக்கப் போயிற்று".
தேங்காய்க்கு நேர்ந்த கதியையும் தாம் செய்த ஏமாற்றுதலையும் நினைத்துப் புண்டலீக ராவின் மனம் வியப்பில் உறைந்து போயிற்று.
"இப்பொழுது நான் பாபாவிடம் எதைக் கொடுப்பேன்? எந்த ரீதியில் அவருக்கு விவரம் சொல்லுவேன்? ஆஹா, தேங்காயைக் கோட்டைவிட்ட நான் எப்படி அவரிடம் என் முகத்தைக் காட்டுவேன்?"
'சாயி பாதங்களில் சமர்ப்பணம் செய்வதற்கு வைத்திருந்த தேங்காய் தின்று தொலைக்கப்பட்டதே ' என்னும் சிந்தனை அவரை வாட்டியது. அது ஒரு ஞானிக்குச் செய்யப்பட்ட அபசாரம் என்று தம்முள் நினைத்தார்.
"இப்பொழுது, பாபா 'தேங்காய் எங்கே' என்று கேட்கும்போது எல்லாரும் அவமானத்தால் முகங்கவிழப் போகிறோம். ஏனெனில், 'மன்மாடில் அது சிற்றுண்டியாகிவிட்டது' என்னும் குற்றவுணர்ச்சி எல்லாருடைய மனத்திலும் தோன்றும். -
"இன்று அந்தத் தேங்காய் என்னிடம் இல்லை. உண்மையைச் சொல்லுவதற்கு வெட்கமாக இருக்கிறது. பொய் சொல்லவும் முடியாது. ஏனெனில், சாயி மஹராஜ் சர்வசாக்ஷி (எல்லா நிகழ்வுகளையும் சாட்சியாகப் பார்த்துக்கொண்டிருப்பவர்)".
இருந்தபோதிலும், சாயியை தரிசனம் செய்தபோது குழுவினர் அனைவரும் சந்தோஷப்பட்டனர். விழிகள் ஆனந்தக் கண்ணீர் வடித்தன. அவர்களுடைய முகங்கள் மலர்ந்திருந்தன.
இக் காலத்தில் நாம் இரவுபகலாகத் தந்தி மூலமாகச் செய்திகளை அனுப்புகிறோம். இந்த விஞ்ஞான சாதனைப் பற்றி பெருமை கொள்கிறோம்; பகட்டுகிறோம்.

No comments:
Post a Comment