valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday, 1 October 2026

 ஷீர்டி சாயி சத்சரிதம் 


இதன் பொருட்டுப் பெருஞ்செலவு செய்து பல தந்தி நிலையங்களை நிர்மாணம் செய்திருக்கிறோம்.  ஞானியருக்கு இச் சாதனங்கள் தேவையில்லை.  தங்களுடைய மனத்தின் சக்தியாலேயே செய்திகளை அனுப்புகின்றனர். 

சுவாமிகள் புண்டலீக ராவிடம் தேங்காயைக் கொடுத்தபோதே சாயிநாதருக்குச் செய்தி அனுப்பிவிட்டார். 

புண்டலீக ராவுக்கு தரிசனம் அளித்துக்கொண்டே சாயி பாபா அவராகவே கேட்டார், "என் சகோதரிடமிருந்து நீர் எடுத்துகொண்டுவந்த என்னுடைய வஸ்துவைக் (பொருளைக்) கொடும்".

பெருந்துன்பமடைந்த புண்டலீக ராயர், சாயியின் பாதங்களை கெட்டியாகப் பிடித்துக்கொண்டே சொன்னார், "தேவரீரிடம் மன்னிப்புக் கேட்பதைத்தவிர எனக்கு வேறு வழியே இல்லை.  என்னால் வேறென்ன சொல்ல முடியும்?-

"எனக்குத் தேங்காய்பற்றிய ஞாபகம் இருந்தது.  ஆனால், நாங்கள் பசியோடு ஓடைக்குச் சென்றபோது எல்லாருமே அதைப்பற்றி முழுமையாக மறந்துவிட்டோம்.-

"சிவ்டாவைத் தின்றபோது அந்தத் தேங்காயைத்தான் உடைத்துக் கலந்தோம்.  ஆயினும், நான் இன்னொரு தேங்காய் கொண்டுவருகிறேன்.  நிச்சலமான மனத்துடன் தேவரீர் அதை ஏற்றுக்கொள்ள வேண்டுகிறேன்."

இவ்வாறு சொல்லிக்கொண்டே புண்டலீக ராவ் வேறொரு தேங்காயைக் கொண்டுவருவதற்காக எழுந்தார். சாயி மஹராஜ் அவருடைய கையைப் பிடித்துத் தடுத்து நிறுத்தியதை எல்லாரும் கண்டனர். 

"என்னிடம் வைக்கப்பட்ட நம்பிக்கையை நான் அறியாது கொன்றுவிட்டேன்.  கிருபாளுவான (அருளுடையவரான)  தேவரீர் என்னைச் சிறகுகளால் மூடிக் காப்பீராக.  கிருபை செய்து என்னை மன்னித்துவிடுங்கள். நான் உங்களுக்குக் கடுமையான அபராதம் (குற்றம்) செய்துவிட்டேன்.-

"சுவாமிக்கு இணையான ஒரு நல்ல சாது உள்ளாரோ?  அவருடைய ஆணையையே நான் மீறிவிட்டேன்.  தங்களிடம் அர்ப்பணம் செய்யப்படவேண்டிய தேங்காயை நான் உடைத்துத் தின்று விட்டேன்.-

"இது ஞானியர் விதித்த ஆணையை மீறுவதன்றோ? அய்யகோ! நான் பெருங்குற்றவாளி!  இந்தப் பாவத்திற்கு சாந்தி ஏதும் உண்டோ?  எப்படி, எப்படி, நான் இவ்வளவு வெட்கங்கெட்டவனானேன்?"

என்ன நடந்தது என்பதைக் கேட்ட சாயிநாதர் புன்னகை புரிந்துகொண்டே சொன்னார், "வைத்துக் காப்பாற்ற முடியாதவர் ஏன் தேங்காயைக் கையில் வாங்கிக்கொள்ள வேண்டும்?-

"என்னுடைய வஸ்துவை என்னிடம் நீர் நிச்சயமாக கொண்டுசேர்ப்பீர் என்று நினைத்து என் சகோதரர் உமது வார்த்தைகளில் முழுமையாக விசுவாசம் வைத்தார். -

"அது இவ்வாறாக பரிணமிக்க (உருமாற)  வேண்டும்?  இவ்வளவுதான் உம்முடைய நாணயமா? என் சகோதரருடைய விருப்பம் நிறைவேறவில்லை.  இதுதான் நீர் செயல்படும் முறையோ?"


 

No comments:

Post a Comment