valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday, 16 March 2017

ஷீர்டி சாயி சத்சரிதம்

"சரி, நீர் இப்பொழுது போகலாம். இந்த நூலைப் படித்துப் பாரும். அவ்வாறு செய்வதால் உம்முடைய மனோரதங்கள் அனைத்தும் நிறைவேறும். இதை நினைவில் வைத்துக்கொள்ளும். -

"பிற்காலத்தில் வேலை விஷயமாக வடதேசம் செல்லும்போது, நீர் செய்த மஹாபாக்யத்தால் வழியில் ஒரு மஹாபுருஷரை சந்திப்பீர்.-

"அவர் உமக்கு மார்க்கத்தைக் காட்டுவார்; உம்முடைய மனத்திற்கு உறுதியையும் சாந்தியையும் அளிப்பார். அவரே உமக்கு உபதேசங்களை அளித்து உமது மனதில் நன்கு பதியவைத்து விடுவார்."

அவ்விடத்தில் வேலை முடிந்துவிட்டதால், தாகூர் புனே ஜில்லாவிலுள்ள ஜூன்னருக்கு மாற்றப்பட்டார். அங்கே போவதற்கு மிக உயரமானதும் கடப்பதற்கு அபாயகரமானதுமான நானேகாட்டைக் கடந்துதான் செல்லவேண்டும். 

அந்த வழி ஆபத்துக்கள் நிறைந்தது. எருமை மாட்டின்மேல் சவாரி செய்துதான் கடக்க வேண்டும். போக்குவரத்து வாஹனம் வேறெதுவுமில்லாததால், ஓர் எருமைக்கடா, சவாரி செய்வதற்காக அண்மையில் இருந்து கொண்டுவரப்பட்டது. 

எதிர்காலத்தில் வாழ்க்கையில் முன்னேறிய பின், அவருக்கு குதிரையோ மோட்டார் வாகனமோ கிடைக்கலாம். ஆனால், அன்றைய நிலையில் அங்கே கிடைத்த எருமைக்கடாவின் மேல்தான் அவருடைய பிரயாணத்தை சாமர்த்தியமாக சமாளிக்க வேண்டியிருந்தது. 

எருமைக்கடாவின் உதவியின்றி மலையைக் காலால் நடந்து கடக்க முடியாது. வேறு எந்த வாகனமும் அங்கே கிடையாது. இதுவே நானே காட்டின் அற்புதம்; வாகனமும் அபூர்வம்!

ஆகவே, அவர் தம் மனத்தை உறுதிசெய்துகொண்டு  எருமைக்கடாவின் முதுகில் ஒரு சிறுமெத்தையைக் கட்டிச் சேணம் பூட்டச் செய்து, மிகவும் சிரமப்பட்டு ஏறி உட்கார்ந்தார். 

ஏறி உட்கார்ந்துவிட்டாரே தவிர, ஏற்றம் மிகச் செங்குத்தாக இருந்தது. அபூர்வமான வாஹனமாகிய எருமைக்கடாவின் திடீர் அசைவுகளும் ஆட்டமும் குலுக்கலும் சாய்தலுந்தானே என்னே! அவருடைய முதுகு சுளுக்கிக்கொண்டு வலித்தது. 

ஒரு வழியாகப் பயணம் முடிந்தது. ஜூன்னரில் காரியாக்கிரமங்கள் நன்கு நிறைவேறின. பதவியிட மாற்ற ஆணையும் வந்தது. அவ்விடத்தில் இருந்து கிளம்பிவிட்டார். 

பதவி இடமாற்றம் கல்யாண் என்னும் நகருக்கு கிடைத்தது. அங்கு நானா சாந்தோர்கரை சந்தித்தார். சாயிநாதரின் கீர்த்தியை அவரிடமிருந்து கேட்டவுடன் டாகூருக்கும் தரிசனம் செய்ய வேண்டுமென்ற ஆவல் எழுந்தது. 

அடுத்த நாளே அதற்கு வேளையும் வந்தது. சாந்தோர்கர் ஷீர்டி செல்ல ஆயுத்தம் செய்துகொண்டே சொன்னார், "வாரும், இம்முறை நாமிருவரும் கூட்டமாகச் செல்லலாம்.-



Thursday, 9 March 2017

ஷீர்டி சாயி சத்சரிதம்

இந்தப் பதவியை மக்கள் ஒருகாலத்தில் பெரிதும் மதித்தனர். உத்தியோகஸ்தர்களுக்கும் இப் பதவியின் அதிகாரத்தை அனுபவிக்க வேண்டும் என்ற பெருவேட்கை அப்பொழுது இருந்தது. பரஸ்பரம் ஆனந்தமடைந்தனர். ஆனால், அக்காலம் இப்பொழுது மலையேறிவிட்டது.

தற்காலத்தில் இப் பதவியில் இருக்கும் சிரமத்தையும் பிடுங்கல்களையும் யாரால் விவரிக்க முடியும்? இப் பதவி சுகமான உத்தியோகமாக இருந்தது பழைய காலம். இப்பொழுதோ பொறுப்புகளின் சுமையே அதிகம். வருமானமென்னவோ நிறைய உண்டு.

மேலும், எவ்வளவு கடுமையாகவும் நேர்மையாகவும் உழைத்தாலும், மாமலத்தார் பதவிக்கு டெபுடி கலெக்டருக்கு இணையாக முன்பிருந்த மரியாதையும் காம்பீர்யமும் தற்பொழுது இல்லாமற்போய் விட்டன.

மேலும், இந்த அதிகாரமான பதவியை அடைவதில் பணம் செலவு செய்யாமலும் சிரமப்பட்டு தொடர்முயற்சியாக படிக்காமலும் யாரால் வெற்றிபெற முடியும்?

முதலில் பி.ஏ. பரீட்சையில் வெற்றிபெற வேண்டும். பிறகு, வரிவசூல் இலாகாவில் மாதம் ரூ. 30 /- சம்பளத்தில் குமாஸ்தா வேலை கிடைக்கும். பிறகு, இந்த மார்க்கத்தில் மெதுவாக முன்னேற வேண்டும்.

காலம் வந்தபோது அவர் மலைகளைத் தாண்டி (மேற்குத் தொடர்ச்சி மலைகள்) கிழக்கு நோக்கிச் சமவெளிக்குப் போகவேண்டும். நிலங்களை அளக்கும் பயிற்சி பெறவேண்டும். சர்வேயர்களுடன் தங்கியிருக்க வேண்டும். அப்பொழுதுதான் இலாகாவின் துறைத் தேர்வுகளில் வெற்றிபெறமுடியும்.

பிறகு, உயர்பதவிகளில் இருப்பவர்களில் யாராவது ஒருவர் வைகுண்ட பதவி அடைவதால் ஏற்படும் காலியிடம் இவருடைய முன்னேற்றத்திற்கு உதவியாக இருக்கும்.

போதும் இந்த வத வதவென்ற விவரணம். உளறிக்கொண்டே போவதில் பிரயோஜனம் என்ன? இம்மாதிரியான அதிகாரிகளில் ஒருவர் சாயியை சந்தித்த காதையைக் கேளுங்கள்.

பெல்காமிற்கு சமீபத்தில் வட்காங்வ் என்றொரு கிராமம் இருக்கிறது. அங்கு, ஓர் சமயம் சர்வேயர் (நில அளவு செய்பவர்கள்) பிரிவு ஒன்று வந்து முகாமிட்டது.

அந்த கிராமத்தில் ஒரு ஞானி இருந்தார். டாகூர் அந்த ஞானியை தரிசனம் செய்து பாதங்களில் வணங்கி, ஆசீர்வாதமும் பிரசாதமும் பெற்றார்.

அந்த சமயத்தில் அந்த ஞானி, நிச்சலதாஸர் இயற்றிய விசார சாகரம் எனும் நூலைப் படித்துக்கொண்டிருந்தார்.

சிறிது நேரம் கழித்து, டாகூர் விடைபெறுவதற்காக எழுந்தபோது அந்த ஞானி மகிழ்ச்சியுடன் அவரிடம் என்ன சொன்னார் என்பதைக் கேளுங்கள். 


Thursday, 2 March 2017

ஷீர்டி சாயி சத்சரிதம்

ஆயிரக்கணக்கில் மக்கள் அங்கு தரிசனத்திற்கு கூடினர்; நானும் அங்கு எதற்காக ஓட வேண்டும். இனூஸ் செய்த தொந்தரவு பொறுக்கமுடியவில்லை என்பதற்காகவா நானும் தரிசனம் செய்யப் போகவேண்டும்? என்னுடைய கௌரவம் என்னாவது?

ஒவ்வொரு தடவையும் இவ்வாறான சிந்தனை ஏதாவது மனதில் உதித்தது. கடைசிவரை நான் தரிசனத்திற்கு போகவேயில்லை. என்னுடைய நிழலை பார்த்து நானே பயந்தேன் போலும்! துரதிஷ்டம் என்னை தடுத்துவிட்டதாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

பல ஆண்டுகள் இவ்விதமாக உருண்டன. பிறகு நான் அங்கிருந்து பணிமாற்றம் செய்யப்பட்டேன். பல ஆண்டுகளுக்கு பிறகு நல்ல காலம் பிறந்தது; ஷிரிடியுடன் அகண்டமான (முழுமையான) உறவு ஏற்பட்டது.

தாத்பரியம் என்னவென்றால், ஞானிகளின் சங்கம் அபாக்யசாலிகளுக்குக் கிடைப்பதில்லை. இறைவனுடைய கிருபை இருந்தால் சுலபமாக கிடைக்கிறது. அது இல்லையெனில் குருதரிசன யோகமே அமைவதில்லை.

செவிமடுப்பவர்களே, இப்பொழுது இவ்விஷயமாக ஒரு சுவாரஸ்யமான கதை சொல்கிறேன்; பயபக்தியுடன் கேளுங்கள். காலங்காலமாக ஞானிகள் எவ்வாறு ஒருவருக்கொருவர் கமுக்கமான உறவும் பரிவர்தனையும் வைத்திருந்தனர் என்பதை பாருங்கள்.

காலம், வர்த்தமனாம் (நிகழ்வுகள்) இவற்றுக்கு ஏற்றவாறும் அவர்களுடைய விருப்பத்திற்கேற்றவாறும் காரண காரியத்துடன் ஞானிகள் அவதாரம் செய்கிறார்கள். ஆயினும், அவர்கள் பரஸ்பரம் (ஒருவருக்கொருவர்) வேறுபட்டவர்களாவர்.

தேசமும் காலமும் காரணமும் வேறுபட்டாலும், ஒரு ஞானிக்கு மற்றொரு ஞானியின் மனம் நன்கு தெரியும். உள்ளுக்குள் அவர்கள் அனைவரும் ஒருவரே.

எவ்வாறு ஓர் உலகையாளும் சக்கரவர்த்தி ஒவ்வொரு தேசத்திலும் ஓர் அதிகாரியை நியமித்து தம்முடைய சாம்ராஜ்யத்திற்கு முன்னேற்றத்தையும் செழுமையையும் கொண்டுவருகிறாரோ,-

அவ்வாறே ஆத்மானந்தமாகிய சக்கரவர்த்தி பல இடங்களில் தோன்றி சூக்குமமான முறையில் தம்முடைய ராஜ்ஜியம் என்னும் சக்கரத்தை சுழற்றுகிறார்.

ஆங்கில படிப்புப் படிக்கும் பாக்கியம் கிடைத்து பி.ஏ பட்டம் பெற்ற தாகூர் என்ற நற்குடிமகன் ஒருவர் இருந்தார். படிப்படியாக வாழ்க்கையில் உயர்ந்து பெயர் பெற்ற அதிகாரியாக விளங்கினார்.

சில வருடங்களில் அவர் ஒரு மாம்லதாராக உயர்ந்தார். மேலும் உயர்ந்து டெபுடி கலெக்டர் பதவி பெற்றார். தெய்வப் பிராப்தியாக அவருக்கு சாயி பாபாவிடம் உபதேசம் பெறும் அதிர்ஷ்டம் வாய்த்தது.

மாம்லத்தார் பதவி தூரத்திலிருந்த பச்சைப் பசேலென்று தெரியும் மலையைப் போன்று வசீகரமானதுதான். அருகில் சென்று பார்த்தால்தான் எட்டி மரங்கள் அடர்ந்திருப்பது தெரியும். ஆயினும், கௌரவத்தில் என்னவோ அது உயர்ந்த பதவிதான். 


Thursday, 23 February 2017

ஷீர்டி சாய் சத்சரிதம் 

21 . அருள் மழை பொழிந்தது!

ஓம் ஸ்ரீ விநாயகனே போற்றி! ஸ்ரீ சரஸ்வதியே போற்றி!

கடந்த அத்தியாயத்தில் ஏற்கனேவே குறிப்பிட்டவாறு தாகூரும் மற்றவர்களும் இம்மஹா புருஷரை எப்படி தரிசனம் செய்தார்கள் என்பதை விவரிக்கிறேன். ஒருமுகப்பட்ட மனதுடன் கேளுங்கள். 

கேட்பவர்களை ரோமாஞ்சனம் (மயிர்கூச்செறிதல்) அடையச் செய்யாததும் ஆனந்தத்தால் ஊஞ்சலாட செய்யாததுமான, பிரவசனம் செய்பவரின் சொற்கள் வியர்த்தனமானவை அல்லவா?

கேட்பவர்களை மனம் மகிழச் செய்யாததும் உணர்ச்சி வசத்தால் தொண்டையை அடைக்கச் செய்யாததும் ஆனந்தக்கண்ணீர் பெருகி கன்னத்தில் வழியும்படி செய்யாததுமான கதை என்ன கதை? உபயோகமில்லாத கதை. 

மனோகரமான பேச்சை உடையவரும் உலகம் காணாத உபதேசமுறைகளைக் கையாள்பவரும் தினந்தினம் புதுப்புது அற்புத லீலைகளை புரிபவருமான பாபாவின் பாதங்களில் என் நெற்றியை வைத்து வணங்குகிறேன். 

தெய்வ அனுக்கிரஹம் இல்லாமல் எவருக்கும் சாதுக்களையும் ஞானிகளையும்  தரிசிக்கும் பாக்கியம் கிடைக்காது. அவ்வாறான ஒரு மஹாபுருஷர் அருகிலேயே வந்தாலும் பாவிகளின் கண்களுக்கு அவர் தெரியாமற் போய்விடுவார். 

இது எந்த அளவிற்கு உண்மையென்பதை நிரூபிக்கத் தேசமெங்கும் அலைய வேண்டியதில்லை; அந்நிய தேசத்துக்கும் செல்ல வேண்டியதில்லை. ஏன், கேப்டவர்களுக்கு என்னுடைய அனுபவத்தையே எடுத்துரைக்கிறேன். 

பாந்த்ரா நகரத்தில் பீர் மௌலானா என்ற பிரசித்தி பெற்ற சித்தர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவருடைய புண்ணிய தரிசனத்திற்காக ஹிந்துக்களும் பார்சிக்களும் மற்ற மதத்தை சார்ந்தவர்களும் அறிஞர்களும் பெருமக்களும் வந்தனர். 

நான் அந்த நகரத்தில் அப்பொழுது மாஜிஸ்திரேட்டாக உத்தியோகம் பார்த்துவந்தேன். பீர் மௌலானாவுக்கு இனூஸ் என்ற பக்தரொருவர் சேவை செய்துவந்தார். இந்த இனூஸ் என்னை தரிசனத்திற்கு வருமாறு இரவு பகலாக தொந்தரவு செய்துகொண்டிருந்தார். 


Thursday, 16 February 2017

ஷீர்டி சாயி சத்சரிதம்

அடுத்த அத்தியாயத்தில் விநாயக் தாகூரின் காதையும் இன்னும் சில கதைகளும் சொல்லப்படும். செவிமடுப்பவர்கள் பயபக்தியுடன் கேட்டால் ஆன்மீக முன்னேற்றம் ஏற்படும்.

இக் காதைகள் இனிமையானவை; கேட்பதால், மஹாபுருஷர்களை தரிசனம் செய்யவேண்டுமென்ற பக்தர்களின் ஆவலும் பூர்த்தியாகும்.

தினமணி (சூரியன்) உதித்தவுடன் இருள் எவ்வாறு விரட்டப்படுகிறதோ, அவ்வாறே இக்கதாமிருதம் மாயையை விரட்டிவிடும்.

சாயியின் லீலைகள் எண்ணத்திற்கும் செயல் / விளைவு சிந்தனைக்கும் அப்பாற்பட்டவை. அவரைத் தவிர வேறு யாரால் அவற்றை விவரிக்க முடியும்? நான் ஒரு கருவி மாத்திரமே அல்லேனோ? அவரே என்னை பேசவைப்பார்.

எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்! ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு, சாயி பக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, 'ஸ்ரீ சாயி சத் சரிதம்' என்னும் காவியத்தில், 'ஈசாவாஸ்ய பாவார்த்த போதனம்' என்னும் இருபதாவது அத்தியாயம் முற்றும்.

ஸ்ரீ சத் குரு சாயிநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.

சுபம் உண்டாகட்டும். 


Thursday, 9 February 2017

ஷீர்டி சாயி சத்சரிதம்

இவ்வுலகத்தைப் பற்றிய இந்த விவேகம் மனதிற்கு ஏற்புடையதாகவிட்டாலும், பணத்தையும் பொன்னையும் தேடி அலைவதையாவது விட்டுவிடு.

இதையும் செய்யமுடியாவிட்டால், நீ சாகும்வரை, நூறு வருடங்களாயினும் சரி, கர்மம் செய்துகொண்டிருப்பதற்குத்தான் தகுதியுடையவன்!

அந்தக் கர்மமும் சாஸ்திரங்களில் விதிக்கப்பட்டவாறு உன்னுடைய வர்ணத்திற்கும் ஆசிரமத்திற்கும் ஏற்றவாறே செய்யவேண்டும். அக்கினிஹோத்திரம் போன்ற கர்மாக்களை விதிகளின்படி சடங்குபூர்வமாக மனம் பரிசுத்தமடையும் வரை செய்ய வேண்டும்.

தன்னைத் தூய்மைப்படுத்திக்கொள்ள இது ஒரு வழி(கர்ம யோகம்); இரண்டாவது வழி சர்வ சங்க பரித்யாகம் (எல்லாத் தொடர்புகளையும் துறந்துவிடுதல் - துறவறம்). இவ்விரண்டையும் அனுசரிக்கமுடியாத நிலையில், வாழ்க்கையின் சுகங்களையும் துக்கங்களையும் விதி வழங்கியவாறு அனுபவித்துக்கொண்டு, உழல வேண்டியதுதான்.

ஒவ்வொரு பக்தனுடைய ஆன்மீக அதிகாரத்தை நன்கு அறிந்த சத்குரு, பிரம்ம வித்தையான உபநிஷத ஞானத்தை எல்லாருக்கும் கொடுத்துவிட மாட்டார். ஏனெனில், அபேத பாவத்தை அடையாதவனுக்கு உபநிஷதம் வெறும் சொற்களே.

ஆயினும், ஞானத்தை தேடுபவர்கள் முதற்கட்டத்தில் இதையே கேட்பதால், 'சொல்லுக்குச் சொல் நிலை' ஞானத்தையும் அளிக்கவேண்டியிருக்கிறது. ஆகையினால்தான், 'வேலைகாரச் சிறுமி விளக்கமளிப்பாள்' என்று சொல்லி, பாபா அவரைத் திருப்பி அனுப்பினார்.

பாபாவே விளக்கமளித்து அனுப்பிவிட்டிருந்தால், இந்த சுவையான நிகழ்ச்சி நடைபெற்றிருக்காது. 'இருப்பது ஒன்றே; அதைத் தவிர வேறெதுவுமே இல்லை' என்ற தத்துவம் தாசகனவின் மனதில் பதிந்திருக்காது.

காகா வீடு வேலைகாரச் சிறுமியும் நான் அல்லேனோ? 'நான்தான் அவள்' என்றும் குறிப்பை பாபா அவருக்களித்து, அவருடைய நேரிடை அனுபவத்தாலேயே உபநிஷதத்தின் தாத்பரியத்தை விளக்கினார்.

பரமேச்வரனுடைய அனுக்கிரஹம் சிறிதளவும், சத் குருவினுடைய அனுக்கிரஹம் விஷேஷமாகவும் இல்லாவிட்டால், ஆத்மஞான மார்க்கத்தில் பிரவேசிக்க முடியாது. ஒரு சித்தரின் உபதேசம் தேவை.

ஆத்மஞானத்தைப் பற்றிய சாஸ்திரங்களையே காதால் கேளுங்கள். 'நான் அனைத்திலும் வியாபித்திருக்கிறேன்; என்னைத் தவிர எங்குமே வேறெதுவுமில்லை' என்ற சிந்தனை செய்யுங்கள்.

இவ்வாறாக, ஆத்ம தத்துவத்தை அறிந்துகொண்டு, நானும் என்னுடைய ஆத்மாவும் ஒன்றே என்ற கருத்தை தியானம் செய்பவனுக்கு ஆத்மா பிரசன்னமாகும் (காட்சியளிக்கும்).

இவ்வாறாக ஆத்ம நிரூபணம் நடக்கும்போது, ஆத்மாவுடன் நிச்சலமான சேர்க்கை ஏற்படும்போது, பரமாத்மா கையில் அகப்படுகிறது.
 


Thursday, 2 February 2017

ஷீர்டி சாயி சத்சரிதம்

உயிர் வாழும் பிராணிகளில் வேற்றுமை உண்டு. ஆயினும் அவற்றுள் உறையும் ஆத்மா வேறுபாடற்ற ஒன்றே, ஆத்மா செயல்புரிவதில்லை; பலனை அனுபவிப்பதும் இல்லை. ஆத்மா என்றும் அசுத்தமாவதில்லை; பாவபுண்ணியங்களுக்கு அப்பாற்பட்டது. ஆத்மா செயல் புரிய பந்தப்பட்டது அன்று.   'நான் உயர்ந்த ஜாதி பிராமணன்; மற்றவர்கள் நீசமான ஜாதியை சேர்ந்தவர்கள் என்ற பேதப்படுத்திப் பார்க்கும் உணர்வு இருக்கும்வரையில் கருமபந்தங்களில் உழல்வது அவசியமாகிறது'.

'நான் உருவமற்றவன்; அனைத்தும் ஒன்றே; என்னைத் தவிர வேறெதுவமே இல்லை; நான் எல்லாவற்றிலும் வியாபித்திருக்கிறேன்' - இதுவே தன்னைப்பற்றிய உண்மையான ஞானம்.

பூரணமான ப்ரம்மத்தோடு ஒன்றிய ஜீவாத்மா அதிலிருந்து பிரிந்துவிட்டது. மறுபடியும் முன்போலவே பிரம்மத்துடன் ஐக்கியமாகிவிட வேண்டும் என்பதே ஜீவாத்மாவின் நிச்சயமான குறிக்கோள்.

சுருதிகளும் (வேதங்கள்) ஸ்ம்ருதிகளும் (வாழ்க்கை நெறி நூல்கள்) வேதாந்தமும் (தத்துவ நூல்கள்) உரைக்கும் சித்தாந்தம் இதுவே. 'எது நழுவிப் போய்விட்டதோ, அது மறுபடியும் வந்து, பிரம்மத்துடன் ஐக்கியமாகிவிடவேண்டும்.'

எல்லா உயிரினங்களுக்குள்ளும் இறைவன் சமமாக உறைந்திருக்கின்றான் என்கிற மனோபாவம் நம்மிடம் வாராதவரையில், எல்லா உயிர்களுக்குள்ளும் உறையும் இறைவனாற் கூட ஞானதீபத்தை ஏற்ற முடியாது!

சாஸ்திரங்களில் விதிக்கப்பட்ட கர்மாக்களை சித்தசுத்தியுடன் செய்துகொண்டு வந்தால், மனம் பரிசுத்தமாகி, படிப்படியாக பேதம் பாராத நிலை உருவாகும். சோகம், மயக்கம், சபலங்கள் இவற்றை ஒதுக்கி தள்ளும் சுத்தமான ஞானம் தன்னைத்தானே வெளிப்படுத்திக்கொள்ளும்.

மூவுலகங்களிலும் உள்ள சராசரங்களில் (நகரும் நகராப்பொருள்களில்) வியாபித்திருக்கும் இறைவனாகிய பரமேச்வரன், செயல்புரியாதவன்; மாற்றமில்லாதவன்; தூய்மை ஆனவன்; அப்பாலுக்கும் அப்பாற்பட்டவன்; உருவமில்லாதவன்; என்றும் நிலைத்திருக்கும் சத்தியம்.

பெயர்களும் உருவங்களும் நிறைந்த இந்த சிருஷ்டியில், உள்ளும் புறமும் நிறைந்திருக்கும் இறைவன் நானே. விசேஷமான லக்ஷணங்கள் ஏதுமில்லாது அனைத்தையும் வியாபித்திருக்கும் அவனே நான்; நான் மாத்திரமே.

உண்மையில் உருவமே இல்லாதது, மாயையால் உருவமுள்ளது பொல்லாத தோன்றுகிறது; விருப்பங்களாலும் ஆசைகளாலும் நிறைக்கப்பட்டவனுக்கே இந்த சம்சாரம். அவற்றை வென்றுவிட்டவனுக்கு இது சாரமில்லாத உலகம்.

ஒரு விஷயம் சந்தேகமில்லாமல் நிர்த்தனமாக அறியப்பட வேண்டும். பஞ்ச பூதங்களாலும் உயிருள்ள ஜந்துக்களாலும் உயிரில்லாத ஜடப்பொருள்களாலும்  நிறைந்த இவ்வுலகம், இரண்டற்ற ஒன்றேயான பரம்பொருளே.