valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 2 March 2017

ஷீர்டி சாயி சத்சரிதம்

ஆயிரக்கணக்கில் மக்கள் அங்கு தரிசனத்திற்கு கூடினர்; நானும் அங்கு எதற்காக ஓட வேண்டும். இனூஸ் செய்த தொந்தரவு பொறுக்கமுடியவில்லை என்பதற்காகவா நானும் தரிசனம் செய்யப் போகவேண்டும்? என்னுடைய கௌரவம் என்னாவது?

ஒவ்வொரு தடவையும் இவ்வாறான சிந்தனை ஏதாவது மனதில் உதித்தது. கடைசிவரை நான் தரிசனத்திற்கு போகவேயில்லை. என்னுடைய நிழலை பார்த்து நானே பயந்தேன் போலும்! துரதிஷ்டம் என்னை தடுத்துவிட்டதாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

பல ஆண்டுகள் இவ்விதமாக உருண்டன. பிறகு நான் அங்கிருந்து பணிமாற்றம் செய்யப்பட்டேன். பல ஆண்டுகளுக்கு பிறகு நல்ல காலம் பிறந்தது; ஷிரிடியுடன் அகண்டமான (முழுமையான) உறவு ஏற்பட்டது.

தாத்பரியம் என்னவென்றால், ஞானிகளின் சங்கம் அபாக்யசாலிகளுக்குக் கிடைப்பதில்லை. இறைவனுடைய கிருபை இருந்தால் சுலபமாக கிடைக்கிறது. அது இல்லையெனில் குருதரிசன யோகமே அமைவதில்லை.

செவிமடுப்பவர்களே, இப்பொழுது இவ்விஷயமாக ஒரு சுவாரஸ்யமான கதை சொல்கிறேன்; பயபக்தியுடன் கேளுங்கள். காலங்காலமாக ஞானிகள் எவ்வாறு ஒருவருக்கொருவர் கமுக்கமான உறவும் பரிவர்தனையும் வைத்திருந்தனர் என்பதை பாருங்கள்.

காலம், வர்த்தமனாம் (நிகழ்வுகள்) இவற்றுக்கு ஏற்றவாறும் அவர்களுடைய விருப்பத்திற்கேற்றவாறும் காரண காரியத்துடன் ஞானிகள் அவதாரம் செய்கிறார்கள். ஆயினும், அவர்கள் பரஸ்பரம் (ஒருவருக்கொருவர்) வேறுபட்டவர்களாவர்.

தேசமும் காலமும் காரணமும் வேறுபட்டாலும், ஒரு ஞானிக்கு மற்றொரு ஞானியின் மனம் நன்கு தெரியும். உள்ளுக்குள் அவர்கள் அனைவரும் ஒருவரே.

எவ்வாறு ஓர் உலகையாளும் சக்கரவர்த்தி ஒவ்வொரு தேசத்திலும் ஓர் அதிகாரியை நியமித்து தம்முடைய சாம்ராஜ்யத்திற்கு முன்னேற்றத்தையும் செழுமையையும் கொண்டுவருகிறாரோ,-

அவ்வாறே ஆத்மானந்தமாகிய சக்கரவர்த்தி பல இடங்களில் தோன்றி சூக்குமமான முறையில் தம்முடைய ராஜ்ஜியம் என்னும் சக்கரத்தை சுழற்றுகிறார்.

ஆங்கில படிப்புப் படிக்கும் பாக்கியம் கிடைத்து பி.ஏ பட்டம் பெற்ற தாகூர் என்ற நற்குடிமகன் ஒருவர் இருந்தார். படிப்படியாக வாழ்க்கையில் உயர்ந்து பெயர் பெற்ற அதிகாரியாக விளங்கினார்.

சில வருடங்களில் அவர் ஒரு மாம்லதாராக உயர்ந்தார். மேலும் உயர்ந்து டெபுடி கலெக்டர் பதவி பெற்றார். தெய்வப் பிராப்தியாக அவருக்கு சாயி பாபாவிடம் உபதேசம் பெறும் அதிர்ஷ்டம் வாய்த்தது.

மாம்லத்தார் பதவி தூரத்திலிருந்த பச்சைப் பசேலென்று தெரியும் மலையைப் போன்று வசீகரமானதுதான். அருகில் சென்று பார்த்தால்தான் எட்டி மரங்கள் அடர்ந்திருப்பது தெரியும். ஆயினும், கௌரவத்தில் என்னவோ அது உயர்ந்த பதவிதான். 


No comments:

Post a Comment