valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday, 9 June 2016

ஷிர்டி சாயி சத்சரிதம் 

"ஏற்கனெவே அம் மூதாட்டி உலர்ந்துபோன கட்டையைபோல் இருக்கிறார். பிடிவாதியாகவும் அட வாதியாகவும் முரடாகவும் இருக்கிறார். உபவாசம் தொடர்ந்ததால் உயிர் போய்விடும்போலத் தோன்றுகிறது. -

"அவ்வாறு நேர்ந்துவிட்டால், 'அந்த மூதாட்டி உபதேசம் பெறவேண்டுமென்ற தீவிர ஆவலுடன் பாபாவை தரிசனம் செய்யச் சென்றார்; ஆனால், சாயி கருணை காட்டாமல் அவரை இறந்துபோகும்படி விட்டுவிட்டார்" என்று மக்கள் பேசுவர். -

"பாபா! மக்கள் இவ்வாறாக அவதூறு பேசும்படி விட்டுவிடாதீர்கள். ஏன் அவருக்கு நீங்கள் பயனளிக்கும்படியான உபதேசம் அளிக்கமாட்டேன் என்கிறீர்? அவதூறு வாராதவாறு செய்துவிடுங்கள்.-

"அவருக்கு போராடத் திராணியில்லாமல் போய்விட்டது. துன்பப்பட்டே இறந்து போகப் போகிறார் அம்மூதாட்டி. உங்களுக்குக் கெட்ட பெயர் வரும். -

"அவருடைய தொல்லைப் பிடித்த உபவாசம் எங்களுக்கெல்லாம் கவலையைத் தருகிறது. துரதிருஷ்டவசமாக, அம்மூதாட்டி இறந்துபோனால் பெரிய அசம்பாவிதம் விளையும். -

"நீங்கள் கிருபை செய்யவில்லையெனில் உயிரை விட்டுவிட்டதாக அம மூதாட்டி அடம் பிடிக்கிறார். அவர் ஒன்றும் தேறுவார் என்று எனக்குத் தோன்றவில்லை ! நீங்களே அவருக்கு ஏதாவது சொல்லுங்கள்!"

இந்த அத்தியாயத்தின் எல்லைக்கு இங்கு வந்துவிட்டோம். கேட்பவர்களுக்கு  மேற்கொண்டு என்ன நிகழ்ந்தது என்று அறிந்துகொள்வதில் இருக்கும் ஆவல், பிரேமை பொங்கும் அடுத்த அத்தியாயத்தில் நிறைவரும். 

பாபா அம் மூதாட்டிக்கு அளித்த பிரேமை மிகுந்த உபதேசமும் பரிந்துரையும் பயபக்தியுடன் செவிமடுக்கப்பட்டால், அஞ்ஞானமனைத்தையும் போக்கிவிடும். 

ஹெமாத் சாயியின் பொற்கமல பாதங்களில் சரணமடைகின்றேன். கதை கேட்பவர்களுக்கு நமஸ்காரம் செய்கிறேன். சம்சார சாகரத்தை எளிதாகக் கடக்கும் திறமையைப் பெரும் வகையாக இக் காதைகளை பயபக்தியுடன் கவனமாகச் செவிமடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்! ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு, சாயி பக்தன் ஹெமாத் பந்தால் இயற்றப்பட்ட, "ஸ்ரீ சமர்த்த சாயி சத் சரித்திரம்" என்னும் காவியத்தில், 'எனக்கு அனுக்கிரஹம்' என்னும் பதினெட்டாவது அத்தியாயம் முற்றும். 

ஸ்ரீ சத்குரு சாயினாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.  


Thursday, 2 June 2016

ஷிர்டி சாயி சத்சரிதம்

வயது முதிர்ந்த அவ்வம்மையார், உபதேச மந்திரம் பெறுவதில் இருந்த சிரத்தையால் எள்ளளவும் உணவு உட்கொள்ளாமலும் ஒரு மிடறு நீரும் அருந்தாமலும் இருந்தார்.

'பாபா மந்திர உபதேசம் தரும்வரை உணவோ நீரோ அருந்துவதில்லை' என்னும் விரதமேற்று மூன்று நாள்கள் இரவு பகலாக உபவாசம் இருந்தார்.

மந்திர உபதேசம் பெறாமல் ஷீரடிக்கு வருவதும் போவதுமாக இருப்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது? ஆகவே, தாம் தங்கியிருந்த இடத்திலேயே, 'என்ன ஆனாலும் சரி! என்னுடைய விரதத்தை கைவிட மாட்டேன்; முடித்தே தீருவேன்' என்ற உறுதியுடன் விரதமிருந்தார்.

மூன்று நாள்களுக்கு அன்னபானம் இல்லாமல் தவமிருந்து அவர் களைப்புற்றார்; மனமுடைந்து போனார்.

மாதவராவ் விசனமுற்றார். 'நடப்பது நல்லதற்கில்லை; மூதாட்டி மரணத்தைப் பற்றி கவலைப்படுவதாகத் தெரியவில்லை. இந்த அசம்பாவிதம் (நேரக் கூடாதது) நிகழாமல் தடுப்பதெப்படி?' என்று யோசித்தார்.

ஆகவே, அவர் மசூதிக்குச் சென்று பாபாவுக்கு எதிரில் அமர்ந்தார். வழக்கபோல் மக்களுடைய நல்வாழ்வு பற்றி பாபா ஆதங்கத்துடன் விசாரித்தார், -

"ஆக, சாமா, இன்று என்ன செய்தி? எல்லாம் நலமாக இருக்கின்றதோ? அந்த எண்ணெய் வியாபாரி நாராயணன் தடம் புரண்டு என்னை மிகவும் தொந்தரவு செய்கிறான்".

மூதாட்டியின் விரதத்தைப் பற்றி அறிந்திருந்த சாமா கவலையுற்றிருந்தார். ஆகவே அவர் உடனே பாபாவைக் கேட்டார், "இப்பொழுது என்னதான் செய்வது?-

"மேலும், உம்முடைய இந்த மர்மந்தான் என்னவோ, ஓ இறைவா! உம்முடைய லீலையை அறிந்தவர் யாருமில்லை. இந்த கிராமத்திற்கு ஒவ்வொரு மனிதராக வர செய்பவர் நீரன்றோ? என்னைப் போய் செய்தியென்ன என்று வினவுகிறீர்!-

"அந்த வயதான மூதாட்டி ராதாபாய் தேச்முக், மூன்று நாள்களாக அன்னபானம் இன்றி வாடுகிறார்; உம்முடைய அருள்வேண்டி உபவாசம் இருக்கிறார்.

"அந்த மூதாட்டி மகா அடம் பிடித்தவராக இருக்கிறார். ஆனால் உம்முடைய பாதங்களின் மீது இருக்கும் நிஷ்டையோ அசைக்க முடியாததாக இருக்கிறது. ஆனால் நீங்களோ, அவர் பக்கமே திரும்ப மாட்டேன் என்கிறீர்! ஏன் இவ்வாறு அவரைக் கஷ்டப்படுத்துகிறீர்?- 


Thursday, 26 May 2016


ஷிர்டி சாயி சத்சரிதம் 


சாமாவிடம் என்னை அனுப்பி இந்த யோசனை,  மசூதியில் இருந்தபோது சஞ்சலம் அடைந்திருந்த என் மனத்தை அமைதிப்படுத்துவதற்காகவோ? பாபாவினுடைய வழிமுறைகள் விசித்திரமானவை!



அப்படி இருப்பினும், என் மனத்தே உதித்த இந்த எண்னத்தை நான் அமுக்கிவிட்டேன். ஏனெனில், கதையைக் கேட்க வேண்டுமென்ற ஆவல் அதிகாமாக இருந்தது. அதை சீக்கிரமாக தணித்துகொள்ள வேண்டுமென்று விரும்பினேன். 



பிறகு லீலைகள் பற்றிய கதைகள் ஆரம்பிக்கப்பட்டபோதே, பாபாவின் பக்தவத்சல அருள்  வெளிப் போந்து , என் மனம் ஆனந்தமடைந்தது. 



பிறகு, அவர் இன்னுமொரு கதை சொன்னார். தேச்முக் என்னும் குடும்பப் பெயர் கொண்ட பெண்மணி ஒருவர் இருந்ததாகச் சொன்னார். அப் பெண்மணி, திடீரென்று சாதுக்களின் சங்கத்தில் வாழ வேண்டும் என்று உணர்ந்தார். 



பாபாவினுடைய கீர்த்தியைக் கேள்விப்பட்டு அவரை தரிசனம் செய்ய வேண்டுமென்ற தீவிரமான ஆவலுடன், சங்கம்னெரிலிந்து வந்த மக்களுடன் ஷீரடிக்கு வந்தார். 



அப்பெண்மணி காசாபா தேச்முக் என்பவரின் தாயார்; ராதாபாய் என்று பெயர். சாயி பாதங்களின்மேல் நிஷ்டை (பக்தியும் விசுவாசமும்) கொண்டு பாபாவை தரிசனம் செய்தார். 



அவருக்கு அருமையான தரிசனம் கிடைத்ததால் பயணம் செய்த சோர்வெல்லாம் மறைந்து விட்டது; மனதில் சாயியின் மீது அன்பு மலர்ந்தது. 'எதற்காக இங்கு வந்தோம்' என்பதும் ஞாபகம் வந்தது!



அவருடைய மனத்தில் சமர்த்த சாயியை குருவாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும், அவரிடம் உபதேசம் பெற்றுப் பரமார்த்த மார்க்கத்தில் முன்னேற்றமடைய வேண்டும் என்றும் தீவிரமான ஆவல் இருந்தது. 



அப்பெண்மணி மிக வயது முதிர்ந்தவர். பாபாவினிடம் அளவுகடந்த விசுவாசமும் நம்பிக்கையும் வைத்திருந்தார். பாபாவிடம் இருந்து உபதேசம் பெறவேண்டி, மனதுள்ளே ஓர் உறுதி செய்துகொண்டார். 



"பாபாவிடம் இருந்து பிரத்யேகமாக காதில் மந்திர உபதேசம் பெற்று அவருடைய அருளுக்குப் பாத்திரமாகாமல் ஷிரிடியில் இருந்து நகரமாட்டேன்.-



"அந்த மந்திரம் சாயியினுடைய திருவாய் மொழியாகத்தான் வரவேண்டும். வேறு எவரிடம் இருந்தாவது பெற்றால் அது பவித்திரமானது ஆகாது. புனிதர்களில் புனிதரும் ஞானிகளில் சிறந்தவருமான சாயி, அவருடைய அருளுக்கு என்னைப் பாத்திரமாக ஆக்கிக்கொள்ள வேண்டும்."



இவ்வாறு திடமாக மனத்தில் நிச்சயம் செய்துகொண்டு, அம் மூதாட்டி அன்னத்தையும் பானத்தையும் நீத்துத் தம்முடைய உறுதிமொழியை கெட்டியாகப் பிடித்துகொண்டு  அமர்ந்துவிட்டார்.


Thursday, 19 May 2016

ஷிர்டி சாயி சத்சரிதம்

மாதவராவ் அப்பொழுது சொன்னார், "பொறுங்கள்! சிறிது ஓய்வெடுங்கள்! இவ்விறைவனுடைய லீலைகள் தனித்தன்மை வாய்ந்தன என்றுதான் உமக்கு நன்கு தெரியுமே!

"இந்த வெற்றிலைபெட்டியை எடுத்துகொள்ளுங்கள்; வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு, புகையிலை ஆகிய எல்லாப் பொருள்களும் இதில் இருக்கின்றன. ஒரு தாம்பூலம் தயார் செய்துகொண்டு மெல்லுங்கள். நான் என்னுடைய குல்லாயைப் போட்டுகொண்டு  ஒரு கணத்தில் வந்துவிடுகிறேன்.-

"சாயி பாபாவினுடைய லீலைகள் ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டவை! ஓ, நான் எத்தனை நிகழ்சிகளைப் பற்றி சொல்லுவேன்? நீங்கள் ஷீரடிக்கு வந்தபிறகு, நாம் நிறையவே பார்க்கவில்லையா?-

"நான் ஒரு படிப்பறிவில்லாத ஒரு பட்டிக்காட்டான்; நீங்கள் எல்லாம் பட்டனவாசிகள். புரியாத புதிரான அவருடைய லீலைகளைப் பற்றி உங்களுக்கு நான் என்ன சொல்லுவேன்?"

இதைச் சொல்லிக் கொண்டே அவர் வீட்டின் உள்ளே சென்று, தேவதைகளுக்குப் புஷ்பாஞ்சலி செய்துவிட்டுக் குழாயை மாட்டிக்கொண்டு உடனே திரும்பி வந்தார். பிறகு, அவர் உட்கார்ந்து என்னுடன் பேச ஆரம்பித்தார்.

"ஓ! அவருடைய லீலைகள் கற்பனை செய்யமுடியாதவை! அவருடைய சாமர்த்தியமான வழிமுறைகளை எவர், எப்பொழுது புரிந்து கொள்ளபோகிறார்? அவருடைய லீலைகளுக்கு எல்லையே இல்லை. அவர்தான் விளையாட்டை நடத்துகிறார்; ஆயினும் அவர் விளையாட்டில் மாட்டிக்கொள்வதில்லை !-

"ஒருவரைவிட மற்றவர் உயர்ந்த அறிவாளிகளான நீங்கள் எல்லாம் அறிவு ஜீவிகள். கற்பனைக் கெட்டாத பாபாவின் வாழ்கையை பட்டிக் காட்டு மக்களாகிய நாங்கள் எவ்வாறு அறிவோம்?

"அவரே அவருடைய கதையைச் சொல்லாமல், உங்களை என்னிடம் எதற்காக அனுப்புகிறார்? அவருக்கு மாத்திரந்தான் அவருடைய வழிமுறைகள் தெரியும்; அவை மானிடமானவை அல்ல. -

"இத் தருணத்தில் எனக்கு ஒரு நல கதை ஞாபகத்திற்கு வருகிறது. ஆகவே நமது நேரத்தை உபயோகமாக செலவழிக்கும் வகையில் ஏதாவது பேசுவோம்.-

"என்னுடைய கண்ணெதிரிலேயே இங்கு நடந்த சம்பவம் ஒன்றை விவரிக்கிறேன். நம்முடைய மனதில் என்ன நிர்த்தாரணம் செய்து கொள்கிறோமோ அதை பாபா நிறைவேற்றி வைப்பார். -

"சில சமயங்களில் பாபா மனிதனை எல்லைவரை இழுத்து விடுகிறார். அவனுடைய பக்திக்கும் பிரேமைக்கும் கடுமையான பரீக்ஷை வைத்து விடுகிறார். அதன்பிறகே அவனுக்கு உபதேசம் அளிக்கிறார்."

உபதேசம் என்கிற வார்த்தை என் காதில் விழுந்தவுடனே என் மனத்துள்ளே ஒரு மின்னல் பாய்ந்தது. உடனே எனக்கு சாடேவின் குரு சரித்திர பாராயண நிகழ்ச்சி ஞாபகத்திற்கு வந்தது.  


Thursday, 12 May 2016

ஷிர்டி சாயி சத்சரிதம்

(ஸ்ரீமத் பகவத் கீதை, ஸ்ரீமத் பாகவதம் இரண்டுமே சம்ஸ்க்ருத மொழியில் வியாச முனிவரால் எழுதப்பட்டவை. ஸ்ரீமத் பகவத் கீதை மகாபாரதத்தில் உத காண்டத்தில் இடம் பெறுகிறது. )

ஆகவே, பாகவத தர்மத்தைக்  கடைபிடிக்கும் வகையில் நானும் தினமும் ஏகநாத பாகவதத்தைப் படித்துக் கொண்டிருந்தேன். ஆனால, அன்று என்னுடைய தினசரி நடைமுறையில் ஒரு தடங்கல் ஏற்பட்டுவிட்டது.

ஒரு கதையைப் பாதி படித்துக் கொண்டிருந்தபோது, சுற்றியிருப்பவர்கள் மசூதிக்குக் கிளம்பிக்கொண்டிருந்ததை கவனித்தேன். போதி படிப்பதைப் பாதியில் நிறுத்திவிட்டு , அவர்களோடு நானும் மசூதிக்கு விரைந்தேன்.

நான் என்னவோ, பாபா சொல்லும் கதைகளைக் கேட்க விருப்பப்பட்டேன்; ஆனால், பாபா வேறு விதமாக நினைத்தார். நான் பாகவதம் படிப்பதை நிறுத்திவிட்டு வேறெதையும் செய்வது பாபாவுக்குப் பிடிக்கவில்லை போலும்!

இக் காரணத்திற்காகவே, நான் அன்று படிக்கவேண்டிய பகுதியை பாபா பூர்த்தி செய்யவைத்தார் என்றே இந்த சம்பவத்தின் மூலம் உணர்ந்தேன். பாபாவினுடைய அற்புதமான வழிமுறைகள் இவ்வாறே! இது ஞாபகத்திற்கு வரும்போது, மனம் பிரேமையால் பொங்கிவழிகிறது.

ஏக நாத பாகவதத்தின் விளக்கம் இங்கு முடிகிறது; சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளும் முடிவடைகின்றன. மாதவராவ் பூஜையை முடித்துவிட்டு வெளியில் வந்தார். நான் சொன்னேன், -

"பாபா உமக்கு ஒரு செய்தி அனுப்பி இருக்கிறார்; அதைச் சொல்லத்தான் நான் வந்திருக்கிறேன். 'சாமாவிடம் இருந்து பதினைந்து ரூபாய் தக்ஷிணை வாங்கிக் கொண்டு வாரும்' என்பது எனக்கிடப் பட்ட ஆணை.-

"நான் அவருடைய பாதங்களை பிடிதுவிட்டுக் கொண்டிருந்தேன். திடீரென்று அவருக்கு உம்முடைய ஞாபகம் வந்தது. 'சாமாவிடம் போம்; தக்ஷிணையுடன் திரும்பி வாரும்' என்று சொன்னார்.

"அவருடன் சிறிது நேரம் அமர்ந்து பெசிகொண்டிரும்; இருவரும் பேசி முடித்தபின் நீர் திரும்பி வாரும்' என்று சொன்னார். "

மாதவராவ் இதைக் கேட்டு மிக ஆச்சரியம் அடைந்து சொன்னார், "பணத்திற்குப் பதிலாக என்னுடைய நமஸ்காரங்களை தட்சிணையாக அளியுங்கள்".

"அதுசரி, உங்களுடைய பதினைந்து நமஸ்காரங்களை என்னுடன் எடுத்துக் கொண்டுவிட்டேன். அது விஷயம் முடிந்து விட்டது! இப்பொழுது சீக்கிரமாக வந்து என்னுடன் உரையாடுங்கள்" என்று நான் அவரிடம் சொன்னேன்.

"என்னென்ன கதை சொல்ல விரும்புகிறீர்களோ அதையெல்லாம் சொல்லி என் காதுகளின் ஏக்கத்தை தணியுங்கள். நிர்மலமானதும் புனிதமானதுமான பாபாவின் கதைகளாகிய கங்கையில் ஆழமாக மூழ்கி நம்முடைய பாவங்கள் அனைத்தயும் ஒழிக்கலாம்".


Wednesday, 4 May 2016

ஷிர்டி சாயி சத்சரிதம்

பக்தர்களுடைய ஆன்மீக முன்னேற்றத்தில் நேர்மையான ஆர்வம் கொண்ட பாபா, ஒவ்வொரு நாளும் பல பக்தர்களை இதைக் கேட்கச் செய்தார்.

பக்தர்களுக்கு அனுக்கிரஹமும் உபதேசமும் அளிப்பதில் பாபாவினுடைய சாமர்த்தியம் ஆழங் காணமுடியாது. அதை அவர் பல வழிமுறைகளில் செய்தார். அவர்கள் அருகில் இருந்தாலும் சரி, வெகுதூரத்தில் இருந்தாலும் சரி, பாபா ஹிருதய வாசியாக (இதயத்தில் வசிப்பவராக) அவர்களுடனேயே  இருந்தார்.

அவர் மசூதியில் உட்கார்ந்துகொண்டே ஒவ்வொரு பக்தருக்கும் ஒரு வேலையை நியமித்துத் தம்முடைய சக்தியையும் அளித்து, அவர்கள் மூலமாக காரியங்களை சாதித்து முடித்தார்.

பாபு சாஹேப் ஜோக்கை தினமும் வாடாவில் போதி படிக்கச் சொல்லுவார். ஜோக் தினமும் தவறாது படித்தார்; அங்கு அதைக் கேட்க மக்கள் குழுமினர்.

ஜோக்கும் தினமும் மதிய உணவு உண்ட பிறகு, பிற்பகலில் பாபாவிடம் செல்வார். நமஸ்காரம் செய்துவிட்டு அவரிடமிருந்து விபூதியை பெற்றுக்கொண்டு போதி படிப்பதற்கு அனுமதி கேட்பார்.

சில சமயங்களில் அவர் ஞானேச்வரி படிப்பார்; சில சமயங்களில் ஏகநாத பாகவதத்தை வியாக்கியானத்துடன் படிப்பார். படிப்பதை மிக்க மகிழ்ச்சியுடன் படிப்பார்.

ஜோக்குகுப் போதி படிக்க அனுமதி அளித்தவுடனே, பாபா தம்மை தரிசனம் செய்ய வந்த பல பக்தர்களை போதியைச் செவிமடுக்க அனுப்புவார்.

சில சமயங்களில் பாபா குட்டிகதைகள் சொல்லுவார். இதை பக்தர்கள் கேட்டு மனதில் பதியவைத்துக் கொள்ளும் முன்னரே, 'எழுந்திருங்கள், வாடாவிற்கு போதி கேட்பதற்கு செல்லுங்கள்' என்று பாபா சொல்லிவிடுவார்.

விசுவாசமுள்ள பக்தர் போதியைக் கேட்கச் சென்றால், போதியில் வரும் கதை ஏற்கெனவே பாபாவிடம் கேட்டதை நிரூபணம் செய்யும் வகையில் அமையும்; முக்கியத்துவம் பூரணமாகவும் தெளிவாகவும் புரிந்து விடும்.

ஞானேச்வரர் அருளிய ஞானேச்வரியும் ஏகநாதர் அருளிய பாகவதமும் பாபா ஏற்கனேவே சொன்ன கருத்துகளை மேலும் வற்புறுத்துவதாகவே இருப்பது கண்டு பக்தர்கள் வியப்படைவர்.

ஒரு குறிப்பிட்ட போதியில் குறிப்பிட்ட பகுதியை குறிப்பிட்ட நாளில் படிக்க வேண்டுமென்ற கட்டளை ஏதும் இல்லாவிட்டாலும், ஜோக் படிப்பது, பாபா அன்று சொன்ன கதைக்கு நேரடி சம்பந்தம் உடையதாகத் தவறாது அமையும்!

ஸ்ரீமத் பகவத் கீதை, ஸ்ரீமத் பாகவதம் என்னும் இரண்டு நூல்களைத்தான் ஜோக் தினமும் படித்தார். இரண்டுமே, பக்தி மார்க்கத்தை கைக்கொள்ளும் மனிதர் எவ்விதமாக வாழ்க்கை நடத்த வேண்டும் என்பதன் சாரமே.

ஞானேச்வரி என்னும் நூல் ஸ்ரீமத் பகவத் கீதைக்கு எழுதப்பட்ட மராட்டி பாஷ்யம் (விரிவுரை). இந்நூலுக்கு பாவர்த்த தீபிகா என்றும் பெயர். ஏகநாதர் ஆன்மீக விஷயங்களை பற்றி எழுதிய ஏகநாத பாகவததிற்கு ஸ்ரீமத் பாகவததின் 11 ஆவது காண்டமே ஆதாரம்.  


Thursday, 28 April 2016

ஷிர்டி சாயி சத்சரிதம்

ஸ்ரீமத் பாகவத புராணத்தின் 11ஆவது காண்டம், பக்தியும் பிரேமையும் ஆனந்தமும் நிரம்பி வழியும் பாகம். ஸ்ரீ கிருஷ்ணன் விளையாடி லீலைகள் புரிந்த பிருந்தாவனத்தை போன்ற இந்தக் காண்டம் 32 அத்தியாயங்களை கொண்டது. இந்தப் பகுதியைத்தான் தீட்சிதர் தினமும் வாசித்துக் கொண்டிருந்தார்.

பகல் நேரத்தில் தீட்சிதர் இதை உரக்க வாசித்து விவரிப்பார். இரவில் பாவர்த்த இராமாயணத்தை படிப்பார். அதுவும் குருவினுடைய ஆக்ஞையில் தீட்சிதருக்கு ஒரு பிரமான நூலாக அமைந்தது.

பக்தி, பிரேமை, ஆனந்தம் இவற்றின் சாரம் ஏகநாத பாகவதம். ஞாநேச்வரியின் இரண்டாவது அவதாரத்தை போன்றது. ஏகநாதர் மகாராஷ்டிரர்களுக்கு அளித்த உருவமுள்ளதும் மிகப் பெரியதுமான வரம்.

விடியற்காலையில் ஸ்நானம், நியம நிஷ்டையுடையவன் சாயி பூஜை, மற்ற தேவர்களுக்கும் தேவதைகளுக்கும் அர்ச்சனை, நைவேத்தியம், ஹாரதி, இவையெல்லாம் முடிந்தபின், -

நிவேதனம் செய்த பால், சொற்பமான ஆகாரம், இவை இரண்டையும் மற்ற பக்தர்களுடன் பகிர்ந்துகொண்ட பிறகு, தீட்சிதர் பயபக்தியுடன் போதியை படிக்க ஆரம்பிப்பார்.

பாகவதர்களில் உத்தமரான துகாராமை, பண்டாரா மலையில் ஏகாந்தமாக ஆயிரம் முறைகள் படிக்க வைத்த அக்காவியத்தின் இனிமையை யாரால் வர்ணிக்க முடியும்?

ஆ, எவ்வளவு பெரிய திருவருளான திவ்விய கிரந்தம்! எவ்வளவு நிஷ்டையுள்ள சிஷ்யர் இந்த தீட்சிதர்! இவ்விரு காரணங்களால்தான், மக்களுடைய ஆன்மீக முன்னேற்றத்திற்காக தீக்ஷ்தரை ஏகநாத பாகவதத்தை தினமும் படிக்க சொல்லி சமர்த்த சாயி ஆணையிட்டார்.

வனத்தை தேடித் போக வேண்டா.  உத்தவ கீதையில் பகவான் இருக்கிறார். சிரத்தையுடன் அதைப் பாராயணம் செய்பவர்கள் சடுதியில் பகவானை அடைகிறார்கள்.

ஸ்ரீமத் பகவத் கீதை கிருஷ்ணருக்கும் அர்ஜுனருக்கும் போர்களத்தில் நேர்ந்த உரையாடல் (உத்தவ கீதை) அதனினும் சிறந்தது. இந்த உபதேசத்தைதான் பிரேமை பூண்ட வார்த்தைகளால் ஏகநாதர் தம்முடைய மராட்டி பாகவதத்தில் விளக்கி இருக்கிறார்.

இக்காரணத்தினால், கிருபையே உருவான சமர்த்த சாயினாதர் தெய்வப் பிரசாதமான இந்த கிரந்தத்தையும் ஞானேச்வரியையும் சேர்த்துத் தம் பக்தர்களை தினமும் படிக்கும்படி செய்தார்.

பாபா சகாரம் ஹரி ஜோக்கை படிக்கச் சொல்லி இருந்தார். அவரும் மற்ற பக்தர்கள் பயனுறும் வகையில் சாடேவாடாவில் தினமும் படித்துக் கொண்டிருந்தார்.