valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 2 June 2016

ஷிர்டி சாயி சத்சரிதம்

வயது முதிர்ந்த அவ்வம்மையார், உபதேச மந்திரம் பெறுவதில் இருந்த சிரத்தையால் எள்ளளவும் உணவு உட்கொள்ளாமலும் ஒரு மிடறு நீரும் அருந்தாமலும் இருந்தார்.

'பாபா மந்திர உபதேசம் தரும்வரை உணவோ நீரோ அருந்துவதில்லை' என்னும் விரதமேற்று மூன்று நாள்கள் இரவு பகலாக உபவாசம் இருந்தார்.

மந்திர உபதேசம் பெறாமல் ஷீரடிக்கு வருவதும் போவதுமாக இருப்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது? ஆகவே, தாம் தங்கியிருந்த இடத்திலேயே, 'என்ன ஆனாலும் சரி! என்னுடைய விரதத்தை கைவிட மாட்டேன்; முடித்தே தீருவேன்' என்ற உறுதியுடன் விரதமிருந்தார்.

மூன்று நாள்களுக்கு அன்னபானம் இல்லாமல் தவமிருந்து அவர் களைப்புற்றார்; மனமுடைந்து போனார்.

மாதவராவ் விசனமுற்றார். 'நடப்பது நல்லதற்கில்லை; மூதாட்டி மரணத்தைப் பற்றி கவலைப்படுவதாகத் தெரியவில்லை. இந்த அசம்பாவிதம் (நேரக் கூடாதது) நிகழாமல் தடுப்பதெப்படி?' என்று யோசித்தார்.

ஆகவே, அவர் மசூதிக்குச் சென்று பாபாவுக்கு எதிரில் அமர்ந்தார். வழக்கபோல் மக்களுடைய நல்வாழ்வு பற்றி பாபா ஆதங்கத்துடன் விசாரித்தார், -

"ஆக, சாமா, இன்று என்ன செய்தி? எல்லாம் நலமாக இருக்கின்றதோ? அந்த எண்ணெய் வியாபாரி நாராயணன் தடம் புரண்டு என்னை மிகவும் தொந்தரவு செய்கிறான்".

மூதாட்டியின் விரதத்தைப் பற்றி அறிந்திருந்த சாமா கவலையுற்றிருந்தார். ஆகவே அவர் உடனே பாபாவைக் கேட்டார், "இப்பொழுது என்னதான் செய்வது?-

"மேலும், உம்முடைய இந்த மர்மந்தான் என்னவோ, ஓ இறைவா! உம்முடைய லீலையை அறிந்தவர் யாருமில்லை. இந்த கிராமத்திற்கு ஒவ்வொரு மனிதராக வர செய்பவர் நீரன்றோ? என்னைப் போய் செய்தியென்ன என்று வினவுகிறீர்!-

"அந்த வயதான மூதாட்டி ராதாபாய் தேச்முக், மூன்று நாள்களாக அன்னபானம் இன்றி வாடுகிறார்; உம்முடைய அருள்வேண்டி உபவாசம் இருக்கிறார்.

"அந்த மூதாட்டி மகா அடம் பிடித்தவராக இருக்கிறார். ஆனால் உம்முடைய பாதங்களின் மீது இருக்கும் நிஷ்டையோ அசைக்க முடியாததாக இருக்கிறது. ஆனால் நீங்களோ, அவர் பக்கமே திரும்ப மாட்டேன் என்கிறீர்! ஏன் இவ்வாறு அவரைக் கஷ்டப்படுத்துகிறீர்?- 


No comments:

Post a Comment