valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday, 19 February 2015

ஷிர்டி சாயி சத்சரிதம் 

ஒரு தம்பிடி கொடுக்கப்பட்டால் பாபா அதைத் தம் ஜோபியில் போட்டுக் கொள்வார். ஆனால், எவராவது இரண்டு பைசா நாணயத்தை வைத்தால், அதை யார் வைத்தாரோ அவரிடமே திருப்பிக் கொடுத்துவிடுவார். வெகுகாலம் இதுவே அவருடைய கிரமமாக  இருந்தது. 

சில காலத்திற்குப்  பிறகு, பாபாவின் மகாத்மியம் பரவியது. பக்தர்களுடைய கூட்டம் ஷீரடியில் குழுமியது. சாஸ்திர விதிகளோடு கூடிய பூஜையும் ஆரம்பிக்கப் பட்டது. 

சாஸ்திர விதிகளின்படி, எந்தப் பூஜையும் பொன்னும் மலர்களும் தக்ஷினையும் சமர்ப்பணம் செய்யப் படாமல் நிறைவு பெறாது. இதை நித்திய வழிபாடு செய்தவர்கள் அறிந்திருந்தனர் . 

மன்னனுக்கு ராஜாபிஷேகம் செய்யும்போதும் பாதபூஜை செய்யும்போதும் குடிமக்கள் பரிசுகளையும் வெகுமதிகளையும் கொண்டுவருகின்றனர். அதுபோலவே, குரு பூஜைக்கும் தக்ஷிணை சமர்ப்பணம் செய்யப் படவேண்டும். 

தக்ஷிணை கொடுப்பவர்கள் உயர்ந்த பதவியை அடைகின்றனர். பொருளை தட்சிணையாக கொடுப்பவர்கள் உயர்ந்த ஞானந்தை அடைகிறார்கள்; பொன்னை தட்சிணையாக கொடுப்பவர்கள் மனத்தூய்மையை அடைகிறார்கள்; என்று வேதம் மொழிகிறது. 

அரைத்த சந்தனத்தை தெய்வத்திற்கு பூசுவதால் மங்களம் உண்டாகிறது. அக்ஷதை சமர்ப்பணம் செய்வதால் ஆயுள் விருத்தியாகிறது. மலர்களும் தாம்பூலமும், செல்வதையும் அஷ்ட ஐசுவரியங்களையும் அளிக்கின்றன. அதுபோலவே, தக்ஷிணை நிறைந்த செல்வத்தை அளிக்கிறது. 

எப்படிச் சந்தனமும் அக்ஷதையும் மலர்களும் தாம்பூலமும் பூஜை திரவியங்களில் முக்கியமானவையோ, அப்படியே தக்ஷினையும் சுவர்ணபுஷ்பமும் மிகுந்த செல்வத்தை  அடைய முக்கியமானவை. 

தெய்வ பூஜைக்கு தக்ஷிணை அவசியமானது; ஒரு விரதத்தை முடிக்கும்போது தக்ஷிணை கொடுக்கப் படவேண்டும். 

உலகியல்  விவகாரங்களைஎல்லாம்  பணத்தைக் கொடுத்தும்  வாங்கையுமே  நடக்கின்றன.தங்களுடைய புகழையும் கௌரதையும் தக்க வைத்துக்க கொள்ள, மக்கள் அம்மாதிரியான சமயங்களில் தாராளமாகவே செலவு செய்கின்றனர். (கலியாணம், கிருகப் பிரவேசம் போன்றவை)

'ஹிரண்ய  கர்ப்ப கர்பஸ்தம்' என்று ஆரம்பிக்கும் மந்திரத்தை ஓதி, ஒரு தெய்வத்தின் பூஜையில் தக்ஷிணை அளிக்க வேண்டுமென்பது வழக்கமாக இருக்கும்போது, ஒரு ஞானியைப் பூஜை செய்யும்போது ஏன் தக்ஷிணை கொடுக்கக் கூடாது?

ஒரு மகானை தரிசனம் செய்யப் போகும்போது அவரவர்களுடைய ஞானத்திற்கு ஏற்றவாறு பலவிதமான எண்ணங்களுடன் நோக்கங்களுடனும்  மக்கள் செல்கின்றனர். இது விஷயத்தில் ஒருமையை எதிர்பார்க்க முடியாது. 

சிலர் பக்தியுடனும் செல்கின்றனர். சிலர் ஞானியுனுடைய  சக்தியை சோதனை செய்யச் செல்கின்றனர். சிலர் தங்களுடைய மனதில் என்ன இருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்க முடிந்தால்தான் அவர் ஞானி என்று நினைக்கின்றனர்.



Thursday, 5 February 2015

ஷிர்டி சாய் சத்சரிதம் 

முதல் தரிசனத்தின்போது தக்ஷிணை ஏற்றுக் கொள்கிறார்; இரண்டாவது தரிசனத்தின்போது மறுபடியும் தக்ஷிணை கேட்கிறார். விடை பெற்றுக் கொள்ளும்போது "தக்ஷிணை கொண்டு வாரும்" என்று இன்னொருமுறை கேட்கிறார். ஒவ்வொரு நிமிடமும் எதற்காக தக்ஷிணை?

சடங்குகளுடன் ஆசாரமாக செய்யும் பூஜையில் ஆசமனம் செய்வதற்கு நீர் அளிக்கப்படுகிறது. நைவேத்தியம் (படையல்) ஆனவுடன் கைகளையும் வாயையும் அலம்பிகொள்வதற்கு நீர் அளிக்கப் படுகிறது. பிறகு கைக்கு வாசனைத்திரவியம் பூசியபின் தாம்பூலம் அளிக்கப் படுகிறது. இதெல்லாம் நடந்து முடித்தபிறகு, கடைசியாகத்தான் தக்ஷிணை அளிக்கப்படுகிறது. 

ஆனால், பாபாவின் கிரமமே வேறு. சந்தானம் பூசப்பட்டுக் கொண்டிருக்கும்போதே, அக்ஷதை அலங்காரம் செய்யப்படும்போதே, தக்ஷிணை உடனே கொடுக்கப்பட வேண்டுமென்று எதிர்பார்ப்பார். 

'ஓம் தத் சத் ப்ரம்மார்ப்பன மஸ்து' என்று ஓதி, பூஜையின் முடிவில் கொடுக்க வேண்டிய தக்ஷினையை 'சுக்லாம்பரதரம்' குட்டும்போதே பாபா கேட்பார்; அதை உடனே கொடுத்துவிட வேண்டும். 

இருப்பினும் இந்த சந்தேகத்தை பெருமுயற்சி ஏதும் எடுக்காமலேயே நிவிர்த்தி செய்துகொள்ளலாம். கொஞ்சம் கவனமாக கேட்பின் நீங்கள் நன்கு புரிந்துகொள்வீர்கள். 

செல்வம் சேமிப்பதன்nokkame தருமகாரியங்களில் செலவிட வேண்டும் என்பதுதான். அதற்குப் பதிலாக, அல்பமான புலனின்ப நுகர்ச்சியிலேயே அது செலவாகிவிடுகிறது; 

செல்வம் தருமத்தை வளர்க வேண்டும்; தருமத்திலிருந்து இறைஞானம் தோன்றும். செல்வம் இவ்விதமாக நம்மை ஆன்மீக பாதையில் அழைத்துச்சென்று மனதிற்கு மகிழ்ச்சியையும் சாந்தியையும் அளிக்கிறது. 

ஆரம்பித்தில் வெகுகால பரியந்தம் பாபா எதையும் ஏற்றுக்கொள்ளவில்லை. எரிந்துபோன தீக்குச்சிகளையே சேர்த்து ஜோபி நிறைய வைத்திருந்தார்; 

பக்தரோ, பக்தரல்லாதவரோ , அவர் எவரிடமும் ஏதும் கேட்கவில்லை. யாரவது ஒருவர் அவர் முன்னால் ஒரு தம்பிடியோ துகாணியோ வைத்தால் அக்காசுக்கு புகையிலையோ எண்ணையோ வாங்கிகொள்வார். 

அவருக்குப் புகையிலையின்  மேல் பிரேமை; பீடியோ அல்லது சீலிமோ (புகை பிடிக்கும் மண் குழாய்) பிடிப்பார். சிலீம் செய்த சேவை எல்லையற்றது; அது புகையாத நேரமேயில்லை. 

பிறகு, யாரோ ஒருவருக்குத் தோன்றியது. ஞானியை தரிசனம் செய்ய எப்படி வெறுங்கையுடன் செல்வது? ஆகவே, அவர் கையில் சிறிது தக்ஷிணை எடுத்துக் கொண்டு சென்றார். 


Thursday, 29 January 2015

ஷிர்டி சாயி சத்சரிதம் 

"இவ்வுலகில் ஒவ்வொருவருக்கும் யாரோ இருக்கிறார்; யாராவது ஒருவர் இருக்கிறார். ஆனால், எனக்கோ இங்கு யாருமே இல்லை; அல்லா, அல்லா மட்டும்தான் இருக்கிறார்.-

"என்னைத் தம்முடைய ஜீவப்பிராணனை விட அதிகமாக எவர் நேசிக்கிறாரோ அவரே எனக்கு வேண்டும். அப்பேர்ப்பட்டவர்க்கு  ஆர் ஒரு குணம் (மடங்கு) கொடுத்தால் நான் நூறு குணம் (மடங்கு) திருப்பியளிப்பேன். "

கோடீச்வரராக இருக்கலாம், அவரும் எங்காவது ஏழை எளியவர்களிடம் தக்ஷிணைக்காக கடன் வாங்கிக்கொண்டு வரும்படி ஆணையிட்டார். 

செல்வரோ, ஆண்டியோ, ஏழையோ, பலமில்லாதவரோ, பணமில்லாதவரோ- சாயி அவர்களுக்குள்ளே ஒருவர் முக்கியமானவர், மற்றவர் முக்கியம் அல்லர் என்று பேதம் பார்த்ததில்லை. 

இவ்வாறு, யாராக இருந்தாலும் சரி, தம்முடைய கௌரவத்தை எல்லாம் இறக்கி வைத்துவிட்டு பாபாவின் ஆக்ஞையை சிரமேற்கொண்டு, ஏழைகளின் வீடுகளுக்குச் சென்று பாபாவுக்கு தக்ஷிணை கொடுப்பதற்காகப் பிச்சை எடுத்தனர். 

சுருங்கச்  சொன்னால், தக்ஷிணை கேட்டு வாங்கும் சாக்கில் பாபா அவர்களுக்குப் பணிவை போதனை செய்தார். 

ஒரு சாதுவுக்குப் பணம் எதற்காக வேண்டும் என்று எவருக்கும் சந்தேஹம் எழலாம். ஆனால், ஆழமாகச் சிந்தித்தால், மிக எளிதாக இந்த சந்தேஹம் நிவிர்த்தியாகும். 

சாயி பூர்ணகாமர் (எல்லா ஆசைகளும் முழுமையாக நிறைவேறியவர்) என்றால் அவர் தக்ஷிணை எதற்காக கேட்கவேண்டும்? பக்தர்களை பணம் கேட்பவரை, விருப்பமேதும் இல்லாதவர் என்று எவ்வாறு சொல்ல முடியும்?

எவருக்கு வைரமும் சிக்கிமுக்கிகல்லும் ஒன்றோ, எவருக்குத் தாமிரக் காசும் தங்க மெஹராவும் ஒன்றோ, அவர் எதற்காகப் பணத்துக்காக கை நீட்டுகிறார்?

வயிற்றுப் பிழைப்புக்காகப் பிச்சை எடுப்பவர், ஏழ்மையும் பற்றற்ற வாழ்வையும் விரதமாக கொண்டவர், ஆசைகள் ஏதுமின்றி வைராக்கியத்துடன் வாழ்பவர் எதற்காக தக்ஷிணை எதிர்பார்க்கிறார்?

எவருடைய வாசலில் அஷ்டசித்திகளும் காத்துக் கொண்டிருக்கின்றனவோ, எவருடைய ஆணையை நவநிதிகளும் எதிர்பார்த்துக்கொண்டிருகின்றனவோ அவருக்குப் பணம் தேவைப்படும் இழிநிலை ஏன்?

இவ்வுலக இன்பங்களைத் 'தூ' வென்று உதறியவர்களுக்கு, பரவுலக வாழ்வையும் வெறுத்து லட்சியம் செய்யாதவர்களுக்கு, எங்கு நன்மை இருக்கிறது என்பதை நன்கறிந்த பற்றற்ற சாதுக்களுக்குப் பணம் எதற்காக தேவைப்படுகிறது?

பக்தர்களின் க்ஷேமத்திற்கும் மங்களத்திர்காக்கவுமே வாழும் ஞானிகளுக்கும் சாதுக்களுக்கும் சான்றோர்களுக்கும் செல்வம் எதற்காக?

சாதுக்கள் எதற்காக தக்ஷிணை கேட்கிறார்கள்? அவர்களுடைய மனம் ஆசையற்று இருக்கவேண்டும். பக்கீராக ஆகியும் பணத்தாசை விடாமல் பைசாவை ஏன் நித்திய ஆராதனை செய்கிறார்கள்?  


Thursday, 22 January 2015

ஷிர்டி சாயி சத்சரிதம் 

"போனால் உங்களுக்கு சுபம் உண்டாகும்; பாபாவின் வழிமுறைகள் கற்பனைக் கெட்டாதவை! 'நீரே கதி' என்று அவரை சரணம் அடையுங்கள்; நீங்கள் மங்களம் நிறைந்தவராகி விடுவீர்கள்".

இந்த யோசனை சேட்டுக்கு மிகவும் பிடித்திருந்தது; ஷிர்டி போவதென்று தீர்மானித்துவிட்டார். முடிவு செய்தவாறே சில நாள்களில் ரத்தன்ஜி ஷிர்டி வந்து சேர்ந்தார். 

தரிசனத்திற்காக மசூதிக்குச் சென்று சாயி பாதங்களில் விழுந்து நமஸ்காரம் செய்தார். புண்ணியகோடியான  சாயிமஹராஜைப் பார்த்தவுடனே அவருடைய இதயத்தில் பிரேமை பொங்கியது. 

ஒரு பூக்கூடையை திறந்து மாலை ஒன்றை எடுத்து அன்புடன் பாபாவின் கழுத்தில் இட்டார். பிறகு, அவர் பலவிதமான சிறந்த பழங்களை பாபாவின் பாதங்களில் சமர்ப்பணம் செய்தார். 

மிகுந்த விநயத்துடன் பாபாவின் அருகில் ரத்தன்ஜி உட்கார்ந்துகொண்டார். பயபக்தியுடன் அவர் பாபாவிடம் பிரார்த்தனை செய்ததை இப்பொழுது கேளுங்கள். 

"மக்கள் பெரிய சங்கடங்களில் மாட்டிக்கொள்ளும்போது பாபாவின் பாதங்களை நாடுகிறார்கள். பாபா உடனே அவர்களை ரட்சிக்கிறார்; இதுவே நான் கேள்விப்பட்டது.-

"ஆகவே, நான் உங்களை தரிசனம் செய்து ஒரு வேண்டுகோள் விடுக்கவே இவ்வளவு தூரம் கடந்து இங்கு வந்திருக்கிறேன். உங்களுடைய பாதங்களில் என் வேண்டுகோளை வைக்கிறேன்; மகாராஜ் என்னை நிராகரணம் (புறக்கணிப்பு) செய்துவிடாதீர்கள்!"

பாபா அவரிடம் கூறினார், "ஆக, இவ்வளவு நாள்கள் கழித்து இன்று என்னிடம் வந்திருக்கிறீர்! ஆனால், இப்பொழுது முதலில் எவ்வளவு தக்ஷிணை கொடுக்க விரும்புகிறீரோ அதைக் கொடும். அப்பொழுதுதான் உமக்குப் பலன் கிடைக்கும்."

யார் தரிசனத்திற்கு வந்து அவருடைய பாதங்களில் விழுந்து வணங்கினாலும், அவர் ஹிந்துவானாலும் சரி, முஸ்லீமானாலும் சரி, பார்சியானாலும் சரி, பாபா முதலில் அவரிடம் தக்ஷிணை கேட்பார். 

தக்ஷிணை என்ன சொல்பமான தொகையா? ஒன்றா இரண்டா அல்லது ஐந்தா? கிடையவே கிடையாது! நூறோ ஆயிரமோ லக்ஷமோ கோடியோ அவர் விரும்பிய தொகையைக் கேட்பார். 

தக்ஷிணை கொடுக்கும்போது, "மேலும் கொண்டுவா" என்று கேட்பார். கையில் பணம் தீர்ந்துவிட்டது என்று சொன்னால், 'கடன் வாங்கி கொண்டு வா' என்று சொல்வார். யாரிடமும் மேற்கொண்டு கடன் வாங்க முடியாது என்ற நிலை ஏற்பட்ட பிறகுதான் தக்ஷிணை கேட்பதை நிறுத்துவார். 

அந்நிலையில் பக்தரிடம் சொல்வார், "சிறிதும் கவலைப்படாதீர்! நான் உமக்கு மூட்டை மூட்டையாக பணம் தருகிறேன். அமைதியாக என்னருகில் நிச்சிந்தையாக உட்காரும். 


Friday, 16 January 2015

ஒருவர் சொல்லலாம், "நான் ஒருவனே சர்வ ஐசுவரங்களையும் பெற்ற உயர்ந்த மனிதன்" என்று. கர்வத்தால் தலைவீங்கிக் கெட்டவழிகளில் செல்ல ஆரம்பிக்கலாம். 

திருஷ்டி வந்துவிடுமோ என்று பயந்து, ஒரு தாய் குழந்தைக்குத் தாடையில் தம்முடைய விரலால் கறுப்பு பொட்டு இட்டுவிடுவதுபோல், இறைவனும் அப்பழுக்கற்ற நற்குணவான்களுக்கும் கண்ணேறு வாராத வகையில் ஏதோoru சிறிய குறையை வைத்துவிடுகிறான் என்பது நிதரிசனமாகத் தெரிகிறது. 

ரத்தன்ஜி அனுபவித்த பொன்னும் பொருளும் வருபவர்களுக்கெல்லாம் அன்னமிடும் தருமசிந்தனையை அளித்தது. ஏழை எளியவர்களின் துயர் துடைக்க உதவிகளையும் செய்துவந்தார். எப்பொழுதும் மலர்ந்த முகத்துடன் இருந்தார். 

இவ்வாறு, வெளியுலக பார்வைக்கு அவர் சந்தோஷமாக வாழ்பவராக தெரிந்தார். ஆனால், ஆன் சந்ததி இல்லாதவர்களுக்குச் செல்வத்தின் மகிழ்ச்சி ஏது?

ஒன்றன்பின் ஒன்றாக அவருக்குப் பன்னிரண்டு மகள்கள் இருந்தனர். எப்படி அவரால் மகிழ்ச்சியாக இருக்க முடியும்? எப்படி அவருடைய மனம் சாந்தியடைய முடியும்?

பக்தியில்லாத பஜனை, சுருதியும் தாளமும் இல்லாத இசை, பூணுல் அணியாத பிராமணன், சோபை எங்கே இருக்கிறது?

சகலகலாவல்லவர், ஆனால் விவேகமற்றவர்; ஆசாரசீலர், ஆனால் ஜீவராசிகளின் மேல் தயையோ கருணையோ இல்லாதவர்; இவர்களிடம் சோபை எங்கே இருக்கிறது?

நெற்றியில் கோபி சந்தனம், கழுத்தில் துளசிமாலை, ஆனால் நாக்கு ஞானிகளைப் பற்றி  அவதூறு பேசுகிறது, சோபை எங்கே இருக்கிறது?

பாவ மன்னிப்பு கோராத தீர்த்த யாத்திரை, அட்டிகை இல்லாத நகை அலங்காரம், ஆண் குழந்தை இல்லாத இல்லம், சோபை எங்கே இருக்கிறது? 

"நாராயணன் எனக்கு ஒரு மகனையாவது கொடுப்பாரா?" அனுதினமும் இதுவே அவருடைய சிந்தனையாக இருந்தது. மனம் அமைதியாக இருக்க மறுத்தது. 

இதனால் சேட்ஜி சதா சோகமாகவே இருந்தார். அன்னமும் பானமும் பிடிக்கவில்லை. எப்பொழுதும் உடைந்த மனதுடன் இரவுபகலாக கவலையில் மூழ்கியவராக இருந்தார். 

"இறைவனே! என்னுடைய மகிழ்ச்சியிலிருக்கும் இக்குறையை நீக்கி, என்னைக் களங்கமில்லாதவனாக ஆக்குவீராக. என்னுடைய  வம்சவிருத்திக்காக ஒரு மகனையாவது அளிப்பீராக, ஓ பிரபுராயா! இந்த அவப்பெயரிலிருந்து என்னைக் காப்பாற்றும்".

கவி தாஸ்கனுவிடம்   அவருக்கு மிகுந்த விசுவாசமிருந்தது. தம்முடைய இதயத்தில் இருந்த ரகசியமான ஆசையை அவரிடம் தெரிவித்தார். தாசகனு கூறினார், "ஷீரடிக்கு போய்வாருங்கள்; உங்களுடைய மனோரதம் நிறைவேறும்.-

"பாபாவை தரிசனம் செய்யுங்கள்; அவருடைய பாதங்களில் வந்தனம் செய்யுங்கள்; உம்முடைய உள்ளத்து ஆசையை அவரிடம் விளக்கமாகச் சொல்லுங்கள். அவர் உங்களை ஆசீர்வாதம் செய்வார். - 


Thursday, 8 January 2015

ஷிர்டி சாயி சத்சரிதம் 

விபரீதமான, எதிர்மறையான, அபிப்ராயங்கள் சித்தத்தில் குழப்பத்தையே விளைவிக்கின்றன. ஜனன மரண சூழலில் மாட்டிக்கொண்டு எப்பொழுதும் மனம் கொந்தளித்தவாறே இருக்கிறது. 

நாம் ரூப் தடங்கல்களை தாண்டியவர், மாயையால் பாதிக்கப்படாதவர், நிஜமான ஆனந்தத்தில் மூழ்கியவர். இறையனுபவம் பெற்றவர் - ஒரு சித்த புருஷராவார். 

இந்நிலைக்கு சிறந்த உதாரணம் ஸ்ரீ சாயி. இந்த மூர்த்தியின் பாதங்களை தரிசனம் செய்யும் பாக்கியம் பெற்றவர்கள் எல்லாப் பேறும் பெற்றவர்கள். எல்லாபேறும் பெற்றவர்கள். 

சந்திரன் தண்ணீரில் இருப்பதுபோல் தெரியலாம்; ஆனால், அது வானில்தான் இருக்கிறது. அதுபோலவே ஞானிகள் பக்தர்களால் சூழப்படிருப்பதை போலத் தோன்றலாம்; ஆனால், அவர்களுக்கு எந்த வஸ்துவின்மீதும் ஒட்டுதலில்லை. 

எந்நேரமும் பக்தர்களுக்கிடையில் இருந்தாலும் அவர்களுக்கு எவர்மீதும் ஒட்டுதலில்லை. அவர்கள் தங்களுக்குள்ளேயே மூழ்கியிருப்பதால் அவர்களுக்கு வெளிக்காட்சிகள் தெரிவதில்லை. 

மகாசாதுக்களும் ஞானிகளும் இவ்வாறே; அவர்கள் மூலமாக  இறைவன் பேசுகிறார். அவர்களுக்குத் தெரியாதது ஒன்றுமில்லை. அவர்களால் அடையமுடியாததும் ஏதுமில்லை. 

ஆன்மீக போதனையைப் பெறுவதும் அளிப்பதுமாகக் கணக்கற்ற சிஷ்யர்களும் குருமார்களும் இவ்வுலகில் இருக்கின்றனர்; ஆனால், ஞானத்துடன் அனுபவத்தையும் சேர்த்து அளிக்கும் குரு அபூர்வமே. 

பூர்வாங்கமான வர்ணனை போதும்; முக்கியமான காதைக்குப் போவோம். ஆவலுடன் எதிர்பார்த்துகொண்டிருக்கும் கதை கேட்பவர்கள் நன்மை பெறுவர். 

நிஜாம் சமஸ்தானத்தில் உள்ள நாந்தேட் நகரில்   பிரக்தியாதி (புகழ்) பெற்ற பார்சி வியாபாரி ஒருவர் வசித்து வந்தார். தார்மீகமாகவும் உலகத்தினால் விரும்பப் பட்டவராகவும் வாழ்ந்து வந்தார். அவருடைய பெயர் ரத்தன்ஜி. (முழுப் பெயர் ரத்தன்ஜி சாபூர்ஜி வாடியா) 

அவருக்கு ஏராளமான செல்வமும் வண்டி, குதிரை, விளைநிலங்கள், காடுகள் ஒன்று பலவகையில் சொத்துக்களும் இருந்தன. அவருடைய வீட்டின் கதவுகள் எல்லாருக்கும் திறந்திருந்தன. எவருமே அவருடைய வீட்டிலிருந்து முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு திரும்பவில்லை. 

வெளிப்பார்வைக்கு அவர் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கியிருந்தாலும், இரவு பகலாக அவருடைய மனதை கவலையென்னும் பெரிய முதலை கடித்துத் தின்றுகொண்டிருந்தது. 

எவருமே பூரணமான, குறையோன்றுமே இல்லாத, ஆனந்தத்தை அனுபவிக்கமுடியாது என்பது இறைவனின் ஆணை போலும்! ஒருவருக்கு ஒரு குறை; மற்றொருவருக்கு வேறு குறை; ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு கவலை அல்லது ஏக்கம் இருக்கவே செய்கிறது. 

Friday, 2 January 2015

ஷிர்டி சாயி சத்சரிதம் 

எது சகல விஞ்ஞானங்களையும் சுபாவத்தினாலேயே  அறிந்திருக்கிறதோ, எது பெயரையும் உருவத்தையும் இழந்து நிற்கிறதோ, எதற்கு சம்சார தர்மம் என்பது இல்லையோ, அதுவே பகுதியும் விகுதியும் இல்லாத பிரம்மம் (முழு முதற்பொருள்).

சுபாவத்தினால் 'தான் வேறு' என்று நினைத்துக் கொள்வதாலும், அஞ்ஞானத்தாலும் மோகத்தாலும் விளையும் தவறுகளாலும், துவைத மாயையால் தடம் புரண்ட மனம், ஏகத்துவ போதனையால் அமைதியையும் சாந்தியையும் அடைகிறது. 

இவ்வுலகத்தையே ஒன்றாகவும் ஒரே சக்தி நிரம்பியதாகவும் நினைத்து, 'நான் வேறு மற்ற ஜனங்கள் வேறு' என்று நினைக்காதவர், தன்னிலிருந்து வேறுபட்டதாக எதையும் காண்பதில்லை. 

பெயரையும் உருவத்தையும் செயல்புரிவதையும் தடங்கல்களாக கருதி, துவைத பாவனையை  அடியோடு விட்டுவிடுவதே முழு முதற்பொருள் உடன் ஐக்கியமாவதேயாகும். 

"நான் ஒருவனே இருக்கிறேன்; நான் இல்லாத இடமே இல்லை; பத்துத் திசைகளிலும் நான் வியாபித்திருக்கிறேன். என்னைத் தவிர வேறு எதுவுமே இல்லை; (அத்துவைதத்தின் சிகரம்)

இந்த பாவனையை திடமாகப் பற்றிக் கொள்; மயக்கம் தரும் மாயையை உதறித் தள்ளி விடு. 'என்னைத் தவிர வேறெந்த வஸ்துவும் இங்கில்லை' என்பதை மனதிற்கொண்டு உன்னையே அறிவாயாக!

எங்கிருந்து இந்த துவைத பாவனை எழுகிறது? கதை கேட்பவர்களுக்கு இந்த சந்தேஹம் எழுவது சகஜமே. பிரம்மம, அறிந்துகொள்ளப்பட வேண்டியது; ஜீவன், அறிந்துகொள்ள முயல்பவன். எந்த உபாயத்தினால் துவைத பாவனையை விலக்கிவிட முடியும்?

பேதபுத்தி சிறிதளவு இருந்தாலும், 'ஒன்றைத் தவிர வேறொன்றுமில்லை' என்னும் நம்பிக்கையை அழித்துவிடும். மேலும், பிரித்து பார்க்கும் மனப்பான்மையை வளர்த்து ஜனனமரணச் சுழலுக்கு காரணமாகிவிடும். 

அஞ்ஞான நோக்கை அகற்றிவிட்டால், சகல சிருஷ்டியும் கரைந்துபோய்த் 'தானும் பிறவும் ஒன்றே' என்ற காட்சி தோன்றும்; துவைத மாயை உடனே அகன்றுவிடும். 

சுத்தமான நீரில் சுத்தமான நீரைக் கலந்தால், இரண்டும் ஒன்றாகிவிடுகின்றன. முன்பு இருந்த நிலையம் பின்பு ஏற்பட்ட நிலையும் எவ்வித வித்தியாசமுமின்றி ஒன்றேயாகிவிடுகிறது. 

விறகு கட்டைகள் உருவத்தில் வேறுபடலாம். ஆனால், அக்கினி சொரூபத்தில் எந்த வேறுபாடும் இல்லை. அவற்றின் தனித்தன்மையும் உருவ வேறுபாடுகளையும் இழந்துவிட்டு அக்கினி சொரூபமாகவே ஆகிவிடுகின்றன. 

அதுபோலவே, ஆத்துமா ஐக்கிய விஞ்ஞானத்திற்கு வேறேந்தே நிரூபணமும் தேவையில்லை. ஆத்மா எல்லா உயிர்களிலும் உறைகிறது; ஆனால், எப்பொழுதும் உருவமற்ற நிலையில்தான் இருக்கிறது.