valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday, 6 August 2026

 ஷீர்டி சாயி சத்சரிதம் 


"தீக்ஷிதர் எங்களின் கிடைத்தற்கரிய நண்பர்.  நீங்களும் அவருக்கு அறிமுகம் செய்யப்படுவீர்கள்.  அவர் ஷிர்டிக்குச் செல்வதில் மிகுந்த உற்சாகத்துடன் இருக்கிறார். உங்களுடைய வரவு அவருக்குப் பெருமகிழ்ச்சியை அளிக்கும்."

இவ்வாறு அவருக்குச் சொன்னபின் தீக்ஷிதர்க்கும் செய்தியைத் தெரிவித்தனர்.  அதைக் கேட்ட தீக்ஷிதரின் மனஉளைச்சல் அகன்றது; மனம், மிகுந்த சந்தோஷத்தை அடைந்தது. 

மாமனார் வீட்டிற்குச் சென்ற மாதவராவ் தம் மாமியார் சுகமடைந்துவிட்டிருந்ததைக் கண்டார்.  சிறிது நேரம் ஓய்வெடுத்தார்.  'மிரீகர் அழைக்கிறார்' என்று செய்தி வந்தது. 

மிரீகரின் அழைப்புக்கு மரியாதையை கொடுத்து, வெயில் சிறிது குறைந்தபிறகு மாதவராவ் தீக்ஷிதரை சந்திக்கச் சென்றார். 

அதுதான் அவர்களுடைய முதல் சந்திப்பு.  பாலா சாஹேப் ஒருவருக்கொருவரை அறிமுகப்படுத்தினார். இருவரும் இரவு 10 மணி ரயிலில் ஷிர்டிக்குச் செல்வதென்று தெளிவாகத் தீர்மானம் செய்தனர். 

இவ்வாறு முடிவு செய்த பிறகு நடந்த அதிசயத்தைப் பாருங்கள்.  பாபாவின் படத்தை மூடிக்கொண்டிருந்த திரைச்சீலையை பாலா சாஹேப் விலக்கினார். 

அது பாபாவின் புகைப்படம்.  மேகாவுக்கு சொந்தமானது.  மேகா, பாபாவை முக்கண்ணனாகிய சங்கரனாகவே பாவித்து பரம பிரேமையுடன் வழிபட்டுவந்த ஈடிணையற்ற பக்தர். 

அப் படத்தின் கண்ணாடி உடைந்துபோன காரணத்தால், சரிசெய்வதற்காக ஷிர்டியிலிருந்து அஹமத் நகருக்கு பாலா சாஹிபால் முன்னமேயே கொண்டுவரப்பட்டிருந்தது. 

அதே புகைப்படைந்தான், பழுது பார்க்கப்பட்ட பின், தீக்ஷிதரின் வருகைக்காக காத்துக்கொண்டிருந்தாற்போல் தோன்றியது.  மிரீகரின் வீட்டுக் கூடத்தில் ஒரு துணியால் மூடப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. 

குதிரைக் கண்காட்சி முடிவடைந்தபின் பாலாசாஹேப் ஷிர்டிக்குத் திரும்பச் சில நாள்கள் இருந்தன. ஆகவே, தாமதத்தை தவிர்க்கும் பொருட்டு அப் படம் மாதவராவின் கைகளில் ஒப்படைக்கப்பட்டது. 

படுதாவை விலக்கியபின், படம் திறந்த நிலையிலேயே விடப்பட்டது.  மிரீகர் மாதவராவிடம் படத்தை ஒப்படைத்துக்கொண்டே சொன்னார், "ஷீர்டி பரியந்தம் பாபாவின் துணையுடன் சுகமாகச் செல்வீராக!"

சர்வாங்க மனோகரமான (அங்கமெல்லாம் அழகு கொஞ்சிய) அந்தப் புகைப்படத்தைப் பார்த்தவுடனே காகா சாஹேப் ஆனந்தம்  நிரம்பியவரானார்.  நமஸ்காரம் செய்தபின் படத்தையே உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தார். 

நடக்கவொண்ணாத அந்த விசித்திரமான நிகழ்வு நடந்ததை நினைத்தும், கற்பனைக்கெட்டாத அழகு படைத்த சமர்த்த சாயியின் புனிதமான புகைப்படத்தைப் பார்த்தும், தீக்ஷிதர் சந்தோஷத்தால் மெய்மறந்தார். 





No comments:

Post a Comment