valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday, 13 August 2026

 ஷீர்டி சாயி சத்சரிதம் 

யாரை தரிசனம் செய்யத் துடித்துக்கொண்டிருந்தாரோ, அவருடைய உருவப்படத்தை வழியிலேயே காண நேர்ந்த பாக்கியம் அவரைப் பெருமகிழ்ச்சிக்கு உள்ளாக்கியது. 

மேலும் சொல்லப் போனால், அப் படம் ஷிர்டியிலிருந்து காகா சாஹேப் மிரீகரின் இல்லத்திற்கு வர நேர்ந்ததும், அந்த வேளையில் தீக்ஷிதர் அங்கு வந்து சேர்ந்ததும், ஒரு விசித்திரமான யோகம் (நற்பேறு) அன்றோ?

தீக்ஷிதரின் மனநாட்டம் எப்படி இருந்ததோ, அதை அப்படியே சமர்த்த சாயி திருப்தி செய்தார். ஏதோவொரு சாக்குபோக்கில், அவரே மிரீகர் என்னும் பக்தரின் இல்லத்தில் எழுந்தருளினாரோ!

லோனாவாலாவில் சாந்தோர்கரைச் சந்தித்ததும் அவருடன் உரையாடியதும் பாபாவின் காந்த சக்தி ஈர்ப்பின் ஆரம்பம்;  அதுவே பின்னர் நடந்த பேட்டிக்கு விதையிட்டது எனலாம். 

இல்லையென்றால், வேறு எதற்காக அப் படம் ஷிர்டியிலிருந்து அந் நாள்களில் அங்கு வர வேண்டும்? ஏன் அவ்வளவு நாள்களாக மிரீகரின் இல்லத்தில் மூடிவைக்கப்பட்டிருந்தது?

எது எப்படியோ, ஏற்கெனவே நிச்சயம் செய்திருந்தவாறு, புகைப்படத்தை உடன் எடுத்துக்கொண்டு மாதவராவும் தீக்ஷிதரும் ஆனந்தமான மனத்துடன் ஷிர்டிக்குக் கிளம்பினார். 

அன்று இரவே, உணவுண்டபின் இருவரும் ரயில் நிலையத்திற்குச் சென்றனர்.  இரண்டாவது வகுப்புப் பயணச் சீட்டு வாங்கிக்கொண்டு தங்களுடன் எடுத்துச் சென்றனர். 

பத்து மணி அடித்தபோது ரயில் வரும் சத்தம் கேட்டது.  இரண்டாவது வகுப்புப் பேட்டி முழுதும் நிரம்பிக் காணப்பட்டது!

இந்தப் பிரச்சினையைக் கண்ட இருவரும் கவலையுற்றனர்.  ரயில் கிளம்புவதற்குச் சிறிது நேரமே இருந்தது. வேறு என்ன ஏற்பாடு செய்ய முடியும்?

ஆகவே, கூட்டம் நிரம்பி வழிவதைப் பார்த்த இருவரும், கிளம்பிய இடங்களுக்கே திரும்பிச் சென்றுவிடுவதென்றும், ஷிர்டிக்கு மறுநாள் போய்க்கொள்ளலாம் என்றும் முடிவெடுத்தனர். 

இதனிடையே, எதிர்பாராத விதமாக, ரயிலின் காவலர் (Guard ) தமக்குத் தெரிந்தவர் என்பதை தீக்ஷிதர் கவனித்தார்.  காவலர் அவர்கள் இருவரையும் முதல் வகுப்பில் சௌகரியமாகப் பிரயாணம் செய்ய ஏற்பாடு செய்தார். 

வசதியாக முதல் வகுப்புப் பெட்டியில் அமர்ந்தபின், பாபாவைப்பற்றிய சம்பாஷனை அவர்களுடைய மனத்தில் தோன்றியவாறு பெருகி ஓடியது.  மாதவராவ் அமுதினும் இனிய காதைகளைச் சொன்னார்.  காதைகளைக் கேட்டு தீக்ஷிதர் ஆனந்தமடைந்தார். 

இவ்வாறாக, பிரயாணத்தின்போது பல சுகங்களை அனுபவித்ததால், காலம் மிக வேகமாக ஓடியது.  ரயில் கோபர்காங்வ் வந்து சேர்ந்தது. இருவரும் மகிழ்ச்சி நிரம்பியவர்களாக இறங்கினர். 

 


 

No comments:

Post a Comment