valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday, 20 August 2026

 ஷீர்டி சாயி சத்சரிதம் 


அப்பொழுது, ரயில் நிலையத்தில் நானா சாஹேப் சார்ந்தோர்கரை கண்ட தீக்ஷிதர் ஆனந்தத்தால் நிரம்பினார்.  இருவரும் சற்றும் எதிர்பாராதவிதமாக சந்தித்தனர். 

சாந்தோர்க்கரும் பாபாவை தரிசனம் செய்வதற்காக ஷிர்டிக்குச் சென்று கொண்டிருந்தார். விரும்பிக் கேட்காதததும் எதிர்பாராததுமான இந்த யோகத்தால் மூவரும் வியப்பிலாழ்ந்தனர். 

பின்னர், மூவரும் ஒரு குதிரை வண்டியை அமர்த்திக்கொண்டு உரையாடியவாறே கிளம்பினர். வழியில் கோதாவரி நதியில் ஸ்நானம் செய்தனர். இவ்வாறாக, மூவரும் புனித ஷிர்டிக்கு வந்து சேர்ந்தனர். 

பின்னர், சாயியை தரிசனம் செய்தபோது தீக்ஷிதரின் மனம் உருகியது; கண்கள் குளமாயின; சுயானந்த வெள்ளம் பெருகியது. 

சாயி ஸ்பஷ்டமாக (தெளிவாகச்) சொன்னார், "நானும் உங்களைப் பார்க்க காத்துக்கொண்டிருந்தேன். உங்களை சந்திக்க சாம்யாவை  (மாதவ்ராவ் தேஷ்பாண்டே) நேராக அஹமத் நகருக்கு அனுப்பினேன்." இதைக் கேட்ட,-

தீக்ஷிதரின் உடல் மயிர்கூச்செறிந்தது; கண்ணீர்ப் பெருக்கால் தொண்டை அடைத்தது; மனத்தில் ஆனந்த அலைகள் பொங்கின; எல்லா அங்கங்களும் வியர்த்துகொட்டின; 

தேகம் சூக்குமமாக நடுங்கியது. மனம் சுயானந்தத்தில் மூழ்கியது. ஆனந்தத்தின் கனத்தைத் தாங்கமுடியாமல் கண்கள் பாதி மூடிக்கொண்டன:

"இன்று நான் பார்வை பெற்ற பயனை அடைந்தேன்" என்று சொல்லிக்கொண்டே தீக்ஷிதர் பாபாவின் பாதங்களை பற்றினார். அவருடைய மனம், பெரும்பாக்கியம் பெற்றதை உணர்ந்தது.  அவர் அடைந்த ஆனந்தத்திற்கு சிருஷ்டியில் சமானம் ஏதும் இல்லை. 

பல ஆண்டுகள் கடந்தன. சாயி பாதங்களின் மீது தவம் வளர்ந்தது. சாயியின் பூரணமான கிருபையை சம்பாதித்தார். உடலை சேவைக்கு அர்ப்பணம் செய்தார். 

சேவையை சாங்கோபாங்கமாகச் (முழுமையாகச்) செய்வதற்காக ஷிர்டியில் ஓர் ஆசிரமும் கட்டினார்.  பல ஆண்டுகள் ஷிர்டியில் வாழ்ந்து சாயியின் மஹிமையைப் பரப்பினார். 

சாராம்சம் என்னவென்றால், சாயியை தரிசனம் செய்ய ஆசைப்படுபவரின் விருப்பம் நிச்சயமாக நிறைவேற்றப்படும்.  சாயி, பக்தர் இளைப்பாறும் பூஞ்சோலை; பக்தர்களுக்குப் பரம சுகத்தை அளிப்பவர். 

சந்திரனை நாடும் சகோரப் பறவைகள் அபரிமிதம் (ஏராளம், ஏராளம்).  ஆனால், நட்சத்திர நாதனாகிய சந்திரன், ஒருவனே.  அதுபோலவே, ஓர் அன்னைக்குப் பல மகன்கள் இருக்கலாம்.  ஆயினும், அவர்கள் அனைவர்க்கும் அன்னை ஒருத்தியே. 

சூரியனுக்கு அளவற்ற தாமரைகள்; ஆயினும் எல்லாத் தாமரைகளுக்கும் இருப்பது ஒரு சூரியனே. சாயிபக்தர்களுக்குக் கணக்கே இல்லை; ஆயினும், அவர் ஒருவரே அனைவர்க்கும் பிதாவும் பரமகுருவும். 

 


 

No comments:

Post a Comment