valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Friday, 2 January 2015

ஷிர்டி சாயி சத்சரிதம் 

எது சகல விஞ்ஞானங்களையும் சுபாவத்தினாலேயே  அறிந்திருக்கிறதோ, எது பெயரையும் உருவத்தையும் இழந்து நிற்கிறதோ, எதற்கு சம்சார தர்மம் என்பது இல்லையோ, அதுவே பகுதியும் விகுதியும் இல்லாத பிரம்மம் (முழு முதற்பொருள்).

சுபாவத்தினால் 'தான் வேறு' என்று நினைத்துக் கொள்வதாலும், அஞ்ஞானத்தாலும் மோகத்தாலும் விளையும் தவறுகளாலும், துவைத மாயையால் தடம் புரண்ட மனம், ஏகத்துவ போதனையால் அமைதியையும் சாந்தியையும் அடைகிறது. 

இவ்வுலகத்தையே ஒன்றாகவும் ஒரே சக்தி நிரம்பியதாகவும் நினைத்து, 'நான் வேறு மற்ற ஜனங்கள் வேறு' என்று நினைக்காதவர், தன்னிலிருந்து வேறுபட்டதாக எதையும் காண்பதில்லை. 

பெயரையும் உருவத்தையும் செயல்புரிவதையும் தடங்கல்களாக கருதி, துவைத பாவனையை  அடியோடு விட்டுவிடுவதே முழு முதற்பொருள் உடன் ஐக்கியமாவதேயாகும். 

"நான் ஒருவனே இருக்கிறேன்; நான் இல்லாத இடமே இல்லை; பத்துத் திசைகளிலும் நான் வியாபித்திருக்கிறேன். என்னைத் தவிர வேறு எதுவுமே இல்லை; (அத்துவைதத்தின் சிகரம்)

இந்த பாவனையை திடமாகப் பற்றிக் கொள்; மயக்கம் தரும் மாயையை உதறித் தள்ளி விடு. 'என்னைத் தவிர வேறெந்த வஸ்துவும் இங்கில்லை' என்பதை மனதிற்கொண்டு உன்னையே அறிவாயாக!

எங்கிருந்து இந்த துவைத பாவனை எழுகிறது? கதை கேட்பவர்களுக்கு இந்த சந்தேஹம் எழுவது சகஜமே. பிரம்மம, அறிந்துகொள்ளப்பட வேண்டியது; ஜீவன், அறிந்துகொள்ள முயல்பவன். எந்த உபாயத்தினால் துவைத பாவனையை விலக்கிவிட முடியும்?

பேதபுத்தி சிறிதளவு இருந்தாலும், 'ஒன்றைத் தவிர வேறொன்றுமில்லை' என்னும் நம்பிக்கையை அழித்துவிடும். மேலும், பிரித்து பார்க்கும் மனப்பான்மையை வளர்த்து ஜனனமரணச் சுழலுக்கு காரணமாகிவிடும். 

அஞ்ஞான நோக்கை அகற்றிவிட்டால், சகல சிருஷ்டியும் கரைந்துபோய்த் 'தானும் பிறவும் ஒன்றே' என்ற காட்சி தோன்றும்; துவைத மாயை உடனே அகன்றுவிடும். 

சுத்தமான நீரில் சுத்தமான நீரைக் கலந்தால், இரண்டும் ஒன்றாகிவிடுகின்றன. முன்பு இருந்த நிலையம் பின்பு ஏற்பட்ட நிலையும் எவ்வித வித்தியாசமுமின்றி ஒன்றேயாகிவிடுகிறது. 

விறகு கட்டைகள் உருவத்தில் வேறுபடலாம். ஆனால், அக்கினி சொரூபத்தில் எந்த வேறுபாடும் இல்லை. அவற்றின் தனித்தன்மையும் உருவ வேறுபாடுகளையும் இழந்துவிட்டு அக்கினி சொரூபமாகவே ஆகிவிடுகின்றன. 

அதுபோலவே, ஆத்துமா ஐக்கிய விஞ்ஞானத்திற்கு வேறேந்தே நிரூபணமும் தேவையில்லை. ஆத்மா எல்லா உயிர்களிலும் உறைகிறது; ஆனால், எப்பொழுதும் உருவமற்ற நிலையில்தான் இருக்கிறது. 


Wednesday, 24 December 2014

ஷிர்டி சாயி சத்சரிதம்

கனவிலும் நனவிலும் உட்கார்ந்திருக்கும்போதும் தூங்கும்போதும் சாப்பிடும்போதும் அவர் உம் முன் தோன்றுவார். ஜனங்களிடையே நடந்து சென்றாலும் வனத்தில் நடந்து சென்றாலும் நீர் எங்கு சென்று வந்தாலும் அவர் உம்முடனேயே இருப்பார்.

இவ்வாறு அவரை நிதித்யாசனம் (ஈடுபாட்டுடன் திரும்ப திரும்பச் செய்யப்படும் தியானம்) செய்தால் உம்முடைய மனம் உள்மன  நிலையில் நுழைந்து விடும். அனுதினமும் இவ்வாறு நடப்பின், உம்முடைய மனம் சச்சிதானந்தத்தில் கலந்துவிடும்.

இப்பொழுது, முந்தைய அத்தியாயத்தின் முடிவில் குறிப்பிடப்பட்ட காதையை ஆரம்பிப்போம். கேட்பவர்களே! பயபக்தியுடன் கேளுங்கள்.

பாவ பக்தியென்பது, சிராபுரீ (ரவாகேசரியும் பூரியும்) தின்பதைப் போன்றது. எவ்வளவு அதிகமாகத் தின்கிறோமோ அவ்வளவு அதிகமாக ஆவலும் பெருகும். தொண்டைவரை தின்றாலும் முழுதிருப்தி கிடைக்காது!

ஆகவே, கதை  கேட்பவர்களே! இன்னுமொரு காதையை நீங்கள் பயபக்தியுடன் கேட்டால் ஞானிகளை தரிசனம் செய்வது எவ்வளவு நன்மையை அளிக்கக்கூடியது என்பதுபற்றி திடமான நம்பிக்கையை  பெறுவீர்கள்.

வெளிப்பார்வைக்கு, பாபா ஏதும் செய்யாதவர் போலவே தெரிந்தார். தம்முடைய ஆசனத்தை விட்டு எங்கும் வெளியே போகவில்லை. ஓரிடத்தில் அமர்ந்துகொண்டே அவருக்கு எங்கு நடப்பதும் தெரிந்திருந்தது. சகல ஜனங்களுக்கும் இதை அவர் அனுபவத்தால் காண்பித்தார்.

சத் என அழைக்கப்படும் முழுமுதற்பொருள் நம்முள்ளே இருப்பது போன்றே பிரபஞ்சமெங்கும் வியாபித்திருக்கிறது. இதை எப்பொழுதும் மனதிற்கொண்டு, இறைவனின் சேவைக்கு உடலை அர்ப்பணம் செய்துவிடுங்கள்.

'சத்' எனும் தத்துவத்திடம் (முழுமுதற் பொருளிடம்) சரணடைந்தவர் எப்பொருளிலும் எம்மனிதரிலும் ஒன்றையே பார்ப்பார். 'பல' என்னும் தத்துவத்தை கைக்கொள்பவர் ஜனன மரணச் சூழலில் மாட்டிக் கொள்வார்.

துவதத்தை (இறைவன் வேறு, மனிதன் வேறு என்னும் தத்துவம்) நிர்த்தாரணம் செய்யும் புத்தியானது அஞ்ஞானமேயன்றி வேறெதுவும் இல்லை. குருவினிடம் செல்வதால் சித்தம் சுத்தமடைகிறது. தன்னையறியும் ஞானம் பிறக்கிறது.

அவித்யயைலிருந்து (அஞ்ஞானத்தில் இருந்து) விடுபடுவதே'இருப்பது ஒன்றே' என்ற ஞானம் பெறும் வழி. அணுவளவு பேதபுத்தி இருப்பினும், இருப்பதனைத்தும் இறைவனே என்ற நிலையை எவ்வாறு உணரமுடியும்?

ப்ரம்மாவிலிருந்து (படைக்கும் கடவுள்) நகராப் பொருள்கள்வரை அனைத்தையும் எக்கோணத்தில் பார்த்தாலும் முழு முதற்பொருளே. வெவ்வேறு பொருள்கள் வெவ்வேறு குணாதிசயங்களை காட்டுவதால், விவேகம் இல்லாதவர்களுக்கு அவை முழு முதற்பொருளில் இருந்து வேறுபட்டவனாகத் தெரியலாம். 


Thursday, 18 December 2014

ஷிர்டி சாயி சத்சரிதம் 

மேகமண்டலத்தில் கணநேரமே ஒளிரும் மின்னலைப் போன்று நிலையில்லாதது இம்மனித வாழ்க்கை. பூமியில் வாழும் மனிதர்கள் காலன் என்னும் சர்ப்பத்தால் விழுங்கப்பட்டிருப்பதால், கனமேனும் சுகம் காண்பது அரிது. 

மாத, பிதா, சகோதரன், சகோதரி, மனைவி, மகன், மகள், மாமன் ஆகியவர்களனைவரும் நதிப்பிரவஹதில் கட்டைகள் அடித்துக் கொண்டு வருவதுபோல் குறுகிய காலத்துக்கு ஒன்று சேர்கிறார்கள். 

ஒரு கணத்தில் கட்டைகள் ஒன்று சேர்கின்றன; அடுத்த கணமே அலைகளால் சிதறியடிக்கப்படுகின்றன. ஒருமுறை பிரிவினை வந்துவிட்டால், மறுபடியும் முன்போன்றே ஒன்றுசேர்வது என்பது நடக்காத காரியம். 

ஆத்மாவுக்கு ஹிதமானத்தை இந்த ஜன்மத்தில் சாதிக்காதவன், தன்னுடைய தாயாருக்குப் பிரசவ வலியை கொடுதத்டு வியர்த்தம். ஞானிகளின் பாதங்களை சரணடையாவிடின் அவனுடைய வாழ்கையே வீண். 

ஒரு பிராணி பிறந்தவுடனே, சாவின் பாதையில் நடக்க ஆரம்பிக்கிறது. 'சாவு இன்று வராது, நாளைக்கோ அல்லது நாளை மறுநாளோ தான் வரும்' என்று நினைப்பவன் தன்னையே ஏமாற்றிக் கொள்கிறான். 

காலனைப் பற்றிய நினைவு மனதைவிட்டு மறைய வேண்டா. இந்த தேஹமானது கேவலம் காலனுக்கு உணவே. இதுதான் இவ்வுலக வாழ்வின் லக்ஷணம். ஆகவே, உஷார்!

எவர் உலக விவகாரங்களை விவேகத்தோடும் ஞானத்தோடும் அணுகுகிறாரோ  , அவர் பிரயாசை இன்றியே  ஆன்மீக முன்னேற்றம் அடைவார். ஆகவே, உலகியல் விவகாரங்களில் மந்தமோ சோம்பேறித் தனமோ உதவாது. மனித வாழ்வின் நான்கு புருஷார்தாங்களில் (ஆறாம் - பொருள் - இன்பம்- வீடு) ஆர்வமின்மையோ உதாசீனமோ உதவாது. 

சாயியின் காதைகளைப் பிரேமையுடன் கேட்பவர்கள், வாழ்கையில் உயர்ந்த சிறேயசை (மேன்மையை) அடைவார்கள். அவர்களுக்கு சாயியின் பாதங்களின் மேல் பக்தி வளர்ந்து சந்தோஷ மென்னும்  பெருநிதி அவர்களுடையதாகும். 

சாயியின்மேல் பூரணமான பிரேமை கொண்டவர்கள், இக்கதைக் கொத்தால் ஒவ்வொரு படியிலும் சாயியின் பொற்கமலப் பாதங்களை நினைவுகொள்வார்கள். 

இக்கதைகள் நிசப்தமானதைப் பற்றிய சப்தம் மிகுந்த வர்ணனை; இந்திர்யங்களுக்கு அப்பாற்பட்டதை இந்திரியங்களால் சுவைத்த அனுபவம். ஆகவே, இந்த அமிருதபானத்தை எவ்வளவு அருந்தினாலும் திருப்தி கிடைப்பது துர்லபம் (அரிது)!

ஞானிகளுடைய மகிமை சொல்லுக்கப்பாற்பட்டது; அவர்களுடைய லீலையோ கற்பனைக்கப்பாற்பட்டது; வார்த்தைகளால் முழுமையாக விளக்கும் சாமர்த்தியம் யாருக்கு உண்டு?

இக்காதைகள் எப்பொழுதெல்லாம் கத்தில் விழுகின்றனவோ, அப்பொழுதெல்லாம் சாயி கண்முன்னே தோன்றுவார். அவ்வாறு அவர் இதயத்திலும் எண்ணங்களிலும் தியானத்திலும் சிந்தனையிலும் இரவு பகலாக நிலைத்து விடுவார். 



Thursday, 11 December 2014

ஷிர்டி சாயி சத்சரிதம் 

எவ்வாறு சாயியினுடைய அருளால் பீமாஜி சாந்தியையும் சந்தோஷத்தையும் அனுபவித்தார் என்பதையும், எவ்வாறு அவர் நன்றியுணர்ச்சியுடன் வாழ்நாள் முழுவதும் சாயி பாதங்களில் சரணடைந்தார் என்பதையும் சொன்னேன். 

சொல்லப்போகும் நிகழ்ச்சியும் அதுபோன்றே விநோதமானது. யாரும் ஏற்கெனவே கண்டிராத அற்புதம். கதை கேட்பவர்கள் மேலும் கேட்பதற்கு எவ்வளவு ஆவலாக இருக்கிறார்கள் என்று எனக்குத் தெரிந்திருப்பதால், அதை இப்பொழுது சொல்கிறேன். 

கேட்பவர்களுக்கு ஆர்வமில்லையெனில், கதை சொல்பவர் எப்படி உணர்வூட்டப்படுவார்? கதை எவ்வாறு சிறக்கும்? எவ்வாறு ரசபூர்ணமாக (ஆனந்தம் நிரம்பியதாக) இருக்கும்? 

இந்நிலையில் பிரவசனம் செய்வபர் என்ன செய்யமுடியும்? அவர் முழுக்க முழுக்கக் கேட்பவர்களின் ஆதீனத்தில் அன்றோ இருக்கிறார். கதை கேட்பவர்களே அவருக்கு முக்கிய ஆதாரம்; அவர்களுடைய உற்சாகத்தினால்தான் கதை இனிமை நிம்பியதாகிறது; 

ஒரு ஞானியின் சரித்திரமாக இருப்பதால், சுபாவத்திலேயே காதை உள்ளும் புறமும் சுவாரசியமாக இருக்கும். ஏனெனில், அவருடைய வாழ்க்கை நெறி, ஆகாரப் பழக்கம், நடத்தை, போக்குவரத்து அனைத்துமே கவர்ச்சியானவை; அவருடைய சஹஜமான சொல்லே இனிமையானது. 

இது வெறும் வாழ்கைச் சரித்திரம் அன்று; ஆத்மானந்ததின் ஜீவனாகும். இதை தயாசாகரமான சாயி மகாராஜ், பக்தர்கள் தம்மை நினைக்கும் உபாயமாக அன்புடன் பொழிந்திருக்கிறார். 

பிரவிருத்தி மார்காதைப் பற்றிப் (உலகியல் வாழ்முறைப் பற்றிப்) பேசியே அவர்களுக்கு நிவிர்த்தி மார்க்கத்தை (ஆன்மீக் வாழ்முறையை) க் காண்பித்தார். சத்புருஷர்களின் கதைகள் இவ்விதமாக, இவ்வுலக வாழ்வையும் பரவுலக வாழ்வைப் பற்றி பேசும். 

இவ்வுலக வாழ்வை சந்தோஷமாக வாழ்ந்துகொண்டே, ஆன்மீக முன்னேற்றத்தைப் பற்றி விழிப்புணர்வுடன் செயல்பட்டு, ஜன்மம் எடுத்ததன் பிரயோஜனதைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்பதே இக்காதைகளின் நோக்கமாக இருக்கவேண்டும். 

அனந்தமான புண்ணியங்களின் பலத்தால் நரஜன்மம் எதிர்பாராமலேயே ஏற்படுகிறது. மனிதன் மேற்கொண்டு ஆன்மீக முன்னேற்றம் அடைந்தால் அது மிகப் பெரும் பாக்கியம். 

இந்த நல்வாய்ப்பை சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ளாதவன் தன்னைப் பூமிக்கு அர்த்தமற்ற பாரமாகிக் கொள்கிறான். அவன் பெரும் மகிழ்ச்சி, ஒரு மிருகத்தின் மகிழ்ச்சியைவிட எப்படி அதிகமாக இருக்க முடியும்?

அம்மாதிரியான மனிதன் கொம்புகளும் வாழும் இல்லாத மிருகமே அல்லனோ! அவர்னுக்கு உண்பதும் உறங்குவதும் பயப்படுவதும் சிற்றின்பச் சேர்க்கையும் அல்லால் வேறெதுவும் தெரியாது. 

ஓ! நரஜன்மத்தின் மகிமைதான் என்னே! பக்தியும் இறை வழிபாடும் முக்தியடைவதும் இந்த நரஜன்மத்தின் மூலமாகத்தான் லாபமாகும்; தன்னையறிதலும் இதன் மூலமாகவே. 



Thursday, 4 December 2014

ஷிர்டி சாயி   சத்சரிதம்

சாயிநாதா, ஞானிகளில் உத்தமரே, ஜெய ஜெய! தயாளரே, குண கம்பீரரே, ஜெய ஜெய நிர்விகாரேரே, அப்பாலுக்கும் அப்பாற்படவரே, ஜய ஜய! எல்லையற்றவரே, மாசிலாமணியே ஜய ஜய!

நிஜமான பக்தர்களின் மீதுள்ள தயையினால், அவர்களால் கண்டறிய முடியாதவற்றை மனதிற்கொண்டு அவர்களை சங்கடங்களிலிருந்து விடுவிப்பதற்காகப் பல உருவங்களில் தோன்றுகிறீர். 

தீனர்களை உத்தாரணம் செய்வதற்காகவும்   பக்தர்களுக்குள்ளே இருக்கும் அரக்கத்தனம், கெட்ட புத்தி, துர்நடத்தையைத் தூண்டும் பூர்வஜன்ம வாசனைகள் இவற்றை வதம் செய்வதற்காகவும் தோன்றிய லீலாவதரமே நீர். 

எவரெல்லாம் தூய மனதுடன் சாயி தரிசனத்திற்கு வந்தனரோ அவரெல்லாம் ஆத்மானந்த ரசத்தைப் பருகினர்; உள்ளே ஆனந்தம் நிரம்பி  வழிந்தது; அன்பினால் கண்ட சுகத்தில் ஊஞ்சலாடினர்.

ஹீனனும் தீனனுமாகிய நான், இக்குணங்கள் நிரம்பிய சமர்த்த சாயியினுடைய பொற்பாதங்களில் சரணாகதியாக சாஷ்டாங்கமாக விழுந்து மறுபடியும் மறுபடியும் நமஸ்காரம் செய்கிறேன். 

மலேரியா ஜூரத்தால் பீடிக்கப்பட்ட பக்தர், கறுப்பு நாய் தயிர்சோறு தின்றதால் குணமடைந்த (முன்பு சொன்ன) காதையிலிருந்து நான் இப்பொழுது தொடர்கிறேன். 

பயங்கரமான காலரா நோய், அவர் ஆட்காட்டி விரலை உயர்த்தியதாலும் தரண் (பாதாம், பிஸ்த, அக்ரூட் பருப்புகளைப் பாலில் வேக வைத்த பானம்) குடிகள் வைத்ததாலும் வருத்த வேர்கடலையை தின்பதற்கு கொடுத்ததாலும் மறைந்துவிட்டது எவ்வாறு என்பதுபற்றியும், - 

அதுபோலவே, ஒருவருடைய சூலைநோய், மற்றொருவர் உடைய காதுவலி, இன்னொருவருடைய க்ஷய ரோகம் ஆகியவை தரிசனமாத் திரத்திலேயே  எவ்வாறு அளிக்கப்பட்டன என்பது பற்றியும், -


Thursday, 27 November 2014

ஷிர்டி சாயி சத்சரிதம் 

பாடீல் இது விஷயத்தில் முன்னோடியாக விளங்கினார். கிராமத்தில் அது ஒரு வழக்கமாகிவிட்டது. ஒருவர் பின் ஒருவராக மக்கள் அனைவரும் சத்திய சாயி விரதத்தை அனுஷ்டிக்க ஆரம்பித்தனர். 

ஞானிகளின் கிருபை இவ்வாறே! உரிய காலத்தில் பிராப்தம் நேரும்போது, தரிசனத்தாலேயே பக்தர்களுடைய இன்னல்கள் அழிந்து போகின்றன. யமனும் திருப்பியனுப்பபடுகிறான். 

அடுத்த காதலி, சந்ததி இல்லையே என்று ஒருவர் பட்ட கவலையும் எல்லா ஞானிகளும் ஏகாந்தமாக இருக்கும் அற்புதத்தையும் விவரிக்கும். 

நாந்தேட் நகரத்தில் வாசித்த, பார்சி மதத்தைச் சேர்ந்த பணக்காரர் ஒருவர் பாபாவின் ஆசீர்வதத்தால் புத்திரபாக்கியம் பெற்றார். 

நாந்தேடில் வாசித்த மௌலிசாஹெப் என்ற ஞானியும் பாபாவும் ஒன்றே என்பது நிரூபிக்கப்பட்டது. பார்சி கனவான் ஆனந்தம் பொங்க வீடு திரும்பினார். 

இக்காதை உள்ளத்தை தொடும். கேட்பவர்களே! அமைதியுடன் இக்காதையை கேளுங்கள். சாயி எங்கும் நிறைந்தவர் என்பதும் அவருடைய வாத்சல்யமும் (தாயன்பும்) உங்களுக்கு நன்கு விளங்கும். 

ஹேமாட் பந்த் சாயியின் பொற்கமல பாதங்களில் பரிபூரணமாக சரணடைகிறேன். ஞானிகளையும் கதை கேட்பவர்களையும் வணங்குகிறேன். அடுத்த அத்தியாத்தின் விவரணத்தை பயபக்தியுடன் கேளுங்கள். 

எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்! ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு, சாயி பக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, "ஸ்ரீ சமர்த்த சாயி சத்சரிதம்" என்னும் காவியத்தில், 'பீமாஜி க்ஷயரோக நிவாரணம்" என்னும் பதின்மூன்றாவது அத்தியாயம் முற்றும். 

ஸ்ரீசத் குரு சாயிநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும். 



சுபம் உண்டாகட்டும்.   

Thursday, 20 November 2014

ஷிர்டி சாயி சத் சரிதம்

"இந்த வழியில்தான் நான் சிறிதளவாவது என்னுடையை நன்றிக்கடனை கழிக்க முடியும்; வேறு வழி ஏதுமே இல்லை. பாபா சாயி, உம்முடைய அற்புதமான வழிமுறைகள் புரிந்துகொள்ள முடியாதவை.!"

பாடீல் பாபாவின் மகிமையைப் பாடியவாறு அங்கு ஒரு மாதம் தங்கினார். நானாவினுடைய உபகாரத்தை நன்றியுணர்வுடன் ஞாபகத்தில் வைத்துக் கொண்டு, முயற்சிக்குப் பலன் கிடைத்த முழுதிருப்தியுடன் வீடு திரும்பினார்.

சாயியின் கருணைக்கு என்றும் நன்றிசொல்லக் கடமைப் பட்ட பாடீல், பக்தியுடனும் சிரத்தையுடனும், ஆனந்தம் நிரம்பிய மனதுடன் ஷீரடிக்கு அடிக்கடி வந்து போனார்.

சாயி நாதருக்கு, இரண்டு கைகளையும் (வணக்கம் செய்பவை) ஒரு தலையையும் (தாழ்த்தி வணங்கும் அங்கம்) ஸ்திரமான நம்பிக்கையும் வேறெதிலும் நாட்டம் கொள்ளாத சிரத்தையும் தவிர வேறென்ன வேண்டும்! பக்தனின் நேர்மையான நன்றியுணர்வே அவருக்கு போதுமானது.

ஒருவருக்கு துன்பம் நேரும்போது, சத்தியனாராயனருக்கு பூஜை செய்கிறேன் என்று வேண்டிக் கொள்கிறார். துன்பத்திலிருந்து விடுதலை அடைந்தபின் சாங்கோபமாக (சடங்கு விதிமுறைகளின்படி) பூஜையை செய்கிறார்.

அதுபோலவே, பாடீல் அக்காலத்திலிருந்து ஒவ்வொரு வியாழக் கிழ மையும்   தூய்மையாக, ஸ்நானம் செய்து விட்டு சத்திய சாயி விரதத்தை   முறைப்படி அனுஷ்டானம் செய்தார்.

சத்திய நாராயண பூஜையின்போது மக்கள் சத்திய நாராயணரின் கதையைப் பாராயணம் செய்வார்கள். பாடீல் அதற்கு பதிலாக தாசகனு இயற்றிய 'நவீன பக்தலீலாமிருதம் ' என்னும் நூலிலிருந்து சாயி சரித்திரத்தை பாராயணம் செய்தார்.

இக்காவியத்தின் நாற்பத்தைந்து அத்தியாங்களில் தாசகனு பல உயர்ந்த பக்தர்களின் சரித்திரத்தை (அனுபவங்கள்) விவரித்திருக்கிறார். இதில் மூன்று அத்தியாயங்களில் சாயி நாதரின் சத்திய சாயி கதை சொல்லப் பட்டிருக்கிறது.

விரதங்களிலேயே உத்தமமான விரதம், பாடீல் பாராயணம் செய்த இம்மூன்று அத்தியாயங்களை பாராயணம் செய்வதுதான். அதன் பயனாக அவர் அபரிதமான சௌக்கியத்தையும் மன அமைதியையும் பெற்றார்.

பாடீல், தம்முடன் பிறந்தவர்களை உறவினர்களையும்  நண்பர்களையும்  அழைத்து, இந்த சத்திய சாயி விரதத்தை ஆனந்தம் நிரம்பிய மனதுடன் தவறாது செய்துவந்தார்.

நைவேத்தியம் (படையல்) சத்தியநாராயண பூஜைக்குச் செய்யப்பட்ட பொருள்களுடனும் அதே விகிதத்திலும் கலந்து செய்யப் பட்டது. மங்கள உற்சவமும் அதே முறையில் கொண்டாடப்பட்டது. அதில் தொழப்பட்ட தெய்வம் நாராயணர்; இதில் தொழப்பட்ட தெய்வம் சாயி; விரதத்தில் வேறு எந்த வித்தியாசமும் இல்லை.

------------------------------------------------------------------------------------------------------------------------

தற்காலத்தில் சாயி பக்தர்கள் 'ஸ்ரீ சாயீ சத்சரிதம்' மராட்டி நூலையோ (இம்மொழி பெயர்ப்பின் மூல நூல்) அல்லது நாகேஷ் வாசுதேவ் குணாஜி எழுதிய ஆங்கில சுருக்கத்தையோ அல்லது அதனுடைய தமிழ் மொழிபெயர்ப்பையோ (திரு. சொக்கலிங்கம் சுப்பிரமணியன்) சப்தமாகப் (ஏழு நாள்களுக்குள் ஆசாரமாக படித்து முடிப்பது) பாராயணம் செய்கின்றனர்.