valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday, 9 August 2012

ஸ்ரீ சாயி சத் சரிதம்

'நானே அது' என்னும் பாவம் எழுப்பப்பட்டு ஆனந்தத்தை உள்ளிருந்து மலரச் செய்கிறது. நான் - நீ என்னும் வேறுபாட்டை முழுவதும் அழித்து, முழு முதற் பொருளோடு ஐக்கியமாகிவிடுவதை கொண்டாடுகிறது.

எந்தப் போதியையும் புராணத்தையும் படித்தாலும் ஒவ்வொரு கட்டத்திலும் சத்குருவின் ஞாபகமே வருகிறது. ஆகவே, சாயிதான் ராமனாகவும் கிருஷ்ணனாகவும் தோன்றித் தம்முடைய காதையையே நம்மைப் பாராயணம் செய்ய வைக்கிறார்.

ஸ்ரீ மத்பாகவதம் கேட்கலாம் என்று உட்கார்ந்தால், உதாவ கீதையை பக்தர்களின் நன்மைக்காகப் பாடும் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா, நகத்திலிருந்து சிகை வரை சாயி யாகவே காட்சியளிக்கிறார்.

ஒரு விஷயத்தைத் தெளிவாக விளக்க முயலும்போது, சாதாரணப் பேச்சிலேயே திடீரென்று சாயியினுடைய கதை ஏதாவதொன்று ஞாபகத்திற்கு வருகிறது.

எழுத வேண்டுமென்ற சங்கல்பத்துடன் ஒரு நாள் காகிதத்தை எடுக்கிறேன். ஆனால், ஒரு அக்ஷரமும் வெளிவருவதில்லை. எனினும், சாயியே அவருடைய அருளால் என்னை எழுத உணர்வூட்டும்போது, எழுதுகிறேன். எழுதிக்கொண்டே இருக்கிறேன்.

எப்பொழுதெல்லாம் அஹங்காரம் தலை தூக்குகிறதோ அப்பொழுது எல்லாம் அவருடைய கையால் அதை எழும்ப முடியாமல் அழுத்தி விடுகிறார். அத்தோடு மட்டுமல்லாமல், தம்முடைய சக்தியை சிஷ்யனின் மீது பாய்ச்சி, அவனை ஆருலாளன் ஆக ஆக்கி விடுகிறார்.

மனத்தாலும் வாக்காலும் செய்கையாலும் சாயி பாதங்களை முழுமையாக சரணடைந்துவிட்டால், ஆறாம், பொருள், இன்பம், வீடு இவை நான்கும் நம்மைத் தாமாகவே வந்தடைந்துவிடுகின்றன.
கர்மம், ஞானம், யோகம், பக்தி இந்நான்கும் இறைவனை அடையும் வழிகளாகும். இந்நான்கு பாதைகளும் நம்மை வெவ்வேறு திசைகளில் அழைத்துச் சென்றாலும், கடைசியில் போய்சேருமிடம் ஒன்றே; ஈசுவரப் ப்ராப்தியே (இறைவனை அடைவதே)

பக்திமார்க்கம் பள்ளம் படுகுழிகள் நிறைந்த கருவேலங்காட்டை கடந்து செல்வது போலக் கடினமானது. ஒருவரே, நடக்க கூடிய ஒற்றையடிப் பாதையாக இருந்தாலும், நேராக இறைவனின் அண்மைக்கு அழைத்துச் செல்லும்.

இதைக் கடப்பதற்கு சுலபமான வழி, முட்களை தவிர்த்து ஒவ்வொரு அடியாக பயமின்றி எடுத்துவைக்க வேண்டியதுதான். இதையே அன்னையாகிய குரு தெளிவாக எச்சரிக்கிறார். 


Thursday, 2 August 2012

ஷிர்டி சாயி சத்சரிதம்

ஸ்ரீ ராம நவமி உற்சவம் 

ஓம் ஸ்ரீ விநாயகனே போற்றி! ஸ்ரீ சரஸ்வதியே போற்றி!
ஸ்ரீ குருமஹராஜனே போற்றி! குலதேவதைக்கும் ஸ்ரீ சீதாராமச்சந்திரனுக்கும்
என்னுடைய பணிவான வணக்கங்கள். பூஜ்யகுரு ஸ்ரீ சாயிநாதனை
பக்தியுடன் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன். 

பாடுபடுவது ஆன்மீக லாபத்திற்காகவோ உலகியல் சுபிஷதிற்காகவோ எதற்காகவோ இருப்பினும் சரி, எங்கு சத்குரு படகோட்டி யாக இருக்கிறாரோ அங்கு அவரே படகை அக்கறை சேர்க்கிறார்.

சத்குரு என்ற வார்த்தை உள்ளதைக் கிள்ளும்போதே சாய் மனக்கண்முன் தோன்றுகிறார். நிஜமாகவே என்முன் தோன்றித் தம்முடைய வரம் நல்கும் கரத்தை என் இதயத்தின் மீது வைக்கிறார்.

அவருடைய வரம் தரும் கரம், துனியிலிருந்து வந்த சாம்பலுடன் என்னுடைய நெற்றியில் படும்போது இதயம் ஆனந்தத்தால் பொங்குகிறது; அன்பினால் கண்ணீர் ஆறாகப் பெருகுகிறது.

குருவினுடைய ஹஸ்த ஸ்பரிசம் (கையால் தொடுதல்) பிரளயகாலத்து அக்கிநியாலும் அழிக்க முடியாத சூக்கும சரீரத்தை அழித்துவிடும் அற்புத சக்தி வாய்ந்தது. கரம் தீண்டுவதாலேயே சூக்கும சரீரம் சாம்பலாகிவிடுகிறது.

கடவுளைப் பற்றியோ புராணங்களைப் பற்றியோ தப்பித் தவறி ஏதாவது காதில் விழுந்தாலே தலைவலி வருவபவர்களுக்கும் அல்லது உடனே வெடித்துச் சிதறிப் பிதற்றும் நாச்திகர்களுக்குங்கூட, அது (குருவினுடைய கரம் தீண்டல்) சாந்தியை அளிக்கும்.

தாமரை போன்ற தம் கையை அவர் நம் தலையின்மீது வைக்கும்போது, பல ஜென்மங்களாகப் பரிபக்குவம் அடைந்த மலம், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுகிறது. சாயியின் அன்பார்ந்த பக்தர்கள் தூய்மை அடைகின்றனர்.

அவருடைய சுந்தரமான உருவத்தின் மேல் பார்வை படும்போது பரவசத்தால் தொண்டை அடைக்கிறது; ஆனந்தக் கண்ணீர் பெருகுகிறது; இதயத்தில் அஷ்டபாவம்  எழுகிறது. 


Thursday, 26 July 2012

ஷிர்டி சாயி சத் சரிதம்

தோதி போதி, கண்ட யோகம் போன்ற பாபாவின் யோக சாதனைகள், மற்றும் அவர் எப்படி பக்தர்களின் கர்ம வினைகளால் ஏற்பட்ட உபாதைகளைத் தம்முடைய உடலில் ஏற்றுக்கொண்டார் என்பது பற்றியெல்லாம் முறைப்படி, எதுவும் விட்டுப் போகாமல் பிறகு சொல்லப்படும்.

ஹேமாட் பணிவுடன் சாயியை சரணடைகிறேன். இந்தப் பிரவசனம் அவருடைய பிரசாதமேயாகும். இப்புண்ணியமான காதையைக் கேட்பதாலேயே எல்லாப் பாவங்களும் அழிக்கப்படும்.

எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்! ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு, சாயி பக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, 'ஸ்ரிசமர்த்த சாயி சத் சரித்திரம்' என்னும் காவியத்தில், 'காணாமற் போனதும் ஷீரடிக்கு திரும்பி வந்ததும்' என்னும் ஐந்தாவது அத்தியாயம் முற்றும்.

ஸ்ரீ சத்குரு சாயினாதருக்கு  அர்ப்பணம் ஆகட்டும்.

சுபம் உண்டாகட்டும்.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    சாயி என்னும்  சொல்லுக்கு (சுலோகம் 25 ), சமகால அவதார புருஷரான ஸ்ரீ ராமகிருஷ்ண பரம ஹம்சர், கர்தாபஜா பிரிவினரைப் பற்றப் பேசியபோது அளித்த விளக்கம் கீழ்கண்டவாறு:
     "பிர்வர்தகர்கள் நெற்றியில் திலகமும் கழுத்தில் மாலையும் அணிவார்கள்; புற ஆசாரங்களை கடைபிடிப்பார்கள். சாதகர்கள் புற விஷயங்களுக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்கள்; உதாரணமாக பௌல்கள். இறவன் இருக்கிறார் என்பதில் சரியான நம்பிக்கை உடையவர்கள் சித்தர்கள். ஸ்ரீ சைதன்யர் போன்றோர் சித்தரில் சித்தர். இவர்கள் கடவுளைக் கண்டதுமட்டுமல்லாமல், அவருடன் எப்போதும் பேசுகின்றனர். நெருங்கிப் பழகுகின்றனர். சித்தரில் சித்தரை கர்த்தபஜாக்கள் சாயி என்கின்றனர். சாயிக்குமேல் உயர்ந்த நிலை இல்லை."


Thursday, 19 July 2012

ஷிர்டி சாயி சத் சரிதம்

ஒருவர் குருவிடம் பரிபூரணமான சரணாகதியடைவதை விடவும் குரு அவரைத் தம்முடைய சிஷ்யராக முழுமனத்துடன் ஏற்றுக் கொள்வதை விடவும் உயர்ந்த விஷயம் இவ்வுலகத்தில் வேறெதுவுமே இல்லை. இந்தப் பரஸ்பர உறவு ஏற்படாமல் உலக வாழ்வெனும் சமுத்திரத்தை எவராலும் கடக்க இயலாது.

இக் காதையின் முக்கியமான பாடம் இதுவே. ஆயினும், தம்முடைய அஹங்காரத்தை முழுமையாக அழித்துவிட வேண்டும் என்று உறுதியாகத் தீர்மானம் செய்யக் கூடிய தைரியம் இருப்பவரும் (தீர்மானத்தின் படி செயல் பட்டு) அஹங்காரமற்ற நிலை என்னும் கோட்டையை ஜெயித்துப் பிடிப்பவரும் அபூர்வமானவரே!

இங்கு அறிவுபூர்வமான சிந்தனைகளும் சாமார்த்தியமும் எடுபடா. உயர்ந்த ஆன்மீக நிலையை அடைய வேண்டுமென்று விரும்புபவர். அஹந்தையையும் கர்வத்தையும் அறவே ஒழித்துவிட்டு வாழ்க்கை நடத்த வேண்டும்.

பூத உடலிலிருக்கும் அபிமானத்தை எரித்துவிட்டவரே, எடுத்த ஜென்மத்தின் நிறைவைக் காண முடியும். பிறகு, அவர் முக்திபெருவதற்காக யாரிடமாவது சிஷ்யராக இருப்பதை ஏற்பார்.

(பாபாவின்) இளமையும் கவர்ச்சியும் நிறைந்த உருவத்தில், பற்றற்ற மனமும் இருந்ததைப் பார்த்த பெரியோர்களும் சிறியோர்க்களுமாகிய அணைத்து மக்களும் வியப்பும் ஆச்சரியமும் அடைந்தனர்.

ஞானிகளின் தேக சம்பந்தமான நிகழ்சிகளும் அவர்களுடைய முன்ஜென்ம வினைப்படியேதான் நடக்கின்றன. இருப்பினும், வினையின் பாரத்தை அவர்கள் சுமப்பதில்லை. காரணம், "செயல்புரிபவன் நான்" என்ற எண்ணமே அவர்களுக்கு இருப்பதில்லை.

சூரியன் எப்படி இருட்டில் இருக்க முடியாதோ, அப்படியே ஒரு ஞானி துவைத பாவத்தில் இருக்க முடியாது. ஏனெனில், இப் பிரபஞ்சமே அவரிடதில்தான் இருக்கிறது. அவர் அத்வைத பாவத்தில் வாழ்கிறார்.

இந்த குரு சிஷ்ய சரித்திரத்தை, பரம பக்தரான மஹால் சாபதி விவரித்த விதமாகப் பிரவசனம் செய்தாகி விட்டது.

இக் காதை இவ்வாறு நிறைவடையட்டும். அடுத்த காதை இதை விட ஆழமானது. கிரமப் படி சொல்லப்படும்; கேட்கும்போது கவனத்துடன் கேளுங்கள்.

மசூதியுனுடைய நிலைமை எவ்வாறு இருந்தது? எவ்வளவு முயற்சியால் அது சீர்படுத்தப் பட்டது? சாய் ஹிந்துத்வா முஸ்லீமா என்று உறுதியாக எவருக்குமே தெரியாதது எப்படி ? (என்பது பற்றியெல்லாம் சொல்லப் போகிறேன்)


Thursday, 12 July 2012

ஷிர்டி சாயி சத் சரிதம்

சாயி பர பிரம்மத்தின் அவதாரம்; பக்கீரோ பிரமையே உருவானவர். ஷீரடியில் தேவி தாசரால் பரீக்ஷை செய்யப்பட்டபோது பிரமைகள் அனைத்தும் தூள் தூளாகிவிட்டன.

தேவிதாஸ் சுந்தரமான உருவமும் ஒளிவீசிய கண்களும் மனோஹரமான முகமும் படைத்தவர். ஷீரடிக்கு முதன்முதலாக அவர் வந்தபோது அவருக்குப் பாத்து அல்லது பதினொன்று வயதுதான் இருக்கும்.

ஒரு லங்கோட்டை மாத்திரம் கட்டிக்கொண்டு, இந்த பாலகன், வந்த புதிதில் மாருதி கோயிலில் தங்கினான்.

ஆப்பா பில்லும் மகால்சாபதியும் அடிக்கடி தேவி தாசரிடம் சென்றனர். காசிராமரும் மற்றவர்களும் இவருக்கு மளிகைச் சாமான்களையும் விறகையும் அளித்தனர். கொஞ்சங்கொஞ்சமாக அவருடைய முக்கியத்துவம் வளர்ந்தது.

பாபா கல்யாணக் கோஷ்டியுடன் வருவதற்கு பன்னிரண்டு வருடங்களுக்கு முன்பாகவே, தேவிதாசர் ஷீரடியில் தங்குவதற்கு வந்துவிட்டார்.

தேவிதாசர் ஆப்பா பில்லுக்கு கரும்பலகையில் எழுதக் கற்றுக் கொடுத்தார். வெங்கடேச தோத்திரத்தை எல்லாருக்கும் சொல்லிக் கொடுத்து கோஷ்டியாகப் பாராயணம் செய்ய வைத்தார். இவ்வகுப்புகளை அவர் தவறாது நடத்தினார்.

தேவிதாசர் மகா ஞானி. தாத்யாபா இவரைத் தம் குருவாகக் கொண்டார். காசிநாதரும் மற்றவர்களும் இவருடைய சிஷ்யர்களாகவும் அடியவர்களாகவும் ஆனார்கள்.

தேவிதாசர் முன்னிலையில் பக்கீர் கொண்டுவரப்பட்டார். தேவிதாசரும் பக்கீரும் சாஸ்திர ரீதியாக வாக்குவாதம் செய்தனர். தம்முடைய தவத்தின் சக்தியால் தேவிதாசர் பக்கீரை அடியோடு தோற்கடித்து விட்டார். பக்கீர் ஷிர்டியிலிருந்து விரட்டப்பட்டார்.

ஷிர்டியிலிருந்து தப்பியோடிய பிறகு, பக்கீர் வைஜாபுரிக்குச் சென்று அங்கு வாழ்ந்து வந்தார். பல வருடங்களுக்குப் பிறகு அவர் ஷீரடிக்கு வந்து சாய்நாதரை நமஸ்காரம் செய்தார்.

தாம் குருவென்றும் பாபா ஷிஷ்யரென்றும் எண்ணிய பிரமையனைத்தும் நிவர்த்தியாகி, மன்னிப்புக் கோரியதால் பக்கீர் தூய்மைடைந்து விட்டார். பாபாவும் அவரை முன்போலவே ஆதரித்தார்.

பாபவினுடைய வழிமுறைகள் இவ்வாறு ஆராய்ச்சிக்கும் காரணகாரிய விளக்கத்திற்கும் அப்பாற்பட்டவை! நேரம் வந்தபோது பிரச்சினை தீர்வு செய்யப்பட்டது. ஆனால், அதுவரி பாபா பொறுமையாக குரு சிஷ்ய உறவுக்கு மதிப்புகொடுத்து வாழ்ந்தார்.

குருவென்று பக்கீர் தமக்குத்தாமே நினைத்துக் கொண்டால், அது முழுமையாக அவருடைய பொறுப்பாகிறது. ஆனால், சிஷ்யன் என்கிற முறையில் தமது கடமைகள் என்னவென்று தெரிந்துகொண்டு, அவற்றை செவ்வனே செய்தார் பாபா. இதுதான் இக்காதையின் பாடமாகும்.



Thursday, 5 July 2012

ஷிர்டி சாயி சத் சரிதம்

ஆயினும், ஷிர்டி கிராம மக்கள் பாபாவின் அன்பார்ந்த பக்தர்கள்; அவர் மீது பந்தமும் பாசமும் கொண்டிருந்தனர். பாபாவிடமிருந்து அவ்வாறு பிரிந்திருந்தது அவர்களுக்கு முறையான செய்கையாக தோன்றவில்லை.

ஜவஹர் அலியின் பிடியில் பாபா அவ்வாறு பலமாக மாடிக் கொண்டது பற்றி கிராம மக்கள் மனத்துள் கலக்கமுற்றனர். பாபாவைத் திரும்ப பெறுவது எப்படியென்று தீவிரமாகச் சிந்தித்தனர்.

பொன்னும் அதன் காந்தியும் (பள பளப்பும் ), விளக்கும் அதன் ஒளியும் போன்று குருவும் சிஷ்யனும் பிரிக்க முடியாதவர்கள். இருவருமே இந்த ஒருமையை அனுபவிக்கிறார்கள்.

பக்தர்களின் கூட்டம் ஒன்று, எப்பாடுபட்டாவது பாபாவைத் திரும்பவும் ஷீரடிக்கு அழைத்துக் கொண்டு வரும்வரை, ஒருவரை ஒருவர்  பிரிவதில்லை என்னும் திட வைராக்கியத்துடன் ஷிர்டியிலிருந்து ரஹாதா விலிருந்த இத்காவிற்குச் சென்றது.

ஆனால், பாபா இதற்கு  நேரெதிரான நிலைப்பாடு எடுத்தார்.  "இந்தப் பக்கீர் மகா கோபி; அவரைச் சம்மதிக்க வைக்க முயற்சி செய்யாதீர்கள்; ஏனெனில், நீங்கள் அவ்வாறு செய்யின் , அவர் என்னை எப்பொழுதுமே விடுவிக்க மாட்டார். -

"நீங்கள் சீக்கிரம் இங்கிருந்து போய்விடுங்கள். அவர் கிராமத்திலிருந்து திரும்பிவரும் தருணம் வந்து விட்டது. கடுங்கோபியான அவர் உங்களைத் தீர்த்துக் கட்டி விடுவார்.

"பயங்கரமான கோபம் அவருடைய முகத்தைச் சிவக்க வைத்து விடும். போங்கள், போங்கள், உடனே இடத்தை காலி செய்து விட்டு ஷிர்டி போகும் பாதையில் நடையைக் கட்டுங்கள்".

"அடுத்ததாக என்ன செய்வது? நம்முடைய எதிர்பார்ப்புக்கு நேரெதிராக பாபா பேசுகிறாரே!" என்று அவர்கள் சிந்தித்தனர். இதன் நடுவே, பக்கீர் எதிர்பாரதவிதமாக த்ரயும்பி வந்து, அவர்களை வினவ ஆரம்பித்தார்.

"ஆக, நீங்கள் இந்த இளைஞனுக்காக வந்திருக்கிறீர்கள் அல்லீரோ? கோஷ்டியாக என்ன பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறீர்கள்? இளைஞனை திரும்ப அழைத்துக் கொண்டு போக வேண்டுமென்ற எண்ணமிருந்தால், அதை மறந்து விடுங்கள்; அது நடக்காத காரியம்".

ஆரம்பத்தில் இவ்விதமாக அவர் வெட்டொன்று துண்டிரண்டாக சொல்லி விட்டாலும், கடைசியில் அவரே கிராம மக்களின் வற்புறுத்தலுக்கு இணங்கி இவ்வாறு சொன்னார், "உங்களுடன் என்னைச் ஷீரடிக்கு அழைத்துச் செல்லுங்கள். நாமெல்லோரும் நம்முடன் இந்த பையனையும் அழைத்துக் கொண்டு போவோம்."

இவ்விதமாக பக்கீரும் கோஷ்டியுடன் திரும்பி ஷீரடிக்கு வந்தார். அவருக்கு பாபாவிடமிருந்து பிரிய மனமில்லை; பாபாவுக்கும் அவரை அனுப்பிவிட மனமில்லை. இது எப்படி சாத்தியமாயிற்று என்று யாருக்குமே புரியவில்லை!


Thursday, 28 June 2012

ஷிர்டி சாயி சத் சரிதம்

பக்கீர் அதிகம் படித்தவர்; குர் ஆனை உள்ளங்கை நெல்லிக்கனிபோல் அறிந்திருந்தார். சுயநலவாதிகளும் இறையுணர்வாளர்களும்  விசுவாசிக்களுமாகப் பலர் அவரைப் பின்பற்றினர்.

பக்கீர் ஓர் இத்காவைக் (முஸ்லீம்கள் தொழுகை செய்யும் சுவர்) கட்ட ஆரம்பித்தார். சில நாள்கள் கழித்தபின், அவர் வீரபத்திர சாமி கோவிலை இழிவு செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டார்.

இத்கா கட்டுமான வேலை நிறுத்தப்பட்டது; பக்கீர் கிராமத்திலிருந்து (ரஹாதா) விரட்டியடிக்கப்பட்டார். அங்கிருந்து அவர் ஷீரடிக்கு வந்து பாபாவுடன் மசூதியில் தங்கினார்.

பக்கீர் திறமை வாய்ந்த இனிமையான பேச்சாளி. கிராமமே அவரைக் கொண்டாடியது. அவர் பாபாவை மயக்கித் தம் வசப் படுத்திவிட்டதாக மக்கள் பேசிக்கொண்டார்கள்.

"நீ எனக்கு சிஷ்யனாக இருக்கலாம்" என்று அவர் பாபாவிடம் கூறினார். சுபாவத்தில் விளையாட்டுப் பிரியராக இருந்த பாபா, அதற்கு ஒத்துக் கொண்டார். பக்கீர் மிகுந்த சந்தோஷத்துடன், பாபாவை ஷிர்டியிலிருந்து வெளியே அழைத்து கொண்டு போய் விட்டார்.

பிரசித்தி பெற்ற பாபாவை ஷிஷ்யனாக்கி, ஜவஹர் அலி குருவாகிவிட்டார். இருவரும் ரஹாதாவிற்குச் சென்று வாழ்வதென  முடிவு செய்தனர்.

குருவிற்கு ஷிஷ்யருடைய கலைகள் தெரியாது; சிஷ்யருக்கோ குருவினுடைய குறைபாடுகள் தெரிந்திருந்தன. ஆனால், ஒருபொழுதும் சிஷ்யர் குருவிடம் மரியாதைக் குறைவாக நடந்துகொண்டதில்லை. சிஷ்யனுடைய கடமைகள் அனைத்தையும் செவ்வனே செய்தார்.

குருவினிடமிருந்து  எந்த ஆனை வந்தாம் சரி, யோக்கியமானதா (தகுதியுடையதா) அயோக்கியமானதா என்று பாராமல், அது உடனே நிறைவேற்றப் பட்டது. குருவின் வீட்டிற்குத் தண்ணீரும் சுமந்தார் சாயி.

இவ்வாறு குருவின் சேவையில் நாள்கள் ஓடின. ஆனால், ஷீரடிக்கு வருவதென்பது எப்போதோ ஒருநாள்தான் முடிந்தது. இம்மாதிரியான நிலை ஏற்பட்டபோது, இதனால் என்ன விளைந்த தென்பதைக்  கேளுங்கள்.

இந்நிலை தொடர்ந்து, பாபா பிரதானமாக ரஹாதாவிலேயே எப்பொழுதும் இருந்தார். மக்கள், பாபாவைப் பக்கீர் மந்திர சக்தியால் கட்டி விட்டார் என்றும் ஷீரடிக்கு இனி அவர் வரப் போவதே இல்லை என்றும் உணர ஆரம்பித்தனர்.

ஜவஹர் அலி யோகபலத்தால், பாபாவைத் தம்முடனேயே இருக்குமாறு கட்டி விட்டார் என்று மக்கள் நினைக்க, பாபாவின் திட்டம் முற்றும் மாறுபட்டதாக இருந்தது. தம்முடைய அஹங்காரத்தை நாசம் செய்ய இதை ஓர் உபயாமாகக் கொண்டார்.

சாயிக்கு ஏது கர்வமும் அஹந்தையும்? கதை கேட்பவர்கள் இவ்வாறு சிந்திப்பது இயற்கையே. ஆனால், அம்மாதிரியான நடத்தை மக்களுக்கு நல்லது செய்யும்; அது அவருடைய அவதாரத்தின் லட்சியம் அன்றோ!