valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday, 13 April 2017

ஷீர்டி சாயி சத்சரிதம்

"ஆகவே, தவக்கடலான மஹாராஜரே! உம்முடையை பாதங்களை நாடிப் பணிவுடன் வந்திருக்கிறேன். என்னுடைய மனம் சஞ்சலமடையாது நிலையான சாந்தியைப் பெற ஆசீர்வாதம் செய்யுங்கள்".

மஹராஜ் இதன் பிறகு ஓர் உருவகக் கதை சொன்னார். அதைக்கேட்ட அனந்தராவ் தாம் கற்ற கல்வி பலனளித்துவிட்டது என்று சமாதானமடைந்தார்.

பரம சாரமுள்ளதும் சுருக்கமானதுமான அக் கதையை இப்பொழுது சொல்கிறேன்; கவனமாக கேளுங்கள். நகைச்சுவை மிகுந்ததாயினும் போதனை நிறைந்த இக் கதையை யார் அனாதரவு செய்ய முடியும்?

பாபா கேள்விக்கு பதில் கூறினார், "ஒரு சமயம் வியாபாரி ஒருவன் இங்கு வந்தான். அவனெதிரில் இருந்த குதிரை ஒன்பது (சாணி) லத்திகளைப் போட்டது. -

"வியாபாரி செயல் முனைப்பு உடையவனானதால் சட்டென்று தன்னுடைய அங்கவஸ்திரத்தை விரித்தான். ஒன்பது லத்திகளையும் ஜாக்கிரதையாக சேகரித்துக் கட்டிக்கொண்டான். ஒருமுனைப்பட்ட மனம் உடையவன் ஆனான்."

சமர்த்த சாயி தெரிவிக்க விரும்பியது என்ன? அதனுடைய உட்பொருள் என்ன? வியாபாரி (சாணி) லத்திகளை எதற்காகச் சேகரித்தான்? விஷயமென்னவென்றே புரியவில்லையே!

அனந்தராவ் இதைப்பற்றிச் சிந்தித்துச் சிந்தித்து, மசூதியில் இருந்து திரும்பி வந்து, நடந்த சம்பாஷணை முழுவதையும் தாதா  கேள்கரிடம் விவரித்தார்.

"யார் இந்த வியாபாரி? குதிரைச் சாணியால் யாருக்கு என்ன பிரயோஜனம்? ஏன் குறிப்பாக ஒன்பது லத்திகள்? இவையெல்லாம் பற்றி எனக்கு விளக்குங்கள்.-

"தாதா, இதென்ன புதிர்? என்னுடைய சிறுமதிக்கு எதுவும் விளங்கவில்லை. எனக்கு எளிமையாகவும் தெளிவாகவும் எடுத்துச் சொல்லுங்கள். பாபாவின் இதயத்தில் என்ன நினைத்தார் என்பது எனக்கு விளங்க வேண்டும்."

தாதா கூறினார், "பாபாவின் திருவாய்மொழியை முழுக்க என்னாலும் புரிந்துகொள்ள முடிவதில்லை. ஆயினும், அவர் தரும் உள்ளுணர்வால் நான் என்ன புரிந்துகொள்கிறேன் என்பதைச் சொல்கிறேன்.-

"குதிரை இறைவனின் அருள்; ஒன்பது (சாணி) லத்திகள் ஒன்பது விதமான பக்தியின் வெளிப்பாடுகள். பக்தியின்றிப் பரமேச்வரனை அடைய முடியாது. ஞானத்தால் மட்டும் அவனை அடையமுடியாது. -

"பக்தியின் வெளிப்பாடுகளை பற்றி இவ்விதம் அறிவீராக.
முதலாவதாக, சிரவணம் (இறைவனின் பெருமையைக் கேட்டல்),
இரண்டாவதாக, கீர்த்தனம் (இறைவனின் லீலைகளை பாடுதல்),
மூன்றாவதாக, ஸ்மாரணம் (இறைவனை நினைத்தல்),
நான்காவதாக, பாதசேவனம் (பாதங்களை கழுவுதல் - பிடித்து விடுதல்),
ஐந்தாவதாக, அர்ச்சனம் (மலர்களால் அர்ச்சனை செய்து பூஜித்தல்),
ஆறாவதாக, வந்தனம் (பணிதல் - நமஸ்காரம் செய்தல் - வணங்குதல்), 

 

Thursday, 6 April 2017

ஷீர்டி சாயி சத்சரிதம்

முதலில் நூலைக் கற்க வேண்டும்; பிறகு அதை பற்றிச் சிந்திக்க வேண்டும். ஆரம்பித்தில் இருந்து முடிவு வரை அதன்படி நடக்க வேண்டும். திரும்ப திரும்ப இம்மாதிரியே பாராயணம் செய்ய வேண்டும். கற்ற வழி நிற்க வேண்டும்.

வாசிப்பதே முடிவான காரியம் அன்று. அது நடைமுறைக்கு வரவேண்டும். இல்லையெனில், அது கவிழ்த்து வைக்கப்பட்ட பாத்திரத்தின்மேல் நீர் ஊற்றுவது போலாகும்.

அனுபவ ஞானம் அளிக்காத புத்தக ஞானம் வியர்த்தமாகும். ப்ரம்ம ஞானம் அடைந்த குருவின் கிருபை இல்லாது, வெறும் புத்தக ஞானம் பலனேதும் அளிக்காது.

புருஷார்த்தங்கள் (அறம், பொருள், இன்பம், வீடு), பக்தியின் உண்மை நிலை, இவற்றை விளக்கும் ஒரு சிறுகதையை இந்த சந்தர்ப்பத்தில் சொல்கிறேன். கேட்பவர்கள் தங்களுடைய நன்மை கருதி கவனமகாக கேட்கட்டும்.

புண்ணியப்பட்டணத்தில் (புனே) வசித்து வந்த அனந்தராவ் பாடன்கர் என்ற பெயர் கொண்ட பக்தரொருவர் சாயிதரிசனம் செய்ய ஆவல் கொண்டு ஷிர்டிக்கு வந்தார்.

அவர் வேதாந்தம் பயின்றவர்; உபநிஷதங்களையும் பாஷ்யங்களையும் (விரிவுரை) மூல மொழியான சமஸ்கிருதத்திலேயே படித்தவர். அவ்வளவு படிப்பும் அவருக்கு மனவமைதியை அளிக்கவில்லை. மனம் அலைபாய்ந்து கொண்டே இருந்தது.

சமர்த்த சாயியை தரிசனம் செய்தவுடனே அவர் சாந்தியடைந்தார். பாதங்களுக்கு நமஸ்காரம் செய்துவிட்டு சடங்குகளுடன் கூடிய பூசையும் செய்தார்.

கைகளைக் கூப்பி அஞ்சலி செய்துகொண்டு பாபாவின் எதிரில் உட்கார்ந்தார். பிரேமையுடன் கருணை வேண்டும் குரலில் கேட்டார்.

"பலவிதமான நூல்களை படித்துவிட்டேன்; வேதங்களின் சிகரமான உபநிஷதங்களையும் அத்யயனம் (மனப்பாடமாக ஓதுதல்) செய்துவிட்டேன். சத்தான சாஸ்திரங்களையும் புராணங்களையும் பிறர் சொல்லக் கேட்டுவிட்டேன். ஆயினும் ஏன் என் மனம் ஏக்கம் பிடித்தும் சோர்வடைந்தும் இருக்கிறது?-

"நான் வாசித்ததெல்லாம் வீண் என்று நினைக்காத தோன்றுகிறது. ஓரெழுத்தும் பயிலாத பாவ பக்தி உள்ளவர் என்னை விடச் சிறந்தவர் என்றே நினைக்கிறேன்.-

"நான் பல நூல்களைக் கற்றதும் சாஸ்திரங்களை பரிசீலனை செய்ததும் வீண். மனதிற்கு சாந்தியளிக்காத அனைத்துப் புத்தக ஞானமும் வீணே!-

"ஓ, சாஸ்திரங்களை குடைந்து ஆராய்வது எவ்வளவு சாரமில்லாத விஷயம்! மஹாவாக்கியங்களை ஜபம் செய்தும் மனவமைதி பிறக்கவில்லையெனில் ஜபம் செய்வதால் என்ன பிரயோஜனம்? ஓ, மனவமைதியே கிடைக்கவில்லை எனில் ப்ரம்ம ஞானம் எங்கிருந்து கிடைக்கும்?-

"சாயி தரிசனம் மனக்கவலைகளை அகற்றிவிடுகிறதென்றும், சாந்தியை அளிக்கிறதென்றும், ஈதனைத்தும் உல்லாசமான தமாஷ் பேச்சிலேயே நடந்துவிடுகிறதென்றும், சாயி மிக சுலபமாக பக்தருக்கு நல்வழி காட்டுகிறாரென்றும் செவி வழிச் செய்தியாக அறிந்தேன்.- 


Thursday, 30 March 2017

ஷீர்டி சாயி சத்சரிதம்

டாகூர் ஷிர்டிக்கு கிளம்பிய அன்றே நானா ஷிர்டியில் இருந்து கிளம்பிவிட்டார். டாகூர் மனமுடைந்து போனார்.

ஆயினும் அங்கு இன்னொரு நல்ல நண்பரை சந்தித்தார். அவருடைய உதவியால் சாயிதரிசனம் செய்து பெருமகிழ்ச்சி அடைந்தார்.

பாதங்களை தரிசனம் செய்த மாத்திரத்தில் பலமாக ஈர்க்கப்பட்டு, சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தார். உணர்ச்சிவசத்தால் சரீரம் புளங்காகிதம்(மெய்சிலிர்ப்பு) அடைந்தது. கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருகியது.

பிறகு சிறிது நேரம் பாபாவின் சந்நிதியில் நின்றார். முக்காலமும் அறிந்த பாபா முகத்தில் புன்னகை தவழ அவரிடம் என்ன சொன்னார் என்பதைக் கவனமாக கேளுங்கள்.

"கன்னட அப்பா உமக்கு சொன்னது எருமைக்கடாவின் மேல் ஏறிக்கொண்டு ஒரு கணவாயைக் கடப்பது போலாகும். ஆனால், இந்தப் பாதையில் நடப்பது கடினமாகும். உடலின் அங்கங்கள் தேயுமாறு உழைத்தாக வேண்டும்."

இந்த அர்த்தபுஷ்டியுள்ள வார்த்தைகள் காதுகளில் விழுந்தவுடனே டாகூரின் இதயம் மகிழ்ச்சியில் பொங்கி வழிந்தது. முன்பு ஒரு சத்புருஷர் சொன்ன வார்த்தைகள் நேரிடை அனுபவமாக மலர்வதை உணர்ந்தார்.

இரண்டு கைகளையும் கூப்பிக்கொண்டு சாயிபாதங்களில் சிரம் வைத்து அவர் கூறினார், "மஹராஜ், அனாதையான எனக்கு கிருபை செய்யுங்கள்; என்னை ஆதரியுங்கள்.-

"நீங்களே என் மஹாபுருஷர். நிச்சலதாஸரின் நூல் செய்யும் உபதேசத்தை முழுமையாக இன்றுதான் நான் புரிந்துகொண்டு ஆனந்தமடைந்தேன்.-

"ஓ, வட்காங்வ் எங்கே, ஷீர்டி எங்கே? சத்புருஷரும் மஹாபுருஷருமான இந்த ஜோடி என்னே! எவ்வளவு தெளிவான, சுருக்கமான பாஷை! உபதேசம் செய்யும் திறமைதான் என்னே!-

"ஒருவர் சொன்னார், 'புத்தகத்தைப் படி; பிற்காலத்தில் நீ ஒரு மஹாபுருஷரை சந்திப்பாய். நீ எவ்வழி நடக்கவேண்டுமென்று உபதேசித்து அவர் வழிகாட்டுவார்'. (என்று)-

"தெய்வபலத்தால் அவரை சந்தித்து விட்டேன். அவரும் தாம்தான் அம் மஹான் என்பதை குறிப்பால் அறிவித்துவிட்டார். முதல்வர் சொன்னவாறு நான் அந்நூலைப் படித்தேன். இப்பொழுது இரண்டாமவருடைய உபதேசத்தின்படி நடக்க வேண்டும்."

சாயிநாதர் அவரிடம் சொன்னார், "கன்னட அப்பா உமக்குச் சொன்னது அனைத்தும் யதார்த்தமே (உண்மை நிலை)! ஆனால், அவையனைத்தையும் செயல்முறையில் கொண்டுவந்தால்தான் உம்முடைய மனோரதங்கள் நிறைவேறும்."

வட்காங்வில் நிச்சலதாஸரின் விசாரசாகரம் பக்தரின் நன்மைக்காகப் பரிந்துரைக்கப்பட்டது. சிறுது காலம் சென்று பின், நூலை பாராயணம் செய்து முடித்த பிறகு, அதை எவ்வாறு நடைமுறைக்கு கொண்டுவருவது என்பது ஷிர்டியில் கற்றுக் கொடுக்கப்பட்டது.  


Thursday, 23 March 2017

ஷீர்டி சாயி சத்சரிதம்

"இருவருமே சென்று தரிசனம் செய்வோம். அவருக்கு நமஸ்காரம் செய்வோம்; ஓரிரு நாள்கள் அங்கே தங்கிவிட்டு கல்யாண் திரும்புவோம்."

ஆனால், அன்றைய தினமே தானே சிவில் கோர்ட்டில் ஒரு வழக்கு விஷயமாக டாகூர் ஆஜராக வேண்டியிருந்தது. ஆகவே, அவர் சாந்தோர்கருடன் ஷீர்டி செல்லும் யோசனையை கைவிட வேண்டியதாயிற்று.

'பாபா சர்வ சக்திகளும் வாய்ந்தவர்; உம்முடைய தரிசன வேட்கையை நிறைவேற்றுவார். கோர்ட்டு  வழக்கு என்ன பெரிய சமாசாரம்!' என்று நானா சாஹேப் கூறியது வீணாகப் போயிற்று.

அவரை சம்மதிக்க வைக்க முடியவில்லை. கோர்ட்டு வழக்கிற்கு போகாமல் இருக்க பயப்பட்டார். நெற்றியில் எழுதப்பட்ட விதியின்படி வீணாக அலையாமல் யாரால் இருக்க முடியும்?

பாபாவை தரிசனம் செய்ய வேண்டுமென்கிற தீவிர வேட்கை இருக்கும்போது, எவ்வாறு எல்லா விக்கினங்களும் உடைத்தெறியப்படுகின்றன என்பதை தம்முடைய பழைய அனுபவங்களில் இருந்து நானா விவரித்தார்.

ஆனால், டாகூர் நானாவை நம்புமளவிற்கு தம்மைத் தாமே இசைபட வைக்க முடியவில்லை. ஒருவருடைய இயற்கையான குணத்தை மாற்றிக்கொள்ள முடியுமா? அவர் சொன்னார், "முதலில் இந்தக் கோர்ட்டு வழக்கை ஒரு முடிவிற்கு கொண்டுவந்து விட்டு, என் மனதின் அரிப்பை ஒழித்துவிடுகிறேன்."

ஆகவே, அவர் தானேவுக்கும் சாந்தோர்கர் ஷிர்டிக்கும் கிளம்பினர். நானா பாபா தரிசனத்தை முடித்துக்கொண்டு திரும்பினார். இதனிடையே தானேயில் ஓர் அதிசயம் நிகழ்ந்தது.

வழக்கு விசாரணைக்காக டாகூர் அங்கு இருந்தபோதிலும், வழக்கு வேறொரு நாளுக்கு ஒத்திவைக்கப்பட்டது. சாந்தோர்கரும் சென்று விட்டார். டாகூர் உள்ளுக்குள் வெட்கமடைந்தார்.

"ஓ, நான் அவரை நம்பியிருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்? சாந்தோர்கர் என்னையும் தம்முடன் அழைத்துக்கொண்டு  போய் தரிசனம் செய்துவைத்திருப்பார். ஷிரிடியில் மனம் நிறையும் வரை தரிசனம் செய்திருப்பேன்.-

"இப்பொழுது கோர்ட்டு வேலையும் நடக்கவில்லை; ஞானியை தரிசனம் செய்யும் வாய்ப்பையும் இழந்துவிட்டேன்" என்று நினைத்துக்கொண்டு  டாகூர் உடனே ஷிர்டிக்கு கிளம்பினார்.

"ஷிர்டிக்கு போய் நானாவை சந்திக்கும் அதிர்ஷ்டம் இருந்தால், அவரே என்னை சாயிநாதரின் அரவணைப்பில் சேர்த்துவிட்டால், நான் மகிழ்ச்சியடைவேன்" என்று அவர் நினைத்தார்.

"ஷிர்டியில் எனக்கு யாரையுமே தெரியாது; எனக்கு முற்றும் புதிதான இடமாகும். நானாவை அங்கே சந்தித்துவிட்டால் விஷேஷம்; ஆனால், அதற்கு வாய்ப்புக்குறைவாக தெரிகிறது."

இவ்வாறு சிந்தித்துக்கொண்டே அவர் ரயில் ஏறி மறுநாள் ஷீர்டி போய்ச் சேர்ந்தார். நானா அங்கு இல்லை. 


Thursday, 16 March 2017

ஷீர்டி சாயி சத்சரிதம்

"சரி, நீர் இப்பொழுது போகலாம். இந்த நூலைப் படித்துப் பாரும். அவ்வாறு செய்வதால் உம்முடைய மனோரதங்கள் அனைத்தும் நிறைவேறும். இதை நினைவில் வைத்துக்கொள்ளும். -

"பிற்காலத்தில் வேலை விஷயமாக வடதேசம் செல்லும்போது, நீர் செய்த மஹாபாக்யத்தால் வழியில் ஒரு மஹாபுருஷரை சந்திப்பீர்.-

"அவர் உமக்கு மார்க்கத்தைக் காட்டுவார்; உம்முடைய மனத்திற்கு உறுதியையும் சாந்தியையும் அளிப்பார். அவரே உமக்கு உபதேசங்களை அளித்து உமது மனதில் நன்கு பதியவைத்து விடுவார்."

அவ்விடத்தில் வேலை முடிந்துவிட்டதால், தாகூர் புனே ஜில்லாவிலுள்ள ஜூன்னருக்கு மாற்றப்பட்டார். அங்கே போவதற்கு மிக உயரமானதும் கடப்பதற்கு அபாயகரமானதுமான நானேகாட்டைக் கடந்துதான் செல்லவேண்டும். 

அந்த வழி ஆபத்துக்கள் நிறைந்தது. எருமை மாட்டின்மேல் சவாரி செய்துதான் கடக்க வேண்டும். போக்குவரத்து வாஹனம் வேறெதுவுமில்லாததால், ஓர் எருமைக்கடா, சவாரி செய்வதற்காக அண்மையில் இருந்து கொண்டுவரப்பட்டது. 

எதிர்காலத்தில் வாழ்க்கையில் முன்னேறிய பின், அவருக்கு குதிரையோ மோட்டார் வாகனமோ கிடைக்கலாம். ஆனால், அன்றைய நிலையில் அங்கே கிடைத்த எருமைக்கடாவின் மேல்தான் அவருடைய பிரயாணத்தை சாமர்த்தியமாக சமாளிக்க வேண்டியிருந்தது. 

எருமைக்கடாவின் உதவியின்றி மலையைக் காலால் நடந்து கடக்க முடியாது. வேறு எந்த வாகனமும் அங்கே கிடையாது. இதுவே நானே காட்டின் அற்புதம்; வாகனமும் அபூர்வம்!

ஆகவே, அவர் தம் மனத்தை உறுதிசெய்துகொண்டு  எருமைக்கடாவின் முதுகில் ஒரு சிறுமெத்தையைக் கட்டிச் சேணம் பூட்டச் செய்து, மிகவும் சிரமப்பட்டு ஏறி உட்கார்ந்தார். 

ஏறி உட்கார்ந்துவிட்டாரே தவிர, ஏற்றம் மிகச் செங்குத்தாக இருந்தது. அபூர்வமான வாஹனமாகிய எருமைக்கடாவின் திடீர் அசைவுகளும் ஆட்டமும் குலுக்கலும் சாய்தலுந்தானே என்னே! அவருடைய முதுகு சுளுக்கிக்கொண்டு வலித்தது. 

ஒரு வழியாகப் பயணம் முடிந்தது. ஜூன்னரில் காரியாக்கிரமங்கள் நன்கு நிறைவேறின. பதவியிட மாற்ற ஆணையும் வந்தது. அவ்விடத்தில் இருந்து கிளம்பிவிட்டார். 

பதவி இடமாற்றம் கல்யாண் என்னும் நகருக்கு கிடைத்தது. அங்கு நானா சாந்தோர்கரை சந்தித்தார். சாயிநாதரின் கீர்த்தியை அவரிடமிருந்து கேட்டவுடன் டாகூருக்கும் தரிசனம் செய்ய வேண்டுமென்ற ஆவல் எழுந்தது. 

அடுத்த நாளே அதற்கு வேளையும் வந்தது. சாந்தோர்கர் ஷீர்டி செல்ல ஆயுத்தம் செய்துகொண்டே சொன்னார், "வாரும், இம்முறை நாமிருவரும் கூட்டமாகச் செல்லலாம்.-



Thursday, 9 March 2017

ஷீர்டி சாயி சத்சரிதம்

இந்தப் பதவியை மக்கள் ஒருகாலத்தில் பெரிதும் மதித்தனர். உத்தியோகஸ்தர்களுக்கும் இப் பதவியின் அதிகாரத்தை அனுபவிக்க வேண்டும் என்ற பெருவேட்கை அப்பொழுது இருந்தது. பரஸ்பரம் ஆனந்தமடைந்தனர். ஆனால், அக்காலம் இப்பொழுது மலையேறிவிட்டது.

தற்காலத்தில் இப் பதவியில் இருக்கும் சிரமத்தையும் பிடுங்கல்களையும் யாரால் விவரிக்க முடியும்? இப் பதவி சுகமான உத்தியோகமாக இருந்தது பழைய காலம். இப்பொழுதோ பொறுப்புகளின் சுமையே அதிகம். வருமானமென்னவோ நிறைய உண்டு.

மேலும், எவ்வளவு கடுமையாகவும் நேர்மையாகவும் உழைத்தாலும், மாமலத்தார் பதவிக்கு டெபுடி கலெக்டருக்கு இணையாக முன்பிருந்த மரியாதையும் காம்பீர்யமும் தற்பொழுது இல்லாமற்போய் விட்டன.

மேலும், இந்த அதிகாரமான பதவியை அடைவதில் பணம் செலவு செய்யாமலும் சிரமப்பட்டு தொடர்முயற்சியாக படிக்காமலும் யாரால் வெற்றிபெற முடியும்?

முதலில் பி.ஏ. பரீட்சையில் வெற்றிபெற வேண்டும். பிறகு, வரிவசூல் இலாகாவில் மாதம் ரூ. 30 /- சம்பளத்தில் குமாஸ்தா வேலை கிடைக்கும். பிறகு, இந்த மார்க்கத்தில் மெதுவாக முன்னேற வேண்டும்.

காலம் வந்தபோது அவர் மலைகளைத் தாண்டி (மேற்குத் தொடர்ச்சி மலைகள்) கிழக்கு நோக்கிச் சமவெளிக்குப் போகவேண்டும். நிலங்களை அளக்கும் பயிற்சி பெறவேண்டும். சர்வேயர்களுடன் தங்கியிருக்க வேண்டும். அப்பொழுதுதான் இலாகாவின் துறைத் தேர்வுகளில் வெற்றிபெறமுடியும்.

பிறகு, உயர்பதவிகளில் இருப்பவர்களில் யாராவது ஒருவர் வைகுண்ட பதவி அடைவதால் ஏற்படும் காலியிடம் இவருடைய முன்னேற்றத்திற்கு உதவியாக இருக்கும்.

போதும் இந்த வத வதவென்ற விவரணம். உளறிக்கொண்டே போவதில் பிரயோஜனம் என்ன? இம்மாதிரியான அதிகாரிகளில் ஒருவர் சாயியை சந்தித்த காதையைக் கேளுங்கள்.

பெல்காமிற்கு சமீபத்தில் வட்காங்வ் என்றொரு கிராமம் இருக்கிறது. அங்கு, ஓர் சமயம் சர்வேயர் (நில அளவு செய்பவர்கள்) பிரிவு ஒன்று வந்து முகாமிட்டது.

அந்த கிராமத்தில் ஒரு ஞானி இருந்தார். டாகூர் அந்த ஞானியை தரிசனம் செய்து பாதங்களில் வணங்கி, ஆசீர்வாதமும் பிரசாதமும் பெற்றார்.

அந்த சமயத்தில் அந்த ஞானி, நிச்சலதாஸர் இயற்றிய விசார சாகரம் எனும் நூலைப் படித்துக்கொண்டிருந்தார்.

சிறிது நேரம் கழித்து, டாகூர் விடைபெறுவதற்காக எழுந்தபோது அந்த ஞானி மகிழ்ச்சியுடன் அவரிடம் என்ன சொன்னார் என்பதைக் கேளுங்கள். 


Thursday, 2 March 2017

ஷீர்டி சாயி சத்சரிதம்

ஆயிரக்கணக்கில் மக்கள் அங்கு தரிசனத்திற்கு கூடினர்; நானும் அங்கு எதற்காக ஓட வேண்டும். இனூஸ் செய்த தொந்தரவு பொறுக்கமுடியவில்லை என்பதற்காகவா நானும் தரிசனம் செய்யப் போகவேண்டும்? என்னுடைய கௌரவம் என்னாவது?

ஒவ்வொரு தடவையும் இவ்வாறான சிந்தனை ஏதாவது மனதில் உதித்தது. கடைசிவரை நான் தரிசனத்திற்கு போகவேயில்லை. என்னுடைய நிழலை பார்த்து நானே பயந்தேன் போலும்! துரதிஷ்டம் என்னை தடுத்துவிட்டதாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

பல ஆண்டுகள் இவ்விதமாக உருண்டன. பிறகு நான் அங்கிருந்து பணிமாற்றம் செய்யப்பட்டேன். பல ஆண்டுகளுக்கு பிறகு நல்ல காலம் பிறந்தது; ஷிரிடியுடன் அகண்டமான (முழுமையான) உறவு ஏற்பட்டது.

தாத்பரியம் என்னவென்றால், ஞானிகளின் சங்கம் அபாக்யசாலிகளுக்குக் கிடைப்பதில்லை. இறைவனுடைய கிருபை இருந்தால் சுலபமாக கிடைக்கிறது. அது இல்லையெனில் குருதரிசன யோகமே அமைவதில்லை.

செவிமடுப்பவர்களே, இப்பொழுது இவ்விஷயமாக ஒரு சுவாரஸ்யமான கதை சொல்கிறேன்; பயபக்தியுடன் கேளுங்கள். காலங்காலமாக ஞானிகள் எவ்வாறு ஒருவருக்கொருவர் கமுக்கமான உறவும் பரிவர்தனையும் வைத்திருந்தனர் என்பதை பாருங்கள்.

காலம், வர்த்தமனாம் (நிகழ்வுகள்) இவற்றுக்கு ஏற்றவாறும் அவர்களுடைய விருப்பத்திற்கேற்றவாறும் காரண காரியத்துடன் ஞானிகள் அவதாரம் செய்கிறார்கள். ஆயினும், அவர்கள் பரஸ்பரம் (ஒருவருக்கொருவர்) வேறுபட்டவர்களாவர்.

தேசமும் காலமும் காரணமும் வேறுபட்டாலும், ஒரு ஞானிக்கு மற்றொரு ஞானியின் மனம் நன்கு தெரியும். உள்ளுக்குள் அவர்கள் அனைவரும் ஒருவரே.

எவ்வாறு ஓர் உலகையாளும் சக்கரவர்த்தி ஒவ்வொரு தேசத்திலும் ஓர் அதிகாரியை நியமித்து தம்முடைய சாம்ராஜ்யத்திற்கு முன்னேற்றத்தையும் செழுமையையும் கொண்டுவருகிறாரோ,-

அவ்வாறே ஆத்மானந்தமாகிய சக்கரவர்த்தி பல இடங்களில் தோன்றி சூக்குமமான முறையில் தம்முடைய ராஜ்ஜியம் என்னும் சக்கரத்தை சுழற்றுகிறார்.

ஆங்கில படிப்புப் படிக்கும் பாக்கியம் கிடைத்து பி.ஏ பட்டம் பெற்ற தாகூர் என்ற நற்குடிமகன் ஒருவர் இருந்தார். படிப்படியாக வாழ்க்கையில் உயர்ந்து பெயர் பெற்ற அதிகாரியாக விளங்கினார்.

சில வருடங்களில் அவர் ஒரு மாம்லதாராக உயர்ந்தார். மேலும் உயர்ந்து டெபுடி கலெக்டர் பதவி பெற்றார். தெய்வப் பிராப்தியாக அவருக்கு சாயி பாபாவிடம் உபதேசம் பெறும் அதிர்ஷ்டம் வாய்த்தது.

மாம்லத்தார் பதவி தூரத்திலிருந்த பச்சைப் பசேலென்று தெரியும் மலையைப் போன்று வசீகரமானதுதான். அருகில் சென்று பார்த்தால்தான் எட்டி மரங்கள் அடர்ந்திருப்பது தெரியும். ஆயினும், கௌரவத்தில் என்னவோ அது உயர்ந்த பதவிதான்.