valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday, 18 April 2013

ஷிர்டி சாயி சத் சரிதம்

பூனைகளையும்  நாய்களையும் கூட கனவிலும் விரட்டாத மனிதர், எப்படி ஏழை எளியவர்களை விரட்டுவார்? அவருடைய வாழ்க்கை புனிதமானது.

ஆரம்ப காலத்தில் அவர் 'பைத்தியக்காரப் பக்கீர்" என்றே மக்களால் அழைக்கப் பட்டார். பிச்சை எடுத்து வயிறு வளர்ப்பவரை பெரிய மனிதராக எப்படி கருத முடியும்!

ஆனால், இந்தப் பக்கீர் தாராளமான மனமுள்ளவராக இருந்தார்; எதிர்பார்ப்புகள் ஏதுமின்றி சிநேகமாக இருந்தார். வெளிப்பார்வைக்குச் சஞ்சலமுடையவராகத் தெரிந்தாலும், அகத்தில் சஞ்சலமில்லாத அமைதியாக இருந்தார். அவருடைய நடத்தையைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை

அந்தக் குக்கிராமத்திலும் சிலர் இயற்கையாகவே தயையுள்ளவர்களாகவும்  பாக்கியவான்க ளாகவும்   இருந்தனர் . அவர்கள் இவரை ஒரு சாதுவாகவே ஏற்றுக் கொண்டனர்

தாத்யா  கோதே பாடீலின் தாயாரான பாயஜா பாயி  என்ற பெயர் கொண்டவர், சோள  ரொட்டிகள் நிரம்பிய ஒரு கூடையைத் தலைமேல் வைத்துக் கொண்டு மதிய நேரத்தில் காதினுள் செல்வார்

முட்செடிகள் மீதும் புதர்கள மீதும் நடந்து சென்று, மெயில் கணக்காகத் கானகத்தில் அலைந்து இந்தப் 'பைத்தியக்காரப் பக்கீர்' எங்கிருக்கிறார் என்று கண்டு பிடித்து, அவருடைய பாதங்களில் விழுந்து நமஸ்கரிப்பாள் .

அவருடைய அன்பும் பெருந்தன்மையும் எத்தகையது! மரங்களிடையேயும் காட்டினுள்ளும் சென்று எளிய உணவான சோள  ரொட்டியும் பாஜியும்  பாபாவுக்கு கொடுத்து பிற்பகல் நேரத்தில் உணவு இடுவார்
இந்த மாபெரும் பக்திபூர்வமான சேவையை பாபா தம்முடைய கடைசி நாள் வரையில் மறக்க வில்லை. இதை நன்கு ஞாபகத்தில் வைத்துக் கொண்டு பாய ஜாபாயி யின் மகனுக்கு வளமான வாழ்வளித்தார்

பாய ஜாபாயி யும்  அவருக்குக் கணவரும் பக்கீரின் மீது திடமான நம்பிக்கையும் விசுவாசமும் வைத்திருந்தனர் வாஸ்தவத்தில் அவர்கள் இருவரும் இந்தப் பக்கீரையே இறைவனாக கருதினார்கள். நம்புபவர் களுக்குதானே  நடராஜா!

பக்கீர் ஆழ்ந்த தியானத்தில் இருப்பார். பாய ஜாபாயி அவரெதிரில் ஓர் இலையைப் போட்டுக் கூடையில்ருக்கும் உணவை எடுத்து இலையின் மேல் பரிமாறி, பிரயத்தனம் செய்து பக்கீரை உண்ண வைப்பார்.

பாபா எப்பொழுதும் சொல்லுவார், "ஆண்டித்தனமே உண்மையான அரசபோகம்; ஏனெனில் ஆண்டியாக இருப்பதே நிரந்தரம்; செல்வம் எங்கும் நிலைக்காது எப்படி ஓடி விடுகிறது பாரீர்!

பிற்காலத்தில் பாபா காட்டைத்  துறந்து கிராமத்திலேயே  வசிக்க ஆரம்பித்தார். மசூதி யிலேயே உணவு உண்ண  ஆரம்பித்தார். தாயாருடைய (பாய ஜாபாயி ) கஷ்டங்களுக்கு ஒரு முடிவேற்பட்டது.

 

Thursday, 11 April 2013

ஷிர்டி சாயி சத் சரிதம்

இன்பம் அவருக்கு மகிழ்ச்சியை அளிக்கவில்லை; துன்பம் அவருக்கு சோகத்தைக் கொடுக்கவில்லை செல்வரும் ஆண்டியும் அவருக்குச் சரிசமானம் அம்  மனோ நிலை சாதாரணமாகக் கிடைக்கக் கூடியதா என்ன?

புருவத்தை உயர்த்துவதால் மட்டுமே ஓட்டாண்டியையும்  பெரும் செல்வராக்கக் கூடிய சக்தி பெற்றவராக இருந்தும், ஒரு ஜோலியைத்  தோளில்  மாட்டிக் கொண்டு வீடுவீடாகச் சென்றார்

யாருடைய வீட்டு வாசலில் பாபா பிச்சைக்காக நின்று, " ஓ, மகளே! எனக்கு உன் சோள  ரொட்டியிலிருந்து  கால் ரொட்டி கொண்டு வா" என்று கரமேந்திப் பிச்சை எடுத்தாரோ, அவர் மகா புண்ணியசாலி
ஒரு கரத்தில் ஜோலியை ஏந்தி, மற்றொரு கரத்தில் ஒரு தகர டப்பாவை வைத்துக் கொண்டு சில குறிப்பிட்ட இல்லங்களுக்கு வாயில்வாயிலாகச் சென்றார்.

பாஜி, சாம்பார், பால், மோர் போன்ற பதார்த்தங்கள் அனைத்தும் இந்தத் தகர டப்பாவில் பிச்சையிடுபவர்களால்  கொட்டப் பட்டன ஓ, என்ன வினோதமான உணவு சேர்க்கும் முறை!

சாதத்தையோ, சோள ரொட்டியையொ  வாங்கிக் கொள்வதற்கு அவர் தமது ஜோலியை விரிப்பார். ஆனால் திரவ ரூபமான பதார்த்தம் எதுவாக இருந்தாலும், அது அவர் வைத்திருந்த தகர் டப்பாவில் கொட்டப் பட்டது .

வித விதமான பதார்த்தங்களை தனித்தனியாக ருசித்துச் சாப்பிடவேண்டும்  என்கிற ஆவல் எங்கிருந்து எழும்? ருசிகளையும் வாசனைகளையும் நாக்கு அறியாதபோது மனதிலிருந்து இவ்வாசை எவ்வாறு எழும்?

ஜோலியில்  யதேச்சையாக எது வந்து விழுந்ததோ, அதை அவர் திருப்தியுடன் உண்டார். சுவை உள்ளதாயினும் சரி, சுவை அற்றதாயினும் சரி, அதைப் பற்றிக் கவலைப் படவில்லை. நாக்கு சுவையுணர்வையே இழந்துவிட்டது போலும்!

ஒவ்வொரு நாளும் காலைநேரத்தில் அவர் பிச்சை எடுப்பார். கிடைத்ததை கொண்டு வயிற்றை  நிரப்புவார்; திருப்தியும் அடைவார்.

பிச்சையையாவது ஒரு நியமனத்துடன் எடுத்தாரா? அதுவும் இல்லை; விருப்பப் பட்டபோதுதான் பிச்சை எடுக்கக் கிளம்புவார்!  சில நாள்களில் பிச்சை எடுக்கக் கிராமத்தினுள் பன்னிரண்டு சுற்றுகள் சென்றாலும் செல்வார்!

இம்மாதிரியாகப் பிச்சை எடுத்துச் சேர்க்கப் பட்ட உணவு, மசூதியில் இருந்த ஒரு வாயகன்ற மண் பாத்திரத்தில் கொட்டப்படும். இதிலிருந்து காகங்களும் நாய்களும் சுதந்திரமாக உணவுண்டன.

மசூதியையும் வெளி முற்றதையையும் தினமும் பெருக்கும்  பெண்மணி, பத்து  - பன்னிரண்டு சோள ரொட்டிகளை எடுத்துக் கொண்டு போவார். அவர் அவ்வாறு எடுத்துக் கொண்டு போனதை ஒருவரும் தடை செய்யவில்லை.



Thursday, 4 April 2013

ஷிர்டி சாயி சத் சரிதம்

சமுத்திரத்தின் உப்புநீர் மேகங்களாக மாற்றம் அடைந்து, சுத்தமான குடிக்கத் தகுந்த நீராக மாறுகிறது. அவ்வாறே குருவின் பொன்னடிகளில்  மூழ்கினால் சுகம் கிடைக்கிறது.

குருவைத் தவிர வேறெவருக்கும் இம் மனிதவுடலுக்கு நற்கதியளிப்பது எப்படி என்பது தெரியாது. குரு தமது கரங்களால் தூக்குவதால் தான் ஜடம் போன்ற மனிதர்கள் மேல் எழுப்பப் படுகிறார்கள்.

மந்திரங்கள் புனிதத்தலங்கள், தேவதைகள், பிராமணர்கள், ஜோசியர்கள், வைத்தியர்கள், ஏழாவதாக குரு - இந்த ஏழுக்கும் ஒருவருடைய விசுவாசத்தைப் பொறுத்தே பலன்கள் அமையும்
நம்பிக்கையும் விசுவாசமும் எவ்வளவு ஆழமோ, அதற்கேற்றவாறே சித்திகளின் பரிமாணமும் அமையும்.

ஞானிகள், பந்தங்களால் கட்டுப்பட்ட மனிதனை முமுக்ஷவாக மாற்றுகிறார்கள். முமுக்ஷுவை முக்தனாக ஏற்றமடையச் செய்கிறார்கள். இதைச் செய்வதற்காக அவர்கள் தோன்றா நிலையிலிருந்து தோன்றிய நிலைக்கு மாறுகிறார்கள். இவை அனைத்தும் பரோபகாரம் கருதியே
வியாக்கியானங்கள் மற்றும் புராணங்கள் மூலமாக அடைய முடியாததை, ஞானிகளின் அசைவுகளும் நடத்தையும் மௌன உபதேசங்களாகும்

மன்னிக்கும் குணம், சாந்தி, தனிமை, காருண்யம், பரோரபகாரம், புலனடக்கம், அஹன்காரமின்மை ஆகிய நற்குணங்கள் நிறைந்திருக்கும் மனிதனைக் காண்பது அரிது
புத்தகத்தை படித்து அறிந்து கொள்ள முடியாததை எல்லாம் ஒரு மாமனிதரின் செயல்முறைகளைப் பார்த்து சுலபமாக அறிந்து கொள்ளலாம். கோடிக் கணக்கான வானத்து நட்சத்திரங்கள் எல்லாம் சேர்ந்து அளிக்கமுடியாத ஒளியை, சூரியன் ஒன்றே கொடுத்து விடுகிறது அன்றோ!

உதாரண குணம் ஞானிகளும் அவ்வாறே! அவர்களுடைய பலப் பல சஹசமான செயல்கள் மனிதர்களை பந்தங்களிலிருந்து விடுபடச் செய்து அவர்களுக்கு அத்தியந்த சௌக்கியத்தை அளிக்கின்றன.

சாயி மகாராஜ் இம்மாத்ரியான தலை சிறந்த ஞாநிகளுள் ஒருவர்; அளவிலா ஆன்மீகச் செல்வம் பெற்றவர்; ஸ்ரீமான். ஆத்மாவிலேயே எந்நேரமும் மூழ்கியவராயினும் அவர் ஒரு பக்கீரைப் போலவே வாழ்க்கை நடத்தினார்
அவர் எல்லாரையும் சமமாகவே பார்த்தார்; 'நான்' 'எனது' என்னும் எண்ணமே அவருக்கு இல்லை; எல்லா உயிர்களிலும் இறைவனைக் கண்டதால் அவற்றிடம் தயை காட்டினார்.


Thursday, 28 March 2013

ஞானம், அஞ்ஞானம் இரண்டுமே மனத்தின் விகாரங்கள்; மயக்கத்திற்கும் தவறுகளுக்கும் இடமளிக்கக் கூடியவை. ஒரு முள்ளை  மற்றொரு முள்ளால்தான் எடுக்க வேண்டும். அதுபோல ஒன்றை மற்றோன்றால்  நீக்க வேண்டும்.

அஞ்ஞானத்தை ஞானத்தால் விரட்ட வேண்டும். இருப்பினும் மனிதப் பிறவியின் மிகச் சிறந்த இலக்கு, அஞ்ஞானம் - ஞானம் இரண்டிற்கும் அப்பால் சென்று, பரிசுத்தமான ஆத்மாவிலேயே  கரைந்து போவதுதான்

புலனின்ப நாட்டம் என்னும் எண்ணெய்  எரித்து முடிக்கப் படும் வரை, அஞ்ஞான  இருள் சாம்பலாக்கப் படும்வரை, 'நான்', 'என்னுடையது' என்னும் திரி பொசுங்கிப் போகும்வரை, ஞானம் பிரபையுடன் (சுடரைச் சுற்றி இருக்கும் ஒளிவட்டம்) ஒளிவிடாது.

தவிர்க்க முடிந்ததோ, தவிர்க்க முடியாததோ, நரதேஹத்தால் செய்யப்படும் செயல்கள் அனைத்தும் புத்தியால் நிச்சயிக்கப் பட்டு நிறைவேற்றப்படுகின்றன என அறியவும்

செய்வதற்கு வேலை என்று ஒன்றும் இல்லாதவன், ஐஸ்வர்யத்தையும் சுகத்தையும் அனுபவித்துக் கொண்டு வாழலாம் அல்லது ராம நாமத்தை ஜபம் செய்யலாம். ராமநாமம் ஆசைகளில் இருந்தும் தொல்லைகளில் இருந்தும் விடுதலை அளிக்கும்

உடலின் உறுப்புகள், மனம் புத்தி இவை ஆத்மாவினுடைய உபாதிகள் இவ்வுபாதிகளால், ஆரம்பம் இல்லாததும் இன்பம் தேடாததுமான ஆத்மா, கர்மவினைகளால் ஏற்பட்ட இன்னல்களை அடைகிறது

தன்னுடைய சுய குணத்தால் இன்பம் தேடாத ஆன்மா, இன்னலடைவது மேற்சொன்ன உபாதிகலாலேயே. அன்வயம் (என்பது 'புகை இருக்குமிடத்தில் நெருப்பு இருக்கும்' என்று சொல்வது போன்று உடன்பாட்டு முறையான விதி ) - வ்யதிரேக்கம் என்னும் விதிகளை காட்டி நியாயசாஸ்திரம் இதற்கு நிரூபணம் அளிக்கிறது

செயல்களையும் மனத்தின்  தாவல்களையும் புத்திக்கு விட்டுவிட வேண்டும் என்பதை அடிப்படை தத்துவமாக அறிந்து கொள். உன்னைப் பொறுத்துவரை செயல் புரியாதவனாக இரு. (இறைவனின் கையில் நான் ஒரு கருவியே என்னும் பாவனை)

சுயதர்மத்தை அனுஷ்டானம் செய்; ஆத்மாவுடன் சம்பத்தப் படாதவற்றை விலக்கி , எந்நேரமும் ஆத்மாவிலேயே எண்ணத்தை செலுத்து. தன்னிலேயே மூழ்கிப் போகும் இந்தத் திருப்தியும் சாந்தியுமே நரஜன்மத்தின் முடிவான இலக்காகும்.

தர்மம், அதர்மம், காமம், மோக்ஷம் (அறம் - பொருள் - இன்பம் - வீடு) ஆகிய நான்கு மனித வாழ்வின் லக்ஷணங்களை அடைவதற்கு, உடலைவிட்டால் வேறு வழியே இல்லை. இந்த நான்கு புருஷார்த்தங்களை எப்படி அடைவது என்பதை அப்பியாசம் செய்யும் மானுடன் ஸ்ரீவைகுண்ட பதவியை அடைந்துவிடுவான்.

ஆகவே இவ்வுடல் கீழே வீழ்வதற்கு முன்பே ஆத்மஞானம் பெறுவதற்கு முயற்சி செய்வீராக. நரஜன்மத்தின் ஒரு நொடியைக் கூட வீண் செய்துவிடாதீர்.




Thursday, 21 March 2013

ஷிர்டி சாயி சத் சரிதம்

சூரியனும் சந்திரனும் கணக்கற்ற நக்ஷத்திரங்களும் அடங்கிய பிரம்மாண்டமான சிருஷ்டியில், எதற்கும் இவ் வற்புதமான  நிர்மாணத்தைப் பற்றிய சிந்தனையோ, வியப்போ, படைப்பாளியைப் பற்றிய பிரமிப்போ சிறிதளவும் ஏற்படவில்லை!

இப் பிரபஞ்சத்தின் தலைவனாக, சிருஷ்டி என்னும் இந்த லீலையை நான் புரிந்த காரணம் ஓர் உயிருக்கும் தெரியவில்லையே!

ஆகவே, என்னுடைய சிருஷ்டியின் வைபவங்களைப் புரிந்து கொள்ளவும் என்னுடைய ஒப்பில்லா  மகிமை படைத்த செயலைப்  பாராட்டுவதற்கும் தேவையான திறமையுள்ள, தர்ப்பையின் நுனி போன்ற கூறிய மதி படைத்த, ஒரு ஜீவனை நான் சிருஷ்டி செய்யாதவரை, நான் ஏற்கெனவே செய்த செயல்களனைத்தும் பயனற்று போகும்.

ஆகவே, இறைவன் மனிதனைப் படைத்தான். ஜெகதீசன் நினைத்தான், "இம்மனிதன், சாரம் எது? சாரமில்லாதது எது? என்று தன்னுடைய புத்தியை உபயோகித்துத் தெரிந்துகொண்டு ஆச்சரியத்தில் மூழ்கிப் போவான்.

"மனிதனால்தான் ஞானத்தை சம்பாதித்துக் கொண்டு என்னைப் பற்றிய சிந்தனையும் தியானமும் செய்து மரியாதை கலந்த பயத்தாலும் வியப்பாலும் நிரம்பிப் போக முடியும். என்னுடைய லீலை அப்போதுதான் பூரணமாகும்.

"பார்வையாளர்களுடைய மகிழ்ச்சியே என்னுடைய லீலையின் நிறைவேற்றும் இவ்வுலகத்தை நான் நிர்வகிக்கும் திறமையைப் பார்த்து மனிதன் திருப்தி அடைவான்.

பலனை விரும்பிச் செய்யும் செயல்களும் பணம் சம்பாதிப்பதும் மனிதவுடலைப் பேணிக் காப்பதன் நோக்கமல்ல. உயிருள்ளவரை விடாமுயற்சியால் தத்துவ ஞானத்தை சம்பாதிப்பதே பிறவியின் பயன்.

அபேதத்தை  உணர்வதே சிறந்த ஞானம். உபநிஷதங்கள் இதையே பிரம்ம ஞானம் என்று அழைக்கின்றன இறைவனை வழிபடுவதும் சேவை செய்வதும் இதுவே 'பகவான் பக்தர்களைச் சார்ந்தவன்" என்ற வசனத்திற்குப் பொருளும் இதுவே என்று கொள்ளலாம்.

"பிரம்மமும் குருவும் தானும் ஒன்றே" என்ற அபேத ஞானத்தைப் பெற்றவனுக்கு அதே மார்க்கத்தில் பக்தி செலுத்துபவனுக்கு  மாயையை வெல்வது சுலபம்
இவ்வாறு சிரத்தையுடன் கூடிய ஞானத்தையும் துறவு மனப்பான்மையையும் பெற்ற யோக்கிய புருஷர்கள் மாத்திரமே தன்னை அறியும் சுகத்தைப் பெறத் தகுதியுடையவர்கள். அம்மாதிரியான பக்தர்கள் பாக்கிய சாலிகள் என அறியவும்.

"தான் யார்" என்று அறியாமல் தன்னை முழுமை பெற்றவன் என்று நிர்ணயித்துக் கொள்வதால் ஓர் அவலக்ஷனமான பிரதிபந்தம் (மாற்றுத்தளை ) உருவாகிறது.


Thursday, 14 March 2013

ஷிர்டி சாயி சத் சரிதம்

எத்தனையோ பாபிகள் அவர்களுடைய கர்மாவுக்கேற்றவாறு  மனிதப் பிறவி எடுப்பதற்காக ஆண்  விந்து ரூபத்தில் யோனித் துவார வாயிலில் வந்து நிற்கிறார்கள்.

அதனினும் அதர்மர்கள்  (கடையர்கள் ) நகரும் உயிரினத்திலிருந்து  நகராத தாவரமாக கர்மாவுகேற்றவாறு பிறவிஎடுக்கிறார்கள் .

அடைந்த ஞானத்திற்கும் செய்த கருமானுஷ்டானங்களுக்கும் ஏற்ப ஒருவன் ஒரு குறிப்பிட்ட உடலை அடைவான் என்று நிச்சயிக்கப் பட்டிருக்கிறது. இது வேதங்களின் பிரமாணம்.

கருணை வடிவான வேதமாதா சொல்கிறாள், "ஞானத்திற்கு ஏற்றவாறே பிறவி ஏற்படுகிறது". எவ்வளவு இறைஞானம் சேமிக்கப் படுகிறதோ அதற்கேற்றவாறே ஜீவனுக்குப் பிறவி கிடைக்கிறது.

இறைவனுடைய லீலைகள் தர்க்கசிந்தனையால் புரிந்து கொள்ள முடியாதவை. அவற்றைப் பற்றிய பூரணமான ஞானத்தை அடையவே முடியாது. ஒரு பகுதியையாவது அறிந்துகொள்ள முடிந்த மனிதன், மகாபாக்கியசாலி.

பரம பாக்கியம் பெற்றவனே மனிதப் பிறவி பெறுகிறான்; அவனினும் புண்ணிய சாலியே உயர் குலத்தில்  பிறக்கின்றான். ஆனால், இறைவனின் அருளே ஒருவரை சாயி பாதங்களுக்குக் கொண்டுவருகிறது. இம்மூன்றும் ஒருசேரக் கிடைப்பது அரிதினும் அரிது.

யோனி ஜன்மமாகப் பிறக்கும் ஜீவராசிகள் எத்தனை  எத்தனையோ. இவையனைத்திலும் மனிதப் பிறவியே சிரேஷ்டமானது. ஏனெனில், மனிதர்களால்தான் 'என்னைப் படைத்தது யார்? நான் எங்கிருந்து வந்தேன்?" என்றெல்லாம் சிந்தனை செய்ய முடியும்

மற்ற ஜீவராசிகளுக்கு எதுவுமே தெரிவதில்லை. பிறக்கின்றன; வாழ்கின்றன ; ஒருநாள் இறந்து போகின்றன. கடந்த காலத்தைப் பற்றியோ, நிகழ்காலத்தைப் பற்றியோ, எதிர்காலத்தைப் பற்றியோ, இறைவனைப் பற்றியோ எந்த ஞானமும் அவற்றிற்கு இல்லை

மனிதனைப் படைப்பதில் இறைவன் ஆனந்தம் அடைந்தான் மனிதன் விவேகத்தை உபயோகித்துப் பற்றற்ற நிலையை நாடித் துறவுபூண்டு, தன்னை வழிபடுவான் என்றெண்ணி னான் .

சிருஷ்டியில் வேறு எதற்கும் முக்தியடவதர்கேற்ற சாதனைகள் செய்யக் கூடிய உடலமைப்பு இல்லை. தன்னுடைய உடலை உபயோகப் படுத்தி சாதனைகள் புரிந்து, மரணமே இல்லாத நாராயணனுடன் ஒன்றி விடும் சக்தி மனிதனுக்கு மாத்திரமே உண்டு

மாயாஜால வித்தைக்காரன் சாமர்த்தியசாலிகாயாக இருப்பான்; ரசிக்கத் தெரியாத கூட்டத்திற்கு அவன் விதை காட்டுவதில்லை; தன்னுடைய சூக்குமமான அசைவுகளையும் வேகமான விளைவுகளையும் ரசிக்கும் கூட்டத்தையே நாடுகிறான்

எண்ணிலடங்காத  பறவைகளையும் மிருகங்களையும் மரங்களையும் புழுக்களையும் பூச்சிகளையும்  இதர ஜீவராசிகளையும் சிருஷ்டி செய்த பின், பரமேச்வரன் தன்னுடைய லீலைகளைனைத்தும் சாரமில்லாமல்  போய் விட்டனவே என்று ஆச்சரியமடைந்தான்.



Thursday, 7 March 2013

ஷிரிடி சாயி சத் சரிதம்

உடலைக் கேவலம் உன் வேலைக்காரனாக  நடத்து. அளவுக்கதிகமாக அதைப் பாராட்டாதே . அதற்குச் செல்லம் கொடுத்துக் கொடுத்து உன்னை நரகத்திற்கு இழுத்துக் கொண்டு போய் விடாதே.
அதற்கு உணவும் உடையும் தேவையான அளவு கொடுத்து நிர்வாகம் செய். அவ்வப் போது  போஷித்துப் பாலனம் செய். அவ்விதம் செய்தால்தான் உடலை ஆன்மீக முன்னேற்றத்திற்கும் ஜனனமரணச் சூழலிருந்து விடுபடுவதற்கும் உபயோகிக்க முடியும்.
ஜனன மரண அனர்த்தங்கள், எக்கணமும் மரணம் நேரலாம் என்னும் நிலை, இவ்விதமாக நிரந்தரச் சுகமற்றது மனித வாழ்க்கை. காண நேரமே ஏற்படும் மகிழ்ச்சியால் என்ன பிரயோஜனம்?

பளிச்சென்று ஒளி  வீசி மறையும் மின்னலைப் போன்றும் காண நேரத்தில் தோன்றி மறையும் கடலலையைப்  போன்றும் அநித்தியமானவை உடல் இன்பங்கள். இதைப் பற்றிச் சிறிது யோசியுங்கள்.

உடலும் வீடும் மனைவியும் மக்களும் உற்றாரும் உறவினரும் நசித்துப் போகக் கூடியவர்கள் என்பதை நன்கு அறிந்தும், தாய் தந்தையரின் பாதைகளைத் தோள்மேல் சுமந்து சென்ற அனுபவம் இருந்தும், மனிதன் தன்னுடைய  நிலை பற்றிய உண்மையை உணர்வதில்லை

அவனுக்கு முன்னால் இறந்து போனவர்கள் சென்ற பாதையிலேயே செல்கிறான் ஜனன மரணச் சூழலில் மாடிக் கொள்கிறான். இச் சூழலிருந்து வெளிவரவது எப்படி என்று ஒரு கணமும் சிந்திப்பதில்லை.

குடும்பத்தின் பாரத்தைச் சுமப்பதிலேயே வாழ்க்கை வேகமாகக்  கழிந்து விடுகிறது. ஆனால், காலதேவனோ ஆண்டுகள் கழிவதை மிக அக்கறையுடன் கவனித்துக் கொண்டு வருகிறான். கடமையிலிருந்து ஒரு போதும் நழுவ மாட்டான்.

கடைசி நேரம் வரும்போது காலதேவன் ஒரு கணமும் தாமதிக்க மாட்டான் மீன்பிடிப்பவன் வலையை இழுப்பது போல் இறுக்கமாக இழுத்துவிடுவான். அந்நேரத்தில் மனிதன் வலையில் அகப்பட்ட மீனைப் போல ஏதும் செய்ய முடியாது துடி துடிப்பான்.

கோடிப் புண்ணியம் செய்தும், மகாபாக்கியங்களாலும் இம் மனிதப் பிறவி கிடைத்திருக்கிறது. ஆகவே இந்த நல்வாய்ப்பை சிறப்பாக பயன் படுத்திக் கொள்ள வேண்டும்.

பகீரதப் பிரயத்தனம் செய்தாலும் மனிதப் பிறவியை அடைய முடியாது. அது விதி வசமாகக் கிடைக்கும் அதிர்ஷ்டமே. வீணாக குப்பைத் தொட்டியில் போட்டு விடாதீர்கள்.

இந்த ஜன்மத்தில் கிடைத்தது கைவிட்டு போனாலும், அடுத்த ஜன்மம் மனிதப் பிறவியாகவே அமையும் என்று நினைத்து, அடுத்த ஜன்மத்திற்கென்று எதையும் தள்ளிப் போடுபவன் முட்டாள்.