valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday, 24 January 2013

ஷிர்டி சாயி பாபா

பாபா கனிவுடன் இயம்பினார், "வானம் மேகமூட்டமாக இருக்கிறது. ஆனால், மழை பெய்து விளைச்சலைக் கொண்டு வரும்; மேகங்கள் மறைந்து விடும்.

"எதற்காக பயப்பட வேண்டும்?" என்று சொல்லிக் கொண்டே தம்முடைய கப்ணியை இடுப்புவரை தூக்கி, சிவந்து போயிருந்த வீக்கங்களை  காண்பித்தார்.

கோழி முட்டையளவில் நான்கு சிவந்த வீக்கங்கள் நான்கு இடங்களில் பரவியிருந்தது தெரிந்தது. "பாருங்கள், உங்களுடைய உபாதைகளை எல்லாம் நான் என் மீதே எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது" என்று பாபா கூறினார்
இந்த  தெய்வீகமான செயலைப் பார்த்து மக்கள் வியந்து போயினர். ஓ , இந்த ஞானிகள்தாம் எவ்வாறு மற்றவர்களின் அநேக உபாதைகளைத் தங்கள் மீது ஏற்றுக் கொள்கிறார்கள்!

ஞானிகளுடைய மனம் மெழுகைவிட இளக்கமானது; வெண்ணையைப் போல் உருகக் கூடியது! பக்தர்களின் மீது அவர்கள் வைக்கும் அன்பு உண்மையாகவே தன்னலமற்றது. பக்தர்கள் தாம் ஞானிகளுக்கு உற்றாரும் உறவினரும்!

ஒரு சமயம் நானா சாஹேப் சாந்தொர்க்கர் நந்தூர்பாரிளிருந்து பண்டர்பூருக்கு சென்றார்.

நானா ஒரு பரம பாக்கியசாலி! பாபாவிடம் அவர் வைத்திருந்த பக்தியும் செய்த சேவையும் பலனளித்து விட்டன. மகா விஷ்ணு வாசம் செய்யும் வைகுண்டம் அவருக்கு பூமியிலேயே கிடைத்து விட்டது. அவர் பண்டர்பூருக்கு மாம்லதாராக நியமிக்கப் பட்டார்.

நன்தூர்பாருக்கு வந்த உத்தரவில், உடனே பண்டர்பூருக்குச் செல்ல வேண்டும் என்று ஆணையிடப் பட்டிருந்தது. அவர் பாபாவை தரிசனம் செய்ய வேண்டுமென்ற ஆவலுடன் கிளம்பினார்.

ஷிர்டியே அவருக்கு முதல் பந்தர்பூர். ஆகவே, முதலில் பாபாவை தரிசனம் செய்து நமஸ்காரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் குடும்பத்துடனும் பரிவாரத்துடனும் அவர் கிளம்பினார்.

ஆயினும், ஷிர்டிக்குக் கடிதம் எழுத வில்லை. தமது வரவு பற்றிச் செய்தியும் அனுப்ப வில்லை. மூட்டை முடிச்சுகளைக் கட்டிக் கொண்டு அவசரமாக ரயிலேறி விட்டார்.

நானா நந்தூர் பாரிலிருந்து இவ்விதமாக அவரசரமாக கிளம்பி விட்டார் என்று ஷீரடியில் யாருக்கும் தெரிந்திருக்க நியாயமில்லை. ஆனால், சாயியினுடைய கண்கள் எங்கும் இருந்ததால் அவருக்கு எல்லா நடப்புகளும் தெரிந்து இருந்தன.

நானா அவசரமாக கிளம்பி நிம்காங்க்வ் எல்லைக்கு வந்து சேர்ந்து இருப்பார். ஷீரடியில் ஓர் அதிசயம் நிகழ்ந்தது. கேளுங்கள்.

மஹால் சாபதி , ஆபா சிந்தே, காசிராம் ஆகிய பக்தர்களுடன் பாபா மசூதியில் இருந்தார்


Thursday, 10 January 2013

ஷிர்டி சாயி சத் சரிதம்

சித்தராகிய சாயிக்கு பாகோஜியினுடைய  சேவை தேவையே இல்லை. இருப்பினும், பக்தர்களின் நல்வாழ்வுபற்றிய ஆழ்ந்த அக்கறையால், பாகோஜியை இந்த சேவையைச் செய்ய அனுமதித்தார்.

பூர்வ ஜன்மங்களில் செய்த மகா பாவங்களினால் பாகோஜி குஷ்டரோகத்தினால் பிடிக்கப் பட்டிருந்தார். சாயியின் சகவாசமாகிய விஷேசமான பாக்கியம் அவருக்குக் கிடைத்தது பெரும் புண்ணியமே.

பாபா தினமும் லெண்டிக்குப்  போய்வந்தபோது பாகோஜி அவருக்குக் குடை பிடித்துக் கொண்டே செல்வார். உடலெங்கும் குஷ்டரோகத்தினால் ஏற்பட்ட புண்கள் நிறைந்திருந்தன; ஆயினும், அணுக்கத் தொண்டர்களில் முதல்வர் அவரே!

தினந்தோறும் காலைவேளையில் பாபா துனிக்கருகில்  இருந்த தூண்மீது  சௌகரியமாகச் சாய்ந்து கொண்டு உட்கார்ந்தவுடன், பாகோஜி சேவை செய்ய வந்து விடுவார்.

கால்களிலிருந்தும் கைகளிலிருந்தும் கட்டுகளைப் பிரித்துவிட்டு, நெய் தடவிப் பிடித்துவிடுவார். இவ்விதமாக பாகோஜி  சேவை செய்தார்

பூர்வஜென்மத்தில் மகாபாபிஷ்டரான  பாகோஜி, உடல் முழுவதும் ரத்தக் குஷ்டத்தினால் பாதிக்கப்பட்ட பெரு  வியாதியஸ்தரானாலும், பாபாவின் சிறந்த பக்தராகத் திகழ்ந்தார்.

கால்விரல்கள் அனைத்தும் குஷ்டரோகத்தால் அழுகி விழுந்துவிட்டன. உடல் சகிக்க முடியாத துர்நாற்றம் அடித்தது; அவ்வளவு துர்பாகியமாக்கியமானவருக்கு பாபாவுக்கு சேவை சித்து மகிழும் மகத்தான பாக்கியம் கிடைத்தது.

ஓ , நான் எததனை அற்புதமான லீலைகளை விவரிப்பேன்! ஒருசமயம் பிளேக் கொள்ளை நோய் கிராமத்தை தாக்கியது. அப்பொழுது நடந்த அற்புதமொன்றைக் கேளுங்கள்.

தாதா சாஹேப் காபர்டேவின் பாலகன், பாபாவின் சஹாவாசத்தில் தாயாருடன் ஆனந்தமாக ஷீரடியில் இருந்தான்.

பாலகன் மிகச் சிறியவன், தாப ஜுரத்தால் தவித்தான்; (காபர்டேவின்  மனைவி - லக்ஷ்மி பாய் ) மனமுடைந்து போய்  அவஸ்தைப் பட்டாள் .

அவளுடைய இல்லம் அமராவதியில் இருந்தது; வீடு திரும்பி விட வேண்டும் என்று நினைத்தாள் . ஆகவே, சாயங்கால நேரத்தில் தகுந்த வாய்ப்பு கிடைத்தபோது பாபாவிடம் அனுமதி பெறுவதற்காக வந்தாள் .

பாபா மாலையில் சுற்றி வந்து கொண்டிருந்தபோது சத்திரத்துக்கு அருகில் வந்தார். காபர்டேவின் மனைவி பாபாவின் பாதங்களைப் பிடித்துக் கொண்டு, நடந்த விஷயத்தை சொன்னாள் .

இயல்பாகவே பெண்கள் பயந்த சுபாவமுள்ளவர்கள். குழந்தையினுடைய ஜுர  நடுக்கம் நிற்கவே இல்லை. போதாதற்கு கொடுமையான பிளேக் நோயைப் பற்றிய பீதியும் இருந்தது. குழந்தையினுடைய ஜுரத்தைப் பற்றியே மீண்டும் மீண்டும் முறையிட்டாள்.


Thursday, 3 January 2013

ஷிர்டி சாயி பாபா

சாந்தோர்கருக்கு அவர் விவரமான கடிதம் ஒன்று எழுதினார். சாந்தோர்கரும் உடனே கிளம்பி, பரமானந்த் என்னும் பிரசித்தி பெற்ற டாக்டரை அழைத்துக் கொண்டு ஷீரடிக்கு வந்தார்.

தீக்காயத்தின் எரிச்சலை அடக்கக்கூடிய பலவிதமான மருந்துகளை எடுத்துக் கொண்டு, டாக்டர் பரமானந்தையும் கூட அழைத்துக் கொண்டு, நானா சாஹேப் சாந்தோர்கர் ஷீரடிக்கு வந்து பாபாவின் எதிரில் நின்றார்.

பாபாவை வணங்கிவிட்டு, குசலம் விசாரித்துவிட்டு தாம் வந்த காரியம் என்ன என்பதையும் விளக்கி, தீக்காயம் ஏற்பட்ட கையைக் காட்டுமாறு கேட்டுக் கொண்டார்.

ஏற்கெனவே, தீக்காயம் பட்ட அன்றே பாகோஜி சிந்தே  பாபாவின் கைக்கு நெய் தடவி ஓர் இலையை சுற்றி அதன்மேல் இறுக்கமாகக் கட்டுப் போட்டிருந்தார்.

கட்டுகளைப் பிரித்து கையைப் பார்த்தபின், டாக்டர் பரமாந்திற்கும் காண்பிக்க வேண்டும்; முறையான மருத்துவம் ஆரம்பிக்க வேண்டும்; பாபா சீக்கிரமாக் குணமடைய வேண்டும்.

இந்த நல்லெண்ணத்துடன் நானா பாபாவைப் பலவிதமாகக் கெஞ்சி வேண்டி கொண்டார். டாக்டர் பரமானந்தும் கையின் நிலைமையை பார்க்க வேண்டும் என்பதற்காக கட்டுகளைப் பிரித்துவிட பாபாவைத் தூண்டும் வகையில் பலமுறைகள் முயன்றார்.

பாபா, "அல்லாவே நம் வைத்தியர்" என்று திரும்பத் திருப்பத் விளம்பிக் கொண்டு, "நாளைக்குப் பார்க்கலாம், நாளைக்குப் பார்க்கலாம்" என்று சொல்லி இழுத்தடித்து விட்டார். அவருடைய கையை டாக்டரிடம் காட்டவே இல்லை; இது பற்றி பாபாவுக்கு வருத்தமும் ஏதும் இல்லை.

டாக்டர் பரமானந்த் கொண்டுவந்த மருந்துகள் ஷீரடியின் காற்றை சுவாசிக்கவே இல்லை. ஆனால், இந்நிகழ்ச்சியின் மூலமாக அவர் சாயி தரிசனம் செய்து மகிழ்ச்சியடைய வேண்டுமென்று விதிக்கப் பட்டிருந்தது போலும்.

பாகோஜிக்கு மட்டுமே பாபாவுக்கு தினமும் சேவை செய்யும் உரிமை அளிக்கப் பட்டிருந்தது. ஆகவே பாகோஜி மட்டுமே தினமும் கையை உருவி விடுவார். இதன் விளைவாக சில நாள்களில் கை குணமடைந்தது. எல்லாரும் நிம்மதியடைந்து சந்தோஷப் பட்டனர்.

கை குணமடைந்த பின்னரும், தினந்தோறும் காலை வேளையில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் கட்டுகளைப் பிரிக்க வைத்து, உருவி விட்டபின் ,மறுபடியும் கட்டுகளைப் போட்டுக் கொள்ள வாய்த்த பாபாவின் தணியாத ஆவல் என்னாவாக இருக்க முடியும் என்று யாருக்கும் தெரியாது போயிற்று.

வலியோ புண்ணோ எதுவுமே இல்லாத உறுப்பு, தினமும் மிகுந்த அக்கறையுடன் கவனிக்கப் பட்டது. தீக்காயமோ அல்லது புண்ணோ இல்லாத இடத்தில்  தினமும் நெய் தடவி உருவப் பட்டது. இந்த சேவை பாபா மஹா  சமாதி அடையும் வரை தொடர்ந்தது.!


Thursday, 27 December 2012

ஷிர்டி சாயி சத் சரிதம்

ஒரு பைசாவைக் கூட அவர் எவரிடமிருந்தும் பெற்றுக் கொள்ளவில்லை. மருத்துவ ரீதியில் அவருடைய புகழ், அவர் பெற்ற நோய் நிவாரண வெற்றிகளைச் சார்ந்தே வளர்ந்தது. ஏழைஎளியவர்களின்  நோய் தீர்த்து, ஆரோக்கியம் தந்து, அந்த ஜில்லாவிலேயே (அஹமத் நகர்) சிறந்த ஹகீம் எனப் புகழ் பெற்றார்.

ஆனால், இந்த ஹகீம் மற்றவர்களுடைய நல்வாழ்வுக்காகவே வாழ்ந்தார். தமக்கு என்ன கிடைக்கும் என்பதை உதாசீனம் செய்துவிட்டார்.  மற்றவர்களுக்கு நன்மை நடக்கவேண்டுமென்பதற்காக அவர்களுடைய சகிக்க முடியாத வலிகளையும்  அவஸ்தைகளையும் தம்முடைய உடலில் ஏற்றுக் கொண்டு பொறுத்துக் கொண்டார்.

கதை கேட்பவர்களுக்கு நிவேதேனமாக, பாபாவின் தயை ஒழுகும் சுபாவத்தையும் எங்கும் நிறைந்த இயல்பையும் எடுத்துக் காட்டுமாறு இந்த சந்தர்ப்பத்தில் புதினமான கதை ஒன்று சொல்கிறேன்.

1910 ஆம் ஆண்டு தீபாவளிப் பண்டிகைக்கு முன்னாள் தனத்திரி யோதசியன்று பாபா துனியுனுள்  விறகுகளை போட்டுக் கொண்டு ஆசுவாசமாக உட்கார்ந்து கொண்டிருந்தார்
திடீரென்று பார்த்தால் , கொழுந்து விட்டுப் பெரிதாக எரிந்து கொண்டிருந்த துனி யினுடைய  தீயில் பாபாவினுடைய  கை செருகப் பட்டிருந்தது. பாபா நிச்சிந்தையாக தான் இருந்தார். கை என்னவோ கருகிப் போய்  விட்டது.

அவருடைய தொண்டரான மாதவ் இதை உடனே கவனித்தார். அருகிலிருந்த மாதவராவ் தேச்பாண்டேவும் இதைப் பார்த்து விட்டு, உடனே பாபாவை நோக்கி ஓடினார்.

பாபாவுக்குப் பின்பக்கமாகச் சென்று, தம்முடைய இரு கைகளையும் பாபாவின் இடுப்பைச் சுற்றி இறுக்கமாகக் கோத்து  பாபாவைப் பின்னுக்கு இழுத்தார்.

"ஆஹா !" பாபா என்ன காரியம் செய்து விட்டீர்?" என்று கூவினார். இக் கூவலைக் கேட்ட பாபா, மோன நிலையிலிருந்து திரும்பி, "ஓ  சாமா, உனக்கு தெரியுமா? ஒரு குழந்தை அதன் தாயினுடைய கையிலிருந்து திடீரென்று நழுவிக் கொல்லனுடைய உலைக் களத்தில் விழுந்து விட்டது.

"அவ்வாறு செய்யும்போது அவளையுமறியாமல் கையில் இடுக்கிக் கொண்டிருந்த குழந்தையை மறந்து விட்டாள் . மித மிஞ்சிய  சுறு சுறுப்பான, அமைதியற்றிருந்த குழந்தை, கையிலிருந்து விழுந்துவிட்டது. ஆனால் , சாமா, அப் பெண் குழந்தை விழுந்தவுடனேயே நான் குழந்தையை தூக்கி விட்டேன்.

"அவ்வாறு அப் பெண் குழந்தையை உலைக் களத்தில் இருந்து எடுக்கும்போது இது நடந்து விட்டது! கை எரிந்து கருகிப் போனால் போகட்டும்; குழந்தை உயிர் பிழைத்ததே!"

"யாரால், எந்த விதமாக, தீகாயமடைந்த கைக்கு வைத்தியம் செய்யப் படவேண்டும்?" என்றெண்ணி மாதவராவ் பிரமித்துப் போனார். நானா சாந்தோர்கருக்கு கடிதம் எழுத வேண்டுமென்று தீர்மானித்தார்.



Thursday, 20 December 2012

ஷிர்டி சாயி சத் சரிதம்

ஓர் ஆடு கொல்லப்  படும்போது  அதனுடைய குடல்கள் உள்வெளியாகத் திருப்பிக் கழுவப்பட்டு மடிப்பு மடிப்பாக உலர வைக்கப்படும்.

அதுபோலவே பாபா குடல்களை வெளியே எடுத்து உள்வெளியாக திருப்பி, ஜாக்கிரதையாக கழுவிச் சுத்தம் செய்தார்  பிறகு, அவர் குடல்களை ஒரு நாவல் மரத்தின்மீது உலர்தினார் மக்கள் இதைப் பார்த்து ஆச்சரியமும் பயமும் அடைந்தனர்.

இக்காட்சியை  தம் கண்களாலேயே  பார்த்த மனிதர்கள் இன்னும் வாழ்கின்றனர். அபூர்வமான சித்தர் இவர், என்று அவர்கள் சொல்கின்றனர்.

சில சமயங்களில் அவர் கைகளையும் கால்களையும் உடலிலிருந்து பிரித்துக் கண்ட யோகம் பயில்வார். பிரிந்த அவயங்கள் மசூதியில் தனித் தனியாக பல இடங்களில் விழுந்து கிடக்கும்.

உடலின் அவயங்கள் கண்ட துண்டமாக இவ்வாறு விழுந்து கிடக்கும் பயங்கரமான காட்சியை பார்க்க, மக்கள் கூட்டங்கூட்டமாக மசூதிக்கு ஓடி வந்த போது  அவர்கள் பார்த்தது பாபாவின் முழுமையான உருவத்தையே!

ஒருசமயம் இந்தக் காட்சியை பார்த்த ஒருவர் பீதியடைந்து, யாரோ ஒரு கொலைகாரன் பாபாவைக் கொன்று விட்டுத் துண்டு துண்டாக வெட்டிப் போட்டு விட்டான் என்று நினைத்தார்

மசூதியின் நான்கு மூலைகளிலும் உடலின் அங்கங்கள் இறைந்து கிடந்ததைப் பார்க்க முடிந்தது. அது நள்ளிரவு நேரம்; யாருமே அருகில் இல்லை; அவர் மிகக் கவலையுற்றார்

யாரிடமாவது போய்ச் சொல்லலாம் என்று பார்த்தால், சிக்கலில் மாடிக் கொள்ளக் கூடும் என்பது அவருடையப் பிரச்சினை. ஆகவே, அவர் மசூதிக்கு வெளியில் போய்  உட்கார்ந்து கொண்டார்.

அது பாபாவினுடைய யோகப் பயிற்சிகளுள் ஒன்றாக இருக்கலாம், என்று அவருக்குக் கனவிலும் தோன்றவில்லை. சின்னாபின்னமாக வெட்டப் பட்ட உடலின் காட்சி அவருக்குப் பெரும் பீதியை அளித்தது.

அவர் கண்டதை யாரிடமாவது சொல்ல வேண்டுமென்று அவர் விரும்பினாராயினும் முதற் செய்தி கொடுப்பதால் கொலைக் குற்றம் தம் மீது சாட்டப் படலாம் என்று பயந்தார் இந்த பயமே அவரை எவரிடமும் இச் செய்தியை சொல்ல முடியாமல் செய்து விட்டது.

அவருடைய மனதில் எண்ணற்ற கற்பனைகள் தோன்றின. ஆகவே, அவர் பொழுது புலர்ந்த பிறகு மறுபடியும் சென்று பார்த்தார்; பெரு  வியப்படைந்தார்.

அவர் ஏற்கனவே கண்ட காட்சி முழுக்க மறைந்து விட்டது. பாபா தம்முடைய வழக்கமான இடத்தில சௌக்கியமாக உட்கார்ந்து கொண்டிருந்தார். தாம் கண்டது ஒரு கனவோ என்று அவர் ஆச்சரியத்தில் ஆழ்ந்தார்.

தோதி-போதி  போன்ற யோக சாதனைகளை  பாபா தம் சிறு வயதிலிருந்தே பயின்று வந்தார். எவராலுமே அவருடைய யோக சக்திகளையும் அச் சக்திகளால் அடைய முடிந்த மர்மமான உடல் நிலைகளையும் புரிந்து கொள்ள முடியவில்லை. 


Thursday, 13 December 2012

ஷிர்டி சாயி சத் சரிதம்
கிராமத்து மக்களுக்கு அவர் நாட்டுமருந்துகளைக் கொடுத்துவந்தார். நோயினுடைய குறிகளை அறிந்து மருத்துவம் செய்து அதில் பெருமளவில் வெற்றியடைந்து புகழ் பெற்ற ஹகீமாகத் திகழ்ந்தார்

ஒருமுறை பக்தர் ஒருவருக்குக் கண்கள் இரண்டும் சிவந்து வீங்கிப் போய்  நெருப்புக் கோளங்களைப்  போல ஆகி விட்டன. கண்விழிகளில் ரத்த  நாளங்கள் வெடித்து விடும் போலச் சிவப்பேறிக் கிடந்தன. ஷீரடியில் வைத்தியர் ஒருவரும் கிடைக்கவில்லை.

நம்பிக்கையுள்ள எளிமையான பக்தர்கள் அவருடைய கண்களை பாபாவிடம் காண்பித்தனர். உடனே பாபா செங்கோட்டைக் காய்களை  கொணரச் செய்து அவற்றை அரைத்து இரண்டு உருண்டைகளாக செய்து கொண்டார்.

இம்மாதிரியான உபாதைக்கு சிலர் கர்மாவை உபயோகிப்பர். சிலர் பசும்பாலைப் பஞ்சில் தோய்த்து கண்களின் மேல் வைப்பர். சிலர் சீதள கற்பூரத் தையோ கண்ணுக்கிடும் மையையோ உபயோகிப்பர்.

அனால், பாபாவின் உபாய்மோ யாருமே கண்டறியாதது. செங்கோட்டை  உருண்டைகளை ஒவ்வொன்றாக எடுத்து, ஒவ்வொரு கண்ணாக அப்பி, துண்டுத் துணியால் கட்டுப்போட்டு விட்டார்.

மறுநாள் காலையில் கட்டு அவிழ்க்கப்பட்டு, கண்களின்மீது தாரையாக தண்ணீர் ஊற்றப் பட்டது. வீக்கம் அறவே வடிந்து விட்டது. விழிக் கோளங்கள்  நிர்மலமாக ஆகிவிட்டிருந்தன .

கண் எவ்வளவு நுட்பமான அங்கம்! ஆனால், செங்கோட்டையின் பிசின்கூட எரிச்சலையோ வலியையோ உண்டாக்கவில்லை. நேத்திர ரோகத்தை முழுமையாக முழுமையாக நிவாரணம் செய்து விட்டது. இம்மாதிரி எத்தனையோ அனுபவங்கள்.

பாபாவுக்கு தோதீ-போதி (ஹட யோகம்) தெரிந்தது. எவரும் அறியாமல் ஏதாவதொரு மறைவிடத்திற்கு சென்று குளியலை முடித்து விட்டு, குடல்களை (வாய்வழியாக) வெளியே கொண்டு வருவார். பிறகு குடலை நன்றாக கழுவி உலர்வதற்காக தொங்கவிடுவார்

மசூதியிலிருந்து கிணறு  இருந்த அதே தூரத்தில் ஓர் ஆலமரம் இருந்தது. ஆலமரதுக்கப்பால் மற்றொரு கிணறு இருந்தது. அந்தக் கிணற்றுக்கு அவர் இரண்டு நாள்களுக்கு ஒருமுறை செல்வார்.

நண்பகலில் கொளுத்தும் வெய்யிலில் யாரும் பார்த்துக் கொண்டிருக்கவில்லை என்று தெரிந்து கொண்டு, அவரே கிணற்றிலிருந்து தண்ணீர் இழுத்து முகத்தையும்  வாயையும் கழுவிக் கொள்வார்.

இம்மாதிரியான ஒரு சந்தர்பத்தில், அவர் குளிப்பதற்கு உட்கார்ந்து கொண்டிருந்த போது  வேகமாகக் குடல்களை வெளியே எடுத்து அவ்விடத்திலேயே கழுவ ஆரம்பித்தார்



Thursday, 6 December 2012

ஷிர்டி சாயி சத்சரிதம்

நற்செய்கையோ  அல்லது துற்செய்கையோ, எல்லாருடைய செய்கைகளும் மற்றும் பக்தருக்கு மட்டுமே தெரிந்த மர்மங்களும் பாபாவுக்குத் தெரிந்திருந்தன. அதைப் பற்றியோ சூசகமோ குறிப்போ சொல்லி பக்தரை ஆச்சரியத்தில் ஆழ்த்திவிடுவார்.

ஒன்றுமறியாதவர்  போன்று நடித்த ஞானக்கடல் அவர். உலகம் தம்மை ஏற்றுக் கொள்வதற்காகவும் புகழுக்காகவும் பாடுபடுவதென்பது அவருக்கு மகா எரிச்சலூட்டிய விஷயம். இதுவே சாயியின் லக்ஷணம்.

மனித தேஹத்தில் இருந்தாலும் அவருடைய செய்கைகள் தெய்வங்களுடையதைப் போன்று அபூர்வமானவை. பாபா ஷீரடியில் வாழும் பிரத்யக்ஷமான தெய்வம் என்றே அனைத்து  மக்களும் பாவித்தனர்.

பாபாவினுடைய அற்புதச் செயல்கள் என்னே ! பாமாரனாகிய நான் அதை எவ்வளவுதான் வர்ணிக்க முடியும்! மூர்த்திகளுக்கும் கோயில்களுக்கும் பாபா செய்த புனருத்தான பணிகள் அபாரமானவை.

ஷிர்டியிலிருந்த சனி, கணபதி, சங்கர் - பார்வதி, கிராம தேவி, மற்றும் மாருதி கோயில்களினுடைய சீரமைப்பு தாத்யா பாட்டீல்  மூலம் செய்யப் பட்டது.

மக்களிடமிருந்து பாபா தக்ஷிணை ரூபமாக வாங்கிய பணத்தில் ஒரு பகுதி தர்ம காரியங்களுக்காகச் செலவிடப்பட்டது. ஒரு பகுதி மக்களுக்கு வழங்கப் பட்டது.

சிலருக்கு 30 ரூபாய், சில பேருக்கு 10 ரூபாய், 15 ரூபாய் அல்லது 50 ரூபாய் என்று, பாபா யாருக்கெல்லாம் கொடுக்க வேண்டுமென்று விரும்பினாரோ அவர்களுக்கெல்லாம் வழங்கினார்.

இந்தப் பணம் அனைத்தும் தருமத்திலிருந்து வந்ததே; வாங்கிக் கொண்டவர்களும் அதை தருமம்  என்றே கருதினர். பாபாவும் அத்  தொகைகள் நல்ல காரியங்களுக்காகச் செலவிடப் படவேண்டுமென்று விரும்பினார்.

இவ்விதமாக சாயி தரிசனத்தால் சிலர் ஆரோக்கியமாகவும் திடகாத்திரமாகவும் ஆனார்கள். பலர் குஷ்டரோகத்திலிருந்து நிவாரணமடைவார்கள் . பலர் ஷேமத்தை அடைந்தார்கள்.

பாபாவின் பாதங்களை பணிந்ததாலேயே மை ஏதும் இட்டுக்கொள்ளாமல்  பல குருடர்கள் கண் பார்வை பெற்றனர். மூலிகைத் தைலம் ஏதும் தேய்க்காமலேயே முடவர்கள் கால்களில் சக்தி பெற்றனர்.

பாபாவினுடைய  மகிமை அபாரமானது. எவராலும் அளவிடமுடியாதது. நான்கு திசைகளிலிருந்தும் மக்கள் அவருடைய தரிசனத்திற்காக ஷிர்டியை நோக்கி வந்தனர்.

காலைகடன்களை முடித்த பின், சில நாள்களில் குளித்து விட்டும், சில நாள்களில் குளிக்காமலும் துனியின்  அருகில் ஒரே இடமாக தினமும் தியானத்தில் அமர்ந்திருப்பார்.

இடுப்பைச் சுற்றி ஒரு சுத்தமான  வேட்டியை கட்டிக் கொண்டு, நீளமான சட்டையை போட்டுக்கொண்டு, தலையில் அழகான வெள்ளை நிறத் தலைப் பாகை அணிந்து கொண்டிருப்பார். ஆரம்ப காலத்தில் இதுவே அவருடைய உடை.