valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday, 29 April 2021

 ஷீர்டி சாய் சத்சரிதம்

அண்ணன் மகன் சிறுவயதினன்; வேதனையைப் பொறுக்க முடியாது தவித்தான்; பிராண அவஸ்தைப்பட்டான். இதைக் கண்ட நெருங்கிய உறவினர்கள் மனமுடைந்து போயினர்.


எல்லாவிதமான உபாயங்களும் செய்யப்பட்டன; வியாதி சிறிதளவும் குறையவில்லை. ஆகவே, நெருங்கிய உறவினர்களும் நண்பர்களும் சம்பதிகளும், "தேவதைகளை ஆராதனம் செய்யலாம்" என்று கூறினர்.


தெய்வமும் தேவதைகளும் குலதேவதையும் திருப்திசெய்யப்பட்டன. இவற்றில் எதுவும் உதவிக்கு வரவில்லை. அப்பொழுதுதான் டாக்டருக்கு ஷிர்டியில் ஓர் அவ்லியா வசித்துவந்தது தெரிந்தது.


அவர் சாயி மஹராஜ்; யோகீசுவரர்; ஞானிகளில் தலைசிறந்தவர்; அவருடைய தரிசனம் ஒன்றே வியாதிகளை பரிஹாரம் செய்கிறது. இதைத்தான் டாக்டர் கேள்விப்பட்டார்.


ஆகவே சாயி தரிசனம் செய்ய விருப்பம் ஏற்பட்டது. தாயும் தந்தையும் தெய்வத்தின் பெயரில் இந்த நிவாரணத்தைச் செய்து பார்க்கலாம் என்று நிச்சயித்தனர்.


"அவர் மிகப் பெரிய அவ்லியா என்றும் அவருடைய கையால் உதீ தடவினால், தீராத கொடிய வியாதிகளும் குணமடைகின்றன என்றும் கேள்விப்படுகிறோம். இதை முயன்று பார்ப்பதால் யாருக்கு என்ன நஷ்டம்?


"வாருங்கள் போவோம்;; அவருடய பாதங்களை வந்தனம் செய்வதற்கு. இந்தக் கடைசி முயற்சியையும் செய்துபார்த்துவிடுவோம். இந்த வழியிலாவது அபாயம் விலகட்டும்! இதுவே கடைசி உபாயம்!


ஆகவே தாயும் தந்தையும் ஏற்பாடுகளை செய்துகொண்டு சாயி தரிசனம் செய்யும் ஆவலுடன் ஷிர்டிக்கு உடனே சென்றனர்.


ஷீர்டி வந்து சேர்ந்தவுடன் சாயி தரிசனம் செய்து பாதங்களை நமஸ்காரம் செய்துவிட்டு, அவருடைய சந்நிதியில் நின்றுகொண்டு பாலனின் துக்கத்தை விவரித்தனர்.


கூப்பிய கைகளுடன் கூம்பிய முகங்களுடன் சோகம் ததும்பிய குரலில் சாயியைப் பிரார்த்தனை செய்தனர், -


"இந்த பாலன் வியாதியால் பீடிக்கப்பட்டு வேதனைப்படுகிறேன். இவனுடைய துக்கத்தைப் பார்க்க எங்களுக்கு சகிக்கவில்லை; அடுத்து என்ன செய்வதென்றும் தெரியவில்லை. எங்களுக்கு கதிமோட்சம் என்னவென்று தெரியவில்லையே!


"ஓ, சமர்த்த சாயியே! புத்திரன் படும் பாட்டைப் பார்த்து துக்கப்பட்டுக் களைத்துவிட்டோம். உங்களுடைய அருட்கரத்தை இவன் தலைமேல் வைத்து, இவனுடைய வியாதியை நிவாரணம் செய்யுங்கள்.-


"உங்களுடைய மஹிமையைக் கேள்விப்பட்டு நாங்கள் இவ்வளவு தூரம் பயணம் செய்து இங்கு வந்திருக்கிறோம். அனன்னிய பாவத்துடன் உங்களை சரணடைகிறோம். எங்களுக்கு இவனுடைய உயிரை தானமாக விடுங்கள்!"


கருணாமூர்த்தியின் சாயி அவர்களுக்கு ஆறுதல் சொன்னார், "இந்த மசூதியில் அடைக்கலம் புகுந்தவர்கள் என்றுமே துர்கதி (கெடுகதி) அடையமாட்டார்கள்; யுகம் முடியும் காலம் வரை .- 


 

Thursday, 22 April 2021

 ஷீர்டி சாயி சத்சரிதம்

34 . உதீயின் பிரபாவம் (பகுதி 2 )

ஓம் ஸ்ரீ விநாயகனே போற்றி! ஸ்ரீ சரஸ்வதியே போற்றி!
ஸ்ரீ குருமஹாராஜனே போற்றி! குலதேவதைக்கும் ஸ்ரீ சீதாராமச்சந்திரனுக்கும் என்னுடைய பணிவான வணக்கங்கள். பூஜ்யகுரு ஸ்ரீசாயிநாதனை பக்தியுடன் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.

உதீயின் மஹிமைபற்றி நிகழ்ச்சிகள் நடந்தது நடந்தவாறு கடந்த அத்தியாயத்தில் விவரிக்கப்பட்டன. இந்த அத்தியாயத்திலும் உதீயின் குணலக்ஷணங்களை விவரிக்கும் வகையில் உதீயின் மஹிமைபற்றி மேற்கொண்டு பேசுவோம்.

கேட்பவர்கள் சுகத்தையும் சகல செல்வங்களையும் பெறுவதற்காகக் கடந்த அத்தியாயத்தைப் போலவே இந்த அத்தியாயத்திலும் உதீயின் வைபவத்தை அமைதியான மனத்துடன் கேட்பீர்களாக!

புரையோடிப்போய் எந்த வைத்தியத்திற்கும் ஆறாமல் தீராத வியாதியாகிவிட்ட ரணம், பாபாவின் கையால் அளிக்கப்பட்ட விபூதியைப் பூசியதால் நிர்மூலமாகியது.

இவ்வாறான உதீயின் கதைகள் அநேகம். திசை காட்டுவதுபோல் ஒரு காதையை மட்டும் சொல்கிறேன். அனுபவபூர்வமான காதையானதால் கேட்பவர்கள் ரசித்து மகிழ்வார்கள்.

நாசிக் ஜில்லாவில் மாலே காங்வ் என்னும் ஊரில் மருத்துவத் துறையில் பட்டம் பெற்ற டாக்டர் ஒருவர் இருந்தார். அவர் அன்னான் மகனுக்கு எந்தச் சிகிச்சையாலும் குணப்படுத்தமுடியாத ஒரு வியாதி இருந்தது.

அவரே ஒரு பட்டம் பெற்ற, தேர்ச்சி பெற்ற டாக்டர். அவர் நண்பரும் ஒரு டாக்டர். இருவருமே திறமை வாய்ந்த, புகழ்பெற்ற அறுவை மருத்துவ நிபுணர்கள். பலவிதமான அணுகுமுறைகளைக் கையாண்டும், கடைசியில் களைத்துப்போய் செய்வதறியாது திகைத்தனர்.

வியாதி, எலும்பில் புரையோடிய ஆறாத ரணம். ஹாட்யாவ்ரணம் என்று இந்த வியாதிக்கு மராட்டி மொழியில் பெயர்; இச் சொல் திரிந்து ஹாட் யாவர்ணம் என்றாகியது. இது எந்த மருந்துக்கும் கட்டுப்படாத ஒரு விசித்திரமான, தீராத வியாதி.

மனத்திற்குத் தோன்றிய உள்நாட்டு, வெளிநாட்டு வைத்தியமுறைகளனைத்தும் கையாளப்பட்டன; எதுவும் பலனளிக்கவில்லை. அறுவை மருத்துவமும் செய்யப்பட்டது. அதுவும் டாக்டருக்குப் பெருமைத் தேடித் தரவில்லை. 


 

Thursday, 15 April 2021

 ஷீர்டி சாய் சத்சரிதம்

பின்னர், பக்கீர் அளித்த விபூதியைப் பார்க்கவேண்டுமென்று ஆப்பாசாஹெப் விரும்பினார். அது ஒரு பொட்டலமாக இருந்தது; பிரேமையுடன் பொட்டலத்தைப் பிரித்தார்.


பொட்டலத்தில் விபூதியுடன் மலர்களும் அக்ஷதையும் இருந்தன. அவற்றைப் போற்றுதற்குரிய பொருள்களாக ஏற்று, ஒரு தாயத்தில் இட்டு புஜத்தில் பயபக்தியுடன் கட்டிக்கொண்டார்.


பின்னர், அவர் பாபாவை தரிசனம் செய்யச் சென்றபோது பாபாவின் ரோமம் ஒன்று கிடைத்தது. அதை அவர் பிரேமையுடன் ஏற்கெனவே அணிந்திருந்த தாயத்தினுள் சேர்த்து அணிந்துகொண்டார்.


பாபாவின் உதீயின் மஹிமைதான் என்னே! உதீ சிவனுக்கு பூஷணம் (அணிகலன்), உதீயை நம்பிக்கையுடன் பூசிக்கொள்பவரின் பாதையிலுள்ள விக்கினங்கள் உடனே விலக்கப்படுகின்றன!


காலை ஸ்நானத்தை முடித்தபின் எவர் தினமும் நெற்றியில் உதீ பூசி, சிறிது உதீயைப் பாபாவின் பாததீர்த்ததுடன் கலந்து அருந்துகிறாரோ, அவர் பரிசுத்தமடைகிறார்; புண்ணியம் சேர்க்கிறார்.


அதுமாத்திரமன்றி, உதீயின் மேலுமொரு விசேஷமான குணம் என்னவென்றால், அது பூரணமான ஆயுளை அளிக்கும். எல்லாப் பாதகங்களையும் மிச்சமின்றி முழுவதுமாக அழிக்கும். சுகமும் சந்தோஷமும் எப்பொழுதும் நிலவும்.


ஆப்பாவைச் சாக்காக வைத்து தேவாமிருதத்தையொத்த சுவையுடைய இக் காதை விருந்தை சாயி அளித்திருக்கிறார். நாமும், அழையாத விருந்தாளிகளாக இருந்த போதிலும், பந்தியில் உட்கார்ந்து திருப்தியாக விருந்துண்டோம்.


விருந்தாளியும் விருந்தளித்தவரும் எல்லாருமே ஒரே விருந்தைத்தான் உண்டோம்; இனிமையையும் சுவையையும் பொறுத்தவரை வித்தியாசம் ஏதுமில்லை. இந்த ஆத்மானந்த போஜனத்தை உண்டு திருப்தி அடையுங்கள்.


ஹேமாட் சாயி பாதங்களை சரணடைகிறேன். நாம் இதுவரை கேட்டது தற்சமயத்திற்குப் போதும். அடுத்த அத்தியாயத்தில் உதீயின் பிரபாவம் தொடரும்.


சாயிதரிசனம் செய்து உதீயைப் பூசியதால், நெடுநாள்களாக ஆறாது புரையோடிய ரணம் பூரணமாக குணமடைந்த காதையையும் நரம்புச் சிலந்தி வியாதியும் பிளேக் நோயும் நிவாரணம் ஆனா காதைகளையும் சொல்லப்போகிறேன். பூரணமான மனவொன்றிப்புடன் கேளுங்கள்.


எல்லோருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்! ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு, சாயி பக்தன் ஹேமட் பந்தால் இயற்றப்பட்ட, 'ஸ்ரீ சமர்த்த சாயி சத் சரித்திரம்' என்னும் காவியத்தில், 'உதீயின் பிரபாவம்' என்னும் முப்பத்துமூன்றாவது அத்தியாயம் முற்றும்.


ஸ்ரீ சத்குரு  சாயிநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.


சுபம் உண்டாகட்டும். 


 

 

Thursday, 8 April 2021


 ஷீர்டி சாய் சத்சரிதம்

'நான் பத்து ரூபாய் கொடுத்திருப்பேன்' என்று ஆப்பா வாய்விட்டுச் சொல்லி இருந்தால், முழுப்பணத்தையும் கொடுக்காது அவர் எப்படித் தம் வாக்கைக் காப்பாற்றமுடியும்; எப்படிக் கடனிலிருந்து விடுபடமுடியும்?

இந்தப் பக்கீர் மற்றவர்களைப் போல் அல்லர். கையில் கிடைத்ததை அப்படியே ஏற்றுக்கொண்டு திரும்பிப்போக, அவர் என்ன ஊர் ஊராகத் திரியும் பிச்சைக்காரரா என்ன?

ஆப்பா வாய்விட்டுச் சொன்ன நாள் அஸ்தமனமாவதற்கு முன்பாகவே அவர் திரும்பி வந்தார். ஆப்பாவுக்குத்தான் அவர் வேறு யாரோ முன்பின் தெரியாத பக்கீர் என்னும் குழப்பம் ஏற்பட்டது.

பக்கீர் தக்ஷிணை கேட்டபோது அவரிடம் ஆறு ரூபாய் இருந்தது. ஆயினும் அவர் தம் வசம் இருந்த முழுப் பணத்தையும் கொடுக்கவில்லை.

ஆப்பாவின்மீது பிரேமை இல்லையென்றால், பக்கீர் வேஷத்தில் பாபா வந்திருப்பாரா? மேலும், மீண்டும் மீண்டும் தக்ஷிணை கேட்டு பாபா நாடகமாடியிருக்கவிட்டால்,  இக் காதை எப்படி ருசியாக இருந்திருக்கும்?

ஆப்பாசாஹேப் நிகழ்ச்சி ஓர் உதாரணம் மாத்திரமே. உங்களுடைய கத்தியும் என்னுடைய கதியும் வேறில்லை! நாம் எல்லாருமே ஆரம்பத்தில் பெரிய திட்டங்கள் போடுகிறோம். ஆனால், சரியான நேரம் வரும்போது சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு வேறுவிதமாகச் செயல்படுகிறோம்.


வாக்கும் உறுதிமொழியும் அளிப்பதில் நமது உற்சாகத்திற்கு குறையே இல்லை. ஆனால், கொடுக்கவேண்டும் என்று வரும்போது, சந்தேகங்கள் முளைத்தது தடுமாறுகிறோம்; திடமாகாச் செயல்படுவது துர்லபம் (எப்பொழுதோ தான்).

மிதமகாப் பேசி, அதையும் இதமாகப் பேசி, தம்முடைய வாக்கின்படி செயல்பட்டு அதை நிறைவேற்றுபவரை நம்மிடையே காண்பது அரிது.

தம்மிடம் அனன்னியமான பாவத்துடன் பக்தி செலுத்துபவருடைய இவ்வுலக விருப்பங்களையும் மேலுலக விருப்பங்களையும் சமர்த்த சாயி நிறைவேற்றிவைக்கிறார்.

ஆப்பா புத்திசாலி; ஆங்கிலப் படிப்பும் படித்திருந்தார். ஆயினும் ஆரம்பித்தில் அவருக்கு அரசாங்கம் ரூ. 40 /- மட்டுமே மாதச் சம்பளமாகக் கொடுத்தது.

பின்னர், நிழற்படத்தைக் கொண்டுவந்த பிறகு அவருக்குச் சம்பளம் படிப்படியாக உயர்ந்து நாற்பது ரூபாயை போலப் பல மடங்காக ஆயிற்று.

பாபாவுக்கு ஒன்று கொடுத்தால் பத்தாகத் திருப்பி கொடுக்கிறார். - பத்து மடங்கு அதிகாரம் - பத்து மடங்கு சக்தி. சகலமான பக்தர்களும் இந்த அனுபவத்தை அவ்வப்பொழுது அடைந்தார்கள்.

அதுமட்டுமல்லாமல், அதுமாதிரியான நிஷ்டையிலிருந்து ஆன்மீக நாட்டம் வளர ஆரம்பிக்கிறது. இது என்ன சாமானியமான லாபமா? பாபாவின் அளிக்கும் திறன் விசித்திரமானது அன்றோ!

 


 

Friday, 2 April 2021

 

ஷீர்டி சாய் சத்சரிதம்

நாசிக்கில் 'காலாராமர் கோயிலுக்குச் சென்றபோது எதிர்பாராமல் நரசிங்க மஹராஜ் என்னும் ஞானியை தரிசனம் செய்தனர்.

பக்தர்கள் குழாம் சூழ்ந்திருந்தபோதிலும், மஹராஜ் சட்டென்று எழுந்துவந்து கர்னிக்கின் மணிக்கட்டைப் பிடித்துக்கொண்டு, "என்னுடைய ரூபாயைக் கொடு" என்று கேட்டார்.

கர்னிக் ஆச்சரியமடைந்து, மிகுந்த ஆனந்தத்துடன் ரூபாயைக் கொடுத்தார். தாம் முன்னம் மனத்தளவில் சமர்ப்பணம் செய்த ஒரு ரூபாயை சாயியே இப்பொழுது வாங்கிக்கொண்டார் என்று உணர்ந்தார்.

'சாயி வாங்கிக்கொண்டார்' என்று சொல்வது முற்றிலும் சரி என்று சொல்லமுடியாது. கொடுப்பதைப்பற்றிய எண்ணம் மனத்தின் மூலையில் எங்கோ அடங்கியிருக்கும் சமயத்தில், சாயி பலாத்காரமாகப் பிடுங்கிக்கொள்கிறார். அதுதான் இங்கு நடந்தது!

மனிதனின் நெஞ்சத்தில் எத்தனையோ சங்கற்பங்களும் விகற்பங்களும் அலைமேல் அலையாக ஓடுகின்றன. முதலில் ஒரு நல்ல எண்ணம் தோன்றுகிறது; ஆனால், அதைச் செயல்படுத்தும் தருணம் வரும்போது எத்தனையோ கற்பனைகள் குறுக்கிடுகின்றன.

ஆயினும் ஆரம்பித்தில் தோன்றிய அலைதான், அது ஒரு நல்ல எண்ணமாக இருக்கும் பட்சத்தில், ஊட்டம் பெற்று மங்களமான செய்கையாக முடிகிறது.

அந்த நல்ல திட்டத்தின்மேல் மனத்தைக் குவிக்கவேண்டும்; திடமாக அப்பியாசம் செய்யவேண்டும்; திரும்பத் திரும்ப மனத்தில் உருட்ட வேண்டும்; அதை மறந்துபோக விடக்கூடாது; எப்பாடுபட்டாவது வாக்கை (திட்டத்தை) நிறைவேற்றவேண்டும்.

ஆப்பாசாஹேப் ஒரு நேரத்தில் அந்த வார்த்தைகளை சொல்லிவிட்டு, பிறகு மறந்துபோகும் வாய்ப்பு இருக்கவே செய்தது. ஆகவே அந்த வார்த்தைகள் சொல்லப்பட்ட தினத்தன்றே அவற்றை நிறைவேற்றிவைத்து பக்தியின் பெருமையை இவ்வுலகம் அறியும்படி செய்தார் சாயி!

மொத்தமாகப் பத்தொன்பது ரூபாய் கைக்கு வந்தபின், அவர் ஏன் ஒன்பது ரூபாயைத் திருப்பிக் கொடுக்கவேண்டும்? ஏனெனில், ஆப்பாவின் நிறைவேறாத விருப்பம் பாத்து ரூபாய்க்கு குறையாமல் கொடுக்கவேண்டும் என்பதே!

பாபாவின் கையால் தொடப்பட்ட இந்த ஒன்பது ஆணிப்பொன் நாணயங்களால் ஆன அட்டிகை, வாஸ்தவத்தில் அவர் பக்தகோடிகளுக்கு நவவிதபக்தி என்னும் ஆன்மீகப் பாதையை ஞாபகப்படுத்தும் சாதனமே.

பாபா தேகவியோகம் அடைந்த கதையை கேட்கும்போது, கடைசி நேரத்தில் அவர் ஒன்பது ரூபாய் தானம் செய்த புதுமையைப்பற்றிக் கேட்பீர்கள்.

ஆப்பாவின் மனைவி உடலாலும் வாக்காலும் மனத்தாலும் ஒன்றி, ஒரே ஒரு ரூபாயை தக்ஷிணையாக அளித்தார். அதை பாபா மிகுந்த திருப்தியுடன் ஏற்றுக்கொண்டார். மேலும் வேண்டுமென்று அவரைக் கேட்கவேயில்லை.

ஆனால், ஆப்பாவோ, தம் மனைவி கொடுத்த தக்ஷிணை அற்பமான தொகை என்று நினைத்தார். "நான் வீட்டில் இருந்திருந்தால் அந்தப் பக்கீருக்கு அங்கேயே அப்பொழுதே அதைப் போல் பத்துமடங்கு அளித்திருப்பேன்" என்று அவர் நினைத்தார்; சொன்னார். 
 

 

Thursday, 25 March 2021

 ஷீர்டி சாயி சத்சரிதம்

நண்பர் சித்ரேவிடம் மூன்று ரூபாய் இருந்தது. ஆப்பா அதையும் வாங்கிப் பக்கீரிடம் கொடுத்தார். அப்பொழுதும் பக்கீர் மேலும் வேண்டுமென்று கேட்பதை நிறுத்தவில்லை.


ஆப்பாசாஹெப் பக்கீரிடம் சொன்னார், "வீட்டுக்கு வந்தால் மேலும் தருவேன்". பக்கீர் அதற்கு ஒப்புக்கொண்டார். மூவரும் ஆப்பாவின் வீட்டுக்குத் திரும்பினர்.


வீட்டுக்குத் திரும்பியவுடனே ஆப்பா மேலும் மூன்று ரூபாய் கொடுத்தார். அதுவரை மொத்தம் ஒன்பது ரூபாய் கொடுத்தாயிற்று; ஆனால், பக்கீர் அப்பொழுதும் திருப்தி அடைந்தாரில்லை!


அவர் மேலும் தக்ஷிணை கேட்டபோது ஆப்பா சொன்னார், "என்னிடம் இப்பொழுது ஒரே ஒரு பத்து ரூபாய் நோட்டுதான் இருக்கிறது.-


"சில்லறை நாணயங்கள் எல்லாவற்றையும் கொடுத்துவிட்டேன். வேறு சில்லறை இல்லை". "நோட்டைக்கொடுத்துவிடலாமே" என்று பக்கீர் சொன்னார். ஆப்பா நோட்டைக் கொடுத்துவிட்டார்.


பத்து ரூபாய் நோட்டு கைக்கு வந்தவுடன், ரூபாய் நாணயங்கள் ஒன்பதையும் திருப்பிக் கொடுத்திவிட்டுப் பக்கீர் வந்த வழியே மிக வேகமாகத் திரும்பிச் சென்றுவிட்டார்.


பக்தர்கள் தாமாகவே வெளிவிடும் வார்த்தைகள் என்னவோ, அவற்றை சாயி பரிபூரணமாக நிறைவேற்றிக்கொள்வார் என்னும் உறுதியே இக் காதையின் சாரமாகும்.


கேட்பவர்கள் உற்சாகம் கொண்டவர்களாக இருப்பதால், இந்த நேரத்தில் என் ஞாபகத்திற்கு வருகின்ற, இதே கருத்தை வெளிப்படுத்தும் இன்னொரு காதையை சொல்கிறேன். மிகுந்த பயபக்தியுடன் கேளுங்கள்.


ஹரிபாவு கர்னிக் என்ற பெயர்கொண்ட பக்தரொருவர் இருந்தார். டஹானா என்ற கிராமத்தில் வசித்த இவர், சாயியிடம் அன்னன்னிய பக்தி வைத்திருந்தார்.


1917 ஆம் ஆண்டு குரு பூர்ணிமா புண்ணிய தினத்தன்று ஷிர்டிக்கு புனித பயணமாக சென்றார். அப்பொழுது நடந்த நிகழ்ச்சியைத்தான் நான் இப்பொழுது சொல்லப்போகிறேன்.


விதிமுறைகளின்படி பூஜையை செய்தபின், உடைகளையும் தக்ஷிணையையும் அர்ப்பணம் செய்துவிட்டு அனுமதி பெற்றுக்கொண்டு கிளம்பினார். மசூதியின் படிகளில் இறங்கியபோது மனத்தில் ஓர் எண்ணம் உதித்தது.


திரும்பிச் சென்று மேலும் ஒரு ரூபாய் தக்ஷிணையாக அளிக்க வேண்டுமென்று தோன்றியது. ஆனால், அந்த எண்ணத்தைக் கைவிட்டுவிட்டு அவரே அந்த ரூபாயை வைத்துக்கொள்ளும்படி நேர்ந்தது.


எவர், வீடு திரும்ப அனுமதி பெற்றுக்கொடுத்தாரோ அவர் (மாதவ்ராவ் தேச்பாண்டே ), கர்னிக் விடைபெற்றுக்கொண்டுவிட்டதால் மேற்கொண்டு பயணத்தைத் தொடரவேண்டுமென்றும் திரும்பி வரவேண்டாமென்றும் மேலிருந்து சைகையால் தெரிவித்தார்.


சைகையை நம்பிக்கையுடன் ஏற்றுக்கொண்ட கர்னிக், இடத்தை விட்டு நகர்ந்து பயணத்தைத் தொடர்ந்தார். வீடு திரும்பும் பயணத்தில் அவரும் நண்பரும் நாசிக்கில் தங்கினர்.

 


 

Thursday, 18 March 2021

 ஷீர்டி சாயி சத்சரிதம்

ஆப்பாசாஹேப் பிற்பகலில் டானேவுக்குத் திரும்பினார். அவர் இல்லாதிருந்தபோது என்ன நடந்ததென்பதைக் கேட்டவுடன், கோட்டைவிட்டதற்காக மனம் வருந்தினார்.


ஒரே ஒரு ரூபாய் தக்ஷிணையாகக் கொடுக்கப்பட்டதை நினைத்து லஜ்ஜையடைந்தார். "நான் இங்கு இருந்திருந்தால் தக்ஷிணையாக பத்து ரூபாயாவது கொடுக்காமல் அவரை அனுப்பியிருக்கமாட்டேன்".


ஆப்பாசாஹேப்  தமக்குத்தாமே இவ்வாறு சொல்லிக்கொண்டார். கொஞ்சம் மனம் வாடினார். பக்கீரை ஒருவேளை மசூதியில் காணமுடியலாம் என நினைத்து, சாப்பிடாமலேயே அவரைத் தேடிக் கண்டுபிடிக்கக் கிளம்பினார்.


மசூதியிலும் தகியாவிலும், எங்கெல்லாம் பக்கீர்கள் வழக்கமாகத் தாங்குவார்களோ அங்கெல்லாமும் தேடி அலைந்தார்.


தேடித் தேடிக் களைப்புற்றாரே தவிர, பக்கீரைக் கண்டுபிடிக்க இயலவில்லை. பசியுடனும் ஏமாற்றத்துடனும் வீடு திரும்பியபின் உணவுண்டார்.


வெறும் வயிற்றுடன் தேடும் வேலை எதையும் செய்யக்கூடாது என்பதை அவர் அறிந்திராரில்லை. முதலில் ஜீவனைத் திருப்திசெய்ய வேண்டும். அதன் பிறகுதான் தேடும் வேலையை ஆரம்பிக்கவேண்டும்.


இந்த யதார்த்தமான உண்மையாகிய தத்துவம், பாபா சொன்ன கதையிலிருந்தே விளங்கியிருக்கும். அதை மறுபடியும் சொல்வதால் என்ன பயன்?


சென்ற அத்தியாயத்தில் 'குரு மஹிமை' என்ற தலைப்பில் மனங்கவரும் கதையொன்று சொல்லப்பட்டது. இக் கதையில், கருணை மிகுந்த ஸ்ரீ சாயி, தம் குருவின் அறிவுரையைத் தம்முடைய திருவாய்மொழி மூலமாகவே விளக்கினார்.


அந்த வார்த்தைகளின் சத்தியம் இப்பொழுது ஆப்பாவுக்கு அனுபவமாக கிடைத்தது. உணவுண்டபின் சித்ரே என்னும் நண்பருடன் மறுபடியும் சகஜமாக வெளியே கிளம்பினார் ஆப்பா.


சிறிது தூரம் சென்றபின், ஒருவர் தம்மையே பார்த்துக்கொண்டிருந்ததையும்  தம்மை சந்திப்பதற்காக தாமிருந்த இடத்தை நோக்கி வேகமாக வந்ததையும் கண்டார்.


அவர் நெருங்கி வந்தபோது ஆபாசாஹேப் அவரை ஓரக்கண்ணால் பார்த்தார். காலையில் தமது வீட்டுக்கு வந்த நபர் அவராகத்தான் இருக்க வேண்டும் என்று நினைத்தார்.


"நான் இவ்வளவு நேரம் தேடிய பக்கீர் இவர்தான் என்று தோன்றுகிறது. நகத்தின் நுனிவரை, நான் வைத்திருக்கும் நிழற்படத்தை போலவேயிருக்கிறார். எனக்கு ஒரே வியப்பாக இருக்கிறது".


இவ்வாறு ஆப்பா தமக்குள்ளேயே தெளிவு தேடிக்கொண்டிருந்தபோது, திடீரென்று பக்கீர் கையை நீட்டினார். நீட்டிய கையில் ஆப்பா ஒரு ரூபாயை வைத்தார்.


பக்கீர் மேலும் கேட்டபோது, ஆப்பா இன்னொரு ரூபாய் கொடுத்தார்; மேலும் ஒரு ரூபாயும் கொடுத்தார். அனால், பக்கீரோ இன்னும் வேண்டுமென்று கேட்டார். உண்மையான அதிசயம் இனிமேல்தான் மலரப்போகிறது.