valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday, 9 July 2015

ஷிர்டி சாயி சத்சரிதம்

உங்களுடைய சித்தம் மகிழ்ச்சியால் பொங்கும்; உங்களுடைய பிரபஞ்ச உணர்வு மேன்மையுறும். ஆகவே, கதை கேட்பவர்களே, உங்களுடைய கவனத்தை கொடுத்து ஞானிகளுடைய மகிமையை அறிந்து கொள்ளுங்கள்.

எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்! ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு, சாயி பக்தன் ஹெமாத் பந்தால் இயற்றப்பட்ட, 'ஸ்ரீ சமர்த்த சாயி சத்சரிதம்' என்னும் காவியத்தில், 'சோல்கரின் கற்கண்டு விநியோகம்' என்னும்  பதினைந்தாவது அத்தியாயம் முற்றும்.

ஸ்ரீ சத்குரு சாயி நாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.

சுபம் உண்டாகட்டும். 


Thursday, 2 July 2015

ஷிர்டி சாயி சத்சரிதம்

எவர் இந்த அத்தியாயத்தை பயபக்தியுடன் படிக்கிறாரோ, அல்லது பலமுறைகள் திரும்பத் திரும்ப பாராயணம் செய்கிறாரோ, அவருடைய சங்கடங்கள் அனைத்தும் குருராயரால் நிவாரணம் செய்யப்படும்.

வேறெதையும் நாடாமல் சாயியின் பாதங்களில் எவர் சிரம் தாழ்த்துகிறாரோ அவர், தம்மைக் காக்கும் தெய்வமும் அபயம் அளிப்பவரும் நன்மையைச் செய்பவரும் தீமையை அழிப்பவரும் ஒரே அடைக்கலமும் சாயியே என்று உணர்ந்து கொள்வர்.

தவறு செய்துவிடாதீர்கள்; சந்தேஹம் வேண்டா! சாயினாதர் அத்தகையவரே! பக்தர்களின் நலனுக்காகவே என்னுடைய சூக்கும அனுபவ விசேஷத்தை உங்களுக்கு எடுத்துரைக்கிறேன்.

"இந்த ஜகத்தில் நான் ஒருவனே இருக்கிறேன்; என்னைத் தவிர வேறெதுவும் இல்லை. இப்பூவுலகம் மாத்திரமல்லாது மூன்று உலகங்களிலும்  நான், நான் மாத்திரமே இருக்கின்றேன்;"

இந்த அத்வைத ஞானம் உணர்வூட்டபடும் போது, பயத்தின் நிழல் கூட இருக்காது. இந்த ஞானம் அடைந்தவருக்கு எல்லாமே பிரபஞ்ச உணர்வால் நிரம்பியிருக்கும். அஹங்காரதிற்கும் அபிமானத்திற்கும் இங்கு இடமே இல்லை.

ஹெமாத் பந்த் சாயியிடம் முழுமையாக சரணடைகிறேன்; அவருடைய பொற் கமலப் பாதங்களில் இருந்து ஒரு கணமும் பிரியமாட்டேன். ஏனெனில், சம்சார சாஹரத்தை கடப்பதற்கு அதுவே பத்திரமான வழியாகும். மேற்கொண்டு, சொல்லப் போகும்  சுவாரசியமான காதையைக் கேளுங்கள்.

அடுத்த அத்தியாயத்தில், பிரம்ம ஞானம் என்பது விரல்களால் சிட்டிகை போடுவது போன்று சுலபம் என்று நினைக்கும் மக்கள், எப்படி பிரம்ம ஞானம் வேண்டுகிறார்கள் என்பதை ஒரு முக்கியமான நிகழ்ச்சியை உருவாக்குவதன்  மூலம் குரு சிரேஷ்டரான சாயி விளக்குவார்.

ஒரு பேராசை பிடித்த மனிதர் பிரம்ம ஞானம் வேண்டுவார்; மகாராஜ் அம்மனிதருடைய ஜோபியில் இருந்தே அதை எடுத்துக் கொடுப்பார்.

'ஆசையை துறக்காதவன் பிரம்ம ஞானத்தை எக்காலத்தும் அடைய முடியாது; இதில் சந்தியம் வேண்டா' என்னும் கருத்தை பாபா எவ்வளவு அழகாக எடுத்துக் காட்டினார் என்பதை இக்காதையை கேட்பவர்கள் நன்கு புரிந்து கொள்வார்கள்.

பிரம்ம ஞானம் அடையக்கூடிய அதிகார் யார்? அது யாருக்கு கிடைக்கும்? அதைப் பெற வழி யாது? இவற்றை எல்லாம் மகாராஜ் அடுத்த அத்தியாயத்தில் விவரமாக எடுத்துரைப்பார்.

அவருடைய அடிமையின் அடிமையாகிய நான், இந்த சாயி பிரேமவிலாசத்தை நீங்கள் மிக உல்லாசாமாக கேட்க வேண்டுமென்று  பணிவுடன் ஆசை கொள்கிறேன்.


Thursday, 25 June 2015

ஷிர்டி சாயி சத்சரிதம்

அங்கிருந்து கிளம்பிய பல்லி , இடைவிடாது ஒலி  செய்து கொண்டிருந்த  தன்  அக்காள் பல்லியிடம்  நேராக ஓடியது. ஒலி  எங்கிருந்து வந்ததோ அந்த  திசையிலேயே  பெருமிதத்துடன் ராஜ நடை  போட்டுச் சென்றது.

எத்தனையோ நாட்களுக்குப் பிறகு, சகோதரிகள்  இரண்டும் சந்திக்க நேர்ந்தது. இரண்டும் கட்டியணைத்துக் கொண்டு வாயில் முத்தமிட்டுக் கொண்டன.  பிரேமையின் அபூர்வமான கொண்டாட்டம்!

ஒன்றை ஒன்று வட்டமாகச் சுற்றி மகிழ்ச்சியுடன்  தட்டாமாலை சுற்றி இஷ்டம்போல் செங்குத்தாகவும் கிடக்கையாகவும் குறுக்காகவும் சுழன்று ஆட்டம் போட்டன.

ஔரங்காபத் நகரம் எங்கே, ஷிரிடி எங்கே! எவ்வளவு விசித்திரமான நிகழ்ச்சி இது! குதிரையின்மீது திடீரென்று ஒருவர் எப்படி வந்தார்? ஒரு பல்லியை எப்படிக் கூட்டி வந்தார்?ஓ, என்ன வினோதம்!

அந்தப் பல்லி ஔரங்காபதில் இருந்து இருக்கலாம்; குதிரையின் தீனிப்பையில் புகுந்து இருக்கலாம். ஆனால், கேள்வியும் பதிலும் எப்படிச் சரியான தருணத்தில் நிகழ்ந்தது? மிகப் பொருத்தமான நேரத்தில் அது நிகழ்ந்தது உண்மையில் ஓர் ஆச்சரியம்!

ஓ, பல்லி முக்கமிட ஆரம்பித்து அடியவரை கேள்வி கேட்க வைத்ததே! நேரிடை அனுபவத்தால் பின்னர் நிரூபிக்கப் பட்ட பல்லி சொல்லின் முக்கியத்துவத்தை, எப்படி பாபா முன்னரே விளக்கினார்?

ஈடிணையற்ற நிகழ்ச்சியன்றோ இது! ஹாஸ்யத்தை எவருமே விரும்புவராதலால், ஞானிகள் இணையற்ற இந்த யுக்தியை பக்தர்களின் நல்வாழ்வுக்காக கையாண்டனர்.

யோசித்து பாருங்கள்! விவரம் அறிய விரும்பிய அடியவர் அங்கு இல்லை என்றால், அல்லது இருந்தும் அந்தக் கேள்வியைக் கேட்காமல் விட்டிருந்தால், சாயியினுடைய மகத்துவம் எவ்வாறு வெளிவந்திருக்கும்? எவருக்குப் பல்லி சொல்லின் அர்த்தம் புரிந்திருக்கும்?

எத்தனையோ பல்லிகள் எவ்வளவோ முறைகள் முக்கம் செய்ததை நாம் கேட்டிருக்கிறோம். பல்லிகள் ஏன் ஒலி செய்கின்றன என்றோ, அந்த ஒலிக்கு என்ன அர்த்தம் என்றோ, கண்டுபிடிக்க யாராவது முயற்சி செய்து இருக்கிறீர்களா?

சாராம்சம் என்னெவென்றால், பிரபஞ்ச விளையாட்டை நிர்வகிக்கும் சூத்திரங்கள் சூக்குமமானவை; ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டவை. யாரால் அவற்றை கற்பனை செய்ய முடியும்? எல்லாரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திவிடுகின்றன!

இதற்கு நேர்மாறாக, பல்லி முக்கமிட்டால் அனர்த்தம் விளையும் என்றும் கெடுதல் ஏதும் நேராமல் இருப்பதற்காக நாம் பல்லி சொல்லுக்குக் 'கிருஷ்ணா கிருஷ்ணா' என்று பதில் அளிக்க வேண்டுமென்றும் மக்கள் நினைக்கிறார்கள்.

அது எப்படியாவது இருந்துவிட்டு போகட்டும்! இது பக்தர்களுக்குத் தம்மீது இருந்த விசுவாசத்தை திடமாக்குவதற்கு பாபா கையாண்ட யுக்தியாகும். இது வெறும் அற்புதம் மாத்திரம் அன்று!


Thursday, 18 June 2015

ஷிர்டி சாயி சத்சரிதம்

இங்கே சோல்கர்  ஒரு கருவி மாத்திரமே! எப்பொழுதும்போல அடியவர்களுக்கு போதனை செய்யும் பாபாவின் லீலையே இது. கற்பனை செய்தும் பார்க்கமுடியாத லீலைகள் நம்மன் ஆச்சரியத்தில் ஆழ்த்தாத சந்தர்ப்பமே இல்லை.

இப்பொழுது பாபாவினுடைய  நுண்ணிய திறன்பற்றி நிகழ்ச்சியொன்றை விவரித்துவிட்டு இந்த அத்தியாயத்தை முடித்துவிடுகிறேன். இது, ஒருவர், கேட்ட கேள்வியும் அதற்கு பாபா அளித்த பதிலுமான விவரம்.

ஒருசமயம் பாபா தம்முடைய வழக்கமான ஆசனத்தில் மசூதியில் உட்கார்ந்துகொண்டு இருந்தார்.  அவருக்கு எதிரில் உட்கார்ந்து கொண்டிருந்த அடியவர், ஒரு முக்கத்தைக்  (பல்லி  செய்த ஒலியைக் ) கேட்டார்.

பல்லி முக்கமிடுவதோ, அல்லது ஒருவருடைய உடலின் எந்த அங்கத்தின் மேலாவது விழுவதோ, வரப்போகும் நிகழ்ச்சிகளுக்கு  சகுனமாக கருதபடுவதால், தமக்கிருந்த ஆர்வத்தால் அடியவர் பாபாவை மேம்போக்காக ஒரு கேள்வியைக் கேட்டார்.

"பாபா, பின்சுவரில் இருக்கும் பல்லி  ஏன் முக்கமிடுகிறது? அதனுடைய மனத்தில்  என்ன இருக்கிறது? அசுபமான விஷயமாக இருக்காதன்றோ?"

பாபா அவருக்கு பதில் அளித்தார், "அவுரங்காபாத்தில் இருந்து அவளுடைய சகோதரி இங்கு வருகிறாள் என்று தெரிந்து, பல்லிக்கு  சந்தோசம் பொங்குகிறது".

பல்லி  என்ன ஒரு பெரிய பிராணி! தாய், தந்தை, சகோதரன், சகோதரி உறவுகளைப் பற்றிய பேச்சு எங்கே? இவ்வுலக விவகாரங்களுக்கும் பல்லிக்கும்  என்ன சம்பந்தம்?

அடியவர் மேற்கண்டவாறு நினைத்து, பாபா ஹாஸ்யமாக ஏதோ பதில் சொன்னார் என்று நினைத்துக் கொண்டு அங்கேயே  சிறிது நேரம் அமைதியாக உட்கார்ந்திருந்தார்.

திடீரென்று அவுரங்காபாத்தில் இருந்து குதிரையின் மேல் சவாரி செய்து கொண்டு பாபாவை தரிசனம் செய்வதற்கு ஒருவர் வந்தார். பாபா அப்பொழுது குளித்துக் கொண்டிருந்தார்.

மேற்கொண்டு பயணம் செய்யவேண்டிய அவசியம் இருந்ததாலும், குதிரைக்குத் தினப்படிப் போடவேண்டிய தீனியை போடாமல் குதிரையால் மேற்கொண்டு நடக்க முடியாதென்பதாலும் அம்மனிதர் ஏதாவது தானியம் வாங்கிக் கொண்டு வரலாம் என்று பஜாருக்கு கிளம்பினார்.

அவுரங்காபாத்தில் இருந்து வந்த மனிதர் (வியாபாரி), குதிரையின் தீனிப்பையைத்  தம் கையில் எடுத்து உள்ளிருந்த குப்பை கூளங்களை உதறினார். பல்லியைப்  பற்றி கேள்வி கேட்ட அடியவர் அதையே விறைத்து  பார்த்து ஆச்சரியம் அடைந்தார்.

பையை உள்வெளியாக திருப்பி பூமியில்  தட்டியபோது, அதிலிருந்து ஒரு பல்லி  கீழே விழுந்தது. அவர்கள் பார்த்து கொண்டிருந்தபோதே பயத்துடன் குறுக்கே வேகமாக ஓடியது!

பாபா கேள்வி கேட்ட அடியவரிடம் சொன்னார், "இப்பொழுது இவளை கவனமாகப் பார்!  இவள்தான் அந்தப் (மசூதியில் இருந்த) பல்லியின்  சகோதரி. இந்த அற்புதத்தை வேடிக்கை பார்!"


Thursday, 11 June 2015

ஷிர்டி சாயி சத்சரிதம்

"நீங்கள் எங்கிருந்தாலும் சரி, என் முன்னர் மன்றாடிக் கெஞ்சி பக்தியுடனும் விசுவாசத்துடனும் கை நீட்டினால், நான் உங்களுடைய பக்திக்கும் விசுவாசத்திற்கும் ஏற்றவாறு இரவுபகலாக உங்கள் பின்னால்  திடமாக நிற்கிறேன்.-

"என்னுடைய உடலுடன் நான் இங்கு இருக்கலாம்; நீங்கள் தொலைதூரத்தில் இருக்கலாம். ஏழு கடல் தாண்டியும் செல்லலாம். இருப்பினும், அங்கு நீங்கள் என்ன செய்தாலும் அந்தக் கணமே எனக்கு இங்கு அது தெரிந்துவிடும்.-

"நீங்கள் இவ்வுலகில் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம், அங்கு நான் உங்களுடனே செல்கிறேன். உங்களுடைய இதயமே என்னுடைய வாசஸ்தலம்; நான் உங்களுக்குள்ளேயே உறைகின்றேன் .-

"உங்களுடைய இதயத்தில்  வசிக்கும் என்னையே நீங்கள் வழிபடவேண்டும். எல்லா உயிரினங்களின் இதயங்களிலும் நானே உரைகின்றேன்.-

"வீட்டின் உள்ளோ, வெளியிலோ, அல்லது வழியிலோ, நீங்கள் எவரை எதிர்கொண்டாலும் அவர்களனைவரும் என்னுடைய ஆவிர்பாவங்களே  (வெளிப்பாடுகளே). அவர்கள் அனைவருள்ளும் நான் உறைகின்றேன்.-

"பூச்சியோ, எறும்போ, நீரில் வாழும் பிராணிகளோ, வானத்தில் பறக்கும் பறவைகளோ, நிலத்தில் வாழும் நாய், பன்றி போன்ற மிருகங்களோ - அவையனைத்திலும் நான் அவசியம் நிரந்தரமாக வியாபிதிருக்கிறேன்.-


"ஆகவே, உங்களை என்னிடமிருந்து வேறுபட்டவர்களாக நினைக்காதீர். தம்மிலிருந்து என்னை வேறுபடாதவாறு அறிந்தவர் மகாபாக்கியசாலி."

இவ்வார்த்தைகள் சுருங்கச் சொல்லப்பட்டவை ஆயினும் ஆழமான பொருள் பொதிந்தவை; மிக முக்கியத்துவம் வாய்ந்தவை. சோல்கரின் மீது எவ்வளவு பிரியம் இருந்தால் பாபா அவருக்கு இந்த பக்திக் கஜானாவை வழங்குவார்!

சோல்கரின் மனதில் என்ன இருந்ததோ அதை நேரிடையான அனுபவமாக பாபா வெளிப்பாடு செய்துவிட்டார். ஞானிகளுடைய செயல்முறைத் திறன்தான்  என்னே!

பாபாவினுடைய  திருவாய் மொழி விலை மதிப்பற்றது. பக்தர்களுடைய இதயத்தில் ஆழமாகப் பாய்ந்து, பிரேமையாகிய பழ தோட்டத்திற்கு உயிர்ச்  சத்தாகிறது . பக்தியாகிய கப்பலுக்குப் பாய் மரம் ஆகிறது.

சாதகப் பறவைகளின் தாகத்தை தீர்ப்பதற்காக மேகங்கள் மழையைப்  பொழிகின்றன; இதன் மூலமாக பூமி முழுவதும் மழையால் குளிர்ந்து போகிறது. இங்கு நடந்ததும் அவ்வாறே.

சோல்கர், பாவம் ஏழை! யாருக்குமே தெரியாத, கேள்விப்படாத, முன்பின் தெரியாத ஆள் அல்லரோ? சோல்கரின் இதயத்தில் ஓர் எழுச்சியை ஏற்பட செய்து நேர்த்திகடன் ஏற்றுகொள்ள வாய்த்த தாஸ கணுவின் கீர்த்தனை கூட ஒரு நிமித்த காரணமே (கருவியே). அதுவே, கடைசியில் அவருக்கு பாபாவின் அருளைத் தேடிக் கொடுத்தது.

இதனைப் பின்பற்றி, ஞானிகள் மனதுள்ளே என்ன நினைக்கிறார்கள் என்னும் அற்புதம் வெளிப்பட்டது! அடியவர்களுக்குப் போதனை  அளிப்பதில் பேராவல் கொண்ட பாபா, இது போன்ற சூழ்நிலைகளை சிருஷ்டி செய்தார்.

Thursday, 4 June 2015

ஷிர்டி சாயி சத்சரிதம்

சஹாயாத்திரி மலைத்தொடரின் ஆபத்துமிக்க உச்சியான நானே காட்டையையும் கூட சுலபமாகத் தாண்டிவிடலாம். கிருஹஸ்தன் தன்னுடைய உம்பரே காட்டைக் (வீட்டின் தலைவாயிலை) கடப்பது மிகக் கடினம்.

ஷீரடியில் செய்வதாக வேண்டிகொண்ட நேர்த்திக்கடன் நிறைவேறும்வரை, சர்க்கரை இருக்கும் எந்தப் பண்டமும் சோல்கருக்கு விலக்காகிவிட்டது. அவர தேநீரை கூட சர்க்கரையின்றியே  அருந்தினார்.

சிலகாலம் இவ்வாறு கழிந்தபிறகு, சோல்கர் ஷிர்டி செல்லும் நாளும் வந்தது. அவர ஷிர்டி சென்று நேர்த்திகடனை நிறைவேற்றியபின் மிகுந்த சந்தோஷமடைந்தார்.

பாதங்களில் நமஸ்காரம் செய்து சாயி தரிசனம் செய்த சோல்கர், பரிபூரணமான திருப்தியாலும் மகிழ்ச்சியாலும் பொங்கி வழிந்தார்.

நிர்மலமான மனதுடன் கற்கண்டு விநியோகம் செய்துவிட்டு, பாபாவுக்கு ஒரு தேங்காயை சமர்ப்பணம் செய்தபின் அவர் சொன்னார், "இன்று என்னுடைய மனோரதம் நிறைவேறிவிட்டது. "

சாயி தரிசனம் அவருக்கு ஆனந்தமளித்தது. சம்பாஷனை செய்தது இதயத்தைக் குளிர வைத்தது. அவர் ஜோக் என்பவருடைய விருந்தினராக வந்திருந்ததால், ஜோக்குடன் அவருடைய வீட்டிற்குத் திரும்ப வேண்டியதாயிற்று.

ஜோக் கிளம்பத் தயாராகி எழுந்தபோது, அவருடைய விருந்தினரும்  (சோல்கரும் ) எழுந்தார். அப்பொழுது பாபா ஜோக்கிடம் கூறினார், "இவருக்கு சர்க்கரை பூரிதமாக போடப்பட்ட தேநீர் பல கோப்பைகள் குடிப்பதற்கு கொடுங்கள்".

தம்முடைய ரகசியத்தை அம்பலப்படுத்தும் பொருள்பொதிந்த இவ்வார்த்தைகளைக் கேட்ட சோல்கர் மிக வியப்படைந்தார். கண்களில் ஆனந்த பாஷ்பம் (கண்ணீர்) பொங்க, சாயியின் சரணங்களில் தலையை வைத்தார்.

ஜோக் இவ்வார்த்தையைக் கேட்டுக் குதூகலம் அடைந்தார். சோல்கருடைய மகிழ்ச்சியோ அதற்கு இரண்டு மடங்கு ஆக இருந்தது. அதற்குக் காரணம் அவருக்கு மாத்திரந்தான் தெரியும். இதயத்தின் ஆழத்தில் பாபாவின் குறிப்பைப் புரிந்து கொண்டார்.

பாபா தம்முடைய வாழ்நாளில் தேநீரைத் தொட்டதே கிடையாது. அப்படியிருக்க, அவர் ஏன் அந்த நேரத்தில் தேநீரைப் பற்றி நினைக்க வேண்டும்? சொல்கரின் விசுவாத்தை உறுதிப் படுத்துவதற்காகவும் பக்தியினுடைய முத்திரையை அவருடைய இதயத்தில் ஆழமாகப் பதிப்பதற்காகவுமே அவ்வாறு செய்தார் பாபா.

தமக்கு எல்லாம் தெரிந்திருந்தது என்ற தெளிவான குறிப்பையும் பாபா திடீரென்று விடுத்தார், "சோல்கர்! நீர் நேர்த்திகடன் ஏற்றுகொண்ட கற்கண்டு என்னிடம் வந்து சேர்ந்துவிட்டது. ஆகவே, உம்முடைய விரதமும் நிறைவேறிவிட்டது!-

"நேர்த்திக்கடன் எடுத்துக் கொண்டபோது இருந்த உம்முடைய குழம்பிய மனம், நிறைவேற்றுவதில் ஏற்பட்ட மிகுந்த தாமதத்தால் மனம் நொந்து பரிகாரமாக நீர் ஏற்றுகொண்ட விரதம், அனைத்தையும் நீர் ரகசியமாக வைத்திருப்பினும், நான் அறிவேன்.-


Thursday, 28 May 2015

 ஷிர்டி சாயி சத்சரிதம்

பக்தியில்லாது கதைமேல் கதையாகக் கேட்டுக் கொண்டு மற்றொரு பக்கத்தில் படிக்குமேல் படியாக அஞ்ஞானத்தை வளரவிடுவதில் பலன் என்ன? பக்தியும் சிரத்தையுமில்லாது கதை கேட்பது வியர்த்தமே.

அழுக்கு  நீக்காததை சவர்க்காரம் (சோப்பு) என்று சொல்ல முடியுமா?  அஞ்ஞானத்தை நீக்காததை விவேகமளிக்கும் செவிச் செல்வம் என்று சொல்ல முடியுமா?

சிரத்தையுடன் கதை கேட்ட சோல்கரின் இதயத்தில் சாயியின் மேல் பிரேமை பொங்கியது. அவர் தமக்குள்ளே சொல்லிகொண்டார், "ஓ, கிருபையுள்ளவரே, இந்த தீனனின்  மீது தயை காட்டுங்கள்."

சோல்கர் தாற்காலிகமான உத்தியோகம் செய்துவந்தார்; வசதி இல்லாத ஏழை; குடும்ப பாரத்தை சுமக்க முடியாது தவித்து வந்தார். அரசாங்க உத்தியோகத்தின் மூலமாகப் பிழைப்பு நடத்தும் வாய்ப்பை பெறுகின்ற முழுபாரத்தையும்  பாபாவின் மீது போட்டுவிட்டார்.

தீவிரமாக எதையாவது அடையவிரும்பும் ஏழைமக்கள் தங்களுடைய விருப்பம் நிறைவேறினால், பிராமணர்களுக்கு அவர்கள் விரும்பிய உணவுப் பொருள்களுடன் முழுதிருப்தி அடையுமாறு போஜனம் செய்விப்பதாக நேர்த்திக் கடன் ஏற்றுக் கொள்வர்.

பணக்காரர்களோ, தங்களுடைய விருப்பம் நிறைவேறினால், ஆயிரம் பேர்களுக்கு உணவளிப்பதாகவோ அல்லது நூறு பசுக்களை தானமாக அளிப்பதாகவோ நேர்த்திக் கடன் எற்றுகொள்வர் .

பணவசதியில்லாத சோல்கர், சாயி பாதங்களை மனதில் இருத்தி  எளிமையுடன் இவ்வாறு வேண்டிகொண்டார்.

"பாபா, என்னுடையது ஓர் ஏழைக் குடித்தனம். என்னுடைய வாழ்கையே ஒரு வேலை கிடைப்பதைச் சார்ந்தே இருக்கிறது. ஆனால், நிரந்தரமான வேலை கிடைப்பதற்கு நான் பரீட்சையில் வெற்றி பெற்றாக வேண்டும். -

"பரீக்ஷைக்காக மும்முரமாகவும் விடாமுயற்சியுடனும் தயார் செய்திருக்கிறேன். என்னுடைய நம்பிக்கையே பரீட்சையில் வெற்றி பெறுவதில்தான் இருக்கிறது. வெற்றிபெறாவிட்டால், தற்காலிக வேலையையும் இழக்க நேரிடும்.-

"உம்முடைய கிருபையினால் பரீட்சையில் நான் வெற்றிபெற்றுவிட்டால், உம்முடைய பாதங்களை தரிசனம் செய்வதற்கு (ஷீரடிக்கு) வந்து உம்முடைய நாமத்தைச் சொல்லிக்  கற்கண்டு விநியோகம் செய்கிறேன். இது என்னுடைய நிர்த்தனமான  தீர்மானம்."

இதுதான் சோல்கர் ஏற்றுகொண்ட நேர்த்திகடன். சில நாள்கள் கழித்து, அவருக்கு மிக்க மகிழ்ச்சியளிக்கும் வகையில் அவருடைய விருப்பம் நிறைவேறியது.. ஆனால், அவருடைய நேர்த்திகடனை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்பட்டது. குற்றத்திற்குப் பரிகாரமாக அவர் சர்க்கரையை உணவில் சேர்த்துக் கொள்வதை விட்டுவிட்டார்.

பயணம் செய்வதற்கு பணம் தேவை என்று அவருக்குத் தெரியும்; மேலும் பாபாவிடம் வெறுங்கையுடனா போக முடியும்? ஆகவே, ஆரா  துயரத்துடன் நாளைக்கு, நாளைக்கு என்று ஷிர்டிப் பயணத்தை தள்ளிப் போட்டுக்கொண்டே போனார்.