valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday, 21 August 2014

ஷிர்டி சாயி சத் சரிதம் 

தயாளமுள்ள துணைவரும் சரணாகதி யடைந்தவர்களைப் பாதுகாப்பவரும் பக்தர்களோடு பிணைந்தவருமான சாயியால் எப்படிப்பட்ட அற்புதம் விளைவிக்கப் பட்டது என்று சற்று பாருங்கள்!

கவனத்தை சிதறவிடாது முழுமையாக ஈடுபட்டு நான் சொல்லப் போகும் புதிய காதையை முழுக்க கேளுங்கள்; செய்வன திருந்தச் செய்தவர்களாகிய நன்மையடைவீர்கள். 

சாயியின் முகத்திலிருந்து வெளிப்படும் அமுதமழை, புஷ்டியையும் திருப்தியையும் அளிக்கும் அருட்புனலாக இருக்கும்போது, தம்முடைய நல்வாழ்வுபற்றிய  அக்கறை கொண்டவர் எவராவது ஷீரடிக்கு போகும் யத்தனத்தை கஷ்டமாக நினைப்பாரா?

கடந்த அத்தியாத்தில், சித்தியாகிவிட்ட தம் குருவின் தரிசனம் பெற்றதால் அளவிலா ஆனந்தமடைந்த அக்கினி ஹோத்திரி பிராமணரின் காதை சொல்லப் பட்டது. 

இந்த அத்தியாயம் முன்னதை விட இனிமையானது. க்ஷய ரோகத்தால் (காச நோயால்) ரத்த வாந்தி எடுத்துக் கொண்டிருந்த பக்தர் ஒருவர் கனவுக் காட்சியால் நிவாரணம் பெற்று நல்லாரோக்கிய மடைந்தார். 

ஆகவே, விசுவாசமுள்ள பக்தர்களே! கல்மஷங்களைஎல்லாம் (மன மலங்களைஎல்லாம்) எரித்து விடும் சக்தியுடைய இவ்வற்புதமான சாயி நாத சரித்திரத்தை முழு கவனத்துடன் கேளுங்கள். 

இச் சரித்திரம் கங்கை நீரைப் போன்று புண்ணியமானது; பவித்திரமானது; இஹத்திலும் பரத்திலும் சாதகங்களை அளிக்கக் கூடியது. இதைக் கேட்பவர்களின் காதுகள் எல்லாப் பேறுகளையும் பெற்றவை!

இச் சரித்திரத்தை தேவாமிர்ததிற்கு  உபமானமாக சிலர் சொல்லலாம். ஆயினும் தேவாமிருதம் இவ்வளவு இனிக்குமா என்ன? அமிருதம் உயிரைத்தான் ரட்சிக்கும்; இச்சரித்திரமோ மேற்கொண்டு ஜனனமே இல்லாமல் செய்துவிடும்!

உயிருள்ள ஜீவன்கள் எல்லா சக்திகளும் தங்களுக்கு இருக்கின்றன என்று நினைக்கின்றன. தாம் நினைத்ததைச் செய்ய முடியும் என்று யாராவது நினைத்தால், அவர் இக்காதையை கேட்க வேண்டும். 

மனிதன் வாஸ்தவமாகவே சுதந்திரமுள்ளவனாக இருந்தால், இரவு பகலாக சுகத்திற்காக உழைப்பவன் ஏன் கஷ்டத்தை மட்டுமே அடைகிறான்? அவனுடைய விதி அவனை விடுவதாக இல்லை. 

இங்கும், அங்கும், எங்குமே துக்கத்தை தவிர்ப்பதில் சாமர்த்தியம் மிகக் காட்டினாலும், விதி அவனை விடுவதாக இல்லை. 

அதை உதறித் தள்ள முயன்றால், அது கெட்டியாகப் பிடித்துக் கொள்கிறது; விலக்கிவிட முயன்றால், மேலும் அழுத்தமாகத் தழுவிகிறது! இரவு பகலாக மனிதன் நடத்தும் போராட்டமெல்லாம் வீணாகிப் போகிறது. 

மனிதன் நிஜமான சுதந்திரம் பெற்றிருந்தால், சுகத்தைத் தவிர வேறெதையும் நாட மாட்டான்; லவலேசமும் (சிறிதளவும்) சந்தேகமிருந்தால் துக்கத்தின் அருகிலேயே செல்ல மாட்டான் அல்லனோ?

Thursday, 14 August 2014

ஷிர்டி சாயி சத்சரிதம் 

தம் பக்தர்களுடைய நல்வாழ்வுக்காக தயாசாகரமான சாயி திருவாய் மலர்ந்தருளிய சத்தியமான வார்த்தைகளை மிகுந்த வினயத்துடன் கேளுங்கள். 

"யாருடைய பாவங்கள் விலக்கப்பட்டு விட்டனவோ அந்தப் புண்ணியசாலிகளே என்னை அறிந்துகொள்கிறார்கள்; என்னை வழிபடுகிறார்கள். -

"சாயி, சாயி என்று எந்நேரமும் ஜபம் செய்து கொண்டிருப்பீர்களானால், நான் என்னுடைய அருளால் உங்களுக்கு ஏழு கடல்களையும் அளிப்பேன் (ஏழு கடல்களுக்கப்பாலும் வந்து உங்களைக் காப்பாற்றுவேன்). எவர்கள் என்னுடைய இவ்வார்த்தைகளில் விசுவாசம் வைக்கிறார்களோ, அவர்கள் நிச்சயமாக நல்வாழ்வு பெறுவார்கள். -

"எனக்கு அஷ்டோபசார பூஜையோ சோடசோபசார பூஜையோ வேண்டா. எங்கு பாவம் இருக்கிறதோ அங்கு நான் இருக்கிறேன்."

பக்தர்களின் மீதிருந்த அன்பினால் இதையே பாபா பலமுறைகள் திரும்பத் திரும்ப சொல்லியிருக்கிறார். இப்பொழுது நாம் அவ்வன்பான வார்த்தைகளை ஞாபகப் படுத்திக் கொள்வதில்தான் மனத்தை திருப்தி செய்து கொள்ள வேண்டும். (நேரில் கேட்க முடியாது).

(இந்த அத்தியாயம் மகாசமாதிக்குப்    பிறகு எழுதப் பட்டது என்பதற்கு இந்த சுலோகத்தை அகச் சான்றாக கொள்ளலாம்.) 


Thursday, 7 August 2014

ஷிர்டி சாயி சத்சரிதம் 

13. பிணி தீர்த்த பெம்மான்

வெளிப்படும் பேச்சு சூத்திரங்களை போன்றது; அர்த்தமோ மிகவும் கம்பீரமானது; வெகு விஸ்தீரணமான வியாபகமுள்ளது; இருப்பினும் பேச்சு சுருக்கமானது;- 

பாபாவினுடைய திருவாய் மொழி இத்தகையதே; அர்த்தத்திலும் தத்துவத்திலும் மிகவும் ஆழமானது; சமசீரானது; விலைமதிப்பற்றது; காலத்தின் எல்லைவரை அர்த்தமுள்ளது. வீண் போகாதது. 

"ஏற்கனவே என்ன நடந்ததோ, என்ன நடக்கப் போகிறதோ, அதற்கேற்றவாறு வாழ்க்கை நடத்து! எது பிராப்தமென்று விதிக்கப் பட்டிருக்கிறதோ, அதை அறிந்து கொண்டு நட! எப்பொழுதும் திருப்தியுள்ளவனாக இரு! சஞ்சலத்திற்கோ  கவலைக்கோ எப்பொழுதும்  இடம் கொடுக்காதே! -

"கவனி ! வீடு, குடும்பம் போன்ற தளைகளில் மாட்டிக்கொள்ளாமல் தொந்தரவுகளிலிருந்து முழுமையாக விடுபட்டு, வாழ்க்கையின் தொல்லைகளையும் சலிப்புகளையும் அறவே தியாகம் செய்துவிட்டு ஒரு பக்கீராக நான் அமைதியாக ஒரேயிடத்தில் உட்கார்ந்திருக்கும் போதே, -

"எதற்கும் அடங்காத மாயை என்னை விடாது துன்புறுத்துகிறது. நான் அவளை உதறிவிட்டாலும், அவள் என்னை உதறாது என்னுடன் நிரந்தரமாக ஒட்டிகொள்கிறாள்!-

"அவள் ஸ்ரீஹரியின் ஆதிமாயை; பிரம்மவாதி தேவர்களையே நிலை தடுமாறுமாறு  செய்திருக்கிறாள்! இந்நிலையில் அவள் முன்னிலையில் இந்த பலவீனமான பக்கீரின் கதி என்னவாக இருக்க முடியும்?

"ஸ்ரீ ஹரியே விருப்பப்படும்போதுதான் மாயை ஒழியும். இடைவிடாத ஹரிபஜனையின்றி மாயையிலிருந்து விடுதலை கிடைக்காது."

பாபா, பக்தர்களுக்கு விளக்கம் செய்த மாயையின் மகிமை இதுவே. மாயையின் பிடியிலிருந்து நிவிர்த்தி பெறுவதற்கு, இறைவனுடைய பெருமைகளை பாடும் சேவையையே பாபா பரிந்துரை செய்தார். 

"ஞானிகள் என்னுடைய உயிருள்ள உருவங்கள்" என்று பகவான் ஸ்ரீ கிருஷ்ணரே பாகவத்தில் கூறியிருக்கிறார். ஸ்ரீ ஹரியால் உத்தவருக்கு தெளிவாக எடுத்துரைக்கப்பட்ட இவ்வார்த்தைகளை அறியாதவர் யார்? 


Thursday, 31 July 2014

ஷிர்டி சாயி சத்சரிதம் 

அவர்கள் இகத்திலும் இல்லை; பரத்திலும் இல்லை. ஒரு கணமும் நிம்மதியோ சாந்தியோ இன்றி, சஞ்சலங்களிலும் கவலைகளிலும் ஜன்மம் முழுவதும் மூழ்கிப் போகின்றனர். இவ்வாறு இருந்த போதிலும் முக்தியடைந்து கொண்டிருப்பதாக தம்பட்ட மடிக்கின்றனர். 

அடுத்த அத்தியாயம் இந்த அத்தியாயத்தை விட சுவாரஸ்யமானது. சாயி தரிசனம் மேலும் மேலும் செய்யச் செய்ய, எல்லையில்லாத ஆனந்த அனுபவத்தை அளிக்கும். 

பக்தர் பீமாஜி பாடீல் எவ்வாறு க்ஷய ரோகத்திலிருந்து நிவாரண ளிக்கப் பட்டார் என்பதையும் அவருக்குச் சாந்தோர்கரிடம் இருந்த நம்பிக்கையை ஒரு காட்சியளித்து எவ்வாறு பாபா உறுதிப் படுத்தினார் என்பதையும் விவரிக்கிறேன். 

சாயி தரிசனம் நம்முடைய பாவங்களையும் நிவிர்த்தி செய்து, இவ்வுலக சுகங்களையும் மேலுலக சுகங்களையும் சமிருத்தியாக அளிக்கும் சக்தி வாய்ந்தது. 

மகா யோகிகளால் கண்வீச்சாலேயே  நாஸ்திகர்களையும் பாவத்தில் இருந்து விடுதலை செய்ய முடியுமென்றால், ஆஸ்திகருடைய நிலை என்ன? அவர்களுடைய பாவம் மிக சுலபமாக அளிக்கப்படுகிறதன்றோ?  

பிரம்ம சாக்ஷாத்காரம் பெற்று பிரம்மத்திலேயே லயித்த மனமுடைய மகாத்மா, தம்முடைய கண்நோக்காலேயே கடக்க முடியாத கொடிய பாவங்களையும் அழித்து விடுகிறார். 

பாபாவினுடைய புரிந்து கொள்ள முடியாத லீலைகள் இவ்வாறே. பாபாவுக்கு உங்கள் மீது அன்பு இருக்கிறது. ஆகவே, பண்டிதராயினும் சரி, பாமரராயினும் சரி, நீங்களனைவரும் பாபாவினுடைய காதைகளை நிர்மலமான இதயத்துடன் கேளுங்கள். 

எங்கே பக்தியும் பிரேமையும் இருக்கிறதோ, எங்கே பாபாவின்   
மீது பிரியமான ஈர்ப்பு இருக்கிறதோ, அங்கேதான் உண்மையான தாகம் உருவெடுக்கிறது. அங்கேதான் அவருடைய காதைகளைக் கேட்கும் தூய மகிழ்ச்சியை பார்க்க முடியும். 

அனன்னியமாக சரணடைந்தவர்களுக்கு வஜ்ஜிரம் போன்ற அடைக்கலமும் அளவற்ற சக்தியை உடையதுமான சாயியின் திருவடிகளில் ஹெமாத் நமஸ்காரம் செய்கின்றேன். இவ்வுலக வாழ்க்கையின் பயங்களை அறவே ஒழிக்கும் சக்தியுடையவை சாயியின் பொன்னடிகள். 

எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்! ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு,  சாயி பக்தன் ஹேமாட்பந்தால் இயற்றப் பட்ட, ' ஸ்ரீ சமர்த்த சாயி சத்சரிதம்' என்னும் காவியத்தில், 'குரு கோலப் தரிசனம் - ஸ்ரீராம தரிசனம்' என்னும் பன்னிரண்டாவது அத்தியாயம் முற்றும். 

ஸ்ரீ சத்குரு சாயிநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும். 

சுபம் உண்டாகட்டும். 

Thursday, 24 July 2014

ஷிர்டி சாயி சத்சரிதம் 

மூன்தூர் நாள்கள் கழிந்தன; நான்காது நாள் பொழுது விடிந்தது. என்ன நடந்தது என்பதைக் கவனமாகக் கேளுங்கள். 

கான்தேச் என்னுமிடத்தில் குடியேறிவிட்ட அவருடைய நண்பரொருவர் தற்செயலாக சாயி தரிசனத்துக்காக ஷீரடிக்கு வந்தார். 

ஒன்பது வருடங்களுக்கு பிறகு அவரை சந்தித்த டாக்டரின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. உடனே! டாக்டரும் நண்பருடன் மசூதிக்கு சென்றார்; 

போனவுடனே, டாக்டர் பாபாவுக்கு நமஸ்காரம் செய்தார். பாபா கேட்டார். "ஆக, டாக்டரே! உம்மைக் கூப்பிட யாராவது வந்தார்களா? முதலில் எனக்குச் சொல்லும்; ஏன் வந்தீர் இங்கு?"

பாணம் போன்ற இந்தக் கேள்வியை கேட்டு டாக்டர் உணர்ச்சிவசப் பட்டார். அவருடைய  சங்கல்பம் ஞாபகத்திற்கு வந்து, குற்றவுணர்ச் சியால் சோகமாடைந்தார். 

ஆனால், அன்றே நள்ளிரவில் பாபாவினுடைய   அருள் அவர் மீது பொழிந்தது. தூக்கத்திலேயே பரமாந்தமான நிலையின் மதுரத்தை அனுபவித்தார். 

பிறகு, டாக்டர் தம்முடைய சொந்தக் கிராமத்திற்குத் திரும்பிச் சென்றாராயினும், அடுத்த பதினைந்து நாள்களுக்கு பரிபூரணமான ஆத்மானந்தத்தை அனுபவித்தார். சாயியின் மீது அவருடைய பக்தி வளர்ந்தது. 

ஒன்றை விட இன்னொன்று அதிக அற்புதமானதாக இம்மாதிரியான சாயி அனுபவங்கள் எத்தனை எத்தனையோ! அவையனைத்தும் இக்காவியத்துக்கு மென்மேலும் பெருமை சேர்க்கு மெனினும், விரிவுக் கஞ்சி என்னையே நான் கட்டுபடுத்திக் கொள்கிறேன். 

செவி மடுப்பவர்கள் இவ்வத்தியாயத்தின் முக்கிய பகுதியான முலே சாஸ்திரியின்   காதையைக் கேட்டு வியப்படைந்திருக்க வேண்டும். அதனுடைய சாரத்தை, அக்காதை சொல்லும் படிப்பினையை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டும். 

"ஒருவருடைய குரு எவராக இருந்தாலும் அவர்   மீது திடமான விசுவாசம் வைக்க வேண்டும். வேறெங்கிலும் அவ்விசுவாசத்தை வைக்கலாகாது. " இதுதான் இக்காதையில் மறைந்திருக்கும் பொருள்; இதை மனதில் பதிக்க வேண்டும். 

இந்த அற்புதமான லீலைக்கு வேறு நோக்கமேதும் இருப்பதாக தெரியவில்லை. மற்றவர்கள் இதை எப்படிப் புரிந்து கொண்டாலும் சரி, இதுவே இக்காதையின் படிப்பினை. 

மற்ற குருமார்களுடைய கீர்த்தி மிகப் பெரியதாக இருக்கலாம். நம் குருவுக்கு அத்தகைய கீர்த்தி எதுமில்லாதிருக்கலாம். ஆயினும், நம்முடைய முழு விசுவாசமும் நம் குருவின் மேல்தான் இருக்க வேண்டும். இதுவே இக்காதையின் உபதேசம். 

எத்தனை இதிகாசங்களையும் புராணங்களையும் புரட்டினாலும் தத்துவ உபதேசத்தை பொறுத்தவரை அவையனைத்தும் ஒன்றே. இவ்வனுபவதைப் போல நேரிடையான நிரூபணம் கிடைக்காதவரை, விசுவாசம் எளிதாக ஏற்படுவதில்லை. 

உறுதியான விசுவாசமில்லாமல், 'நான் ஆத்ம நிஷ்டன்" (தன்னையறிந்தவன்) என்று பீத்துபவர்கள் வாழ்நாள் முழுவதும் கஷ்டத்தையே அனுபவிக்கிறார்கள். இதைத் திரும்ப திரும்பப் பலமுறைகள் பார்த்தாகிவிட்டது. 

Thursday, 17 July 2014

ஷிர்டி சாயி சத்சரிதம் 

"எனக்கு நமஸ்காரம் செய், என்று பாபா நிச்சயமாகச் சொல்ல மாட்டார்" மாம்லதார் இவ்விதமாக உறுதிமொழி அளித்தபின், டாக்டர் ஷிர்டி செல்வதற்கு சம்மதம் தெரிவித்தார். 

தம் நண்பரின் உறுதிமொழிக்கு கட்டுப்பட்டு, சந்தேகங்களை எல்லாம் ஒதுக்கிவிட்டு பாபாவை தரிசனம் செய்வதற்கு செல்வதென்று டாக்டர் முடிவெடுத்தார். 

அதிசயத்திலும் அதிசயம்! ஷிர்டியை அடைந்து மசூதிக்கு சென்றவுடனே முதன்முதலில் டாக்டர்தான் பாபாவுக்கு நமஸ்காரம் செய்தார்! நண்பரோ பெருவியப்படைந்தார். 

மாம்லத்தார் டாக்டரை கேட்டார், "உம்முடைய திடமான தீர்மானத்தை எப்படி மறந்தீர்? ஒரு முஸ்லீமின் பாதங்களில் எவ்வாறு பணிந்தீர்? அதுவும் என் முன்னிலையிலேயே?"

அப்பொழுது டாக்டர் தம்முடைய அற்புதமான அனுபவத்தை விவரித்தார். "நான் கண்டது நீலமேக சியாமள ரூபனான ஸ்ரீ ராமனின் உருவத்தையே! அக்கணமே நான், நிர்மலமானவரும் சுந்தரமானவரும் கோமள ரூபமுடையவருமுமான ஸ்ரீ ராமரை வணங்கினேன்.- 

"பாருங்கள், ஸ்ரீ ராமர் இந்த ஆசனத்தில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார். அவர்தான் எல்லாரிடமும் பேசிக் கொண்டிருக்கிறார்" டாக்டர் இந்த வார்த்தைகளை சொல்லிகொண்டிருந்தபோதே, ஒரு கணத்தில், ஸ்ரீ ராமருக்கு பதிலாக சாயியின் உருவத்தை பார்க்க ஆரம்பித்தார். 

இதைப் பார்த்த டாக்டர் வியப்பிலாழ்ந்து போனார்! "இதை எப்படி நான் கனவென்று சொல்ல முடியும்? இவர் எப்படி  ஒரு முஸ்லீமாக இருக்க முடியும்? இல்லவே இல்லை! இவர் மகா யோகீஸ்வரனான அவதார புருஷர்."

சோகமேளா என்ற மகா ஞானி ஜாதியில் மகார (ஆதி திராவிடர்). ரோஹிதாஸ் என்ற ஞானி செருப்பு தைக்கும் தொழிலாளி. சஜன் கசாய் என்ற ஞானி பிழைப்புக்காகக் கசாப்புக்கடை நடத்தினார். ஆனால், யார் இந்த ஞானிகளின் ஜாதியைப் பற்றி சிந்திக்கின்றனர்?

உலக ஷேமதிற்காகவும் பக்தர்களை ஜனன மரணச் சுழலிருந்து விடுவிப்பதர்காக்கவுமே உருவமும் குணங்களுமற்ற தங்களுடைய நிலையை விடுத்து, ஞானிகள் இவ்வுலகிற்கு வருகிறார்கள். 

இந்த சாயி பிரத்யக்ஷமான கற்பக விருக்ஷமாகும்; நாம் விரும்பியதை தரும் தேவ லோக மரம்! இந்தக் கணத்தில் அவர் சாயியாக இருக்கிறார்; அடுத்த கணமே அவர் ஸ்ரீ ராமராக மாறிவிடுகிறார்! என்னுடைய அஹந்தையாகிய பிரமையை ஒழித்து  என்னை தண்ட நமஸ்காரம் செய்ய வைத்து விட்டார். 

அடுத்த நாளே அவர், பாபா தமக்கு அருள் புரியவில்லையெனில் மசூதிக்குள் நுழைவதில்லை என்ற விரதம் எடுத்துக் கொண்டார்; ஷீரடியில் உண்ணா விரதம் மேற்கொண்டார். 



Thursday, 10 July 2014

ஷிர்டி சாயி சத்சரிதம் 

பாபாவினுடைய ஆனந்தமான உருவத்தையும் அற்புதமான சக்தியையும் கண்டார். அவருடைய மனம் ஸ்தம்பித்து நின்றது. பாபாவை தாம் முதலில் அணுகிய முறையை கைவிட்டு விட்டார். 

பாபாவினுடைய அற்புதமான லீலையைப் பார்த்தவுடன், பசி, தாஹம் அனைத்தும் மறந்து போயின! தம் குருவின் தரிசனம் கிடைத்த பரவசத்தில் மூழ்கியிருந்தார். 

அவருடைய மனம் சமாதனமடைந்தது. கண்களில் ஆனந்த பாஷ்பம் பொங்க பாபாவினுடைய திருவடிகளில் நெற்றியை வைத்து வணங்கினார். 

அவர் கொண்டு வந்திருந்த தட்சிணையை பாபாவுக்கு சமர்ப்பணம் செய்தார். கண்களில் நீர் பொங்க, சந்தோஷத்தில் மயிர்க் கூச்செறிய மறுபடியும் பாபாவின் பாதங்களை வணங்கினார். 

தொண்டை அடைத்தது. "என்னுடைய சந்தேகங்களெல்லாம் நிவிர்த்தியானது மட்டுமல்லாமல், என்னுடைய குருவையும் சந்தித்து விட்டேன்" என்று அவர் கூறியபோது அஷ்டபாவம் இதயத்தை அடைத்தது. 

முலே சாஸ்த்ரி உட்பட அங்கிருந்தவர்களைனவரும் உலகில் பார்த்தறியாத இந்த பாபாவின் லீலையை கண்டு பயம் கலந்த அன்புடன் உணர்ச்சிவசப்படனர். இந்த அனுபவத்தை அடைந்த பிறகுதான் அவர்களுக்கு காவிசாயத்தின் மர்மம் விளங்கியது.!

சாயி மகாராஜ் பழையவர்தான். முலே சாஸ்திரியும் அதே நபர்தான். இவ்வாறிருக்க, குறிப்பிட்ட நேரத்தில் முலே சாஸ்திரியிடம் எதிர்பாராத மாற்றம் எப்படி ஏற்பட்டது என்றே அனைவரும் வியந்தனர். ஆனால், யாரால் மஹராஜின் சூக்குமமான வழிமுறைகளை புரிந்து கொள்ள முடியும்? அவருடைய லீலைகள் ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டவை அல்லவோ!

சாயி தரிசனம் செய்ய வேண்டுமென்ற ஆவலுடன் ஒரு டாக்டர் நண்பருடன் ஷீரடிக்கு கிளம்பிய மாம்லதாருடைய அனுபவமும் இது போன்றே  அற்புதமானது. 

அந்த டாக்டர் ஒரு பிராமணர்; ஸ்ரீ ராமரை உபாசனை செய்தவர். நியம நிஷ்டையுடன் ஸ்நானம், சந்தியாவந்தனம், விரதங்கள் போன்ற சடங்குகளை எல்லாம் சாஸ்திர விதிகளின்படி நெறி தவறாது செய்தவர். 

சாயி பாபா ஒரு முஸ்லீம்; டாக்டருக்கு இஷ்ட தேவதையோ ஜானகி ராமன். ஆகவே அவர், தாம் சாயிபாபாவை வணங்க மாட்டார் என்பதைத் தம் நண்பருக்கு முதலிலேயே எச்சரித்துவிட்டார். 

"நான் ஒரு முஸ்லீமின் பாதங்களை வணங்க முடியாது; ஆகவே, ஆரம்பத்திலிருந்தே எனக்கு ஷிர்டி செல்வதில் விருப்பம் இல்லை" (என்று டாக்டர் சொன்னார்).

"உம்மை அங்கு யாரும் அவருடைய பாதங்களை தொடச் சொல்லி வற்புறுத்த மாட்டார்கள். இது விஷயமாக யாருமே துராகிரஹம் (உரிமை இல்லாவிடத்து வலிய நிகழ்த்தும் செயல்) செய்ய மாட்டார்கள். இம்மாதிரியான சிந்தனைகளை உதறிவிட்டு ஷிரிடிக்கு போவதற்கு முடிவெடுங்கள்.-