valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday, 17 July 2025

 ஷீர்டி சாயி சத்சரிதம் 


அன்று இரவே, தூங்கிக் கொண்டிருந்தபோது கௌரிபாய் ஒரு கனவுக்காட்சி கண்டாள்.  சங்கரர் கனவில் தோன்றினார்.  சங்கரர் என்ன சொன்னார் என்பதைக் கேளும். 

"பணம் அனைத்தும் உன்னுடையது. எவருக்கும் எதையும் கொடுக்காதே. நான் சொல்லும்படி செயல்பட்டு நிரந்தரமாக அதை நிருவாகம் செய்வாயாக.-

"இறைவனைப் பிரீதிசெய்ய என்ன செலவழிக்கிறாயோ அதைச் சனபசப்பாவின் சொற்படி செய்.  ஏனெனில், அவனை நான் முழுமையாக நம்புகிறேன். இதை ஒரு கண்டிப்பான நியதியாக அனுசரிப்பாயாக. -

"இதர காரியங்களில் பணம் செலவழிப்பதாக இருந்தால், நிர்வாக ஒழுங்கீனம் ஏதும் நேராமல் தடுக்கும் பொருட்டு, மசூதியிலிருக்கும் பாபாவைக் கலந்தாலோசிக்காமல் திட்டம் எதுவும் தீட்டக்கூடாது."

கௌரிபாயி தன் கனவுக்காட்சி முழுவதையும் எனக்கு விவரித்தாள். நானும் என் மனத்தில் உதித்தவாறு கனவுக்காட்சியை நம்பும்படி அவளுக்கு அறிவுரை கூறினேன். 

"உன்னுடைய அசலை நீ எடுத்துக்கொள். வட்டியில் பாதியை சனபசப்பாவுக்கு கொடு. இந்த விதியை முறைபிறழாது பின்பற்று. வீரபத்ரனுக்கு இதில் ஏதும் சம்பந்தம் இல்லை."

நானும் கௌரியும் இவ்வாறு பேசிக் கொண்டிருந்தபோது அவர்கள் இருவரும் பரஸ்பரம் சண்டைபோட்டுக்கொண்டு அங்கு வந்தனர். இருவரையும் சாந்தமடையச் செய்ய நான் மிகவும் முயன்றேன். 

சங்கரர் கௌரிக்கு அருளிய கனவுக்காட்சியை இருவருக்கும் விவரமாக எடுத்துரைத்தேன். அதைக் கேட்ட வீரபத்திரன் உன்மத்தனானான் (வெறிகொண்டான்).

வீரபத்திரன் தன் எதிரியின்மேல் வசைமாரி பொழிந்தான். கன்னாபின்னாவென்று கத்தினான்.  அதைக் கேட்ட சனபசப்பா பயத்தால் வெலேவெலத்துப்போனான். 

வெறிபிடித்த வீரபத்ரப்பா எதிரியின்மேல் அபத்தமான சாபங்களை வாரியிறைத்துக்கொண்டே சூளுரைத்தான், "உன்னை நான் எங்கே பிடித்தாலும் அங்கேயே அழித்துவிடுவேன்."

வெறிபிடித்த வீரபத்ரப்பா சனபசப்பாவை நோக்கிக் கத்தினான், "உன்னைத் துண்டுதுண்டாக வெட்டி எல்லாத் துண்டுகளையும் தின்றுவிடுவேன்."

பீதியால் பீடிக்கப்பட்ட சனபசப்பா என் பாதங்களை கெட்டியாகப் பிடித்துக்கொண்டு கெஞ்சினான், "என்னை இந்தப் பேராபத்திலிருந்து காப்பாற்றுங்கள்". நான் அப்பொழுது அவனுக்கு அபயமளித்தேன். 

தீனனாகிய சனபசப்பாவுக்கு அந்நேரத்தில் தைரியமளித்துச் சொன்னேன், "வீரபத்ரப்பாவின் கைகளில் நீ சாகும்படி நான் விடமாட்டேன்."


 

Thursday, 10 July 2025

 ஷீர்டி சாயி சத்சரிதம் 

வீரபத்ரப்பா எதையும் கொடுக்க விரும்பவில்லை. சனபசப்பாவும்  விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை. இருவரும் சூடான வாக்குவாதத்தில் இறங்கினர். பின்னர் இருவரும் என்னிடம் வந்தனர். 

நான் அவர்கள் இருவரிடமும் சொன்னேன், "அந்த நிலத்தின் பூரண உரியமையாளர் சங்கரரே.  வேறு எவருக்கும் அது உபயோகப்படாது. ஆகவே, நீங்கள் இருவரும் வீணாகப் பேராசையில் மூழ்கவேண்டா.-

"நிர்ணயிக்கப்பட்ட விலை, சங்கரரைப் பிரீதி செய்ய அர்ப்பணம் செய்யப்பட்ட நிலத்தினையுடையதுதான் என்பது சர்வ நிச்சயம்.  கௌரியைத் தவிர வேறு எவனாவது இப் பணத்திற்கு ஆசைப்பட்டால், அவன் பட்டினி கிடந்தது சாக நேரிடும்.-

"இறைவனின் சம்மதிமின்றி இந்தப் பணத்தை எவனாவது தொட்டால், அவன் இறைவனின் கோபத்திற்கு காரணமாவான்.  ஏனெனில், இந்தச் செல்வம் சம்பூரணமாக இறைவனுடையது."

அந்த நிலம் பூஜாரிக்குச் சொந்தம். பூஜாரியின் வாரிசான கௌரிக்குதான் நிலத்தின்மேல் உரிமை உண்டு. வெளியார் இது விஷயமாக என்ன செய்யமுடியும்? செல்வம் முழுவதும் கௌரிக்கே சொந்தம். 

ஆகவே, நான் அவர்கள் இருவரிடமும் சொன்னேன், "செல்வம் கௌரியினுடையது என்பதை ஒப்புக்கொண்டு அவளுடைய அனுமதியின்படி நடந்தால்தான் நீங்கள் இருவரும் பேறுபெற்றவர்கள் ஆவீர்கள். -

"அப்படியின்றி அவளுடைய விருப்பத்திற்கு எதிராக நீங்கள் நடந்தால், அது இறைவனுக்கு சம்மதமாகாது. இந்த விவகாரத்தில் சுதந்திரமாகச் செயல்படுவதற்கு வீரபத்ரபாவுக்கு எந்த அதிகாரமும் இல்லை."

நான் என்னுடைய புடம்போட்ட அபிப்பிராயத்தை இவ்வாறு வெளிப்படுத்தியதால், வீரபத்திரன் என்மேல் கடுங்கோபம் கொண்டான்; என்னை இகழ்ந்து பேசினான். 

அவன் சொன்னான், "பாபா, என் மனைவியின் சொத்து உரிமையை நிர்த்தாரணம் செய்தபின், மொத்தப் பணத்தையும் விழுங்கிவிட்டு சுகமாக வாழலாம் என்ற சுயநல நோக்கம் உங்கள் மனத்தில் இருக்கிறது."

அவன் அவ்வாறு பேசியதைக் கேட்ட நான் வியப்பால் பேச்சிழந்துபோனேன்! அல்லாமியாவின் செயல்கள் கற்பனைக்கெட்டாதவை அல்லவோ! ஆகையால், நான் எதற்காக வருத்தப்பட வேண்டும்?

வீரபத்ரப்பா என்னிடம் இவ்வாறு பேசினான்.  வீட்டிலோ மனைவியின்மேல் கடுஞ்சினங்கொண்டு நெருப்பைக் கக்கினான். ஆகவே, பிற்பகலில் அவள் தரிசனம் செய்ய வந்தாள்; என்னிடம் கெஞ்சினாள்.   

"பாபா, வேறெவரோ சொன்ன வார்த்தைகளைக் கேட்டு எனக்குக் கிருபை செய்யாது அலட்சியப்படுத்திவிடாதீர்கள். பயபக்தியுடன் நான் வேண்டுகிறேன். உங்கள் மகளாகிய என்னிடம் இரக்கம் காட்டுங்கள்."

அவள் அவ்விதம் கெஞ்சியத்தைக் கேட்டு நான் அவளுக்கு மீண்டும் பூரணமாக உறுதியளிக்கும் வகையில் சொன்னேன், "என்னுடைய கிருபையால் உனக்கு எழுகடலையும் பரிசளிப்பேன் (ஏழு கடல்களையும் தாண்டிவந்து உன்னைப் பாதுகாப்பேன்). நீ சிறிதும் வருத்தப்படாதே."


 

Friday, 4 July 2025

 ஷீர்டி சாயி சத்சரிதம் 


பணம் என்பது ஒரு கண்ணி. பெரியோர்களும் பணக்காரர்களும் கூட அதன் அலைக்கழிப்பிலிருந்து தப்பிக்க முடியாது. வீரபத்ரனையும் அவ்வப்பொழுது பணத்தட்டுப்பாடு கிள்ள ஆரம்பித்தது. பணத்தின் சேஷ்டை அத்தகையது! 

"பாபா, இல்லறத்தின் தளைகள் மிகத் துன்பமூட்டுபவை.  பணத்தட்டுப்பாட்டால் நான் துன்பப்படுகிறேன். குடும்பப் பொறுப்பைச் செவ்வனே நிறைவேற்றுவதற்கு எனக்கு ஒரு வழி காட்டுங்கள். -

"உங்களுடைய பாதங்களில் விழுகிறேன். இவ்விதம் என்னை ஏமாற்றுவது தகாது. என்னுடைய சங்கடத்தை நிவாரணம் செய்யுங்கள். நீர்தான் என்னுடைய திருமணத்திற்குக் காரண கர்த்தா!"

நானும் அவனுக்குப் பல தருணங்களில் போதனை அளித்தேன்.  "இதை அல்லா மாலிக்தான் அறிவார்.  அவர்தான் உன் சங்கடத்தையும் நிவாரணம் செய்வார்" எண்டு சொல்லி அவனைப் பிரேமையுடன் ஆசீர்வாதமும் செய்தேன். 

வீரபத்ரனின் மனப்போக்கை அறிந்து, அவனுடைய மனோரதம் நிறைவேறவேண்டும் என்பதற்காக நான் அவனை ஆசுவாசப்படுத்தினேன். 'சிறிதளவும் கவலைப்பட வேண்டா' என்றும் சொல்லுவேன். -

"உன்னுடைய பாக்கியகாலம் நெருங்குகிறது; வீணாகக் கிளர்ச்சியடையாதே.  கையைக் கழுவுவது எவ்வளவு சுலபமோ அவ்வளவு சுலபமாக உனக்குச் செல்வம் வந்து சேரும். பெரும் செல்வத்திற்கு அதிபதியாவாய்". (பாபாவின் நல்வாக்கு)

"செல்வம் என்னை அலட்சியப்படுத்துகிறது. மனைவியோ 'இந்தக் கொண்டுவா, அதைக் கொண்டுவா' என்று முடிவேயில்லாமல் உரிமையுடன் கேட்கிறாள். போதும், போதும் இந்த அவமானம். எனக்கு இந்த இல்லறத்தின் கௌரவமே வேண்டா" (வீரபத்ரனின் பதில்) 

ஆனால், பின்னர் ஓர் அற்புதம் நிகழ்ந்தது! கௌரியின் கிரகயோகத்தைப் பாரும்! தரிசு நிலத்தின் மதிப்பு திடீரென்று உயர்ந்தது. இறைவனின் லீலை மனித அறிவுக்கெட்டாதது!

ஒரு லக்ஷம் ரூபாய் கொடுக்கத் தயார் என்று சொல்லிக்கொண்டு வாங்குபவர் ஒருவர் வந்தார். பாதிப்பணத்தை ரொக்கமாக கொடுத்தார். மீதிப்பணத்தைத் தவணைகளில் செலுத்துவதாக வாக்களித்தார். 

அவர் ஒவ்வொரு ஆண்டும் இரண்டாயிரம் ரூபாய், வட்டியுடன் சேர்த்துச் செலுத்தவேண்டும் என்றும், இவ்விதமாக மீதிப்பணம் முழுவதையும் அடுத்த இருப்பைத்தந்து ஆண்டுகளுக்குள் கொடுத்துத் தீர்த்துவிட வேண்டும் என்றும் முடிவெடுக்கப்பட்டது. இம்முறையில் கௌரி பெரும்பணம் சேர்ப்பாள். 

இந்த முடிவை அனைவரும் ஏற்றுக்கொண்டனர். ஆனால், சனபசப்பா எழுந்து நின்று சொன்னான், "சங்கரருக்கு எது சமர்பிக்கப்பட்டாலும் அதற்கு எஜமானன் குரவர் வம்சத்தவனே".

அவன் மேலும் சொன்னான், "வருடாந்திர வட்டியில், குரவரின் பங்கான பாதி வட்டித்தொகை என்னிடம் வந்து சேரவேண்டும். அது வராமல் நான் திருப்தி அடையமாட்டேன்."


 

Thursday, 26 June 2025

 ஷீர்டி சாயி சத்சரிதம் 


கௌரியும் என்னிடம் பக்தி செலுத்தினாள்.  ஒருநாள் பூஜாரி என்னிடம் கேட்டார். "கௌரிக்கு ஏற்ற நல்ல வரன் கிடைப்பானா என்று தேடிக் கொண்டிருக்கிறேன். இன்னும் வெற்றி கிடைக்கவில்லை.-

"பாபா, மாப்பிள்ளை தேடித் தேடி நான் களைப்படைந்ததுதான் மிச்சம். எந்த முயற்சியும் பயன் தரவில்லை; மேற்கொண்டு என்ன செய்வதென்றும் தெரியவில்லை." நான் பதிலுரைத்தேன். "நீர் எதற்காகக் கவலைப்படுகிறீர்? மாப்பிள்ளை வழி நடந்து வந்து கொண்டிருக்கிறான்!-

"உம் மகள் பாக்கியசாலி, பெரும் பணக்காரியாக ஆவாள். அவளைத் தேடிக்கொண்டுதான் மாப்பிள்ளை வருகிறான்; தன்னிச்சையாகவே வருகிறான். -

"அவன் கூடியசீக்கிரத்தில் உமது வீட்டுக்கு வருவான். உமது விருப்பத்தைப் பூர்த்தி செய்வான். உம்முடைய வார்த்தையை மதித்து கௌரியைப் பாணிக்கிரஹணம் (திருமணம்) செய்துகொள்வான்."

அங்கு, பரிதாபகரமான வறுமையில் வாடிய வீரபத்ரன் பெற்றோர்களுக்குத் தைரியமளித்துவிட்டு வீட்டை வீட்டுக் கிளம்பினான். 

கிராமம் கிராமமாகப் பிச்சையெடுத்துக்கொண்டு திரிந்தான். சிலசமயம் சிறுபணி செய்து பிழைத்தான். கிடைத்ததை உண்டு திருப்தியடைந்தான். 

அலைந்து திரிந்து தெய்வாதீனமாக இந்தப் பூஜாரியின் வீட்டுக்கு வந்து சேர்ந்தான். நிகழமுடியாதவற்றை நிகழவைக்கும் அல்லாமியாவின் லீலைதான் என்னே ! எல்லாருக்கும் அவன்மீது பிரியம் ஏற்பட்டது. 

கொஞ்சங்கொஞ்சமாகப் பூஜாரியின் அன்பை வென்றான். பூஜாரியும் கௌரியை அவனுக்குக் கன்னிகாதானம் செய்யவேண்டுமென்று விரும்பினார். கோத்திரம், நாடி, கணம், யோகம் முதலியன பொருத்தமாக இருந்தன. பூஜாரி ஆனந்தமடைந்தார்!

ஒருநாள் தம்முடன் வீரபத்ரனை அழைத்துக்கொண்டு பூஜாரி வந்தார். அந்த சமயத்தில் அவர்கள் இருவரையும் ஒன்றாகப் பார்த்தவுடன் எனக்கொரு எண்ணம் உதித்தது. 

எண்ணம் உடனே சொல்லாக மலர்ந்தது, "ஒரு நல்ல முகூர்த்த நாளாகப் பார்த்து கௌரியை இவனுக்கு மணம் முடித்துவிடும்; உமது கடமையிலிருந்து விடுபடும்.

பூஜாரி தம் மனைவியின் சம்மதத்தைப் பெற்றபின், வீரபத்ரனை மாப்பிள்ளையாக நிச்சயம் செய்தார். ஒரு சுபமுகூர்த்த நாளில் கலியாணம் சிறப்பாக நடந்தேறியது. 

திருமணச் சடங்குகள் நடந்து முடிந்த பிறகு மணமக்கள் என்னை தரிசனம் செய்ய வந்தனர். சகல சௌபாக்கியங்களையும் பெற்று நல்வாழ்வு வாழ என்னுடைய ஆசீர்வாதங்களை வேண்டினர். 

நான் மகிழ்ச்சியுடன் அவர்களுக்கு ஆசியளித்தேன். 'சுகமாக அன்னம் கிடைக்கும்' என்ற ஆசியைக் கேட்ட வீரபத்ரனின் மனக்கண்முன் சுகபோகங்களை பற்றிய எண்ணங்கள் விரிந்தன; முகம் மலர்ந்தது. 

அவனுக்கும் என்னிடம் பக்தி ஏற்பட்டது. சில நாள்களுக்குப்பின் அவர்கள் தனிக்குடித்தனம் வைத்தனர். ஆயினும், கையில் காசில்லை என்று குறைசொல்லாத பாக்கியசாலி எவனும் இவ்வுலகில் உளனோ! 


 

Thursday, 19 June 2025

 ஷீர்டி சாயி சத்சரிதம் 


புலனின்பங்களை அனுபவிப்பதற்குச் செல்வம் தேவை.  செல்வத்தைத் தேடுவதற்கு வானளாவிய முயற்சிகள் எடுக்கப்படும்போது சுகபோகங்களுக்கான தாகம் மேலும் மேலும் அதிகரிக்கிறது. அதிலிருந்து விடுபடவே முடிவதில்லை!

நிலம் தரிசு என்பதில் சந்தேகமே இல்லை. பெரும்பாடுபட்டாலும் ஒன்றும் விளையாத நிலம். அந்த நிலத்தை இறைவனுக்கு அர்ப்பணம் செய்யச் சொன்னான் கஞ்சன்! இந்த தானத்தால் என்ன புண்ணியம்? 

மனத்தால் எந்தவிதமான பிரதிபலனையும் எதிர்பாராமல் இறைவனுக்கு அர்ப்பணம் செய்வது நிர்விகற்பம்  (தூய்மையான செயல்), கஞ்சன் செய்தது போன்ற தானம் முழுபாவச் செயல். கடைசியில் துக்கத்தையே  தரும். 

சிவன் கோவிலில் பூஜை செய்துவந்த ஏழை அந்தணர், கோயில் மானியமாக நிலம் சம்பாதிக்கப்பட்டது குறித்துப் பெருமகிழ்ச்சி அடைந்தார். 

ஆனாலும், சிறிது காலம் கழிந்த பிறகு ஒரு விபரீதமான சம்பவம் நிகழ்ந்தது. ஒரு கிருத்திகை நட்சத்திர நாளன்று பயங்கரமாகப் புயல் அடித்தது. அடைமழை பெய்தது. பெருஞ்சேதத்தை விளைவித்தது. 

மின்னலுக்குமேல் மின்னலாக அடித்தது. வீடுகள் நாசமாயின. உரிமையாளர் எவர் என்று தெரியாதுபோயினும், வீடுகள் இருந்த பூமி மட்டும் ஆபத்துக்குள்ளாகாமல் தப்பியது. மற்றதனைத்தும் மிச்சம் மீதமின்றி எரிந்துபோயின. 

பணக்காரனும் வீழ்ச்சிக்குள்ளானான்.  அவனும் மனைவியுடன் இறந்து போனான். டு ப கீயும் பஞ்சபூதங்களுடன் கலந்துவிட்டாள். மூவரின் வாழ்க்கையும் முடிந்துபோயிற்று. 

பின்னர் அப் பணக்காரன் மதுரா நகரத்தில் ஓர் ஏழைப் பிராமணனுக்கு மகனாகப் பிறந்தான். பக்தையான அவன் மனைவி ஒரு பூஜாரியின் குடும்பத்தில் பிறந்தாள். 

அவள் கௌரி என்று பெயரிடப்பட்டாள். டுபகீயின் விதியோ வேறுவிதமாக அமைந்தது. அவள் ஒரு சிவன் கோயில் 'குரவரின்' (கோயிலில் சுற்றுவேலை செய்பவரின்) மகனாகப் பிறந்தாள். 

நாமகரண தினத்தன்று இந்தப் பையன் சனபசப்பா என்று பெயரிடப்பட்டான். இவ்வாறாக இம்மூவரும் அவரவரின் கர்மபலனுக்கேற்ப  நிலைமாறினர். (அடுத்த ஜென்மம் எடுத்தனர்).

புனர்ஜன்மம் எடுத்த பணக்காரன் வீரபத்ரன் என்று பெயரிடப்பட்டான். பிரார்ப்த கர்மத்தின் (பழவினையின்) செயல்பாடு இவ்வாறே. முற்றிலும் நாம் அனுபவித்த பிறகுதான் வினைதீரும். 

சிவன் கோவில் பூஜாரியின் மேல் எனக்கு மிகுந்த பிரியம். அவர் தினமும் என்னுடைய வீட்டுக்கு வருவார். என்னுடன் சேர்ந்து புகை (சிலீம்) குடிப்பார். 

பிறகு நாங்கள் இருவரும் ஆனந்தம் நிரம்பியவர்களாய் இரவு முழுவுதும் பேசிக்கொண்டிருப்போம். ஆண்டுகள் கடந்தன. கௌரி வளர்ந்து மணப்பருவம் எய்தினாள். அவளையும் பூஜாரி தம்முடன் அழைத்துக்கொண்டு வருவார். 


 

Thursday, 12 June 2025

 ஷீர்டி சாயி சத்சரிதம் 


பின்னர்த் தன்னுடைய தீர்மானத்தைக் கணவனிடம் தெரிவித்தாள். கணவன் இந்தத் திட்டத்தைக் கேட்டான். உள்ளுக்குள்ளே பெருங்கலவரமடைந்தான். 

பேராசை கோலோச்சுமிடத்தில் விவேகம் எப்படி இருக்கும்? அதுவும் இறைப்பணிக்குத் தர்மம் அளிக்கும் விவேகமா? அவன் மனத்துக்குள் எண்ணினான், 'ஐயோ! எவ்வளவு விவேகமற்ற செயல்! தவறான நம்பிக்கை கொண்டு முழுக்க ஏமாறிவிட்டாள்.-

'அவளுடைய ஆபரணங்கள் அனைத்தையும் மதிப்பீடு செய்து ஓராயிரம் ரூபாய் என்று நிர்ணயம் செய்தபின், ஒரு நிலத்தை அவள் பெயரில் எழுதிவைத்துவிட வேண்டும்.'

ஆகவே, மனைவியின் ஆபரணங்களைக் கஞ்சனே விலைக்கு வாங்கினான். கடுமையான உழைப்பால் மேடுபள்ளம் திருத்தப்பட்ட சிறிய நிலம் ஒன்று யாராலோ அவனிடம் அடமானமாக வைக்கப்பட்டிருந்தது. பணத்திற்குப் பதிலாக அந்த நிலத்தை கஞ்சன் மனைவிக்கு கொடுத்தான். 

அந்த நிலமும் ஒரு தரிசு; மழை பெய்தாலும் எதுவும் விளையாத நிலம். அவன் மனைவியிடம் சொன்னான், "இதை சிவனுக்கு சமர்ப்பணம் செய். -

"இந்த நிலத்தின் மதிப்பு ஓராயிரம் ரூபாய். உன் கனவுக்காட்சியின்படி இதை நீ கடவுளுக்கு தானம் செய்யலாம். கடவுள் மகிழ்ச்சியடைவார். நீயும் உன் கடனைச் செலுத்தியவளாவாய்".

கணவனின் சொல்லுக்குக் கீழ்ப்படிந்து கஞ்சனின் மனைவி அந்த நிலத்தை சங்கரருக்கு சந்தோஷத்துடன் சமர்ப்பணம் செய்தாள்.

உண்மை நிலை என்னவென்றால், அந்த நிலம் டுபகீ என்னும் பெண்மணிக்குச் சொந்தமானது. அவள் இருநூறு ரூபாய் கடனுக்காக அந்த நிலத்தைப் பணக்காரக் கஞ்சனிடம் அடமானம் வைத்திருந்தாள். 

டுபகீ ஓர் அனாதைப் பெண்மணி; நிலம் அவளுடையது. ஆபத்துக்கு காலத்தில், அந்த நிலத்தையும் பணத்துக்காக அடமானம் வைக்கவேண்டியதாயிற்று. 

ஆயினும், பணக்காரனோ ஒரு மஹாலோபி. அவன் சங்கரரையும் ஏமாற்றுவதற்கு பயப்படவில்லை. கபடமான வழியில் மனைவியின் சீதனத்தை ஜேபியில் போட்டுக் கொண்டான். எனினும், லாபமடைந்தது பற்றி மகிழ்ச்சியடைந்தான். 

புலன்களின் வலிய ஆசைகள் மிகக் கெட்டவை. அவற்றைத் தேடி ஓடுபவனை புலனின்பங்கள் நாசம் செய்துவிடும். நல்லபடியாக வாழவேண்டுமென்று விரும்பும் மனிதன் புலனின்பநாட்ட  வலையில் மாட்டிக்கொள்ளலாகாது. 

வேடனின் புல்லாங்குழல் இசையின்மீது ஏற்படும் மயக்கத்தால் மான் மடிகிறது. அதனுடைய தலையில் இருக்கும் அழகிய மாணிக்கம் நாகப்பாம்பின் அழிவுக்குக் காரணமாகிறது. விளக்கொளியின் கவர்ச்சி விட்டில் பூச்சியை எரித்துவிடுகிறது. புலனின்பங்களின் அழிக்கும் இயல்பு இவ்வாறானது. 




Thursday, 5 June 2025

 ஷீர்டி சாயி சத்சரிதம் 

"அதை உண்மையென்று ஏற்றுக்கொண்டால், நாம் முற்றும் ஏமாறிப்போவோம். தூக்கம் கெட்டதால் ஏற்பட்ட கனவை யாராவது வாஸ்தவமானதாக ஏற்றுக்கொள்வார்களா?" பணக்காரன் கடைசியில் வந்தடைந்த சித்தாந்தம் (முடிந்த முடிவு) இதுவே!

இதைக் கேட்ட மனைவி பேச்சிழந்துபோனாள்.  அவளால் கணவனுக்குப் பதில் சொல்ல முடியவில்லை. மக்கள் நிதி திரட்டியது என்னவோ உண்மைதான்; ஆயினும், சந்தோஷத்துடன் கொடுத்தவர்கள் மிகச் சிலரே. 

தெய்வக்குற்றம் நேருமென்று பயந்தோ, சமூகத்தின் உந்துதலுக்கு இணங்கியோ, தர்மசங்கடத்திலிருந்து விடுபடவோ, அன்பின்றி அளிக்கப்படுவதை இறைவன் விரும்புவதில்லை. அன்புடன் அளிக்கப்படுவது எத்துனைச் சிறியதனாலும் அதை விலையுர்ந்த பொருளாகக் கருதி ஏற்றுக்கொள்கிறான். 

எப்போதெல்லாம் நிதி திரட்டப்பட்டதோ அப்போதெல்லாம் வேலை முன்னேறியது. பணம் வருவது நின்றபோது வேலையும் நின்றது. இவ்வாறாக வேலை தாமதமாகிக்கொண்டே போயிற்று. 

பணக்காரக் கஞ்சன் தன்னுடைய பணப்பையிலிருந்து ஒரு பைசாவும் செலவழிக்க மறுத்த நிலையில், அவன் மனைவிக்கு மறுபடியும் ஒரு கனவுக்காட்சி ஏற்பட்டது. எப்படியென்று சொல்கிறேன்; கேளும். 

"கோயிலுக்காகப் பணம் செலவிட வேண்டுமென்று உன் கணவனைத் தொந்தரவு செய்யாதே. உன்னுடைய பக்தியும் விசுவாசமும் இறைவனுக்குப் போதும். நீ கொடுக்க விரும்புவதைக் கொடு. -

"உன்னுடையை பணத்திலிருந்து நீ மனமுவந்து ஒரு பைசா கொடுத்தாலும் அது ஒரு லக்ஷத்திற்கு ஈடாகும். கணவனைக் கலந்தாலோசித்த பிறகு அதை இறைவனுக்கு அர்ப்பணம் செய். -

"வீணாகச் சலிப்படையாதே. கொடுப்பதை மனமுவந்து கொடுக்கவேண்டும். தனக்கு எது சொந்தமோ அதிலிருந்து எவ்வளவு சிறியதானாலும், அதை அர்ப்பணம் செய்யவேண்டும்.-

"இது விஷயத்தில் பாவமே பிரதானம். அது உனக்கு இருப்பது கடவுளுக்குத் தெரிந்திருப்பதால், உன்னைக் 'கொடு, கொடு' என்று சொல்கிறார். இறைவனுடைய உந்துதலைச் சரியாகப் புரிந்துகொள். -

"ஆகவே, உன்னிடம் எவ்வளவு சிறிய தொகை இருந்தாலும் சரி, அதைக் கொடுத்துவிட்டு நிம்மதியாக இரு. அன்பில்லாமல் எதையும் அளிப்பது உசிதமானதன்று. இறைவன் அதைச் சிறிதும் விரும்புவதில்லை. 

"பாவம் இல்லாது எவன் கொடுக்கிறானோ, அவன் தருவது எந்த மதிப்பையும் பெறாது. கடைசியில் அதற்கு அடியோடு பயனில்லாமல் போய்விடும். அதை அவன் தாமதமேதுமின்றி அனுபவப்பூர்மவாக அறிந்து கொள்வான்."

கனவுக்காட்சியில் இந்தச் சொற்களைக் கேட்ட பிறகு, தன் தந்தையால் சீதனமாக அளிக்கப்பட்ட அலங்கார ஆபரணங்களை விற்று, இந்தத் தேவையைப் பூர்த்திசெய்வது என்று அவள் நிச்சயம் செய்துகொண்டாள்.