ஷீர்டி சாயி சத்சரிதம்
"அதை உண்மையென்று ஏற்றுக்கொண்டால், நாம் முற்றும் ஏமாறிப்போவோம். தூக்கம் கெட்டதால் ஏற்பட்ட கனவை யாராவது வாஸ்தவமானதாக ஏற்றுக்கொள்வார்களா?" பணக்காரன் கடைசியில் வந்தடைந்த சித்தாந்தம் (முடிந்த முடிவு) இதுவே!
இதைக் கேட்ட மனைவி பேச்சிழந்துபோனாள். அவளால் கணவனுக்குப் பதில் சொல்ல முடியவில்லை. மக்கள் நிதி திரட்டியது என்னவோ உண்மைதான்; ஆயினும், சந்தோஷத்துடன் கொடுத்தவர்கள் மிகச் சிலரே.
தெய்வக்குற்றம் நேருமென்று பயந்தோ, சமூகத்தின் உந்துதலுக்கு இணங்கியோ, தர்மசங்கடத்திலிருந்து விடுபடவோ, அன்பின்றி அளிக்கப்படுவதை இறைவன் விரும்புவதில்லை. அன்புடன் அளிக்கப்படுவது எத்துனைச் சிறியதனாலும் அதை விலையுர்ந்த பொருளாகக் கருதி ஏற்றுக்கொள்கிறான்.
எப்போதெல்லாம் நிதி திரட்டப்பட்டதோ அப்போதெல்லாம் வேலை முன்னேறியது. பணம் வருவது நின்றபோது வேலையும் நின்றது. இவ்வாறாக வேலை தாமதமாகிக்கொண்டே போயிற்று.
பணக்காரக் கஞ்சன் தன்னுடைய பணப்பையிலிருந்து ஒரு பைசாவும் செலவழிக்க மறுத்த நிலையில், அவன் மனைவிக்கு மறுபடியும் ஒரு கனவுக்காட்சி ஏற்பட்டது. எப்படியென்று சொல்கிறேன்; கேளும்.
"கோயிலுக்காகப் பணம் செலவிட வேண்டுமென்று உன் கணவனைத் தொந்தரவு செய்யாதே. உன்னுடைய பக்தியும் விசுவாசமும் இறைவனுக்குப் போதும். நீ கொடுக்க விரும்புவதைக் கொடு. -
"உன்னுடையை பணத்திலிருந்து நீ மனமுவந்து ஒரு பைசா கொடுத்தாலும் அது ஒரு லக்ஷத்திற்கு ஈடாகும். கணவனைக் கலந்தாலோசித்த பிறகு அதை இறைவனுக்கு அர்ப்பணம் செய். -
"வீணாகச் சலிப்படையாதே. கொடுப்பதை மனமுவந்து கொடுக்கவேண்டும். தனக்கு எது சொந்தமோ அதிலிருந்து எவ்வளவு சிறியதானாலும், அதை அர்ப்பணம் செய்யவேண்டும்.-
"இது விஷயத்தில் பாவமே பிரதானம். அது உனக்கு இருப்பது கடவுளுக்குத் தெரிந்திருப்பதால், உன்னைக் 'கொடு, கொடு' என்று சொல்கிறார். இறைவனுடைய உந்துதலைச் சரியாகப் புரிந்துகொள். -
"ஆகவே, உன்னிடம் எவ்வளவு சிறிய தொகை இருந்தாலும் சரி, அதைக் கொடுத்துவிட்டு நிம்மதியாக இரு. அன்பில்லாமல் எதையும் அளிப்பது உசிதமானதன்று. இறைவன் அதைச் சிறிதும் விரும்புவதில்லை.
"பாவம் இல்லாது எவன் கொடுக்கிறானோ, அவன் தருவது எந்த மதிப்பையும் பெறாது. கடைசியில் அதற்கு அடியோடு பயனில்லாமல் போய்விடும். அதை அவன் தாமதமேதுமின்றி அனுபவப்பூர்மவாக அறிந்து கொள்வான்."
கனவுக்காட்சியில் இந்தச் சொற்களைக் கேட்ட பிறகு, தன் தந்தையால் சீதனமாக அளிக்கப்பட்ட அலங்கார ஆபரணங்களை விற்று, இந்தத் தேவையைப் பூர்த்திசெய்வது என்று அவள் நிச்சயம் செய்துகொண்டாள்.
No comments:
Post a Comment