valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday, 13 October 2016

ஷீர்டி சாயி சத்சரிதம்

நிந்தை செய்பவர்கள் நிச்சயமாக வணக்கத்துக்குரியவர்கள். மற்றவர்களுக்கு நன்மை செய்வதற்காகத் தங்களுடைய மனதை வீழ்ச்சியடைய செய்துகொள்கிறார்கள். அவர்களுடைய பரோபகாரத்தை வர்ணிக்க இயலாது!

நிந்தையென்ற பெயரில் ஒவ்வொரு பிடியிலும் நம்முடைய தோஷங்களை தெரிவித்து எதிர்காலத்தில் விளையக்கூடிய அனேக அனர்த்தங்களை (கெடுதல்களை) வராமல் தடுத்துவிடுகின்றனர். அவர்கள் செய்யும் உபகாரத்தை நான் எவ்விதம் போற்றுவேன்;

ஞானிகளாலும் சாதுக்களாலும் பலவிதமாகப் போற்றப்பட்ட நிந்தை செய்யும் கோஷ்டியை நான் சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்கிறேன்.

இந்த நிந்தையைக் கேட்டுக் கொண்டிருந்தவர்கள் வெறுப்படைந்தனர். நிந்தை செய்தவர் காளைக்கு கடன்களை கழிப்பதற்காக ஓடைக்கு சென்றார். பக்தர்களின் கூட்டம் பாபாவை தரிசிக்க மசூதிக்கு சென்றுவிட்டது.

பாபா பரிபூரணமான அந்தர் ஞானியானதால் தம் பக்தர்களுக்கு சரியான நேரத்தில் போதனை செய்வார். சிறிதுநேரம் கழித்து, அவர் விளைவித்த சம்வத்தைப் பற்றிக் கேளுங்கள்.

லெண்டிக்கு பக்தகோஷ்டியுடன் சென்றபோது, பாபா நிந்தை செய்த பக்தரைப்பற்றி விசாரித்தார். அவர் காலைக்கடன்களை முடிப்பதற்கு ஓடைக்குச் சென்றிருப்பதாக மற்றவர்கள் சொன்னார்கள்.

தம்முடைய காரியாக்கிரமங்களை முடித்துக்கொண்டு பாபா திரும்பினார். நிந்தை செய்த பக்தரும் ஓடையிலிருந்து வீடு நோக்கி கிளம்பினார்.

இருவரும் சந்தித்தபோது என்ன நடந்தது என்பதை பயபக்தியடன் நீங்கள் கேட்கும்படி நான் கைகூப்பி வேண்டுகிறேன்.

அவ்விடத்திலேயே ஒரு காம்ப்பவுண்டு வேலிக்கருகில் கிராமத்தின் பன்றியொன்று யதேஷ்டமாக மலத்தை சுவைத்துத் தின்று கொண்டிருந்தது. பாபா தம்முடைய கையால் அப்பன்றியைச் சுட்டிக் காட்டினார்.

"அந்த நாக்கு எவ்விதமாக பொதுஜனங்கள் கழித்த மலத்தைச் சுவைத்தும் ரசித்தும் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறது  என்று பார். தன் பந்துக்களையும் உறுமலால் விரட்டிவிட்டு தன் பெரும்பசியைத் தனித்துக் கொண்டிருக்கிறது.-

"பல சுகிர்தங்களைச் (நற்செயல்களை) செய்ததால் தனக்கு கிடைத்த மனிதப் பிறவியை வீணடித்துவிட்டு, தன்னுடைய நாசத்திற்கே வழிகோலும் மனிதனுக்கு இந்த ஷீர்டி என்ன சந்தோஷத்தையும் சாந்தியையும் அளிக்க முடியும்?"

பாபா இந்த தொனியிலேயே பிரசங்கம் செய்து கொண்டுபோனார். நீந்த செய்த மனிதருக்குள்ளே தேள் கொட்டியது. காலையில் நடந்ததெல்லாம் ஞாபகத்திற்கு வந்தது. பாபாவின் வார்த்தைகள் அவருடைய இதயத்தைப் பிளந்தன!

இவ்வாறாக, பாபா தம் பக்தர்களுக்கு சமயத்திற்கேற்றவாறு பிரசங்கரூபமாக போதனையளித்தார். இந்த போதனையின் சாரத்தை மனதில் கவனத்துடன் ஏற்றிக்கொண்டால், ஆன்மீக முன்னேற்றம் தூரத்திலா இருக்கிறது? 


Thursday, 6 October 2016

ஷீர்டி சாய் சத்சரிதம்

ராமநாமம் ஒழுக்கம் தவறியவர்களையும் கரையேற்றுகிறது. ராமநாமம் அபரிதமான நன்மைகளை அளிக்கிறது. ராமநாமம் பேதமில்லாத வழிபாடு, ராமநாமம் பிரம்மத்தையடையும் வழி.

ராமநாமத்தை இடைவிடாது ஜபிப்பதால், ஜனனமரணச் சூழலில் இருந்து விடுதலை கிடைக்கிறது. ராமநாமத்தை அடிக்கடி உச்சரித்துவந்தால், கோடிவகையில் நன்மை ஏற்படுகிறது.

ராமநாமத்தை கர்ஜனை செய்தால், மஹாவிஷ்ணுவின் சுதர்சனச் சக்கரம் தோன்றி, கோடி விக்கினங்களை அழிக்கிறது. இதுவே தீனர்களை சம்ரக்ஷணம் (நன்கு ரட்சித்தல்) செய்யும் நாமம்.

போதனை செய்வதற்கு சாயிநாதருக்குக் குறிப்பிட்ட இடமோ காலமோ தேவைப்படவில்லை. அமர்ந்திருக்கும்போதும் நடக்கும்போதும் உபதேசங்கள் சஹஜமாகவே வெளிவந்தன.

செவிமடுப்பவர்களே! இது சம்பந்தமாக ஒரு சுவாரஸ்யமான காதையைக் கவனத்துடன் கேளுங்கள். இக் காதை, சாயி எங்கும் நிறைந்திருப்பதையும் அவருடைய தயையும் வெளிக்காட்டும்.

ஒருமுறை, சிரேஷ்டமான (சிறந்த) பக்தரொருவர் வேறொரு மனிதரைப் பற்றி பேசும்போது குதர்க்கமான எண்ணங்களால் கவரப்பட்டு, அவரைக் கடுமையாக விமரிசித்து நிந்தை செய்தார்.

மூன்றாமவருடைய நற்குணங்கள் மறந்து போயின; நிந்தையே பிரவாகமாக பக்தருடைய வாயிலிருந்து வெளிவந்தது. சம்பாஷணையின் முக்கிய விஷயம் அழிந்துபோய், வசையும் நிந்தையுமே கொந்தளித்தன.

தக்க காரணத்தால் ஒருவருடைய நடத்தை இழிவானதாக கருதப்பட்டால், அவரைப் பார்த்து பரிதாபப்பட வேண்டியதே நியாயம்; திருந்துவதற்கான அறிவுரை நேரடியாகவும் அவருடைய முகத்துக்கு எதிராகவும் அளிக்கப்பட வேண்டும். புறங்கூறல் செய்யலாகாது.

'எவரையும் நிந்தனை செய்யக்கூடாது' என்பது எல்லாருக்கும் தெரிந்த விஷயமே. ஆயினும் அந்த மனப்போக்கை முளையிலேயே கிள்ளாவிடின் அதை உள்ளடக்கி வைக்கமுடியாது.

உள்ளேயிருந்து தொண்டைக்கு வந்து, அங்கிருந்து மெதுவாக நாக்கின் நுனிக்கு வரும். அங்கிருந்து சந்தோஷமாக உதடுகள் வழியாகப் பெருகும்.

மூவலகங்களிலும் தேடினாலும் நம்மை நிந்தை செய்பவனைப் போல ஓர் உபகாரியைக் காணமுடியாது. நிந்தை செய்யப்படுவனுக்கு அவன் பரம மங்களத்தை செய்கிறான்.

சிலர் அழுக்கை நீக்குவதற்கு புங்க கொட்டையை உபயோகிக்கின்றனர். சிலர் சவர்க்காரம் (சோப்பு) போன்ற பொருள்களை உபயோகிக்கின்றனர். நிந்தை செய்பவன் தன்னுடைய நாக்கை உபயோகிக்கிறான். !


Thursday, 29 September 2016

ஷீர்டி சாய் சத்சரிதம் 

தூங்கினாலும் விளித்தாலும் ராமனே 
எங்கு நோக்கினும் பூர்ணகாமன் ராமனே தெரிகிறான் (2)
ஜனார்த்தருடைய சிஷ்யன் ஏகநாதன் 
எங்கும் எப்பொழுதும் ராமனையே காணும்
உன்னதமும் புனிதமும் அடைகிறான் ." (3)

மனம் ஏற்கெனவே ராமநாமத்தின் மீது ஒருமுகப்படவேண்டும் என்று நிச்சயம் செய்து விட்டது. இந்த நிச்சயத்தைச் செயல்படுத்திய உடனே, இப் பாட்டிலிருந்து ஊர்ஜிதமும் கிடைத்தது. 

இதன் விளைவாக, கருணாமூர்த்தியான சமர்த்த சாயி என்னுடைய தீர்மானம் என்னும் நாற்றின்மீது இப்பாட்டு என்னும் நீரைத் தெளிக்கிறாரோ என்று தோன்றியது. 

தம்பூராவை ஏந்தி, மசூதியின் முற்றத்தில் சாயிநாதருக்கு எதிராக நின்று கொண்டு ஒளரங்காபாத்கர் உச்சஸ்தாயியில் பயாடிக் கொண்டிருந்தபோது கேட்டேன். 

ஒளரங்காபாத் பாபா பக்தர்; என்னைப் போலவே பாபாவிடம் அனுரக்தி (மிகுந்த அன்பு) கொண்டவர். எவ்வளவோ பாட்டுகள் பாடாந்தரமாகத் தெரிந்த இவர், இந்த நேரத்தில் இந்தப் பாட்டைப் பாட வேண்டுமென்று எவ்வாறு உணர்வூட்டப் பட்டார்?

என்னுடைய மனதில் நான் என்ன தீர்மானம் செய்துகொண்டேன் என்பது  யாருக்குமே தெரியாத நிலையில், அவர் இந்த நேரத்தில் இக்குறிப்பிட்ட பாட்டை ஏன் பாட வேண்டும்? பாபா எவ்வாறு நூலை இழுக்கிறாரோ, அவ்வாறே நாம் உள்ளுணர்வு பெறுகிறோம்!

நாமெல்லாரும் பொம்மைகளே; சாயிமாதாவே பொம்மலாட்டத்தின் சூத்ரதாரி. ஒரு வார்த்தையும் பேசாமலேயே, உபாசனை செய்ய வேண்டிய முறையை என் கைகளில் அளித்துவிட்டார். 

என்னுடைய மனத்தின் ஆழமான எண்ணங்கள் பாபாவின் மனதில் பிரதிபலித்தன போலும்! இந்த வழியில் எனக்குப் பிரத்யக்ஷமாகவும் நிச்சயமாகவும் ஓர் அனுபவத்தை அளித்துவிட்டார். 

ஞானிகளும் மதகுருமார்களும் விளக்கியவாறு, நாமத்தின் மஹிமைதான் என்னே! என்னைப் போன்ற ஒரு பாமரன் மேற்கொண்டு என்ன விளக்க முடியும்? நாமத்தின் மூலமாகத்தான் ஒரு மனிதன் தன்னுடைய உண்மையான சொரூபத்தை அறிந்துகொள்ள முடியும். 

'ராம' என்னும் இரண்டெழுத்து சொல் தலைகீழாக திருப்பப்பட்டு (மரா) ஜபம் செய்யப்பட்டதாலேயே , வேடனும் வழிப்பறிக் கொள்ளைக்காரனும் ஆகியவன், வால்மீகி என்று பெயர் பெற்ற ரிஷி நிலைக்கு உயர்த்தப்பட்டான். தான் பாடியதெல்லாம் உண்மையாக நிகழும் வாக்கு சித்தியையும் பெற்றான். 

'மரா' 'மரா' என்று 'ராம' என்னும் நாமத்தைத் தலைகீழாக ஜபித்த அவருடைய  நாவை ஸ்ரீ ராமர் ஆசிர்வதித்தார். ஸ்ரீராமர் பிறப்பதற்கு முன்னமேயே அவருடைய வாழ்க்கை வரலாற்றை வால்மீகி எழுதிவிட்டார்!


Thursday, 22 September 2016

ஷீர்டி சாயி சத்சரிதம்

பக்தர்கள் நியமமாக செய்யும் நற்செயல்கள் அவர்கள் கேட்காமலேயே எவ்வாறு உற்சாகப்படுத்தி, மஹராஜ் அனுக்கிரஹம் செய்கிறார் என்பது பற்றிக் கேளுங்கள்.

இருந்தாலும், பக்தர் வேறொன்றிலும் நாட்டமில்லாது சரணாகதி செய்துவிட்டு பக்தியின் அற்புதத்தை அனுபவிக்க வேண்டும். அப்பொழுது ஆர், பாபாவினுடைய விநோதமானதும் புதிது புதிதானதுமான வழிமுறைகளை காணலாம். பயனுறலாம்.

காலையில் தூக்கத்தில் இருந்து கண்விழிக்கும்போதே ஒருவருக்கு நற்செயல் பற்றிய எண்ணமொன்று தோன்றினால், அதை அன்று நிர்த்தாரணம் செய்ய வேண்டும்.

அம்மாதிரியான எண்ணங்கள் போஷிக்கப்பட்டால், பெரும் சந்தோசம் விளையும். புத்தியும் விகாசமடையும் (மலரும்); மனம் உவகையுறும்.

இது ஒரு ஞானியின் திருவாய் மொழி. இவ்வுண்மையை நாமும் அனுபவிப்போமே என்று நான் நினைத்தேன். நான் எதிர்பாராமலேயே இவ்வனுபவம் என்னுடைய மனத்திற்குப் பெரும் சாந்தியைக் கொணர்ந்தது.

ஷிர்டியைப் போன்ற ஷேத்திரம், வியாழக்கிழமையைப் போன்ற மங்கள நாள்! திடீரென்று, எனக்கு ராமநாமத்தை இடைவிடாது ஜபிக்க வேண்டும் என்ற எண்ணம் உதித்தது.

புதன்கிழமை இரவு படுக்கையில் படுத்தவாறே நான் ஸ்ரீ ராமனைப் பற்றிய சிந்தனையிலேயே என் மனதை மூழ்கடித்தேன். தூக்கம் வரும்வரை மௌனமாகவே ஜபம் ஓடியது.

காலையில் கண் விழித்தவுடனே, என் மனத்தில் ராமநாமம் உதித்தது. நாக்கு படைத்த பயனைப் பெற்றதை உணர்ந்தேன்.

மனதில் ராமநாம ஜபம் நிலைக்க வேண்டும் என்று நிச்சயம் செய்துகொண்டு, காலைக்கடன்களை முடித்தபின் கையில் அகப்பட்ட பூக்களை எடுத்துக்கொண்டு சாயியை காலை தரிசனம் செய்யச் சென்றேன்.

தீக்ஷித் வாடாவை (சத்திரம்) விட்டுக் கிளம்பி புட்டிவாடா அருகில் (இன்றைய சமாதி மந்திர்) வரும்போது, ஒளரங்காபாத்கர் என்பவர் பாடிக்கொண்டிருந்த இனிமையும் அழகும் வாய்ந்த பதம் ஒன்றைக் கேட்டேன்.

அதையே நான் ஓவி வடிவத்தில் (சுலோகம்) இங்கு அளித்தால் மூலத்தின் சுவையும் சூழ்நிலைப் பொருத்தமும் காணாமற் போய்விடும். கேட்பவர்கள் ஏமாறிப் போவார்கள்.

ஆகவே, நான் மூலத்தையே அக்ஷரம் அக்ஷரமாக மேற்கோளாக வடிக்கிறேன். கேட்பவர்களும் மூலத்தின் தூய்மையான உபதேசத்தை அறிந்துகொண்டு மனம் மகிழலாம்.

"புண்ணியம் செய்தேன் சகோதரா! குருவருள் ஈந்த அஞ்சனத்தால்
ராமனை தவிர வேறெவரையும் நினைப்பேனில்லை  -  பல்லவி
உள்ளிலும் ராமன், வெளியிலும் ராமன்
கனவிலும் சீதா ராமனையே காண்கிறேன் (1)

 

Thursday, 15 September 2016

ஷீர்டி சாயி சத்சரிதம்

"யார் இங்கு சாகாவரம் பெற்றவர்? ஆன்மீக முன்னேற்றம் எய்தியவன் கிருதார்த்தனாகிறான் (பேரு பெற்றவனாகிறான்). மற்ற ஜீவன்கள், மூச்சு விட்டுக்கொண்டிருக்கும்வரை, உயிருள்ளவனாய் இருக்கின்றன." (திருவாய் மொழி இங்கு முடிகிறது).

அருள்மொழியான இவ்வார்த்தைகள் என் செவிகளில் விழுந்தபோது, என்னுடைய நோய்கண்ட இதயம் சூதமடைந்தது; என் ஜீவனுடைய தாக்கம் அடங்கியது. நான் ஆனந்தம் நிரம்பியவனானேன்.

ஒருவருக்கு இணையில்லாத புத்திசாதுர்யம் இருக்கலாம். ஆடாத அசையாத சிரத்தையும் இருக்கலாம். ஆயினும் சாயியைப் போன்ற பலமான குரு அமைவதற்கு தெய்வபலம் அவசியம் வேண்டும்.

இந்த உபதேசத்தின் சாரத்தை கவனிக்கும்போது, பகவான் ஸ்ரீகிருஷ்ணர் பகவத் கீதையில் 'யார் என்னை எப்படி' என்று அருளியது முக்காலத்தும் உண்மை! மனிதனுடைய மொத்த பாரமும் அவனுடைய கர்மாவின்மீதே.

உன்னுடைய கர்மா எப்படியோ , அப்படியே நீ அடையும் ஞானம்; அப்படியே உன்னுடைய ஆன்மீக சாதனைகள். எப்படி அப்பியாசமோ அப்படியே பலன்கள். இதுதான் இந்த அத்தியாயத்தின் இங்கிதகவி (பாட்டுடை தலைவன் கருத்தை விளக்கும் கவி). இதுவே போதனமிருதம்.

'வேறொன்றிலும் நாட்டமில்லாமல்' என்ற கோவிந்தனின் முக்கிய உறுதிமொழி இங்கும் பிரயோகிக்க தக்கது.

இவ்வினிமையான வார்த்தைகளைக் கேட்டபொழுது, "யாகத்தால் தேவர்களை பேணுங்கள். தேவர்கள் உங்களை பேணட்டும். பரஸ்பரம் பேணிப் பெருநன்மை எய்துவீர்" என்றும் பகவத் கீதையின் சுலோகமே எனக்கு ஞாபகத்திற்கு வருகிறது.

"நீ தண்டால் (கடுமையான ஆன்மீகப் பயிற்சி) எடுக்க ஆரம்பி, பாலைப் பற்றிய (பயிச்சிக்கு பலன்)கவலை ஏதும் வேண்டா. ஏனெனில், உனக்கு பின்னாலேயே நான் தயாராக ஒரு வட்டிலில் பாலை வைத்துக்கொண்டு  நிற்கிறேன்.-

"ஆனால், 'நான் தண்டால் எடுக்கிறேன், நீர் எனக்கு வட்டில் வட்டிலாக பாலைத் திருப்தியுறும் வரை கொடும்' என்று நீ கேட்டால், ஆ!  அதெல்லாம் எனக்கு தெரியாது. செயல் ஆற்றுபவன் துடிப்புள்ளவனாக இருக்க வேண்டும்." (பாபா)

பாபாவின் இவ்வாக்குறுதியை சத்தியமென்று எடுத்துக்கொண்டு எவர் செயல்படுகிறாரோ அவர் இந்த உலகத்திலும் மேலுலகத்திலும் சந்தோசம் என்னும் சுரங்கத்தை கண்டுபிடித்தவராவார்.

இப்பொழுது, என்னுடைய அனுபவ பூர்வமான கதை ஒன்றை அசையாத  மனதுடன் கவனமாக கேட்கும்படி உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். பக்தருடைய நல்ல தீர்மானங்களை பாபா எவ்வாறு நிச்சயமாகப் போஷிக்கப் போகிறார் என்பது தெளிவாகும். 


Thursday, 8 September 2016

ஷீர்டி சாயி சரித்திரம்
இப்பொழுது, பாபா அவ்வப்பொழுது  திருவாய் மொழிந்ததைக் கேளுங்கள். சர்வ சாதாரணமாகத் தோன்றினும் அவை விலைமதிப்பற்றவை. இவ்விஷயங்களை மனதில் எப்பொழுதும் வைத்திருந்தால், உங்களுக்கு நன்மையையும் நற்பலன்களையும் அளிக்கும்.

"முன்ஜன்ம சம்பந்தில்லாமல் எவரும் எங்கும் போவதில்லை. ஆகவே, மனிதராயினும், மிருகமாயினும், பறவையாயினும், அவமதிப்பு செய்து விரட்டி விடாதே.-

"யார் உன்னிடம் வந்தாலும் தகுந்த மரியாதை கொடு. தாகத்தால் தவிப்பவர்களுக்கு நீரும், பசியால் வாடியவர்களுக்கு உணவும், ஆடையில்லாதவர்களுக்கு துணியும், திக்கற்றவர்களுக்கு இருப்பிடமும் அளிப்பாயாக. இவ்வாறு செய்தால் ஸ்ரீ ஹரி சந்தோஷமடைவார்.-

"யாராவது உன்னிடம் பைசா கேட்டால், உனக்கு கொடுப்பதற்கு இஷ்டமில்லை என்றால் கொடுக்க வேண்டா. ஆனால், பைசா கேட்ட நபர் மீது நாயைப் போல குரைக்கவும் வேண்டா.-

"மற்றவர்கள் உன்னை எதனை வழிகளில் வசைபாடினாலும் கண்டனம் செய்தாலும் நீ எதிர்த்து கசப்பாகவோ மனம் புண்படும்படியாகவோ பேசாதே. அதை பொறுமையுடன் சகித்துக் கொள்வாயாக; அதனால், உனக்கு அபாரமான சுகம் கிடைக்கும். -

"இந்த உலகமே தலைகீழாக மாறலாம். ஆயினும், நாம் வழிதவறி விடக் கூடாது. நம்முடைய நிலையிலேயே உறுதியாக நின்றுகொண்டு அமைதியாக இவ்வுலகை வேடிக்கை பார்க்கவேண்டும்.-

"உனக்கும் எனக்கும் நடுவேயுள்ள மதிற்சுவரை உடைத்து, முழுக்க நாசம் செய்வாயாக. அப்பொழுது நமக்குத் போகவும் வரவும் பயமில்லாத ஒரு பிரசத்தமான(மங்களமான) பாதை கிடைத்துவிடும்.

"குருவுக்கும் சிஷ்யனுக்கும் இடையே உள்ள தடுப்பு சுவர், 'நீங்கள், நான்' என்னும் மனோபாவமே. அதை உடைத்தெறியாவிட்டால் இருவரும் ஒன்றே என்னும் நிலையை அடைய முடியாது.-

"அல்லாவே யஜமானார்; அல்லாவே யஜமானார்! அவரைத் தவிர ரட்சகர் வேறு எவரும் இல்லை. அவருடைய செய்கைகள் உலகியலுக்கு அப்பாற்பட்டவை; விலைமதிப்பற்றவை; கற்பனை செய்து பார்க்கமுடியாதவை!-

"அவர் நினைப்பதே நடக்கும்; அவரே வழியைக் காட்டுவார். நம்முடைய மனதின் இனிய விருப்பங்கள் ஒரு கணமும் தாமதமின்றி நிறைவேறும் நேரம் வரும்.-

"பூர்வஜென்மங்களின் சம்பந்தத்தினால் நாம் ஒருவரையொருவர் சந்திக்கும் பாக்கியம் பெற்றோம். இதயத்தின் அடித்தளத்தில் இருந்து பொங்கும் அனுப்புடன் நாம் ஒருவரையொருவர் தழுவுவோம். சுகத்தையும் சந்துஷ்டியையும் (பூரணமான திருப்தியையும்)அனுபவிப்போம். -

Thursday, 1 September 2016

ஷீர்டி சாயி சத்சரிதம்

"பிறகு அஞ்ஞானத்தால் விளைந்த கர்மபந்தங்கள் ஒவ்வொன்றாக அறுந்து விழும். இக் காரியத்தை செய்யலாம். இக் காரியத்தை செய்யக் கூடாது, என்பது போன்ற நிர்பந்தங்களும் விலகிவிடும். முக்தியின் ஆனந்தம் அனுபவிக்கப்படும். -

"முதலில், 1. ஆத்மா என்று ஒன்று இருக்கிறதா, இல்லையா? 2. ஓர் உயிரினுள் உறையும் ஆத்மாவும் மற்றொரு உயிரினுள் உறையும் ஆத்மாவும் ஒன்றேயா, வெவ்வேறா? 3. ஆத்மா 'செயல்புரிபவனா', 'செயல்புரியாதவனா'? என்ற கேள்விகளுக்குப் பதிலை ஆறு சாஸ்திரங்களையும் அலசித் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும்.-

"எல்லா உயிர்களிலும் உறையும் ஆத்மாவும் ஒன்றே என்று உணர்வதே ஆத்ம விஞ்ஞானத்தின் எல்லை. மோக்ஷமும் பரமானந்தமும் இந்த உணர்விலிருந்துதான் பிறக்கின்றன. -

"பிருஹஸ்பதியை (தேவகுரு) போன்று சொல்வன்மை படைத்த அறிஞரை நீர் கொண்டு வந்தாலும், அவருடைய நாவன்மை குருடனுக்கு யானை எப்படி இருக்கும் என்பதை விளக்கி அவன் மனதில் ஏற்ற முடியாது. சொல்லுக்கு அப்பாற்பட்டதைச் சொல்லால் விளக்க முடியாது! -

"பேசுபவர்களின் நாக்கும் கேட்பவர்களின் செவியும், இல்லாத பார்வையைக் கொண்டுவர முடியுமா என்ன? யானையின் உருவத்தை பார்ப்பதற்கு கண்களே தேவை.-

"கண்பார்வையின்றி, யானையைக் கண்ட அனுபவத்தை ஒரு குருடன் எவ்வாறு பெறமுடியும்? அது போலவே, திவ்வியமான பார்வையை குரு அளித்த பிறகுதான், ஞானப் பொக்கிஷம் கைக்கு எட்டும்." (பாபாவின் திருவாய் மொழி இங்கு முடிவதாக எடுத்துக் கொள்ளலாம்).

"சாயியின் சொரூபமே உண்மையான, பரிபூரணமான ஞானமும் விஞ்ஞானமும் ஆகும். அவருடைய நிஜமான சொரூபத்தை உண்மையாகவும் முழுமையாகவும் அறிந்துகொள்வதே தியானமாகும். அதுவே அவருடைய தரிசனம். -

"அஞ்ஞானத்தில் இருந்தும் காமத்தில் இருந்தும் கர்மவினைகளில் இருந்தும் முற்றும் விடுபட, வேறு சாதனை எதுவுமே இல்லை. இதை உங்களுடைய மனதில் உறுதியாக நிலைப்படுத்துங்கள். -

"சாயி கேவலம் உம்முடையவரோ அல்லது நம்முடையவரோ அல்லர். எல்லா உயிர்களிலும் உறைகின்றார். சூரியன் எவ்வாறு இவ்வுலகம் முழுமைக்கும் சொந்தமோ, அவ்வாறே அவரும்"  - தபோல்கருடைய கூற்றாகக் கருதலாம்.