valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday, 20 November 2025

 ஷீர்டி சாயி சத்சரிதம் 


பொதுவாக, ஞானிகளின் கதைகளை ஞானிகளே எழுதுகின்றனர். ஞானிகளின் அருள்வெளிபாட்டைப் பெறாமல் எழுதப்படும் நூலில் சுவை இருக்காது;  வரிக்கு வரி, சோர்வு தட்டும். 

கிருபாமூர்த்தியான சாயிநாதர் என் மனத்துள் புகுந்து அவருடைய சரித்திரத்தை எழுதச்செய்து வாங்கிக்கொண்டார்;  என்னுடைய மனோரதத்தையும் நிறைவுசெய்தார். 

வாய், ஸ்ரீஸாயி நாமத்தை இடைவிடாது ஆவர்த்தனம் செய்யும்போதும், சித்தம் அவருடைய திருவாய்மொழியைச் சிந்திக்கும்போதும், மனம் அவருடைய திருவுருவத்தைத் தியானம் செய்யும்போதும், நான் பூரணமான சாந்தியை அனுபவிக்கிறேன். 

வாக்கில் சாயியின் நாமத்துடனும், இதயத்தில் சாயியின்மீது பிரேமையுடனும், சாயியைப் பிரீதி செய்வதற்காகவே செயல்புரிபவுனுக்கு சாயி பெருமளவில் கடன்பட்டிருக்கிறார்!

சம்சார பந்தங்களை அறுத்தெறிவதற்கு இதைவிட மேலான சாதனம் ஏதும் இல்லை. சாயியின் கதை பரம பாவமானது (தூய்மையளிப்பது);  படித்தாலும் கேட்டாலும் சுகத்தை அளிக்கும். 

கால்களால் சாயியைப் பிரதட்சிணம் செய்யுங்கள். காதுகளால் அவருடைய சரித்திரத்தைக் கேளுங்கள்.  கண்களால் சாயியை தரிசனம் செய்யுங்கள்.  எல்லா அங்கங்களாலும் அவரைப் பிரேமையுடன் ஆலிங்கனம் செய்யுங்கள். (தழுவுங்கள்).

அவருக்கு சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்யுங்கள். அவருடைய பாதங்களில் சிரம் தாழ்த்துங்கள்.  வாய் அவருடைய நாமஸ்மரணத்தையே  செய்யட்டும்.  மூக்கு அவருக்கு அர்ப்பணம் செய்யப்பட்ட மலர்களின் (நிர்மாலியத்தின்) நறுமணத்தை நுகரட்டும். 

இப்பொழுது, கதையை விட்ட இடத்தில தொடர்வோமாக.  'அற்புதங்களைக் காண்பதில் ஆவல் அதிகம் காட்டிய பக்தர் ஒருவரின் காதையைச் சொல்லப்போகிறேன்' என்று கடந்த அத்தியாயத்தில் கதைகேட்பவர்களுக்கு ஒரு வாக்கு அளிக்கப்பட்டது. 

உலகியல் நாட்டமோ ஆன்மீக நாட்டமோ இல்லாதவரும், ஞானிகளின் சக்திகளை அறியாதவருமாகிய மனிதர், அவரிடம் வேறொருவர் சொல்லும் விவரணத்தை மனத்தில் நம்பிக்கையின்றிக் கேட்கிறார். 

நண்பர்கள் சாயியின் பெருமைகளைச் சொன்னபோது அவர் குற்றங்காண்பதற்காகவே கேட்டார். இவ்வுலகில் தாமே நேரிடையாக அனுபவித்து உணரமுடியாத எதையும் அவர் நம்ப மறுத்தார். 

அவருடைய பெயர் ஹரி கானோபா. சாயியைத் தாமே சோதித்துப் பார்த்துவிடும் நோக்கத்துடன் அவர் பம்பாயிலிருந்து நண்பர்களுடன் யாத்திரையாகக் கிளம்பினார். 

ஆனால், எல்லாருடைய இதயத்தையும் ஒளிரச்செய்யும் சாயியின் கலைத்திறனையும் புதினங்கள் புரியும் லாவகத்தையும் நிர்த்தாரணமாக எவரால் அறிந்துகொள்ள முடியும்? 

 


 

Thursday, 13 November 2025

 ஷீர்டி சாயி சத்சரிதம் 


அவருடைய அளவிலா மஹிமையைப் பாடுவதற்கு நுழைபவர்களில் யாருக்குக் கதை சொல்லும் சாமர்த்தியம் இருக்கிறது?  பராவே (பேச்சின் முதல் நிலையே) திறமையின்றிப் பின்வாங்கும்போது, பச்யந்தி, மத்யமா (இடை நிலைகள்) இவற்றின் கதி என்னவோ!

இம் மூன்றும் வாயை மூடிக்கொண்டு இருக்கும்போது நான்காவதாகிய வைகரீ (கடைநிலை) என்ன செய்ய முடியும்?  ஈதனைத்தையும் நான் சம்பூர்ணமாக அறிவேன்;  ஆயினும், என் மனம் சும்மா இருக்க மறுக்கிறது!

சத்குருவின்  பாதங்களில் மூழ்காமல், அவருடைய யதார்த்தமான சொரூபம் கைக்கு எட்டாது. ஆகவே, ஸ்ரீ ஹரியின் சொரூபமான ஞானிகளைக் கைகூப்பி, கிருபை செய்யும்படி பிரார்த்தனை செய்தல் வேண்டும். 

குருவின் பாதங்களில் ஒட்டிக்கொள்வதே நமக்கு எல்லாவற்றுக்கும் மேன்மையான லாபம்.  ஆகவே, நாம் ஞானிகளின் சகவாசத்திற்கும், பல கோணங்களில் உருவெடுக்கும் அவர்களுடைய அன்புக்கும் எங்கும் பண்பை அபிவிருத்தி செய்துகொள்வோமாக. 

முழுக்க முழுக்கத் தேகாபிமானம் உள்ளவனுக்கு பக்தன் என்று சொல்லிகொள்ளத் தகுதியில்லை.  தேகாபிமானத்தைப் பூரணமாகத் துறந்தவன்தான் உண்மையான பக்தன். 

எவனிடம் ஞானகர்வம் உள்ளதோ, எவனிடம், தான் சிறந்தவன் என்னும் தற்பெருமை உண்டோ, எவர் டம்பத்தின் வசிப்பிடமோ, அவனிடம் என்ன புகழ் சேரும்?

தம் குருவின் கீர்த்தியைப் பாடாத அபாக்கியவான்களும், செவிப்புலனைப் பெற்றிருந்தபோதிலும்  குருவின் பெருமையைக் கவனமாக கேட்காதவர்களும், மந்தமதியே உருவெடுத்து வந்தவர்கள் அல்லரோ!

தீர்த்த யாத்திரை, விரதம் , யாகம், தானம் இவற்றைவிட மேன்மையானது தவம்.  அதனினும் மேன்மையானது ஹரிபஜனை.  எல்லாவற்றையும் விட மேன்மையானது குருபாதங்களின்மீது தியானம். 

சாயியே சாயிபக்தர்களின் தியானம்.  சாயியே தேவர்களுக்கும் தேவிகளுக்கும் அவர்கள் செய்யும் அர்ச்சனை.  சாயியே அவர்களுடைய ரகசியப் பொக்கிஷமும்கூட! இப் பொக்கிஷத்தை அவர்கள் ரட்சிக்க வேண்டும்; ஆனால், கஞ்சத்தனம் கூடாது!

எப்பொழுதாவது ஒருசமயம் என்னைச் சோம்பல் அண்டும்.  ஆனால், அந்தர்மியமான (என்னுள் உறையும்)  சாயிக்கு அது என்னவென்றே தெரியாது.  கதை சொல்ல நான் மறந்தால், சரியான நேரத்தில் அவர் ஞாபகமூட்டுகிறார். 

சிறிது நேரம் ஓய்வெடுக்கலாம் என்று நான் நினைக்கலாம்.  ஆயினும், என்னுடைய சட்டம் இங்கே செல்லுபடியாவதில்லை.  ஏனெனில், திடீரென்று என் மனத்தில் உதிக்கும் கதை என்னைப் பேனாவைக் கையிலெடுக்கச் செய்கிறது. 

அவருடைய அற்புதங்கள் நிறைந்த, கணக்கற்ற கதைகளை பக்தர்களுக்கு அளிப்பதற்காகவும் மற்றும் என்னுடைய நன்மைக்காகவும் இந்த சத் சரித்திரத்தை எழுத என்னை ஊக்குவிக்கிறார். 




 

Thursday, 6 November 2025

 ஷீர்டி சாயி சத்சரிதம் 

49 .  மஹானை சோதிக்காதே! மனத்தை அடக்கு!

ஓம் ஸ்ரீ விநாயகனே போற்றி! ஸ்ரீ சரஸ்வதியே போற்றி!
ஸ்ரீ குருமஹாராஜனே போற்றி! குலதேவதைக்கும் ஸ்ரீ சீதாராமச்சந்திரனுக்கும் 
என்னுடைய பணிவான வணக்கங்கள்.  பூஜ்யகுரு ஸ்ரீசாயிநாதனை 
பக்தியுடன் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன். 

சத்குருவை சாங்கோபாங்கமாகப் (முழுமையாகப்) போற்றும் முயற்சியில் வேதங்களும் புராணங்களுமே திணறிக்கொண்டிருக்கும்போது எதையும் புரிந்துகொள்ள இயலாத என் போன்ற அஞ்ஞானி வாயை மூடிக்கொண்டிருப்பதே மேலாகும். 

சிந்தித்துப் பார்த்தால், வாயைப் பொத்திக்கொண்டு மௌனமாக இருப்பதுதான் சத்குருவைப் போற்றும் சிறந்த வழியாகும். ஆனால், சாயியின் அடுக்கடுக்கான சீரிய பண்புகள் என்னுடைய மௌனவிரதத்தை மறக்கடித்துவிடுகின்றன. 

சாயியின் ஆழங்காணமுடியாத லீலைகள் பெரும்பேறு விளைவிப்பவையே. அவற்றைக் கண்ணால் கண்ட நான் எப்படிச் சும்மாயிருக்க முடியும்? இனிமையான அந்தத் தின்பண்டங்களை என் நாக்கு ருசிபார்த்தபோது, நான் கதைகேட்பவர்களை நினைவில் கொண்டேன். 

அந்தப் பந்தியில் நான் சுவைத்த ஆனந்தரசத்தை இந்த விருந்திலும் (காவியம்) சேர்க்க முடிவெடுத்தேன். அதனால்தான், இந்த இருந்து சுவாரசியமாகவும் களிப்பூட்டுவதாகவும் அமைந்திருக்கிறது. 

அறுசுவை விருந்தாயினும், பண்புள்ள நண்பர்கள் பந்தியில் இல்லையெனில், அவ்வுணவு ரசிக்காது.  தனியாக அமர்ந்து உண்ணும் விருந்துக்கு ருசியேது?

சாயி அனைத்து விருப்பங்களும் நிறைவேறியவர்; எல்லா ஞானியராலும் போற்றப்படுபவர். சாயி தம் பக்தர்களுக்கு ஓய்வையும் சாந்தியையும் அளிக்கும் பூஞ்சோலை; வாழ்க்கையின் சகித்துக்கொள்ளமுடியாத பிரமைகளை நிவாரணம் செய்பவர். 

சொல்லுக்கு அப்பாற்பட்ட அவருடைய லீலையை என்னுடைய பேச்சால் வர்ணிக்க முடியவில்லை. புரிந்துகொள்ள முடியாதவரின் விவரிக்க முடியாத கலைகளை யான் எங்ஙனம் சாரம் வாங்குவேன்?

மங்களுக்கெல்லாம் மங்களமான சாயி தம்முடைய கதைப்பற்றிய நினைவைக் கருணையுடன் எனக்கு அளித்து இக் காவியத்தைப் பரிபூரணமாக்குகிறார். 

 

 

Thursday, 30 October 2025

 ஷீர்டி சாயி சத்சரிதம்


"ஹீனர்களும் தீனர்களுமாகிய நாங்கள் பாமர மக்கள்.  அனாதைகளாகிய எங்களிடம் கிருபை காட்டுங்கள்.  இன்றிலிருந்து நிரந்தரமாக தேவரீர் பாதங்களில் நாங்கள் அடைக்கலம் காண்போமாக.-

"விழிப்புநிலையிலும் சொப்பனநிலையிலும் எங்கள் மனத்தில் பலவிதமான எண்ண அலைகள் மோதிப் பகலிலும் இரவிலும் சிரமபரிஹாரம் (இளைப்பாறுதல்) கிடைக்காமல் செய்கின்றன.  ஆகவே, எங்களை உங்களுடைய வழிபாட்டுக்கு இழுங்கள்".

முரளீதரன் எனப் பெயரிடப்பட்ட மகன் பிறந்தது போல, காலக்கிரமத்தில் பாஸ்கரன், தினகரன் என்ற இரண்டு மகன்களும் பிறந்தனர்.  சபட்னேகர் பெருமகிழ்ச்சி அடைந்தார். 

இவ்வாறாக, தயை மிகுந்த சாயியை வந்தனம் செய்ததால், சஞ்சலமடைந்திருந்த தம் மனத்தை உறுதியாக்கிக்கொண்டும், வந்த காரியத்தை வெற்றிகரமாக நிறைவேற்றிக்கொண்டும் சபட்னேகர் தம் மனைவியுடன் வீடு திரும்பினார். 

ஆரம்பத்தில், கதையைச் சுருக்கமாகச் சொல்லவேண்டும் என்றே என் மனம் நினைத்தது.  ஆயினும், என்னைச் சொல்லவைப்பவர்  சாயிநாதர் என்ற காரணத்தால், கிரந்தம் (நூல்) விஸ்தாரமாகிவிட்டது. 

ஹேமாட் அவரிடம் முழுமையாக சரணடைந்து, அடுத்த கதையின் தாத்பரியத்தை (உட்கருத்தைக்) கதை கேட்பவர்களுக்கு கோடிட்டு காட்டுகிறேன். 

அடுத்த கதை இதனினும் சுவாரசியமானது.  ஒப்பாரும் மிக்காரும் இல்லாத சாயி, அற்புதங்களை பார்க்க விரும்பிய ஒரு பக்தரைத் திருப்தி செய்த காதை. 

சாயியின் பெருமையை மக்கள் பலர் போற்றுகின்றனர். ஆயினும், குற்றங்காணும் குணமுடையவனுக்கு குற்றந்தான் தெரியும்.  உலகியல் நாட்டமோ ஆன்மீக நாட்டமோ இல்லாதவனுடைய மனம் தோஷங்களை காண்பதில்தான் மகிழ்ச்சியடையும். 

"சாயி பாபா ஒரு ஞானியாக இருக்கலாம். ஆனால், எனக்கே ஓர் அனுபவம் ஏற்பட்டாலன்றி, அதை அவர் எனக்கு அளித்தாலன்றி, நான் அவரைச் சிறிதும் மதிக்கமாட்டேன்." இவ்விதம் நினைத்து, -

பரீட்சை செய்து பார்ப்பதற்கென்றே சென்றவரையும் அவர் திருப்தி செய்தார்! அடுத்த அத்தியாயத்தின் காதை இதுவே.  கதைகேட்கும் நல்லவர்களே, கவனத்துடன் கேளுங்கள். 

எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்! ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு , சாயி பக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, 'ஸ்ரீ சமர்த்த சாயி சத் சரித்திரம்' என்னும் காவியத்தில், 'சந்தேகிகளுக்கும் அருள்' என்னும் நாற்பத்தெட்டாவது அத்தியாயம் முற்றும். 

 


 ஸ்ரீ சத்குரு சாயிநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும். 


சுபம் உண்டாகட்டும். 

 

Thursday, 23 October 2025

 ஷீர்டி சாயி சத்சரிதம் 

அன்றிரவு சாவடி ஊர்வலம் நடந்தது. சபட்னேகர் பிரேமையுடனும் உற்சாகமாகவும் பல்லக்குக்கு முன்னே தண்டம் ஏந்தி ஆனந்தம் நிரம்பியவராக ஊர்வலத்தில் நடந்துசென்றார். 

கதைகேட்பவர்களுக்குச் சாவடி ஊர்வல விவரம் ஏற்கெனவே தெரியும்.  கூறியது கூறின் காவியம் நீளும்; ஆகவே, அது இங்கு அவசியமில்லை. 

அன்றிரவு பாபா புரிந்த அற்புதமான லீலையைப் பாருங்கள்! பாபாவை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்த சபட்னேகருக்கு பண்டரிபுரத்துப் பாண்டுரங்கனாக பாபா காட்சியளித்தார். 

பின்னர், சபட்னேகர் வீடு திரும்ப அனுமதி வேண்டியபோது, "சாப்பிட்டுவிட்டுப் போங்கள்" என்று ஆணை பிறந்தது.  அவ்வாணையைச் சிரமேற்கொண்டு உணவருந்தியபின் புறப்படுவதற்கு முன்னதாக சபட்னேகர் தரிசனம் செய்யச் சென்றார். 

திடீரென்று அவருடைய மனத்தில் ஒரு கற்பனை உதித்தது, "பாபா தக்ஷிணை கேட்டால் அவருடைய விருப்பத்தை நான் எவ்விதம் திருப்திசெய்வேன்?"

அவர் கொண்டுவந்த பணம் முழுவதும் செலவாகிவிட்டிருந்தது.  பயணச் செலவுக்குத் தேவையான பணந்தான் கையிலிருந்தது.  ஆகவே, 'தக்ஷிணை கொடு' என்று பாபா கேட்டால் என்ன பதில் சொல்வது என்பதை மனத்தில் தீர்மானம் செய்துகொண்டார். 

'பாபா கேட்பதற்கு முன்னரே நான் ஒரு ரூபாயை அவருடைய கையில் வைப்பேன். அவர் மேலும் கேட்டால், இன்னுமொரு ரூபாயை அர்ப்பணம் செய்வேன்.  அதன் பிறகும் கேட்டால், என்னிடம் பணமில்லை என்று சொல்லிவிடுவேன்.-

"என்னிடம் புகைவண்டிக்குரிய கட்டணம் மட்டுந்தான் இருக்கிறது என்று பாபாவிடம் ஒளிவுமறைவின்றித்  தெளிவாகச் சொல்லிவிடுவேன்.' இந்தத் தீர்மானத்துடன் அவர் பாபாவிடமிருந்து விடை பெறுவதற்காகச் சென்றார். 

ஏற்கெனவே தீர்மானித்தபடி ஒரு ரூபாயை அவர் பாபவின் கையில் வைத்தபோது பாபா மேலும் ஒரு ரூபாய் மட்டும் கேட்டார். அதை வாங்கிக்கொண்டு பாபா தெளிவாகச் சொன்னார்,-

"இந்தத் தேங்காயை எடுத்துக்கொள்ளும்.  அதை உம் மனைவியின் சேலைத் தலைப்பில் இடும். பிறகு நீர் குசாலாகப் போய்வாரும்.  உம்மை வாட்டும் மனக்கிளர்ச்சியைத் தூக்கியெறியும்."

பன்னிரண்டு மாதங்கள் கழிந்த பிறகு, இந்த தம்பதிக்கு ஒரு புத்திரன் பிறந்தான்.  எட்டு மாதக் குழந்தையை எடுத்துக்கொண்டு மறுபடியும் தரிசனத்திற்கு வந்தனர். 

குழந்தையை பாபாவின் பாதங்களில் கிடத்தினர்.  ஆஹா! என்னே இந்த ஞானியர் விளைவிக்கும் அற்புதம்! அவர்கள் இருவரும் கைகளைக் கூப்பிக்கொண்டு செய்த பிரார்த்தனையைக் கேளுங்கள்.

"ஓ சாயிநாதரே! தேவரீர் செய்த உபகாரத்துக்குக் கைம்மாறு என்ன செய்வதென்று அறியோம்.  ஆகவே, உம்முடைய பாதாரவிந்தங்களில் பணிகிறோம்.-


 

Thursday, 16 October 2025

 ஷீர்டி சாயி சத்சரிதம் 


"வேறொரு பெண்மணிக்கு, இறந்துபோன மகன் ராமதாசனை எவ்வாறு திருப்தியளித்தேனோ, அவ்வாறே, இவர் மகனையும் இவருடைய வயிற்றில் மறுபடியும் நான் கொண்டு வருகிறேன்."

இதைக் கேட்ட சபட்னேகர் பாபாவின் முகத்தையே பார்த்துக்கொண்டு பெரும் எதிர்பார்ப்புடன் அங்கேயே காத்துகொண்டு நின்றார். பாபா சபட்னேகரின்  தலைமேல் கை வைத்து அவருக்கு தைரியமளித்தார். 

பாபா சொன்னார், "இந்தப் பாதங்கள் புராதனமானவை.  உம்முடைய கவலைகளெல்லாம் தூக்கியடிக்கப்பட்டுவிட்டன. என்னிடம் பூரணமான நம்பிக்கை வையும்.  சீக்கிரமே நீர் கிருதார்த்தர் (பேறுபெற்றவர்) ஆவீர். 

பாபாவுக்குப் பாதசேவை செய்துகொண்டே இவ்வினிமையான வசனத்தைக் கேட்ட சபட்னேகரின் நயனங்கள் கண்ணீரால் நிறைந்தன.  பாபாவின் பாதங்களுக்கு அவர் வந்தனம் செய்தார். 

அஷ்டபாவம் அவரை ஆட்கொண்டது.  ஆனந்தக்கண்ணீர் பொங்கியது. கண்ணீரால் பாபாவின் பாதங்களுக்கு அபிஷேகம் செய்தார்.  பிரேமையுடன் பாதங்களை துடைத்தார். 

மறுபடியும் பாபா தம்முடைய கையை சபட்னேகரின் தலைமேல் வைத்து, "சௌக்கியமாக இரும்" என வாழ்த்தினார்.  பிறகு, ஆனந்தம் பொங்கிய மனத்துடன் சபட்னேகர் தாம் தங்கியிருந்த இடத்திற்கு திரும்பினார். 

நைவேத்தியம் தயார் செய்யப்பட்டது. சபட்னேகர் அதைத் தம் மனைவியின் கையில் கொடுத்தார். பூஜையும் ஆரதியும் நடந்துமுடிந்தபின், நைவேத்திய தட்டை அவர் பாபாவுக்கு முன்னால் வைத்தார். 

பின்னர், சடங்கு விதிமுறைகளின்படி தட்டைச் சுற்றி நீர் தெளித்துவிட்டுத் தட்டைக் கண்களில் ஒற்றிக்கொண்டார். ஐந்து பிராணன்களுக்கும் அர்ப்பணம் செய்தபின் பாபாவுக்கு நைவேத்தியத்தை சமர்ப்பணம் செய்தார்.

பாபா தினமும் செய்வது போன்று, நைவேத்தியத்தை ஏற்றுக்கொண்டதற்கு அடையாளமாகத் தட்டைத் தம்முடைய கையால் தொட்டார். இதைக் கண்ட சபட்னேகருக்கு மயிர்க்கூச்செரிந்தது. 

பிறகு, அங்கே பாபாவின் பாதங்களுக்கு வணக்கம் செலுத்திக்கொண்டிருந்த இதர பக்தர்களின் ஊடே விரைவாகப் புகுந்து சென்று சபட்னேகர் மறுபடியும் ஒரு நமஸ்காரம் செய்தார்.

அங்கு ஏற்பட்ட நெருக்கடியால், பக்தர்களின் தலைகள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டன.  இதைப் பார்த்த பாபா, சபட்னேகருக்கு வழங்கிய சாந்தமான அறிவுரை என்னவென்று கேளுங்கள். 

"ஓய்! எதற்காக இப்படித் திரும்பத் திரும்ப நமஸ்காரத்தின்மேல் நமஸ்காரம்? நற்செயல் என்றுணர்ந்து பக்தியுடன் செய்யப்படும் ஒரு நமஸ்காரமே போதுமானது!" 





Thursday, 9 October 2025

 ஷீர்டி சாயி சத்சரிதம் 


வந்தவுடன், உட்கார்ந்த நிலையில் பாபாவின் இடுப்பை மும்முரமாக பிடித்துவிட ஆரம்பித்தாள்.  வழக்கம்போல் பாபா அவளுடன் பேசுவதற்கு தொடங்கினார். 

பேச்சின் அற்புதம் என்னவென்றால், சபட்னேகர் அதை உன்னிப்பாக கேட்க கேட்க, எழுத்துக்கெழுத்து அது தம்முடைய காதை என்பதை அறிந்தார். 

ஆடு மேய்க்கும் பெண் அவ்வப்பொழுது 'ஊம்' கொட்டிக் கதையைக் கேட்டாள்.  ஆயினும், சபட்னேகரோ, தம்முடைய விருத்தாந்தத்தை  தாமே கேட்டு ஆச்சரியமடைந்தார். அவர் திகைத்துப்போனார்!

பாபா சொன்னதோ ஒரு மளிகைக் கடைக்காரரின் கதை.  ஆனால், உண்மையில் அது சபட்னேகரின் கதை.  கதையின் நடுவில், இறந்துபோன மகனைப் பற்றிய குறிப்பும் வெளிப்பட்டது. 

நெருங்கிய உறவினர் ஒருவரால் விவரிக்கப்பட்டதுபோல் ஜனனத்திலிருந்து மரணப்பரியந்தம், மகனின் கதை விரிவாகச் சொல்லப்பட்டது. 

கதையுடன் எந்தவிதமான சம்பந்தமும் இல்லாத ஆடு மேய்க்கும் பெண்ணிடம் கதை சொல்லப்பட்டது. அது ஒரு 'தகப்பன் - மகன்' கதை. அனைத்து விஷயங்களும் அவ்விருவர் சம்பந்தமானவையே. 

ஆகவே, அவ்வாறாகத் தம்முடைய கதையையே சாயியின் திருவாய்மொழியாகக் கேட்ட சபட்னேகரின் மனம் மிகுந்த வியப்பிலாழ்ந்தது. சாயிபாதங்களில் அவருக்கிருந்த பயபக்தி மேலோங்கியது. 

அனைத்து விவரங்களையும் உள்ளங்கை நெல்லிக்கனிபோல் பாபா அறிந்திருந்ததை சபட்னேகர் மனத்தால் பாராட்டிப் போற்றினார். 

பிரம்ம சொரூபமாக இருப்பவருக்கு இவ்வுலகமே குடும்பம்.  இன்னும் சரியாகக் கூறுமிடத்து, அவரே பூரணமான சிருஷ்டி ஆவார். இதுவே சாயியின் பரிமாணம். 

ஒன்றேயெனும் பொருளின் விஸ்தாரமே சாயிபாபா அவதாரம். அவரால், 'உன்னுடையது' 'என்னுடையது' என்று எப்படிப் பேதப்படுத்திப் பார்க்கமுடியும்? அவரே இவ்வுலக ரூபத்தில் விரிந்திருக்கிறார்.!

பரம புருஷனோடு ஒன்றியிருப்பவரால், எப்படி துவைத பாஷை (நான் வேறு, நீ வேறு என்று பிரித்துப் பேசுதல்) பேச முடியும்?  காண்பான், காட்சி, காணப்படும் பொருள் என்னும் பேதம் அவருக்கு இல்லை. பரந்த வானத்திற்கு வண்ணம் தீட்ட முடியமோ!

பாபா மகா அந்தர்ஞானி  (பிறர் மனம் அறியும் சக்தி படைத்தவர்). ஆகவே, அந்த எண்ணம் (சுலோகம் 138 ) சபட்னேகரின் மனத்தில் ஓடிக்கொண்டிருந்தபோதே பாபா அவரிடம் என்ன சொன்னார் என்பதைச் சொல்கிறேன். நற்குணவான்களாகிய நீங்கள் கேட்டு மகிழுங்கள். 

சபட்னேகரை விரலால் சுட்டிகாட்டிக்கொண்டே  பாபா ஆச்சரியம் பொங்கும் குரலில் முழங்கினார், "இவர் மகனை நான் கொன்றுவிட்டதாகச் சொல்கிறார். என்மீது இக் குற்றத்தைச் சாடுகிறார். -

"நான் ஜனங்களின் குழந்தைகளைக் கொல்பவனாக இருந்தால், இவர் ஏன் மசூதிக்கு வந்து அழுகிறார்?  நல்லது, இப்பொழுது நான் இவ்வாறு செய்கிறேன். இவர் புத்திரனை மறுபடியும் இவருடைய வயிற்றில் கொண்டுவருகிறேன். -