ஷீர்டி சாயி சத்சரிதம்
"வேறொரு பெண்மணிக்கு, இறந்துபோன மகன் ராமதாசனை எவ்வாறு திருப்தியளித்தேனோ, அவ்வாறே, இவர் மகனையும் இவருடைய வயிற்றில் மறுபடியும் நான் கொண்டு வருகிறேன்."
இதைக் கேட்ட சபட்னேகர் பாபாவின் முகத்தையே பார்த்துக்கொண்டு பெரும் எதிர்பார்ப்புடன் அங்கேயே காத்துகொண்டு நின்றார். பாபா சபட்னேகரின் தலைமேல் கை வைத்து அவருக்கு தைரியமளித்தார்.
பாபா சொன்னார், "இந்தப் பாதங்கள் புராதனமானவை. உம்முடைய கவலைகளெல்லாம் தூக்கியடிக்கப்பட்டுவிட்டன. என்னிடம் பூரணமான நம்பிக்கை வையும். சீக்கிரமே நீர் கிருதார்த்தர் (பேறுபெற்றவர்) ஆவீர்.
பாபாவுக்குப் பாதசேவை செய்துகொண்டே இவ்வினிமையான வசனத்தைக் கேட்ட சபட்னேகரின் நயனங்கள் கண்ணீரால் நிறைந்தன. பாபாவின் பாதங்களுக்கு அவர் வந்தனம் செய்தார்.
அஷ்டபாவம் அவரை ஆட்கொண்டது. ஆனந்தக்கண்ணீர் பொங்கியது. கண்ணீரால் பாபாவின் பாதங்களுக்கு அபிஷேகம் செய்தார். பிரேமையுடன் பாதங்களை துடைத்தார்.
மறுபடியும் பாபா தம்முடைய கையை சபட்னேகரின் தலைமேல் வைத்து, "சௌக்கியமாக இரும்" என வாழ்த்தினார். பிறகு, ஆனந்தம் பொங்கிய மனத்துடன் சபட்னேகர் தாம் தங்கியிருந்த இடத்திற்கு திரும்பினார்.
நைவேத்தியம் தயார் செய்யப்பட்டது. சபட்னேகர் அதைத் தம் மனைவியின் கையில் கொடுத்தார். பூஜையும் ஆரதியும் நடந்துமுடிந்தபின், நைவேத்திய தட்டை அவர் பாபாவுக்கு முன்னால் வைத்தார்.
பின்னர், சடங்கு விதிமுறைகளின்படி தட்டைச் சுற்றி நீர் தெளித்துவிட்டுத் தட்டைக் கண்களில் ஒற்றிக்கொண்டார். ஐந்து பிராணன்களுக்கும் அர்ப்பணம் செய்தபின் பாபாவுக்கு நைவேத்தியத்தை சமர்ப்பணம் செய்தார்.
பாபா தினமும் செய்வது போன்று, நைவேத்தியத்தை ஏற்றுக்கொண்டதற்கு அடையாளமாகத் தட்டைத் தம்முடைய கையால் தொட்டார். இதைக் கண்ட சபட்னேகருக்கு மயிர்க்கூச்செரிந்தது.
பிறகு, அங்கே பாபாவின் பாதங்களுக்கு வணக்கம் செலுத்திக்கொண்டிருந்த இதர பக்தர்களின் ஊடே விரைவாகப் புகுந்து சென்று சபட்னேகர் மறுபடியும் ஒரு நமஸ்காரம் செய்தார்.
அங்கு ஏற்பட்ட நெருக்கடியால், பக்தர்களின் தலைகள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டன. இதைப் பார்த்த பாபா, சபட்னேகருக்கு வழங்கிய சாந்தமான அறிவுரை என்னவென்று கேளுங்கள்.
"ஓய்! எதற்காக இப்படித் திரும்பத் திரும்ப நமஸ்காரத்தின்மேல் நமஸ்காரம்? நற்செயல் என்றுணர்ந்து பக்தியுடன் செய்யப்படும் ஒரு நமஸ்காரமே போதுமானது!"
No comments:
Post a Comment