ஷீர்டி சாயி சத்சரிதம்
வந்தவுடன், உட்கார்ந்த நிலையில் பாபாவின் இடுப்பை மும்முரமாக பிடித்துவிட ஆரம்பித்தாள். வழக்கம்போல் பாபா அவளுடன் பேசுவதற்கு தொடங்கினார்.
பேச்சின் அற்புதம் என்னவென்றால், சபட்னேகர் அதை உன்னிப்பாக கேட்க கேட்க, எழுத்துக்கெழுத்து அது தம்முடைய காதை என்பதை அறிந்தார்.
ஆடு மேய்க்கும் பெண் அவ்வப்பொழுது 'ஊம்' கொட்டிக் கதையைக் கேட்டாள். ஆயினும், சபட்னேகரோ, தம்முடைய விருத்தாந்தத்தை தாமே கேட்டு ஆச்சரியமடைந்தார். அவர் திகைத்துப்போனார்!
பாபா சொன்னதோ ஒரு மளிகைக் கடைக்காரரின் கதை. ஆனால், உண்மையில் அது சபட்னேகரின் கதை. கதையின் நடுவில், இறந்துபோன மகனைப் பற்றிய குறிப்பும் வெளிப்பட்டது.
நெருங்கிய உறவினர் ஒருவரால் விவரிக்கப்பட்டதுபோல் ஜனனத்திலிருந்து மரணப்பரியந்தம், மகனின் கதை விரிவாகச் சொல்லப்பட்டது.
கதையுடன் எந்தவிதமான சம்பந்தமும் இல்லாத ஆடு மேய்க்கும் பெண்ணிடம் கதை சொல்லப்பட்டது. அது ஒரு 'தகப்பன் - மகன்' கதை. அனைத்து விஷயங்களும் அவ்விருவர் சம்பந்தமானவையே.
ஆகவே, அவ்வாறாகத் தம்முடைய கதையையே சாயியின் திருவாய்மொழியாகக் கேட்ட சபட்னேகரின் மனம் மிகுந்த வியப்பிலாழ்ந்தது. சாயிபாதங்களில் அவருக்கிருந்த பயபக்தி மேலோங்கியது.
அனைத்து விவரங்களையும் உள்ளங்கை நெல்லிக்கனிபோல் பாபா அறிந்திருந்ததை சபட்னேகர் மனத்தால் பாராட்டிப் போற்றினார்.
பிரம்ம சொரூபமாக இருப்பவருக்கு இவ்வுலகமே குடும்பம். இன்னும் சரியாகக் கூறுமிடத்து, அவரே பூரணமான சிருஷ்டி ஆவார். இதுவே சாயியின் பரிமாணம்.
ஒன்றேயெனும் பொருளின் விஸ்தாரமே சாயிபாபா அவதாரம். அவரால், 'உன்னுடையது' 'என்னுடையது' என்று எப்படிப் பேதப்படுத்திப் பார்க்கமுடியும்? அவரே இவ்வுலக ரூபத்தில் விரிந்திருக்கிறார்.!
பரம புருஷனோடு ஒன்றியிருப்பவரால், எப்படி துவைத பாஷை (நான் வேறு, நீ வேறு என்று பிரித்துப் பேசுதல்) பேச முடியும்? காண்பான், காட்சி, காணப்படும் பொருள் என்னும் பேதம் அவருக்கு இல்லை. பரந்த வானத்திற்கு வண்ணம் தீட்ட முடியமோ!
பாபா மகா அந்தர்ஞானி (பிறர் மனம் அறியும் சக்தி படைத்தவர்). ஆகவே, அந்த எண்ணம் (சுலோகம் 138 ) சபட்னேகரின் மனத்தில் ஓடிக்கொண்டிருந்தபோதே பாபா அவரிடம் என்ன சொன்னார் என்பதைச் சொல்கிறேன். நற்குணவான்களாகிய நீங்கள் கேட்டு மகிழுங்கள்.
சபட்னேகரை விரலால் சுட்டிகாட்டிக்கொண்டே பாபா ஆச்சரியம் பொங்கும் குரலில் முழங்கினார், "இவர் மகனை நான் கொன்றுவிட்டதாகச் சொல்கிறார். என்மீது இக் குற்றத்தைச் சாடுகிறார். -
"நான் ஜனங்களின் குழந்தைகளைக் கொல்பவனாக இருந்தால், இவர் ஏன் மசூதிக்கு வந்து அழுகிறார்? நல்லது, இப்பொழுது நான் இவ்வாறு செய்கிறேன். இவர் புத்திரனை மறுபடியும் இவருடைய வயிற்றில் கொண்டுவருகிறேன். -
No comments:
Post a Comment