valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday, 2 October 2025

 ஷீர்டி சாயி சத்சரிதம் 

பாபா மறைமுகமாக விவரித்த வியாதி, ஓரிரண்டு மாதங்களுக்குப் பிறகு நிவிர்த்தியானபோது, பெண்மணியின் அனுபவம் உண்மையை உணர்த்தியது. 

அப் பெண்மணியின் விருப்பம் பின்னர்ப் பூரணமாக நிறைவேற்றப்பட்டது.  ஆனபோதிலும், சபட்னேகர் தரிசனம் செய்யப்போனபோது, 'போ வெளியே' என்ற பழைய வெகுமானத்தையே பாபா மறுபடியும் அளித்தார். 

"பாபா விடாப்பிடியாக என்னை இழிவுபடுத்தும்படியாக நான் என்ன தவறு இழைத்தேன் என்று அறியேன்.  நான் நமஸ்காரம் செய்யும்போது அவர் கூறும் மறுமொழி, மாறமாட்டேன் என்கிறது!

"என் கண்ணெதிரிலேயே மற்றவர்களிடம் மிகுந்த பிரேமை காட்டுகிறாரே; அவர் என்னிடம் மட்டும் கோபங்காட்டுவதற்கு நான் முன்ஜன்மங்களில் என்ன பாவம் சம்பாதித்தேன்?-

"காலையிலும் மாலையிலும் அவரைப் பார்ப்பதற்குச் செல்லும் மக்கள் நித்தியதீபாவளியைப்போல ஆனந்தம் அனுபவிக்கிறார்களே;  என்னுடைய தலையில்மட்டும் 'போ வெளியே' என்றா எழுதியிருக்கிறது?

"என்னுடைய கர்மவினை என்னை அதர்மவழியில் செலுத்தி அளவற்ற பாவங்களைச் செய்யவைக்கும் அளவுக்குக் கொடுமையானதோ? அதனால்தான் பாபா எனக்கு அவகிருபை (கிருபைக்கெடு) காட்டுகிறாரோ?-

"ஆரம்பகாலத்தில் பாபா விஷயமாக நான் குதர்க்கமாகச் சிந்தித்து சந்தேகப்பட்டேன். ஆகவே, பாபாவே இந்த உபாயத்தால் என்னைத் தம்மிடம் நெருக்கமாக இழுக்கிறார் என்று நினைக்கிறேன்".

ஆகவே, பாபாவின்மேல் உறுதிப்பாட்டுடன் மனம் செலுத்தி, பாபாவிடமிருந்து அனுக்கிரஹம் பெறும்வரை ஷிர்டியிலிருந்து நகர்வதில்லை என்று சபட்னேகர் நிர்த்தாரணம் செய்துகொண்டார். 

முவ்வகைத் தாபங்களால் தாக்குண்டபோதிலும், சாயிதரிசனம் செய்யவேண்டுமென்று தாகத்துடன் வந்தவர் யாராவது, மனத்திருப்தி அடையாமல் கூம்பிய முகத்துடன் திரும்பிச் சென்றிருக்கிறாரா?

அந்த நாளில், அன்னமும் பானமும், போவதும் வருவதும் பிடிக்காமல், எதிலும் விருப்பமின்றி சபட்னேகர் சோகமாக இருந்தார். தூக்கம் வராமல் விழித்துக்கொண்டே படுக்கையில் படுத்திருந்தார். 

"யாரும் அருகில் இல்லாத சமயம் பார்த்து, பாபா தனிமையாக ஆசனத்தில் அமர்ந்திருக்கும்போது, அந்த நல்வாய்ப்பைப் பயன்படுத்தி பாபாவின் பாதங்களை கெட்டியாகப் பிடித்துக்கொள்வேன். "

இவ்வாறு சபட்னேகர் நிச்சயம் செய்துகொண்டார். அவருடைய தீர்மானத்திற்குப் பலனும் கிடைத்தது. மனத்துள்ளே ஏற்பட்ட நல்லெழுச்சியால் பாபாவின் பாதங்களைப் பற்றிக்கொண்டார். 

பாதங்களில் தலையை வைத்து வணங்கியபோது பாபா தம்முடைய கையை சபட்னேகரின் தலையின்மேல் வைத்தார். சபட்னேகர் பாதசேவை செய்ய ஆரம்பித்தார். அப்பொழுது, ஆடு மேய்க்கும் பெண் ஒருத்தி அங்கு வந்தாள்.

 


 

No comments:

Post a Comment