ஸ்ரீ ஷீர்டி சாயி சத் சரிதம்
மனைவி கனவைக் கணவருக்கு விவரித்தார், "அங்கு, ஒரு வேப்பமரத்தடியில், தலையைச் சுற்றி ஒரு துணியைக் கட்டிக்கொண்டிருந்த பக்கீர் ஒருவர் என்னருகில் வந்தார்.-
"கோமளமான குரலில் பக்கீர் இயம்பினார், 'குழந்தாய், ஏன் இப்படி வீணாக சிரமப்படுகிறாய்? நான் உன்னுடைய குடத்தை நிர்மலமான தூய நீரால் நிரப்பித் தருகிறேன்.'-
"எனக்குப் பக்கீரிடம் பீதி ஏற்பட்டது. காலிக்குடத்தை எடுத்துக்கொண்டு சரசரவென்று வீடு திரும்பினேன். பக்கீர் என்னைப் பின்தொடர்ந்து வந்துகொண்டிருந்தார். -
"கனவின் இந்தக் கட்டத்தில் நான் விழித்துக்கொண்டேன்." மனைவி கண்டா கனவின் விவரத்தைக் கேட்ட சபட்னேகர் ஷீர்டி செல்வதென்று முடிவெடுத்தார்.
அதே முஹூர்த்தத்தில் இருவரும் கிளம்பி, மறுநாள் உதயகாலத்தில் ஷீர்டி கிராமத்திற்கு வந்துசேர்ந்தனர். உடனே மசூதிக்குச் சென்றனர். அந் நேரத்தில் பாபா லெண்டிக்குச் சென்றிருந்தார்.
ஆகவே, பாபா திரும்பிவரும் வரையில் அவருக்காகக் காத்துகொண்டு உட்கார்ந்திருந்தனர். அவர்கள் எதிர்பார்த்தபடி பாபாவும் அங்கு வந்தார்.
நகத்திலிருந்து சிகைவரை, கனவில் கண்ட அதே உருவத்தைப் பார்த்த பெண்மணி (சபட்னேகரின் மனைவி ) ஆச்சரியப்பட்டார். மேலும் உன்னிப்பாகப் பார்த்தார்.
பாதங்களை அலம்பும் சேவை முடிந்தது. தரிசனம் செய்த பிறகு பாபாவின் பாதங்களுக்குப் பெண்மணி நமஸ்காரம் செய்தார். ஓரிடத்தில் அமர்ந்துகொண்டு பாபாவையே பார்த்துக்கொண்டிருந்தார்.
பெண்மணியின் விநயத்தைக் கண்டு சாயிநாதரின் சித்தம் மகிழ்ந்தது. அவளுடைய வியாதியை நிவாரணம் செய்ய, மெல்லிய குரலில் ஒரு கதை சொல்ல ஆரம்பித்தார் பாபா.
வழக்கம்போல, அங்கிருந்த ஒரு மூன்றாவது நபரிடம் தம்முடைய வியாதியைப் பற்றி பிரேமையுடன் விஸ்தாரமாக பாபா தெரியப்படுத்தினார்.
உண்மையில் அது அப் பெண்மணியின் கதை. அதை அவளிடம் நேரிடையாகவே சொல்லியிருக்கவேண்டும். ஆயினும், அவளுடைய முன்னிலையில், மூன்றாமவர் ஒருவரிடம் அதைச் சொன்னபோது அப் பெண்மணி கண்கொட்டாது கதையைக் கேட்டாள்.
"என்னுடைய கைகள், வயிறு, இடுப்பு, எல்லாம் பல வருஷங்களாக கடுமையாக வலிக்கின்றன. மருந்துகள் தின்று நான் களைத்துவிட்டேன். வியாதி பரிஹாரம் ஆகவில்லை. (குணமடையவில்லை)
"மருந்துகளை விழுங்கி விழுங்கி என்னுடைய தொண்டை அலர்சியுற்றதுதான் மிச்சம். ஒரு நிவாரணமும் ஏற்படவில்லை. திடீரென்று அந்த வியாதி இப்பொழுது காணாமல் போய்விட்டது. என்னே ஆச்சரியம்!"
இதுதான் அப் பெண்மணியின் கதை. பெயரைக் கூடாக குறிப்பிடாமல் மூன்றாமவரிடம் சொல்லப்பட்டது. சொல்லப்பட்ட வார்த்தைகள் அனைத்தும் அப் பெண்மணி சம்பந்தப்பட்டவையே; அவளுடைய கதையே!
No comments:
Post a Comment