valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday, 30 October 2025

 ஷீர்டி சாயி சத்சரிதம்


"ஹீனர்களும் தீனர்களுமாகிய நாங்கள் பாமர மக்கள்.  அனாதைகளாகிய எங்களிடம் கிருபை காட்டுங்கள்.  இன்றிலிருந்து நிரந்தரமாக தேவரீர் பாதங்களில் நாங்கள் அடைக்கலம் காண்போமாக.-

"விழிப்புநிலையிலும் சொப்பனநிலையிலும் எங்கள் மனத்தில் பலவிதமான எண்ண அலைகள் மோதிப் பகலிலும் இரவிலும் சிரமபரிஹாரம் (இளைப்பாறுதல்) கிடைக்காமல் செய்கின்றன.  ஆகவே, எங்களை உங்களுடைய வழிபாட்டுக்கு இழுங்கள்".

முரளீதரன் எனப் பெயரிடப்பட்ட மகன் பிறந்தது போல, காலக்கிரமத்தில் பாஸ்கரன், தினகரன் என்ற இரண்டு மகன்களும் பிறந்தனர்.  சபட்னேகர் பெருமகிழ்ச்சி அடைந்தார். 

இவ்வாறாக, தயை மிகுந்த சாயியை வந்தனம் செய்ததால், சஞ்சலமடைந்திருந்த தம் மனத்தை உறுதியாக்கிக்கொண்டும், வந்த காரியத்தை வெற்றிகரமாக நிறைவேற்றிக்கொண்டும் சபட்னேகர் தம் மனைவியுடன் வீடு திரும்பினார். 

ஆரம்பத்தில், கதையைச் சுருக்கமாகச் சொல்லவேண்டும் என்றே என் மனம் நினைத்தது.  ஆயினும், என்னைச் சொல்லவைப்பவர்  சாயிநாதர் என்ற காரணத்தால், கிரந்தம் (நூல்) விஸ்தாரமாகிவிட்டது. 

ஹேமாட் அவரிடம் முழுமையாக சரணடைந்து, அடுத்த கதையின் தாத்பரியத்தை (உட்கருத்தைக்) கதை கேட்பவர்களுக்கு கோடிட்டு காட்டுகிறேன். 

அடுத்த கதை இதனினும் சுவாரசியமானது.  ஒப்பாரும் மிக்காரும் இல்லாத சாயி, அற்புதங்களை பார்க்க விரும்பிய ஒரு பக்தரைத் திருப்தி செய்த காதை. 

சாயியின் பெருமையை மக்கள் பலர் போற்றுகின்றனர். ஆயினும், குற்றங்காணும் குணமுடையவனுக்கு குற்றந்தான் தெரியும்.  உலகியல் நாட்டமோ ஆன்மீக நாட்டமோ இல்லாதவனுடைய மனம் தோஷங்களை காண்பதில்தான் மகிழ்ச்சியடையும். 

"சாயி பாபா ஒரு ஞானியாக இருக்கலாம். ஆனால், எனக்கே ஓர் அனுபவம் ஏற்பட்டாலன்றி, அதை அவர் எனக்கு அளித்தாலன்றி, நான் அவரைச் சிறிதும் மதிக்கமாட்டேன்." இவ்விதம் நினைத்து, -

பரீட்சை செய்து பார்ப்பதற்கென்றே சென்றவரையும் அவர் திருப்தி செய்தார்! அடுத்த அத்தியாயத்தின் காதை இதுவே.  கதைகேட்கும் நல்லவர்களே, கவனத்துடன் கேளுங்கள். 

எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்! ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு , சாயி பக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, 'ஸ்ரீ சமர்த்த சாயி சத் சரித்திரம்' என்னும் காவியத்தில், 'சந்தேகிகளுக்கும் அருள்' என்னும் நாற்பத்தெட்டாவது அத்தியாயம் முற்றும். 

 


 ஸ்ரீ சத்குரு சாயிநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும். 


சுபம் உண்டாகட்டும். 

 

Thursday, 23 October 2025

 ஷீர்டி சாயி சத்சரிதம் 

அன்றிரவு சாவடி ஊர்வலம் நடந்தது. சபட்னேகர் பிரேமையுடனும் உற்சாகமாகவும் பல்லக்குக்கு முன்னே தண்டம் ஏந்தி ஆனந்தம் நிரம்பியவராக ஊர்வலத்தில் நடந்துசென்றார். 

கதைகேட்பவர்களுக்குச் சாவடி ஊர்வல விவரம் ஏற்கெனவே தெரியும்.  கூறியது கூறின் காவியம் நீளும்; ஆகவே, அது இங்கு அவசியமில்லை. 

அன்றிரவு பாபா புரிந்த அற்புதமான லீலையைப் பாருங்கள்! பாபாவை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்த சபட்னேகருக்கு பண்டரிபுரத்துப் பாண்டுரங்கனாக பாபா காட்சியளித்தார். 

பின்னர், சபட்னேகர் வீடு திரும்ப அனுமதி வேண்டியபோது, "சாப்பிட்டுவிட்டுப் போங்கள்" என்று ஆணை பிறந்தது.  அவ்வாணையைச் சிரமேற்கொண்டு உணவருந்தியபின் புறப்படுவதற்கு முன்னதாக சபட்னேகர் தரிசனம் செய்யச் சென்றார். 

திடீரென்று அவருடைய மனத்தில் ஒரு கற்பனை உதித்தது, "பாபா தக்ஷிணை கேட்டால் அவருடைய விருப்பத்தை நான் எவ்விதம் திருப்திசெய்வேன்?"

அவர் கொண்டுவந்த பணம் முழுவதும் செலவாகிவிட்டிருந்தது.  பயணச் செலவுக்குத் தேவையான பணந்தான் கையிலிருந்தது.  ஆகவே, 'தக்ஷிணை கொடு' என்று பாபா கேட்டால் என்ன பதில் சொல்வது என்பதை மனத்தில் தீர்மானம் செய்துகொண்டார். 

'பாபா கேட்பதற்கு முன்னரே நான் ஒரு ரூபாயை அவருடைய கையில் வைப்பேன். அவர் மேலும் கேட்டால், இன்னுமொரு ரூபாயை அர்ப்பணம் செய்வேன்.  அதன் பிறகும் கேட்டால், என்னிடம் பணமில்லை என்று சொல்லிவிடுவேன்.-

"என்னிடம் புகைவண்டிக்குரிய கட்டணம் மட்டுந்தான் இருக்கிறது என்று பாபாவிடம் ஒளிவுமறைவின்றித்  தெளிவாகச் சொல்லிவிடுவேன்.' இந்தத் தீர்மானத்துடன் அவர் பாபாவிடமிருந்து விடை பெறுவதற்காகச் சென்றார். 

ஏற்கெனவே தீர்மானித்தபடி ஒரு ரூபாயை அவர் பாபவின் கையில் வைத்தபோது பாபா மேலும் ஒரு ரூபாய் மட்டும் கேட்டார். அதை வாங்கிக்கொண்டு பாபா தெளிவாகச் சொன்னார்,-

"இந்தத் தேங்காயை எடுத்துக்கொள்ளும்.  அதை உம் மனைவியின் சேலைத் தலைப்பில் இடும். பிறகு நீர் குசாலாகப் போய்வாரும்.  உம்மை வாட்டும் மனக்கிளர்ச்சியைத் தூக்கியெறியும்."

பன்னிரண்டு மாதங்கள் கழிந்த பிறகு, இந்த தம்பதிக்கு ஒரு புத்திரன் பிறந்தான்.  எட்டு மாதக் குழந்தையை எடுத்துக்கொண்டு மறுபடியும் தரிசனத்திற்கு வந்தனர். 

குழந்தையை பாபாவின் பாதங்களில் கிடத்தினர்.  ஆஹா! என்னே இந்த ஞானியர் விளைவிக்கும் அற்புதம்! அவர்கள் இருவரும் கைகளைக் கூப்பிக்கொண்டு செய்த பிரார்த்தனையைக் கேளுங்கள்.

"ஓ சாயிநாதரே! தேவரீர் செய்த உபகாரத்துக்குக் கைம்மாறு என்ன செய்வதென்று அறியோம்.  ஆகவே, உம்முடைய பாதாரவிந்தங்களில் பணிகிறோம்.-


 

Thursday, 16 October 2025

 ஷீர்டி சாயி சத்சரிதம் 


"வேறொரு பெண்மணிக்கு, இறந்துபோன மகன் ராமதாசனை எவ்வாறு திருப்தியளித்தேனோ, அவ்வாறே, இவர் மகனையும் இவருடைய வயிற்றில் மறுபடியும் நான் கொண்டு வருகிறேன்."

இதைக் கேட்ட சபட்னேகர் பாபாவின் முகத்தையே பார்த்துக்கொண்டு பெரும் எதிர்பார்ப்புடன் அங்கேயே காத்துகொண்டு நின்றார். பாபா சபட்னேகரின்  தலைமேல் கை வைத்து அவருக்கு தைரியமளித்தார். 

பாபா சொன்னார், "இந்தப் பாதங்கள் புராதனமானவை.  உம்முடைய கவலைகளெல்லாம் தூக்கியடிக்கப்பட்டுவிட்டன. என்னிடம் பூரணமான நம்பிக்கை வையும்.  சீக்கிரமே நீர் கிருதார்த்தர் (பேறுபெற்றவர்) ஆவீர். 

பாபாவுக்குப் பாதசேவை செய்துகொண்டே இவ்வினிமையான வசனத்தைக் கேட்ட சபட்னேகரின் நயனங்கள் கண்ணீரால் நிறைந்தன.  பாபாவின் பாதங்களுக்கு அவர் வந்தனம் செய்தார். 

அஷ்டபாவம் அவரை ஆட்கொண்டது.  ஆனந்தக்கண்ணீர் பொங்கியது. கண்ணீரால் பாபாவின் பாதங்களுக்கு அபிஷேகம் செய்தார்.  பிரேமையுடன் பாதங்களை துடைத்தார். 

மறுபடியும் பாபா தம்முடைய கையை சபட்னேகரின் தலைமேல் வைத்து, "சௌக்கியமாக இரும்" என வாழ்த்தினார்.  பிறகு, ஆனந்தம் பொங்கிய மனத்துடன் சபட்னேகர் தாம் தங்கியிருந்த இடத்திற்கு திரும்பினார். 

நைவேத்தியம் தயார் செய்யப்பட்டது. சபட்னேகர் அதைத் தம் மனைவியின் கையில் கொடுத்தார். பூஜையும் ஆரதியும் நடந்துமுடிந்தபின், நைவேத்திய தட்டை அவர் பாபாவுக்கு முன்னால் வைத்தார். 

பின்னர், சடங்கு விதிமுறைகளின்படி தட்டைச் சுற்றி நீர் தெளித்துவிட்டுத் தட்டைக் கண்களில் ஒற்றிக்கொண்டார். ஐந்து பிராணன்களுக்கும் அர்ப்பணம் செய்தபின் பாபாவுக்கு நைவேத்தியத்தை சமர்ப்பணம் செய்தார்.

பாபா தினமும் செய்வது போன்று, நைவேத்தியத்தை ஏற்றுக்கொண்டதற்கு அடையாளமாகத் தட்டைத் தம்முடைய கையால் தொட்டார். இதைக் கண்ட சபட்னேகருக்கு மயிர்க்கூச்செரிந்தது. 

பிறகு, அங்கே பாபாவின் பாதங்களுக்கு வணக்கம் செலுத்திக்கொண்டிருந்த இதர பக்தர்களின் ஊடே விரைவாகப் புகுந்து சென்று சபட்னேகர் மறுபடியும் ஒரு நமஸ்காரம் செய்தார்.

அங்கு ஏற்பட்ட நெருக்கடியால், பக்தர்களின் தலைகள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டன.  இதைப் பார்த்த பாபா, சபட்னேகருக்கு வழங்கிய சாந்தமான அறிவுரை என்னவென்று கேளுங்கள். 

"ஓய்! எதற்காக இப்படித் திரும்பத் திரும்ப நமஸ்காரத்தின்மேல் நமஸ்காரம்? நற்செயல் என்றுணர்ந்து பக்தியுடன் செய்யப்படும் ஒரு நமஸ்காரமே போதுமானது!" 





Thursday, 9 October 2025

 ஷீர்டி சாயி சத்சரிதம் 


வந்தவுடன், உட்கார்ந்த நிலையில் பாபாவின் இடுப்பை மும்முரமாக பிடித்துவிட ஆரம்பித்தாள்.  வழக்கம்போல் பாபா அவளுடன் பேசுவதற்கு தொடங்கினார். 

பேச்சின் அற்புதம் என்னவென்றால், சபட்னேகர் அதை உன்னிப்பாக கேட்க கேட்க, எழுத்துக்கெழுத்து அது தம்முடைய காதை என்பதை அறிந்தார். 

ஆடு மேய்க்கும் பெண் அவ்வப்பொழுது 'ஊம்' கொட்டிக் கதையைக் கேட்டாள்.  ஆயினும், சபட்னேகரோ, தம்முடைய விருத்தாந்தத்தை  தாமே கேட்டு ஆச்சரியமடைந்தார். அவர் திகைத்துப்போனார்!

பாபா சொன்னதோ ஒரு மளிகைக் கடைக்காரரின் கதை.  ஆனால், உண்மையில் அது சபட்னேகரின் கதை.  கதையின் நடுவில், இறந்துபோன மகனைப் பற்றிய குறிப்பும் வெளிப்பட்டது. 

நெருங்கிய உறவினர் ஒருவரால் விவரிக்கப்பட்டதுபோல் ஜனனத்திலிருந்து மரணப்பரியந்தம், மகனின் கதை விரிவாகச் சொல்லப்பட்டது. 

கதையுடன் எந்தவிதமான சம்பந்தமும் இல்லாத ஆடு மேய்க்கும் பெண்ணிடம் கதை சொல்லப்பட்டது. அது ஒரு 'தகப்பன் - மகன்' கதை. அனைத்து விஷயங்களும் அவ்விருவர் சம்பந்தமானவையே. 

ஆகவே, அவ்வாறாகத் தம்முடைய கதையையே சாயியின் திருவாய்மொழியாகக் கேட்ட சபட்னேகரின் மனம் மிகுந்த வியப்பிலாழ்ந்தது. சாயிபாதங்களில் அவருக்கிருந்த பயபக்தி மேலோங்கியது. 

அனைத்து விவரங்களையும் உள்ளங்கை நெல்லிக்கனிபோல் பாபா அறிந்திருந்ததை சபட்னேகர் மனத்தால் பாராட்டிப் போற்றினார். 

பிரம்ம சொரூபமாக இருப்பவருக்கு இவ்வுலகமே குடும்பம்.  இன்னும் சரியாகக் கூறுமிடத்து, அவரே பூரணமான சிருஷ்டி ஆவார். இதுவே சாயியின் பரிமாணம். 

ஒன்றேயெனும் பொருளின் விஸ்தாரமே சாயிபாபா அவதாரம். அவரால், 'உன்னுடையது' 'என்னுடையது' என்று எப்படிப் பேதப்படுத்திப் பார்க்கமுடியும்? அவரே இவ்வுலக ரூபத்தில் விரிந்திருக்கிறார்.!

பரம புருஷனோடு ஒன்றியிருப்பவரால், எப்படி துவைத பாஷை (நான் வேறு, நீ வேறு என்று பிரித்துப் பேசுதல்) பேச முடியும்?  காண்பான், காட்சி, காணப்படும் பொருள் என்னும் பேதம் அவருக்கு இல்லை. பரந்த வானத்திற்கு வண்ணம் தீட்ட முடியமோ!

பாபா மகா அந்தர்ஞானி  (பிறர் மனம் அறியும் சக்தி படைத்தவர்). ஆகவே, அந்த எண்ணம் (சுலோகம் 138 ) சபட்னேகரின் மனத்தில் ஓடிக்கொண்டிருந்தபோதே பாபா அவரிடம் என்ன சொன்னார் என்பதைச் சொல்கிறேன். நற்குணவான்களாகிய நீங்கள் கேட்டு மகிழுங்கள். 

சபட்னேகரை விரலால் சுட்டிகாட்டிக்கொண்டே  பாபா ஆச்சரியம் பொங்கும் குரலில் முழங்கினார், "இவர் மகனை நான் கொன்றுவிட்டதாகச் சொல்கிறார். என்மீது இக் குற்றத்தைச் சாடுகிறார். -

"நான் ஜனங்களின் குழந்தைகளைக் கொல்பவனாக இருந்தால், இவர் ஏன் மசூதிக்கு வந்து அழுகிறார்?  நல்லது, இப்பொழுது நான் இவ்வாறு செய்கிறேன். இவர் புத்திரனை மறுபடியும் இவருடைய வயிற்றில் கொண்டுவருகிறேன். -


 

Thursday, 2 October 2025

 ஷீர்டி சாயி சத்சரிதம் 

பாபா மறைமுகமாக விவரித்த வியாதி, ஓரிரண்டு மாதங்களுக்குப் பிறகு நிவிர்த்தியானபோது, பெண்மணியின் அனுபவம் உண்மையை உணர்த்தியது. 

அப் பெண்மணியின் விருப்பம் பின்னர்ப் பூரணமாக நிறைவேற்றப்பட்டது.  ஆனபோதிலும், சபட்னேகர் தரிசனம் செய்யப்போனபோது, 'போ வெளியே' என்ற பழைய வெகுமானத்தையே பாபா மறுபடியும் அளித்தார். 

"பாபா விடாப்பிடியாக என்னை இழிவுபடுத்தும்படியாக நான் என்ன தவறு இழைத்தேன் என்று அறியேன்.  நான் நமஸ்காரம் செய்யும்போது அவர் கூறும் மறுமொழி, மாறமாட்டேன் என்கிறது!

"என் கண்ணெதிரிலேயே மற்றவர்களிடம் மிகுந்த பிரேமை காட்டுகிறாரே; அவர் என்னிடம் மட்டும் கோபங்காட்டுவதற்கு நான் முன்ஜன்மங்களில் என்ன பாவம் சம்பாதித்தேன்?-

"காலையிலும் மாலையிலும் அவரைப் பார்ப்பதற்குச் செல்லும் மக்கள் நித்தியதீபாவளியைப்போல ஆனந்தம் அனுபவிக்கிறார்களே;  என்னுடைய தலையில்மட்டும் 'போ வெளியே' என்றா எழுதியிருக்கிறது?

"என்னுடைய கர்மவினை என்னை அதர்மவழியில் செலுத்தி அளவற்ற பாவங்களைச் செய்யவைக்கும் அளவுக்குக் கொடுமையானதோ? அதனால்தான் பாபா எனக்கு அவகிருபை (கிருபைக்கெடு) காட்டுகிறாரோ?-

"ஆரம்பகாலத்தில் பாபா விஷயமாக நான் குதர்க்கமாகச் சிந்தித்து சந்தேகப்பட்டேன். ஆகவே, பாபாவே இந்த உபாயத்தால் என்னைத் தம்மிடம் நெருக்கமாக இழுக்கிறார் என்று நினைக்கிறேன்".

ஆகவே, பாபாவின்மேல் உறுதிப்பாட்டுடன் மனம் செலுத்தி, பாபாவிடமிருந்து அனுக்கிரஹம் பெறும்வரை ஷிர்டியிலிருந்து நகர்வதில்லை என்று சபட்னேகர் நிர்த்தாரணம் செய்துகொண்டார். 

முவ்வகைத் தாபங்களால் தாக்குண்டபோதிலும், சாயிதரிசனம் செய்யவேண்டுமென்று தாகத்துடன் வந்தவர் யாராவது, மனத்திருப்தி அடையாமல் கூம்பிய முகத்துடன் திரும்பிச் சென்றிருக்கிறாரா?

அந்த நாளில், அன்னமும் பானமும், போவதும் வருவதும் பிடிக்காமல், எதிலும் விருப்பமின்றி சபட்னேகர் சோகமாக இருந்தார். தூக்கம் வராமல் விழித்துக்கொண்டே படுக்கையில் படுத்திருந்தார். 

"யாரும் அருகில் இல்லாத சமயம் பார்த்து, பாபா தனிமையாக ஆசனத்தில் அமர்ந்திருக்கும்போது, அந்த நல்வாய்ப்பைப் பயன்படுத்தி பாபாவின் பாதங்களை கெட்டியாகப் பிடித்துக்கொள்வேன். "

இவ்வாறு சபட்னேகர் நிச்சயம் செய்துகொண்டார். அவருடைய தீர்மானத்திற்குப் பலனும் கிடைத்தது. மனத்துள்ளே ஏற்பட்ட நல்லெழுச்சியால் பாபாவின் பாதங்களைப் பற்றிக்கொண்டார். 

பாதங்களில் தலையை வைத்து வணங்கியபோது பாபா தம்முடைய கையை சபட்னேகரின் தலையின்மேல் வைத்தார். சபட்னேகர் பாதசேவை செய்ய ஆரம்பித்தார். அப்பொழுது, ஆடு மேய்க்கும் பெண் ஒருத்தி அங்கு வந்தாள்.

 


 

Thursday, 25 September 2025

ஸ்ரீ  ஷீர்டி சாயி சத் சரிதம்  


மனைவி கனவைக் கணவருக்கு விவரித்தார், "அங்கு, ஒரு வேப்பமரத்தடியில், தலையைச் சுற்றி ஒரு துணியைக் கட்டிக்கொண்டிருந்த பக்கீர் ஒருவர் என்னருகில் வந்தார்.-

"கோமளமான குரலில் பக்கீர் இயம்பினார், 'குழந்தாய், ஏன் இப்படி வீணாக சிரமப்படுகிறாய்? நான் உன்னுடைய குடத்தை நிர்மலமான தூய நீரால் நிரப்பித் தருகிறேன்.'-

"எனக்குப் பக்கீரிடம் பீதி ஏற்பட்டது. காலிக்குடத்தை எடுத்துக்கொண்டு சரசரவென்று வீடு திரும்பினேன். பக்கீர் என்னைப் பின்தொடர்ந்து வந்துகொண்டிருந்தார். -

"கனவின் இந்தக் கட்டத்தில் நான் விழித்துக்கொண்டேன்."  மனைவி கண்டா கனவின் விவரத்தைக் கேட்ட சபட்னேகர் ஷீர்டி செல்வதென்று முடிவெடுத்தார். 

அதே முஹூர்த்தத்தில் இருவரும் கிளம்பி, மறுநாள் உதயகாலத்தில் ஷீர்டி கிராமத்திற்கு வந்துசேர்ந்தனர்.  உடனே மசூதிக்குச் சென்றனர். அந் நேரத்தில் பாபா லெண்டிக்குச் சென்றிருந்தார். 

ஆகவே, பாபா திரும்பிவரும் வரையில் அவருக்காகக் காத்துகொண்டு உட்கார்ந்திருந்தனர். அவர்கள் எதிர்பார்த்தபடி பாபாவும் அங்கு வந்தார். 

நகத்திலிருந்து சிகைவரை, கனவில் கண்ட அதே உருவத்தைப் பார்த்த பெண்மணி (சபட்னேகரின் மனைவி ) ஆச்சரியப்பட்டார். மேலும் உன்னிப்பாகப் பார்த்தார். 

பாதங்களை அலம்பும் சேவை முடிந்தது. தரிசனம் செய்த பிறகு பாபாவின் பாதங்களுக்குப் பெண்மணி நமஸ்காரம் செய்தார். ஓரிடத்தில் அமர்ந்துகொண்டு பாபாவையே பார்த்துக்கொண்டிருந்தார். 

பெண்மணியின் விநயத்தைக் கண்டு சாயிநாதரின் சித்தம் மகிழ்ந்தது. அவளுடைய வியாதியை நிவாரணம் செய்ய, மெல்லிய குரலில் ஒரு கதை சொல்ல ஆரம்பித்தார் பாபா. 

வழக்கம்போல, அங்கிருந்த ஒரு மூன்றாவது நபரிடம் தம்முடைய வியாதியைப் பற்றி பிரேமையுடன் விஸ்தாரமாக பாபா தெரியப்படுத்தினார். 

உண்மையில் அது அப் பெண்மணியின் கதை.  அதை அவளிடம் நேரிடையாகவே சொல்லியிருக்கவேண்டும். ஆயினும், அவளுடைய முன்னிலையில், மூன்றாமவர் ஒருவரிடம் அதைச் சொன்னபோது அப் பெண்மணி கண்கொட்டாது கதையைக் கேட்டாள்.

"என்னுடைய கைகள், வயிறு, இடுப்பு, எல்லாம் பல வருஷங்களாக கடுமையாக வலிக்கின்றன.  மருந்துகள் தின்று நான் களைத்துவிட்டேன். வியாதி பரிஹாரம் ஆகவில்லை. (குணமடையவில்லை)

"மருந்துகளை விழுங்கி விழுங்கி என்னுடைய தொண்டை அலர்சியுற்றதுதான் மிச்சம். ஒரு நிவாரணமும் ஏற்படவில்லை. திடீரென்று அந்த வியாதி இப்பொழுது காணாமல் போய்விட்டது. என்னே ஆச்சரியம்!"

இதுதான் அப் பெண்மணியின் கதை.  பெயரைக் கூடாக குறிப்பிடாமல் மூன்றாமவரிடம் சொல்லப்பட்டது. சொல்லப்பட்ட வார்த்தைகள் அனைத்தும் அப் பெண்மணி சம்பந்தப்பட்டவையே; அவளுடைய கதையே!


 

Thursday, 18 September 2025

 ஷீர்டி சாயி சத்சரிதம் 


"இறைவா! இது என்ன சித்திரம்?" பாபா படத்தைப் பார்த்துவிட்டு சபட்னேகரைச் சுட்டிக்காட்டியவாறு  பதிலளித்தார், "இது அவர் நண்பரின் படம்"

இவ்வாறு சொல்லிக்கொண்டே பாபா நகைத்தார். கூடியிருந்தவர்களுக்கும் சிரிப்பு வந்தது. "பாபா, இதன் இங்கிதம் (குறிப்பு) என்னவோ?" என்று பாலா சிம்பி பாபாவை வினவினார். (பாபாவிடமிருந்து பதில் ஏதும் வரவில்லை).

உடனே பாலா சிம்பி சபட்னேகரிடம்  சொன்னார், " தரிசனம் செய்துகொள்ளுங்கள்; சீக்கிரம்."  ஆனால், நமஸ்காரம் செய்தபொழுது ,, "போ வெளியே " என்ற முழக்கத்தை சபட்னேகர் செவிமடுத்தார். 


"அய்யகோ! அதே 'போ வெளியே ' இன்னும் என்னைப் பின்தொடர்கிறதே! இப்பொழுது நான் எவ்வழி செல்வேன்?" இதுவே சபட்னேகரின் பெருவியப்பு. 

அவர்கள் இருவரும் பாபாவின் எதிரில் கைகளைக் கட்டிக்கொண்டு நின்றிருந்தபோது பாபா அவர்களுக்கு ஆணையிட்டார், "இங்கிருந்து உடனே வெளியே போய்விடுங்கள்!"

"சமர்த்த ஸ்வாமியே! உம்முடைய ஆணையை எப்பொழுதும் எவராலும் தாண்டமுடியாது.  இவ்வாறிருக்கையில், பாமரர்களாகிய எங்களுடைய கதை என்ன! இக்கணமே நாங்கள் வெளியேறிவிடுகிறோம். -

"பெரும் உதாரகுணம் படைத்தவரென்று கேள்விப்பட்டு தரிசனம் செய்ய வந்தோம். ஆனால், "போ வெளியே " என்ற வார்த்தைகளால் வரவேற்கப்பட்டோம்! இதில் பொதிந்துள்ள ரகசியம் என்னவென்றும் அறியோம்.-

"எங்களைக் கருணையுடன் நோக்குங்கள். நாங்கள் கூடிய சீக்கிரம் மறுபடியும் வந்து உங்களை தரிசனம் செய்ய வேண்டுமென்று ஆசியளியுங்கள்."  அவர்கள் வேண்டிக்கொண்ட ஆறுதல் மேற்கண்டவாறு. 

பாபாவின் மனத்தில் என்ன எண்ணம் இருக்கிறது என்பதை அறியும் சக்தியுடைய ஞானியும் உண்டோ ! ஆகவே, ஆணைக்கு அடிபணிந்து இருவரும் அவரவர் வசிப்பிடங்களுக்குச் சென்றனர். 

பாபாவின் முதல் தரிசனம் இவ்வாறு நிகழ்ந்தது, இருவரையும் வருத்தமடையச் செய்தது. தாமதம் ஏதும் செய்யாமல், இருவரும் அவரவர் கிராமத்தைச் சென்றடைந்தனர். 

மேலும் ஓராண்டு கழிந்தது.  ஆனபோதிலும், சபட்னேகரின்  மனம் உறுதிப்படவில்லை. மறுபடியும் கண்காபூருக்குச் சென்றார்.  மனக்கலக்கம் அதிகரித்தது. 

ஓய்வெடுப்பதற்காக மாடேகாங்விற்குச்  சென்றார். கடைசியில் காசி க்ஷேத்திரத்திற்குச் செல்வதென்று முடிவெடுத்தார்.  அதற்கான ஏற்பாடுகளைச் செய்தார். 

காசிக்குப் புனிதப் பயணமாகக் கிளம்புவதற்கு இரண்டு நாள்களுக்கு முன்பு அவர் மனைவிக்கு ஒரு தெய்வீகக் காட்சி கிடைத்தது.  காசிப் பயணம் நிறுத்தப்பட்டது!

ஆச்சரியமளிக்கக்கூடிய அந்த தெய்வீகக் காட்சி ஏற்பட்டது  எப்படியென்ற புதினத்தை விவரிக்கிறேன்.  சாயியின் லீலைகளைக் கவனத்துடன் கேளுங்கள். 

சபட்னேகரின்  மனைவி படுக்கையில் உறங்கிக்கொண்டிருந்தபோது, ஒரு குடத்தை எடுத்துக்கொண்டு 'லக்கட்சா ' வின் கிணற்றுக்குத் தாம் செல்வதுபோல் கனவொன்று கண்டார்.