valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Friday, 24 January 2020

ஷீர்டி சாயி சத்சரிதம்

"நான் தாதருக்கு போகவேண்டுமென்று விரும்பினேன். ஆனால், முக்கியமான வேலையொன்று இங்கிருப்பது திடீரென்று ஞாபகத்திற்கு வந்தது. ஆகவே, என்னுடைய தாதர் பயணத்தை ரத்து செய்துவிட்டேன்."

பணம் கொடுத்தாலும் வரிசையில் நின்று சிரமப்பட்டு வாங்கவேண்டிய பயணச் சீட்டு சுலபமாக கைக்கு வந்ததுபற்றி மாங்கர் மகிழ்ச்சியடைந்தார்.

சீட்டுக்குப் பணம் கொடுப்பதற்காகாப் பாக்கெட்டிலிருந்து பணத்தை எடுத்துக்கொண்டுஇருந்தபோது, விவசாயி திடீரென்று கூட்டத்தினுள் முண்டியடித்துப் புகுந்து காணாமல் போய்விட்டார். அவர் எங்கே சென்றார் என்பதை மாங்கரால் கண்டுபிடிக்க முடியவில்லை.

விவசாயியைத் தேட பாலாராம் பலமாகப் பிரயத்தனம் செய்தார். அனைத்து முயற்சிகளும் பயனற்றுப் போயின. இதற்கிடையே ரயில் வண்டி வந்துவிட்டது.

காலில் செருப்பில்லாமல், தலையில் ஒரு வேட்டியை முண்டாசாகக் கட்டிக்கொண்டு, கம்பளியைப் போர்த்துக்கொண்டு வந்த அந்த விவசாயி சகோதரர் யார்?

பயணச் சீட்டின் கட்டணம் சிறிதென்று சொல்லமுடியாது. அதையும் அவர் ரொக்கமாகத் தம்முடைய பாக்கெட்டில் இருந்து எடுத்துக்கொடுத்தார். ஏன், ஓ, எதற்காக இந்த தாட்சிண்ணியத்தின் பளுவை நான் சுமக்க வேண்டும்? இந்தப் புதிர் எனக்குப் புரியவில்லையே!

தோற்றத்தில் விவசாயி, ஆயினும் இவ்வளவு உதார குணமா! பணத்தாசை என்பதே கிடையாதா? யார் இந்த விவசாயி? கடைசிவரை இப்புதிர் விடுபடவே இல்லை;  மாங்கரின் மனம் குடைந்தது.

ஆச்சரியத்தில் நிரம்பிய மாங்கர், விவசாயி எந்நேரமும் வரலாம் என்ற நம்பிக்கையுடன் ரயில் புறப்படும்வரை ரயில் பெட்டியின் கதவுக்கு அருகில் வெளியே நின்று கொண்டிருந்தார்.

ரயில் புறப்பட்டபோது, இனிமேல் தேடிப் பயனில்லை என்று தெரிந்து கைப்பிடிக்கம்பியை பிடித்து, எகிறிக்குதித்துப் பெட்டியில் ஏறினார்.

கோட்டையில் பிரத்யக்ஷமான சந்திப்பு. வேறுவிதமாக இருந்தபோதிலும் இங்கும் சாயி சந்திப்பு. விவசாயி அணிந்திருந்த விசித்திரமான உடை மாங்கரின் மனத்தைக் குறுகுறுக்க செய்தது.

பின்னர், இந்த சத்தான பக்தர் சாயி பாதங்களில் பூரணமாக காதல் கொண்டு, திடமான சிரத்தையுடனும் பக்தியுடனும் அவருடைய வாழ்நாளை ஷிர்டியில் கழித்தார்.

ரீங்காரம் செய்துகொண்டே தாமரை மலையின் மகரந்தத்தை சுவைக்கச் சுற்றிச் சுற்றி வரும் தேனியைப் போல, சாயி நாமத்தைச் சொல்லிக்கொண்டே சாயியை சுற்றிச் சுற்றி வந்தார். பாலராம்ஜி அவ்விதமாகவே ஷிர்டியில் வாழ்ந்தார்.

எப்பொழுதாவது பாபாவின் அனுமதி பெற்றுக்கொண்டு முக்தாராம்ஜி என்ற சக பக்தருடன் ஷிர்டியை விட்டு வெளியே செல்வார்.

Monday, 20 January 2020

ஷீர்டி சாயி சத்சரிதம்

அந்த ரம்மியமான இடத்தையும் பளிங்கு போன்ற சுத்தமான நீரையும் மந்தமாருதத்தையும் (தென்றலையும்) கண்டு மிக்க மகிழ்ச்சியடைந்தார்.

சாயியால் ஆணையிடப்பட்டிருப்பினும், சாயியை எங்கோ வைத்துக்கொண்டு, அவர் விதித்தவாறும் சொல்லிக்கொடுத்த முறையிலும் மாங்கர் தம்முடைய தவத்தை ஆரம்பித்தார்.

பாபா புரிந்த விந்தையைப் பாருங்கள்! அந்தக் கோட்டையில் மாங்கர் தவத்தில் மூழ்கி இருந்தபோது, பாபா பிரத்யக்ஷமாக தரிசனம் அளித்தார். மாங்கர், கண்களுக்கு எதிரே பாபாவை தரிசனம் செய்தார்.

சமாதி நிலையில் தரிசனம் கிடைப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை. ஆனால், மாங்கரோ ஆசனத்தில் அமர்ந்திருந்தபோது விழித்த நிலையிலேயே  சமர்த்தரைக் கண்டார்.

கண்ணால் கண்டது மட்டுமல்லாமல், பாலராம் சாயியைக் கேட்டார், "பாபா, என்னை ஏன் இங்கு அனுப்பினீர்கள்?" பாபா என்ன பதில் கூறினார் தெரியுமா?

"ஷிர்டியில் இருந்தபோது அநேக எண்ணங்கள் உமது மனத்தில் அலைகளாக எழும்பி மோதின. ஆகவே, உம்முடைய சஞ்சலமற்ற மனத்தைக் கோட்டைக்குப் போகும்படி நியமித்தேன். -

"நிலம், நீர்  ஆகிய பஞ்ச பூதங்களால் ஆகியதும் மூன்றரை முழம் நீளமுள்ளதுமான இவ்வுடலுக்கு வெளியேயோ, ஷிர்டிக்கு வெளியேயோ நான் இல்லை என்று நினைத்திருந்தீர்.-

"ஆனால், இப்பொழுது உம்மெதிரில் நிற்கும் நான்தான் ஷிர்டியிலும் இருக்கிறேன். இதை நீரே அமைதியான மனத்துடன் நிதானமாக நன்கு பார்த்துக்கொள்ளும். இந்நிமித்தமாகவே உமக்கு இப்பாடம் புகட்டினேன் என்றும் அறிவீராக."

உத்தேசம் செய்த காலம் கடந்தபின், மாங்கர் மச்சீந்திரக்கட்டை விடுத்துத் தம்முடைய இடத்திற்கு கிளம்பினார்.

அவருடைய வாசஸ்தலமான பாந்த்ராவிற்கு போகலாம் என்று நினைத்தார். ஆகவே, பூனாவிலிருந்து தாதர்வரை ரயில்வண்டியில் பயணம் செய்ய முடிவுசெய்தார்.

பூனா ரயில் நிலையத்தை அடைந்தார். பயணசீட்டு வாங்கவேண்டிய நேரம் வந்தவுடன், சீட்டு வாங்கும் முகப்புக்குச் சென்றபோது ஓர் அற்புதம் நிகழ்ந்தது!

இடுப்பில் லங்கோடு கட்டி ஒரு கம்பளியைப் போர்த்துக்கொண்டு விவசாயியை போல் ஆடையணிந்திருந்த, முன்பின் தெரியாத பிரயாணி ஒருவரை முகப்புக்கருகில் கண்டார்.

பயணசீட்டு வாங்கிக்கொண்டு விவசாயி திரும்பியபோது அவருடைய பார்வை பாலாராமின் பார்வையைச் சந்தித்தது. விவசாயி பாலாராமை நோக்கி நடந்தார்.

"நீங்கள் எங்கே போகிறீர்கள்" என்று விவசாயி பாலாராமைக் கேட்டார். "தாதருக்கு" என்று பாலாராம் சொன்னவுடன், "இதை நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள்" என்று சொல்லிக்கொண்டே பாலாராமிடம் பயணசீட்டைக் கொடுத்தார். அவர் மேலும் சொன்னார், -


Friday, 10 January 2020

ஷீர்டி சாயி சத்சரிதம்

மாங்கர் சாயியின் திருவாய் மொழியைக் கேட்டு அவருடைய ஆணையை சிரமேற்கொண்டு, பாதங்களில் சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தார்.

மிகுந்த விநயத்துடன் மாங்கர் பதில் கூறினார், "உங்களுடைய தரிசனம் கிடைக்காத இடத்தில உட்கார்ந்துகொண்டு நான் என்ன செய்யப் போகிறேன்?-

"இங்கே தினமும் உங்களை தரிசனம் செய்வேன்; பாத தீர்த்தம் அருந்துவேன்; இயல்பாகாவே இரவுபகலாக உங்களுடைய சிந்தனையில் மூழ்குவேன். அங்கோ, நான், நான்மட்டும் ஓர் ஆண்டிப் பயலைப் போல் வாழ்வேன்.-

"ஆகவே, பாபா, நீங்கள் இல்லாமல் அங்கு நான் என்ன லாபம் பெறுவேன்! என்னை ஏன் அங்கு அனுப்புகிறீர்கள்?"

"சிஷ்யனுக்கு குருவின் வார்த்தைகளில் அணுவளவும் சந்தேகமோ கோணல் சிந்தனையோ ஏற்படக்கூடாது' என்று நினைத்த மாங்கர், அடுத்த கணமே விகற்பத்தை விடுத்து, சங்கற்பம் செய்துகொண்டார்.

மாங்கர் கூறினார், "பாபா, என்னை மன்னித்துவிடுங்கள். என்னுடைய எண்ணங்கள் அற்பத்தனமான புத்தியிலிருந்து எழுந்தவை. என்னுடைய சந்தேகங்களைப்பற்றி  நானே வெட்கப்படுகிறேன். எனக்கு இந்த சந்தேகம் வந்திருக்கவேகூடாது.-

"நான் உங்களுடைய நாமத்தை சதா ஜபம் செய்பவன்; ஆக்ஞயை சிரமேற்கொள்பவன். உங்களுடைய அருள் சக்தியால் நான் அந்த கோட்டையிலும் சந்தோஷமாக இருப்பேன். -

"அங்கும் உங்களையே தியானம் செய்வேன்; உமது கருணை பொங்கும் உருவத்தையே மனத்திரையில் நிறுத்துவேன். உங்களைப்பற்றிய நினைத்துக்கொண்டிருப்பேன்.-

"உங்களிடம் அனன்னியமாக(வேறெதிலும் நாட்டமில்லாத) சரணடைந்து, வருவதையும் போவதையும் உங்களுடைய கையில் ஒப்படைத்துவிட்ட பிறகு, நான் ஏன் எதைப்பற்றியும் கவலைப்படவேண்டும்?-

"உங்களுடைய ஆக்ஞய்யின் சக்தியே எனக்கு அங்கும் சாந்தியளிக்கும். உங்களுடைய மகத்தான சக்தியினுள் அடைக்கலம் புகுந்த நான் ஏன் வீணாகக் கவலைப்படவேண்டும்?"

சமர்த்த சாயி சனாதன பிரம்மம். அவருடைய வார்த்தைகளே நமது தலையெழுத்தாகும். எவர் அவருடைய வார்த்தைகளில் விசுவாசம் வைக்கிறாரோ, அவர் பூரணமான அனுபவத்தை பெறுவார்.

பாபா அப்பொழுது மாங்கரிடம் சொன்னார், "மனத்தை நிலைப்படுத்திக்கொண்டு  நான் கூறுவதைக் கவனமாக கேளும். விகற்பமான எண்ணங்கள் வேண்டா.-

"உடனே கிளம்பி மசிந்தரகட்டுக்குப் போம். தினமும் மூன்று முறைகள் தியானம் செய்யும். காலக்கிரமத்தில் ஆத்மானந்தத்தால் நிரம்புவீர்".

இவ்வாறு உறுதியளிக்கப்பட்ட மாங்கர் மௌனமானார். "தீனனாகிய நான் என்ன சொல்ல முடியும்" என்று நினைத்து, கோட்டைக்குப் போவதற்குத் தயாரானார்.

மறுபடியும் சாயிபாதங்களை வணங்கிவிட்டு உதீ பிரசாதத்தையும் பெற்றுக்கொண்டு தெளிவான மனத்துடன் மச்சீந்திர பவனுக்கு கிளம்பினார். (அங்கு போய்ச் சேர்ந்தபின்) 

Friday, 3 January 2020

ஷீர்டி சாயி சத்சரிதம்

சொந்தம் கொண்டாடப்படாதவை அனைத்தும் அரசாங்கத்திற்குச் சொந்தம். திடீர் மரணங்கள் முறையாக விசாரிக்கப்பட வேண்டும். ஆகவே, இந்தச் சாக்குபோக்கைச் சொல்லி பாபா பிணத்தைப் புதைக்க விடாமல் தடுத்தார்.

பின்னர் எல்லாம் அவ்வாறே நடந்தது. விதிமுறைகளுடன் சடங்குகள் செய்யப்பட்டுப் பிரேதம் தகுதியான இடத்தில் புதைக்கப்பட்டது. சாயியின் இலக்கு இவ்வாறு ஒழுங்குமுறையாக நிறைவேறியது.

கேட்பவர்களுக்கு நான் இப்பொழுது இன்னொரு கதை சொல்கிறேன். பயபக்தியுடனும் கவனத்துடனும் கேளுங்கள். சாயி எங்கும் நிறைந்தவர் என்பது உங்களுக்கு புலனாகும்.

மாங்கர் என்ற குடும்பப் பெயரும் பாலாராம் என்ற பெயரும் கொண்ட ஒருவர் பாபாவின் பரம பக்தர் . அவர் ஒரு இல்லறவாசியாக வாழ்ந்துவந்தார்.

வாழ்க்கையின் ஒரு கட்டத்தில்   மாங்கரின் மனைவி இறந்துபோனார். இல்லறத்தின் கடமைகளை செய்யமுடியாது போயிற்று. அவருடைய மனம் அமைதியிழந்தது. ஆயினும், மனைவியின் மரணமே அவருக்குப் பிற்காலத்தில் பெரும்பேற்றைக் கொணர்ந்தது.

பூர்வபுண்ணிய பலனாக அவருக்கு சாயி பாதங்களின் சங்கம் கிடைத்தது. சாயியிடம் நிச்சலமான பக்தி வளர்ந்தது. உலக வாழ்வின்மீது பூரணமான விரக்தி ஏற்பட்டது.

தெய்வ அருள் பெற்ற மாங்கர் ஆசாபாசங்கள், மனைவி, மக்கள் ஆகிய சகல பந்தங்களையும் அறுத்தெறிந்துவிட்டு இல்லற வாழ்வில் இருந்து தம்மை விடுவித்துக் கொண்டார்.

பிறரிடம்  பணி செய்வது சம்சார வாழ்க்கைக்கு மோகனமாலை; ஆன்மீக வாழ்க்கைக்கோ பெரிய இடைஞ்சல். உலக பாரத்தை தம் மகனின் தலைமேல் ஏற்றிவிட்டு விட்டுத் தம்மைப் பொறுத்தவரை அதற்குப் பூட்டுப் போட்டு விட்டார்  மாங்கர்.

இதுவும் ஒரு வகையான சந்நியாசமே. சந்நியாசம் ஏற்றுக்கொள்வதில் பல வழிமுறைகள் உண்டல்லவோ ! ப்ரம்ம ஞானம் அடையவேண்டுமென்று ஏற்கப்படும் சந்நியாசம் பெரும்பாலும் வெற்றியடைவதில்லை. ஒவ்வொரு படியிலும் தொந்தரவு கொடுக்கக்கூடும்.

மாங்கரின் அனன்னிய பக்தியை கண்ட உதாரமூர்த்தியான சாயி, அருள் செய்து அவருடைய துறவு மனப்பான்மையை திடப்படுத்தினார்.

அனந்த (அளவற்ற) ஜென்மங்களில் செய்த வினைகளின் விளைவு அவர்மேல் கவிழ்ந்துகொண்டு மனத்தைச் சஞ்சலப்படுத்தி நிலைபெறமுடியாமல் செய்தது. மனோராஜ்யத்தின் பேரலைகள்  மாங்கரின் மனத்திண்மையை கலைத்தன.

ஆகவே, சாயி, தம்முடைய இடம் ஷீர்டி மட்டும் அன்று;தாம் காலத்தையும் இடத்தையும் கடந்தவர் என்று மாங்கருக்கு நேரிடை அனுபவத்தால் நிரூபிப்பதற்காக அவருக்கு ஆணையிட்டார்.-

"நீர் ஷிர்டியில் இருந்தது போதும்! இந்தப் பன்னிரண்டு ரூபாயை பிராயணச் செலவுக்காக எடுத்துக்கொண்டு மச்சிந்தரகட்டுக்குப் (ஒரு கோட்டை) போய், 'ஆனந்தம் பெறுவேன்' என்ற நிச்சயமான தீர்மானத்துடன் அங்கு வாசம் செய்யும்."

 

Thursday, 26 December 2019

ஷீர்டி சாயி சத்சரிதம்

"இறைவன் சந்தோஷமடைந்து, உம்முடைய துக்கங்கள் அனைத்திற்கும் ஒரு முடிவுகட்டிவிடுவான். மாயையும் மோகமும் விலகும். அத்யந்தமான சுகம் கிடைக்கும்.

"தினமும் காலைக்கடன்களை முடித்துவிட்டு, ஹரிபாதங்களில் மனத்தை ஈடுபடுத்தி இந்த விரதத்தை (மூன்று சப்தாஹம்) முடித்தால் விடுதலை கிடைக்கும்".

பாபாவும் மேற்சொன்ன வழிமுறையையே கடைபிடித்தார் அல்லரோ! தம்முடைய தேகத்திற்கு முடிவு வரப்போகிறதென்று தெரிந்தவுடன் 'ராமவிஜயம்' படிக்கச் சொல்லிக் கேட்டார். 'ராமவிஜயம்' படிப்பதாலும் கேட்பதாலும் மிருத்யுஞயர் (காலனை வென்றவர் - சிவன்) சந்தோஷமடைகிறார்.

அடுத்த நாள் காலை நேரத்தில், சந்நியாசி தம்மை சுத்தம் செய்துகொண்டு பாபாவுக்குப் புஷ்பாஞ்சலி செய்துவிட்டு பாபாவின் பாததூளியை நெற்றியில் இட்டுக்கொண்டார்.

பாகவதத்தை கையில் இடுக்கிக்கொண்டு வாசிப்பதற்குத் தேவையான தனிமையை அளித்த, அமைதியும் சாந்தமும் நிறைந்த லெண்டித் தோட்டத்திற்குச் சென்றார்.

யோகாசனத்தில் அமர்ந்து பாராயணம் செய்ய ஆரம்பித்தார். சந்நியாசி முழுநேரமாகப் படித்து இரண்டு சப்தாஹங்களை வெற்றிகரமாக முடித்தார்.

மூன்றாவது கற்றை ஆரம்பித்த சமயத்தில் திடீரென்று நிலைகுலைந்தார்; ஜீவசக்தி வடிந்துபோவது போல் உணர்ந்தார். பாராயணத்தை அந்தக் கட்டத்திலேயே நிறுத்திவிட்டார்.

வாடாவிற்கு திரும்பிவந்து இரண்டு நாள்கள் சிரமப்பட்டார். மூன்றாவது நாள் பொழுது விடியும் சமயத்தில் சந்நியாசி கண்மூடினார்.

பக்கீர் பாபாவின் மடியில் தலையைச் சாய்த்தவர் சாய்த்தவர்தான். தேகத்திலிருந்து விடுதலை பெற்றுவிட்டார்.

சந்நியாசி மரணமடைந்த செய்தியைக் கேட்ட பாபா, ஒரு நாள் வரை உடலைப் பாதுகாக்கும்படி ஆணையிட்டார்.

பாபா சொன்னார், "உடலை உடனே புதைக்க வேண்டா." பாபா இவ்வாறு சொன்னதால், சந்நியாசி மறுபடியும் உயிர்பெற்றுவிடுவார் என்ற நம்பிக்கையில் மக்கள் உற்சாகத்துடன் உடலைப் பாதுகாத்தனர்.

ஒருமுறை உயிர் பிரிந்துவிட்டால் மறுபடியும் வந்து புகுந்துகொள்ளுமா என்ன? ஆயினும் பாபாவில் சொல் பிரமாணமன்றோ!  ஆகவே மக்கள் பிணத்தைப் பாதுகாத்தனர்.

அந்த ஆணைக்கும் பிறகு பலன் கிடைத்தது!  சொந்தம் கொண்டாட யாருமில்லாத பிணம் பாதுகாக்கப்பட்டது. போலீஸ்காரர்களுக்கு சந்தேகம் எதுவும் ஏற்படக் காரணம் இல்லாமற்போயிற்று. இறந்த பின் உடலில் ஜீவன் எப்படி இருக்கும்?

பாபாவுக்கு இறந்தவர்களை உயிர்ப்பிக்கத் தெரியாதா என்ன?(அவருக்கு  அந்த சக்தி இருந்தது.) ஆயினும், அனாதை பிணம் முறையான விசாரணையின்றி பூமியில் புதைக்கப்படக்கூடாது என்பதுதான் அவருடைய இலக்கு! 


Thursday, 19 December 2019

ஷீர்டி சாய் சத்சரிதம்

"போய் அமைதியாக உட்காரும்; சோகம் வேண்டா, போவதா, வேண்டாவா என்று சில நாள்கள் கழித்து முடிவெடுப்போம். அதுவரை தைரியமாகவும் பொறுமையாகவும் இரும்.-

"வாடாவில் பல திருடர் இருக்கிறார்கள். கதவுகளை மூடிக்கொண்டு உஷாராக இரும். ஏனெனில் திருடர்கள் உம்மைக் கடுமையாகத் தாக்கிவிட்டு எல்லாப் பொருள்களையும் எடுத்துக்கொண்டு போய்விடுவார்கள்.-

"செல்வம் என்றுமே சாசுவதுமில்லை; சரீரமோ ஒரு நீர்க்குமிழி. மரணம் எப்பொழுதுமே பக்கத்தில் உட்கார்ந்திருக்கிறது என்பதை அறிந்து தருமவழியில் நடப்பீராக.-

"உடல், மனைவி, மக்கள் ஆகிவரின் சம்பந்தமாக 'நான்' - 'எனது' என்ற உணர்வுகளும் அவற்றிலிருந்து விளையும் மூன்று வகையான தாபங்களும் இவ்வுலகின் அனர்த்தங்கள் (கேடுகள்).-

"இரண்டாவது வகையான அனர்த்தம் சொர்க்கத்தை சார்ந்தது. மரணத்திற்குப்பின் மக்கள் அடைய விரும்பும் சொர்க்கமே மோக்ஷத்திற்குத் தடையாகிவிடுகிறது. தலைகீழாக கீழே விழுவதற்கும் பொதுவான காரணமாகிறது. -

"சொர்க்கத்தில் புண்ணியம் சம்பாதிக்கமுடியாது. பயமில்லாத நிலையையும் அடைய முடியாது. ஏனெனில், சேர்த்து வைத்த புண்ணியம் செலவழிந்த பிறகு கீழே விழுந்துவிடுவோமோ என்ற பயம், சந்தேகத்துக்கு இடமில்லாமல் அங்கும் நிலவுகிறது.-

"இவ்வகையாக, இவ்வுலக வாழ்வு, மேலுலகவாழ்வு இரண்டுமே அனர்த்தங்கள் நிறைந்தவை. ஆகவே, இரண்டையுமே முழுமையாக துறப்பதே ஆனந்தப் பெருநிலையின் அஸ்திவாரம்.-

"உலக வாழ்வை வெறுத்தொதுக்கி, ஹரியின் பாதங்களை கெட்டியாகப் பிடித்துக் கொள்பவர்கள். பந்தங்களின் பிடியிலிருந்து விடுபடுகின்றனர். அஞ்ஞானமும் மாயையும் அவர்களைவிட்டு அகன்றுவிடுகின்றன. -

"ஹரிபஜனையும் நாமஸ்மரணமும் அளிக்கும் உந்துவிசை, பாவம், தாபம், துயரம் ஆகியவற்றை விரட்டிவிடும். நிறைந்த அன்புடன் தியானம் செய்தால், இறைவன் நம்மை சங்கடங்களில் இருந்து விடுவிப்பான். -

"நீர் இவ்விடம் வந்துசேர்ந்தது மிக உயர்ந்த பூர்வபுண்ணிய பலத்தாலேயே. இப்பொழுது என்னுடைய அறிவுரையைக் கேட்டு இந்த ஜன்மத்தைப் பயனுள்ளதாகச் செய்துகொள்வீராக!-

"நீர் இவ்விடம் வந்துசேர்ந்தது மிக உயர்ந்த பூர்வபுண்ணிய பலத்தாலேயே. இப்பொழுது என்னுடைய அறிவுரையை கேட்டு இந்த ஜன்மத்தைப் பயனுள்ளதாக செய்துகொள்வீராக!

"நாளையில் இருந்து பாகவதத்தை (ஸ்ரீகிருஷ்ணரின் கதையைப்) பரிசீலனை செய்யும். மனத்தையும் வாக்கையும் செயலையும் ஒருமுகப்படுத்தி, மூன்று சப்தாஹங்கள் பாராயணம் செய்யும்.-

"மற்ற விஷயங்களை ஒதுக்கிவைத்துவிட்டு பாகவதத்தை காதால் கேளும்; அல்லது நீரே பாராயணம் செய்யும். முழுநம்பிக்கையுடன் படித்து மறுபடியும் மறுபடியும் படித்ததை ஆழமாகச் சிந்தனை செய்யும்.-
 
 

Friday, 13 December 2019

ஷீர்டி சாயி சத்சரிதம்

திடீரென்று பாபா கோபாவேசம் கொண்டார். குழுமியிருந்த மக்களை பார்த்து உறக்கச் சொன்னார், "இந்த சந்நியாசியை விரட்டியடியுங்கள். இவருடைய சங்காத்தமே  நமக்கு வேண்டாம்".

சந்நியாசியோ புதியவர்; பாபாவின் சுபாவம் தெரியாதவர். மனத்தில் அடி வாங்கியபோதிலும் பக்தர்கள் செய்த சேவையைப் பார்த்துக்கொண்டு அங்கேயே அமர்ந்திருந்தார்.

அது காலை தர்பார் நேரம். மக்கட்கூட்டத்தில் மசூதி நிரம்பி வழிந்தது. பக்தர்கள் கொண்டுவந்த பூஜை திரவியங்களும் அவர்கள் செய்த உபச்சாரங்களும் சந்நியாசிக்குப் பெருவியப்பை அளித்தன.

சில பக்தர்கள் பாபாவின் பாதங்களைக் கழுவிக் கட்டைவிரலிலிருந்து புனித நீரை எடுத்துக்கொண்டனர். சிலர் அப் புனித நீரைத் தேக்கரண்டியினால் அருந்தினர். சிலர் அதைக் கண்களில் பூசிக்கொண்டனர். அனைவரும் சுத்தமான பக்தியுடன் சேவை செய்தனர்.

சிலர் அவருக்குச் சந்தானம் பூசினார். வேறு சிலர் அத்தர் போன்ற வாசனை திரவியங்களை பூசினர். அனைவருமே, பிராமணர் , பிற்படுத்தப்பட்டோர், இதர ஜாதியினர் என்னும் பாகுபாடுகளையும் கட்டுப்பாடுகளையும் அறவே துறந்து சேவை செய்தனர்.

பாபா கோபம் காட்டியிருந்தாலும் சந்நியாசியின் மனத்தில் அநுராகம் (காதல்) பொங்கியது! அவர் இடத்தை விட்டு எழுந்திருக்கவோ நகரவோ இல்லை!

அவர் ஷீர்டி வந்துசேர்ந்த இரண்டு நாள்களுக்குள்ளாகவே கிராமத்தில் அவருக்குத் தாயார் தீவிரமாக நோய்வாய்பட்டிருந்ததாக கடிதம் வந்தது. சந்நியாசி சோகமுற்றார்.

தம்முடைய கிராமத்திற்கு திரும்பிச் சென்று தாயாரைக் காணவேண்டுமென்று அவர் விரும்பினார். ஆனால், பாபாவின் அனுமதியின்றி போகமுடியாது.

சந்நியாசி, கையில் கடிதத்துடன் மசூதிக்குச் சென்று பாபாவிடம் தாயாருடைய நிலைமையைத் தெரிவித்து வீடு திரும்புவதற்கு அனுமதி வேண்டினார்.

"சமர்த்த சாயி மஹாராஜரே! என் மனம் தாயாரைக் காணாத துடிக்கிறது. இந்த யாத்திரீகனின் மீது கருணை காட்டுங்கள். இன்முகத்துடன் எனக்கு அனுமதி தாருங்கள்".

அவர் ஓடி வந்து பாபாவின் பாதங்களை பிடித்துக்கொண்டு, "எனக்கு அனுமதியளித்துக் கிருபை செய்வீர்களா? என் தாயார் பிராணனைத் தொண்டையில் வைத்துக்கொண்டு தரையில் படுத்துக்கிடக்கிறார் போலும்.-

"தாயார் எனக்காக காத்திருக்கிறார் என்றே தோன்றுகிறது. நான் போய்ப் பார்த்தால் அவருடைய வேதனை குறையும்; முடிவும் அமைதியாக நேரும்."

சந்நியாசியின் ஆயுட்காலமே முடியப்போகிறது என்பதை அந்தர் ஞானத்தால் அறிந்த சமர்த்த சாயி அவரிடம் என்ன சொன்னார் என்பதைக் கேளுங்கள்.

"தாயாரிடம் இவ்வளவு பாசம் வைத்திருக்கும் நீர் ஏன் சந்நியாசம் ஏற்றீர்? உலகியல் பந்தங்களும் காவி உடைக்கும் சரிப்பட்டு வராதே. காவி உடைக்குக் களங்கம் கற்பித்துவிட்டீரே!-