valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday, 29 May 2014

ஷிர்டி சாயி சத்சரிதம் 

சுருங்கச்சொன்னால், நாமெல்லோருமே திட்டங்கள் தீட்டுகிறோம். ஆனால், நமக்கு ஆதியும் தெரிவதில்லை. அந்தமும் தெரிவதில்லை. நமக்கு எது நன்மை, எது தீமை என்பது ஞானிகளுக்கே தெரியும். அவர்களுக்குத் தெரியாதது எதுவுமே இல்லை. 

நடந்தது, நடப்பது, நடக்கப் போவது அனைத்தும் அவர்களுக்கு உள்ளங்கை நெல்லிகனிப் போல் தெரியும். அவர்களுடைய ஆக்கைக்கு கீழ்ப்படிந்து நடந்து கொண்டால், பக்தர்கள் சுகத்தையும் சாந்தியையும் பெறுவார். 

ஏற்கெனவே சொல்லப்பட்டதை தொடரும் வகையில், நான் முக்கிய காதையை மேற்கொண்டு சொல்கிறேன். சாயி, முலே சாஸ்திரிக்கு அவர்தம் குருவின் தரிசனத்தையே கொடுத்து அருள்செய்த காதையை கேளுங்கள். 

முலே, ஸ்ரீமான் புட்டியை சந்தித்துவிட்டு உடனே திரும்பிவிடும் எண்ணத்துடன் ஷீரடிக்கு வந்தார். 

அவருடைய நோக்கம் அவ்வாறு இருந்த போதிலும், பாபா இவ்விஜயத்திற்கு வேறு திட்டம் வைத்திருந்தார். அந்த ரஹசியமான திட்டம் என்ன என்பதை கவனமாக கேளுங்கள். 

முலே சாஸ்திரி தாம் திட்டமிட்டவாறு ஸ்ரீமான் புட்டியை சந்தித்து முடித்தார். அதன் பிறகு, ஸ்ரீமான் புட்டியும் இன்னும் சிலரும் மசூதிக்கு போவதற்காக எழுந்தனர். இதைப் பார்த்த முலே சாஸ்திரிக்கு அவர்களுடன் செல்ல வேண்டுமென்ற ஆவல் எழுந்தது. அவர்களுடன்கூடச் சென்றார். 

முலே சாஸ்திரி ஆறு சாஸ்திரங்களையும் கரைத்துக் குடித்தவர்; ஜோதிட சாஸ்திர விற்பன்னர்; சாமுத்திரிக்கா லக்ஷணமும் பூரணமாக அறிந்தவர்; பாபாவை தரிசனம் செய்ததில் மனம் மகிழ்ந்து போனார். 

அன்புள்ள பக்தர்கள் ஆத்துமார்த்தமாக பாபாவுக்கு பழவகைகள், தூத்பேடா, பர்பி, தேங்காய்  போன்ற தின்பண்டங்களை அர்ப்பணம் செய்தனர். 

மேலும், கொய்யாப் பழம், வாழைப் பழம், கரும்பு போன்ற பொருள்களை விற்பதற்காக கிராமப் பெண்கள் மசூதியின் வாயிலுக்கு வந்தனர். பாபா விருப்பப் பட்டபோது, தாமே பாக்கெட்டிலிருந்து பணம் எடுத்துக் கொடுத்து இப்பொருள்களை வாங்குவார். 

தம்முடைய பணத்தை செலவு செய்து கூடை கூடையாக மாம்பழங்களோ அல்லது குலை குலையாக வாழைப் பழங்களோ வாங்கி, அவருடைய ஆசை தீருமட்டும் பக்தர்களுக்கு விநியோகம் செய்வார். 

ஒவ்வொரு மாம்பழமாக கையில் எடுத்துக் கொள்வார். இரு உள்ளைங்கைகளாலும் அழுத்திக் தேய்த்து கொளகொள வென்று செய்து விடுவார். அதன்பிறகு ரசத்தை உறிஞ்சுவதற்காக பக்தர்களிடம் கொடுப்பார். 

இவ்வாறு பாபாவால் கொளகொளவென்று ஆக்கப் பட்ட மாம்பழத்தை வாயில் வைத்து ரசத்தைஎல்லாம் ஒரு பாத்திரத்திலிருந்து குடிப்பது போலக் குடித்துவிடலாம். தோலையும் கோட்டையும் மாத்திரம் எறிந்து விடலாம். 

Thursday, 22 May 2014

ஷிர்டி சாயி சத் சரிதம் 

நானா அவ்வாறு சொன்னதற்கு நல்ல காரணங்கள் இருக்கவே செய்தன. ஆகவே, அவர் சொன்னார், "போ, ஆனால் உடனே திரும்பி விடு". இதைக் கேட்ட அம்மையார் குடும்ப விசாரத்தால் சோகமடைந்தார். 

அடுத்த நாள் புரட்டாசி மாதத்து அமாவாசை; அம்மையார் அந்த நாளில் பேலாபூரில் இருக்க வேண்டுமென்று விரும்பினார். இல்லை, மிகத் தீவிரமாக ஆவலுற்றார். ஆனால், நானா அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. 

மேலும் , அமாவாசையன்று பயணம் மேற்கொள்வது  அவ்வளவு உசிதமான செயல் அன்று. இந்தப் பிரச்னையை சமாளிப்பது எப்படி என்பது பற்றி அம்மையார் மிகக் கவலையுற்றார். 

பேலாபூருக்கு செல்லவில்லை என்றால் மனம் சமாதானம் அடையாது. ஆயினும், கணவருடைய மனதைப் புண்படுத்தவும் விரும்பவில்லை. எப்படி அவருடைய ஆணையை மீற முடியும்?

எப்படியோ, பெலாபூருக்கு செல்வதற்குத் தம்மை தயார் செய்து கொண்டு, புறப்படுவதற்கு முன் பாபாவை நமஸ்காரம் செய்து விட்டுப் போவதற்காக வந்தார். பாபா அப்பொழுது லெண்டிக்கு கிளம்பிக் கொண்டிருந்தார். 

ஜனங்கள் எப்பொழுது பிரயாணமாகக் கிளம்பினாலும் நிர்விக்கினமாகப் போய்வர வேண்டுமென்று கடவுளை வணங்கிவிட்டு செல்வர். இப்பழக்கம் ஷிர்டியிலும் அனுசரிக்கப் பட்டது. 

சாயி ஷிர்டி மக்களுக்கு கடவுள் ஆதலால், எவ்வளவு அவசரமாக பயணப் பட்டாலும், கிளம்புவதற்கு முன்பு பாபாவின் திருவடிகளை வணங்கிவிட்டே சென்றனர். 

இக்கிரமத்தின்படி, அம்மையார், பாபா சாடி வாடாவிற்கு  எய்த்ரில் ஒரு கணம் நின்றபோது  பாபாவினுடைய பாதங்களுக்கு நமஸ்காரம் செய்தார். 

சிறியவர்களும் பெரியவர்களுமாக நானா சாஹேப் நிமோன்கர் உட்பட, தரிசனத்திற்கு வந்தவர்கள் அனைவரும் பாபாவுக்கு நமஸ்காரம் செய்தனர். 

அங்கிருந்த மக்களின் முன்னிலையில், குறிப்பாக நானாவின் முன்பாக, பாபா அவ்வம்மையாரிடம் சமயோசிதமான வார்த்தைகளைக் கூறினார். 

பாபாவினுடைய பாதங்களில் சிரம் தாழ்த்திப் பிரயாணத்திற்கு அனுமதி கேட்ட உடனே, "போம், சீக்கிரமாகப் போம்; அமைதியான மனதுடன் இரும்.

"அவ்வளவு தூரம் போவதால், மூன்று நான்கு நாள்கள் சந்தோஷமாக பேலா பூரில் தங்கி எல்லாரையும் சந்தித்து விட்டு ஷீரடிக்கு திரும்பி வாரும்". 

எதிர்பாராதவிதமாக வந்த பாபாவின் திருவாய் மொழியைக் கேட்டுத் திருமதி நிமோன்கர் நிம்மதிப் பெருமூச்சு விட்டார். நிமோன்கரும் பாபாவின் சூசகத்தை புரிந்து கொண்டார். இவ்விதமாக, இருவருமே சமாதனமடைந்தனர். 

Thursday, 15 May 2014

ஷிர்டி சாயி சத்சரிதம் 

நிமோன் என்னும் கிராமத்தின் வதந்தாரான நிமொன்கருக்கு பிரிட்டிஷ் அரசாங்கம் கௌரவ மாஜிஸ்ட்ரேட் பதவியையும் அதிகாரத்தையும் கொடுத்திருந்தது. ஆகவே, அவர் மிகச் செல்வாக்கு உள்ளவராக இருந்தார். 

மாதவராவ் தேச்பாண்டாவின் ஒன்றுவிட்ட அண்ணன்களிலேயே மூத்தவரான அவர், மிக வயோதிகர்; எல்லாராலும் சிரேஷ்டமாக மதிக்கப் பட்டார். நிமோன்கரின் மனைவியும் ஒரு பக்தை; சாயியே அவர்களுக்கு இஷ்ட தெய்வம். 

தங்களுடைய வதனியை (ஜமீன் கிராமத்தை) விட்டுவிட்டு  ஷீரடியில் வாழ வந்து விட்டனர். சாயியின் பாதங்களில் சரணடைந்து, சுகமாகத் தங்களுடைய வாழ்நாளைக் கழித்துக் கொண்டிருந்ததனர். 

விடியற் காலையிலேயே எழுந்து, ஸ்நானம், பூஜை இவற்றைச் செய்து முடித்து விட்டுப் பொழுது விடியும் நேரத்தில் ஹாரதி எடுப்பதற்குச் சாவடிக்கு நாள் தவறாது வந்தனர். 

அதன் பிறகு, சூரிய அஸ்தமன காலம் வரை பாபாவுடனேயே இருந்து கொண்டு மனதுக்கு உள்ளேயே தம்முடைய தோத்திரங்களை ஜெபித்து கொண்டே நிமோன்கர் பாபாவுக்கு சேவை செய்வார். 

தினமும் பாபா லெண்டிக்கு (கிராம எல்லையிலிருந்த ஓடை) போகும் சுற்றில் தாமும் கூடச் சென்று பாபாவை மசூதிக்கு திரும்பக் கொண்டு வந்து சேர்ப்பார். அவரால் செய்ய முடிந்த சேவைகள் அனைத்தையும்  பிரேமை ததும்பிய மனத்துடன் செய்தார். 

நிமோன்கரின் மனைவியும் மிகுந்த பிரேமையுடன் பகல் நேரத்தில் அவரால் செய்ய முடிந்த உபகாரங்களை உபயோகமான முறையில் செய்து பாபாவுக்கு சேவை செய்தார். 

ஸ்நானம் செய்வதற்கும் சமையல் செய்து கொள்வதற்கும் இரவில் தூங்குவதற்குமே அவர் தம்முடைய இருப்பிடத்திற்கு சென்றார். 

மீதி நேரத்தையெல்லாம் காலையிலும் மதியத்திலும் மாலையிலும் இந்த தம்பதி பாபாவின் அண்மையிலேயே பிரேமையுடன் கழித்தனர். 

இவர்களிருவர் செய்த சேவையை எல்லாம் விரிவாகச் சொல்ல வேண்டுமெனில், இக்காவியம் வெகுவிச்தாரமாக ஆகி விடும். ஆகவே, இந்த அத்தியாயத்திற்கு சம்பத்தப் பட்ட நிகழ்ச்சியை மட்டும் விவரிக்கிறேன். 

தம் மகன் சிறிது உடல் நலமற்று இருந்ததால், நிமோன்கரின் மனைவி பெலாபூருக்கு செல்ல விரும்பினார். கணவரோடு ஆலோசனை செய்த பிறகு, அங்கே போவதற்குத் தயார் செய்து கொண்டார். 

பிறகு, எப்பொழுதும் செய்வது போல் பாபாவிடம் அனுமதி கேட்டார். பாபா சம்மதம் அளித்ததை தம் கணவருக்குத் தெரிவித்தார். 

இவ்வாறாக அம்மையார் பெலாபூருக்கு செல்வதென்பது நிச்சயம் செய்யப் பட்டது. ஆனால், நிமோன்கர் அவரை மறுநாளே திரும்பி வந்து விட வேண்டும் என்று சொன்னார். 


Thursday, 10 April 2014

ஷிர்டி சாயி சத் சரிதம் 

தபால் காரர் காகாவைப் பற்றி விசாரித்துக் கொண்டு வந்தபோது, காகா ஷிரிடியிலிருந்து கிளம்பிவிட்டிருந்தார். கடிதம் பம்பாய்க்கு திருப்பி அனுப்பப் பட்டது. காகாவுக்கு இந்தக் கடிதம் வீட்டில் கிடைத்தது. 

இந்நிகழ்ச்சிக்கு நேர்மாறாக, எவ்வாறு பக்தர்களுக்கே தங்களுடைய நலன் தெரியாதிருந்த போதும், பாபாவுக்கு நன்கு தெரிந்திருந்தது  என்பது பற்றி ஒரு சின்ன கதை சொல்கிறேன்; கேளுங்கள்!

ஒருமுறை நாசிக்கிலிருந்து , புகழ்பெற்ற வக்கீலும் பாபாவுக்கு  பக்தருமான பாபு சாஹேப் துமால் என்பவர் பாபாவை தரிசனம் செய்வதற்காகவே ஷீரடிக்கு வந்தார். 

சீக்கிரமாக தரிசனம் செய்து கொண்டு, பாபாவின் திருவடிகளுக்கு நமஸ்காரம் செய்துவிட்டு பாபாவின் ஆசீர்வாதங்களையும் உதீயையும் பெற்றுக் கொண்டு உடனே திரும்பி விடவேண்டும் என்று நினைத்துக் கொண்டு வந்தார். 

திரும்பும் வழியில் நிபாட் என்னுமிடத்தில் இறங்கிக் கோர்ட்டில் வழக்கு ஒன்றை வாதாட வேண்டிய அவசியம் இருந்தது. 

அவர் அவ்வாறு திட்டமிட்டுக் கொண்டு வந்திருந்தாலும், அவருக்கு எது உசிதம் எது உசிதமில்லை என்று பாபாவுக்கு தெரிந்திருந்தது. ஆகவே, அவர் வீடு திரும்ப அனுமதி கேட்டபோது பாபா மறுத்து விட்டார். 

அனுமதி கொடுக்கத் திட்டவட்டமாக மறுத்து, அவரை ஒரு வாரம் ஷீரடியில் தங்கும்படி செய்துவிட்டார். கோர்ட்டில் வழக்கு விசாரணை மூன்று முறைகள் தள்ளிப் போடப் பட்டு தாமதமேற்பட்டது. 

துமால் ஒரு வாரத்திற்கு மேலாகவே, ஷிரிடியில் தங்கவைக்கப் பட்டார். வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நாள்களில் நீதிபதிக்கு உடல் நலம் பாதிக்கப் பட்டது. 

நீதிபதிக்கு அம்மாதிரியான, பொறுக்க முடியாத வயிற்று வலி அதுவரை வந்ததே இல்லை. அதன் காரணமாக, வேறு வழியில்லாமல் வழக்கு தள்ளிப் போடப்பட்டது. வக்கீல் துமாலை பொறுத்தவரை அவருடைய நேரம் மிகச் சிரத முறையில் உபயோகப் படுத்தப் பட்டது. 


துமாலுக்கு சாயியின் சஹவாசம் என்னும் பெரும் பாக்கியம் கிடைத்தது. துமாலின் கட்சிக்காரருக்கோ கவலையிலிருந்து விடுதலை கிடைத்தது. சாயியின் மீது வைத்த விசுவாத்தினால் எல்லாமே பிரயாசையின்றி நடந்தது. 

பிறகு, பொருத்தமான காலத்தில் துமால் வீடு திரும்ப அனுமதிக்கப் பட்டார். அவருடைய வேலையும் திருப்தி கரமாக முடிக்கப் பட்டது. இதுவே சாயியின் லீலை; ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டது. 

இந்த வழக்கு, நீதிமன்றத்தில் நான்கு மாதங்கள் நடந்தது. நான்கு நீதிபதிகள் ஒருவர்பின் ஒருவராக இவ்வழக்கை விசாரிக்கும்படி ஆயிற்று. முடிவில் வக்கீல் துமால் தம் கட்சிகாரர் குற்றமற்றவர் என்று நிரூபிப்பதில் வெற்றி பெற்றார். 

சாயி ஒருமுறை பரம பக்தரான நானா சாஹேப் நிமோன்கரின் மனைவியின் கட்சிக்காக வாதாடிய நிகழ்ச்சியை சொல்கிறேன்; கேளுங்கள்.


Thursday, 3 April 2014

ஷிர்டி சாயி சத்சரிதம் 

ஷீரடிக்கு போய் பாபாவை தரிசனம் செய்து அவருடைய அருட்கரத்தால் தீண்டப் பட்ட பாக்கியம் செய்தவர்கள் கூட, அவர்கள் விரும்பிய நாள்வரை ஷீரடியில் தங்க முடிந்ததா என்ன? அதற்கு பாபா அல்லரோ அனுமதி கொடுக்க வேண்டும்!

சுயமுற்சிகளால் மட்டும் எவரும் ஷிர்டிக்குப் போகமுடியவில்லை; எவ்வளவு ஆழமான ஆவலிருந்தாலும் விருப்பப் பட்ட நாள் வரை அங்கே தங்க முடியவில்லை. பாபா விரும்பியவரை அங்கே தங்க விட்டு, "போய் வா" என்று அவர் ஆணையிட்டவுடன் வீடு திரும்ப நேர்ந்தது. 

காகா மகாஜனி ஒருமுறை ஷீரடியில் ஒருவாரம் தங்கே வேண்டுமென்ற விருப்பத்துடன் பம்பாயிலிருந்து ஷீரடிக்கு வந்தார். 

ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி ஏற்பாடுகள் முன்கூட்டியே ஆரம்பிக்கப்படும். சாவடி மிக அழகாக அலங்கரிக்கப் படும். பாபாவினுடைய இருக்கைக்கு எதிரில் ஒரு தொட்டில் கட்டப்படும். பக்த ஜனங்கள் ஆனந்தக் கூத்தாடுவர்.

மகிழ்ச்சி தரும் கோகுலாஷ்டமி பண்டிகையின் கோலாகலங்களில்  நேரில் கலந்து கொள்ளும் ஆவலுடன் காகா சில நாள்களுக்கு முன்னமேயே வந்து விட்டார். 

ஆனால், முதல் தரிசனத்திற்குப் போனபோதே பாபா கேட்டார். "ஆக, எப்பொழுது நீர் வீடு திரும்ப போகிறீர்? இதைக் கேட்ட மகாஜனி திடுக்கிட்டார். 

"என்னைப் பார்த்தவுடனே எதற்காக இந்தக் கேள்வியை கேட்டார்? என்று காகா திகைத்துப் போனார். வாஸ்தவத்தில் அவர் ஷீரடியில் எட்டு நாள்கள் தங்க வேண்டுமென்ற ஆவலுடன் வந்திருந்தார். 

பாபா கேள்வியை கேட்ட விதத்திலேயே என்ன பதில் சொல்ல வேண்டும் என்பதைக் காகா நிர்ணயித்துவிட்டார்.  இதனால், காகா கொடுத்த பதில் மிகப் பொருத்தமாக அமைந்தது. 

"எப்பொழுது பாபா ஆக்ஞை இட்டாலும் அப்பொழுது வீடு திரும்பி விடுகிறேன்" என்று காகா பதிலுரைத்தார். இந்தப் பதிலுக்கு  காகா சொல்லிக் கொண்டிருந்தபோதே "நாளைக்கே வீடு திரும்பிவிடும்" என்று பாபா சொல்லி விட்டார். 

பாபாவினுடைய ஆக்ஞையை சிரசின் மேல் ஏற்றுக் கொண்டு, பாபாவை நமஸ்காரம் செய்து விட்டு கோகுலாஷ்டமி விசேஷங்களையும் தள்ளி வைத்து விட்டு பாபாவின் சொற்படியே வீடு திரும்பி விட்டார் காகா. 

வீட்டை அடைந்த பின் அலுவலகத்திற்கு சென்றபோது, முதலாளி அவருடைய வருகைக்காக சஞ்சலத்துடன் வழிமேல் விழிவைத்து பார்த்துக் கொண்டிருந்ததை கண்டார். 

முதலாளியின் மணிக் காரர் திடீரென்று நோய் வாய்பட்டிருந்தார்; ஆகவே, அவருக்குக் காகாவினுடைய உதவி அவரசரமாக தேவைப் பட்டது. காகாவை உடனே திரும்பி வரச்சொல்லி ஷீரடிக்கு ஏற்கனேவே கடிதம் அனுப்பியிருந்தார்!


Thursday, 27 March 2014

ஷிர்டி சாயி சத்சரிதம் 

அவர் விஜயம் செய்த நோக்கம் வேறு; விதி நிர்ணயித்த விளைவு வேறு! இதன் விளைவாக, ஷிர்டி விஜயத்தால் அவருக்குத் தம் குருவினுடைய தரிசனமே கிடைத்தது! 

செவிமடுப்பவர்களே! குருவின் மகாத்மியத்தைப் பிரகாசப் படுத்தும்  சுவாரசியமான இந்தக் காதையை அவசியம் கேளுங்கள். குருபக்தர்களுக்கு  தம்முடைய பிரேமையை சாயி அளிப்பதை நிதர்சனமாக தெரிந்து கொள்ளலாம். 

ஒரு சமயம் நாசிக் என்னும் புண்ணிய ஷேத்திரதிலிருந்து , சடங்கு செல்வரும் ஆசார சிலரும் அக்கினி ஹோதிரியுமான முலே சாஸ்திரி என்பவர் பூர்வபுண்ணிய பலத்தால் ஷீரடிக்கு வந்தார். 

பூர்வ புண்ணியம் இல்லாது எவரும் ஷீரடியில் தங்க முடியாது. தங்குவதற்கு எவ்வளவு நிச்சயம் செய்துகொண்டு  வந்தாலும் சரி, எல்லா சாமர்த்தியங்களும் பாபாவின்முன் செல்லுபடியாகாது போயின. 


ஒருவர் தாரளமாக நினைக்கலாம், 'நான் ஷீரடிக்கு போய் என் விருப்பம் போல் தங்கப் போகிறேன்' என்று. ஆனால், அது அவருடைய கைகளில் இல்லை; ஏனெனில் அவர் முழுக்கவும் வேறொருவருடைய (பாபா) சக்திக்கே உட்பட்டிருக்கிறார். 

நிச்சயமாக நான் வெற்றிபெறுவேன் என்று திடமான தீர்மானத்துடன் வந்தவர்கள் அனைவரும் முயற்சியை கைவிட்டு விட்டுத் தோற்றுப் போனார்கள். சாயி சுதந்திரமான தேவர். மற்றவர்களுடைய அஹந்தை அவர்முன் செல்லுபடியாகாது. 

நமக்கு விதிக்கப்ப பட்டிருக்கும்  நாள் வரும் வரை, பாபா நம்மைப் பற்றி நினைக்க மாட்டார்; அவருடைய மகிமையும் நம் காதுகளில் விழாது. அப்படியிருக்க, தரிசனம் செய்யவேண்டுமென்ற அருள்வெளிப்பாட்டைப் பற்றி என்ன பேச முடியும்?

சமர்த்த சாயியை தரிசனம் செய்யப் போக வேண்டுமென்று எத்தனையோ மக்கள் பிரத்யேகமான ஆவல் வைத்திருந்தனர். சாயி தேகவியோகம் அடையும் வரை அந்த நல்வாய்ப்பு அவர்களுக்கு கிடைக்கவில்லை.!

மற்றும் சிலர் ஷீரடிக்கு போவதைக் காலங்காலமாகத் தள்ளிப் போட்டுக் கொண்டே போயினர். போகலாம், போகலாம் என்று நூலை நீட்டிக் கொண்டே போகும் குணமே அவர்களைப் போகமுடியாமல் செய்து விட்டது. சாயியும் மகா சமாதி அடைந்து விட்டார். 

நாளைக்கு போகலாம், நாளைக்குப் போகலாம் என்று தள்ளிப் போட்டுக் கொண்டே போனவர்கள் சாயியைப் பேட்டி காணும் நல்வாய்ப்பை இழந்தனர்; இவ்விதமாக பச்சாதபமே மிஞ்சியது. கடைசியில், தரிசனம் செய்யும் பாக்கியத்தை கோட்டை விட்டனர். 

இம்மக்களுடைய நிறைவேறாத ஆவல், மரியாதையுடனும் விசுவாசத்துடனும் இக்காதைகளைக் கேட்டால், பால் குடிக்க விரும்பியவர்கள் மோராவது குடித்த அளவுக்கு நிறைவேறும். 


Thursday, 20 March 2014

ஷிர்டி சாயி சத்சரிதம் 

ஜீவராசிகள் அனைத்தையும் அவர் தம்முடன் ஒன்றியனவாக நினைத்தாலும், இதர விஷயங்களில் அவர் பற்றற்றே விளங்கினார். ஒன்றை விடும்பியும் மற்றவற்றின் மேல் பற்றற்று இருந்தாலும், எல்லாவற்றையும் விரோத பாவமின்றி சமமாகவே பார்த்தார். 

சத்ருபாவமும் இல்லை; மித்திர பாவமும் இல்லை; ஆண்டியையும் அரசனையும் சமமாகவே நடத்தினார். மகானுபாவரான சாயி இவ்விதமாகவே இருந்தார். அவருடைய பிர்பாவதைக் கேளுங்கள். 

ஞானிகள் அடியார்களுடைய பக்தியால் கவரப் பட்டு, அவர்களுக்காகத் தங்களுடைய புண்ணிய கோடியிலிருந்து  தாராளமாகச் செலவு செய்கிறார்கள். பக்தர்களை காப்பாற்ற விரையும் பொது, மலையோ பள்ளத்தாக்கோ மற்றெவ்விதமான தடையோ அவர்களைத் தடுத்து நிறுத்த முடியாது. 

ஆன்மிகம் கிலோ என்ன விலை என்று கேட்கும் அஞாநிகளும் உண்டு. மனைவி, மக்கள், செல்வம் என்னும் பிடிப்புகளில் அவர்கள் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள். இப்பரிதாபகரமான அஞ்ஞானி களை விட்டு விடுவோம். 

அஞ்ஞானிகளாயினும், கபடமற்றவர்களாக இருந்தால் இறைவன் கிருபை காட்டுகிறான். ஆனால், இறைவனுக்கு வெறுப்பு முகம் காட்டிப் பிரிந்து எங்கோ போகின்றவர்கள் அவர்களுடைய அஹந்தையிலே எரிந்து போகிறார்கள். 

ஒரு ஞானி கருணையால் உந்தப் பட்டு 'விசுவாசம் துளிர் விடட்டும்" என்ற நோக்கத்தில் அஞ்ஞானி களையும் அரவணைப்பார். ஆனால், ஞான  கர்வியோ எதற்கும் பிரயோஜனமின்றிப் போகிறான். 

பண்டிதர் என்று இறுமாப்புக்கொண்ட மூடமதியாளர், பக்தி மார்க்கத்தை இழிவு படுத்தலாம். அவர்களுடைய சங்கதியே நமக்கு வேண்டா. 

நமக்கு வர்ண விபாகங்களை பற்றிய போராட்டம் வேண்டா; அதைப் பற்றிய தேவையில்லாத, அளவுக்கு மீறிய, பெருமையும் வேண்டா. வர்ணாசிரமத்தை உடும்புபோல் பிடித்துக் கொள்ள வேண்டா;  வேதங்களையே எதிர்க்கும் மெத்தப் பண்டிதத் தனமும் வேண்டா. 

வேதங்களையும் வேதாந்தகளையும் கரைத்து குடித்த பண்டிதர்கல்தாம், ஞான கர்வத்தால் மதோன்மதர்களாக ஆகி பக்தி மார்கத்துக்கு தடையாக செயல் படுகின்றனர்.  அவர்களுக்கு கதி மோக்ஷம் ஏதும் இல்லை. 

அஞ்ஞானி தன்னுடைய விசுவாசமாகிய பலத்தால் பிறவிப் பயத்தை வெல்கிறார். ஆனால், அதிகம் படித்த பண்டிதர்களின் குழப்பங்களையும் புதிர்களையும் எவராலும் எக்காலத்தாலும் தீர்த்து வைக்க முடியாது. 

ஞானிகளின் திருவடிகளை சரணடைவதால் அஞ்ஞானிகளுடைய  அஞ்ஞானம் நல்லெண்ணங்களுக்கும் நல்லுணர்வுகளுக்கும் இடமளித்து விட்டு அஹன்று விடும். ஞான மார்க்க அபிமானிகளின் விகற்பம் (மனக் கோணல்) என்றுமே அழியாது. 

இப்பொழுது தெய்வ பலத்தால் நிகழ்ந்த ஒரு விசித்திரமான நிகழ்ச்சியை சொல்கிறேன், கேளுங்கள்! ஒரு சடங்குச் செல்வருக்கு சாயியுடன் பேட்டி என்னும் எளிதில் கிடைக்காத பாக்கியம் கிடைக்க வேண்டுமென்று நெற்றியில் எழுதப்பட்டிருந்தது.