valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday, 13 December 2012

ஷிர்டி சாயி சத் சரிதம்
கிராமத்து மக்களுக்கு அவர் நாட்டுமருந்துகளைக் கொடுத்துவந்தார். நோயினுடைய குறிகளை அறிந்து மருத்துவம் செய்து அதில் பெருமளவில் வெற்றியடைந்து புகழ் பெற்ற ஹகீமாகத் திகழ்ந்தார்

ஒருமுறை பக்தர் ஒருவருக்குக் கண்கள் இரண்டும் சிவந்து வீங்கிப் போய்  நெருப்புக் கோளங்களைப்  போல ஆகி விட்டன. கண்விழிகளில் ரத்த  நாளங்கள் வெடித்து விடும் போலச் சிவப்பேறிக் கிடந்தன. ஷீரடியில் வைத்தியர் ஒருவரும் கிடைக்கவில்லை.

நம்பிக்கையுள்ள எளிமையான பக்தர்கள் அவருடைய கண்களை பாபாவிடம் காண்பித்தனர். உடனே பாபா செங்கோட்டைக் காய்களை  கொணரச் செய்து அவற்றை அரைத்து இரண்டு உருண்டைகளாக செய்து கொண்டார்.

இம்மாதிரியான உபாதைக்கு சிலர் கர்மாவை உபயோகிப்பர். சிலர் பசும்பாலைப் பஞ்சில் தோய்த்து கண்களின் மேல் வைப்பர். சிலர் சீதள கற்பூரத் தையோ கண்ணுக்கிடும் மையையோ உபயோகிப்பர்.

அனால், பாபாவின் உபாய்மோ யாருமே கண்டறியாதது. செங்கோட்டை  உருண்டைகளை ஒவ்வொன்றாக எடுத்து, ஒவ்வொரு கண்ணாக அப்பி, துண்டுத் துணியால் கட்டுப்போட்டு விட்டார்.

மறுநாள் காலையில் கட்டு அவிழ்க்கப்பட்டு, கண்களின்மீது தாரையாக தண்ணீர் ஊற்றப் பட்டது. வீக்கம் அறவே வடிந்து விட்டது. விழிக் கோளங்கள்  நிர்மலமாக ஆகிவிட்டிருந்தன .

கண் எவ்வளவு நுட்பமான அங்கம்! ஆனால், செங்கோட்டையின் பிசின்கூட எரிச்சலையோ வலியையோ உண்டாக்கவில்லை. நேத்திர ரோகத்தை முழுமையாக முழுமையாக நிவாரணம் செய்து விட்டது. இம்மாதிரி எத்தனையோ அனுபவங்கள்.

பாபாவுக்கு தோதீ-போதி (ஹட யோகம்) தெரிந்தது. எவரும் அறியாமல் ஏதாவதொரு மறைவிடத்திற்கு சென்று குளியலை முடித்து விட்டு, குடல்களை (வாய்வழியாக) வெளியே கொண்டு வருவார். பிறகு குடலை நன்றாக கழுவி உலர்வதற்காக தொங்கவிடுவார்

மசூதியிலிருந்து கிணறு  இருந்த அதே தூரத்தில் ஓர் ஆலமரம் இருந்தது. ஆலமரதுக்கப்பால் மற்றொரு கிணறு இருந்தது. அந்தக் கிணற்றுக்கு அவர் இரண்டு நாள்களுக்கு ஒருமுறை செல்வார்.

நண்பகலில் கொளுத்தும் வெய்யிலில் யாரும் பார்த்துக் கொண்டிருக்கவில்லை என்று தெரிந்து கொண்டு, அவரே கிணற்றிலிருந்து தண்ணீர் இழுத்து முகத்தையும்  வாயையும் கழுவிக் கொள்வார்.

இம்மாதிரியான ஒரு சந்தர்பத்தில், அவர் குளிப்பதற்கு உட்கார்ந்து கொண்டிருந்த போது  வேகமாகக் குடல்களை வெளியே எடுத்து அவ்விடத்திலேயே கழுவ ஆரம்பித்தார்



Thursday, 6 December 2012

ஷிர்டி சாயி சத்சரிதம்

நற்செய்கையோ  அல்லது துற்செய்கையோ, எல்லாருடைய செய்கைகளும் மற்றும் பக்தருக்கு மட்டுமே தெரிந்த மர்மங்களும் பாபாவுக்குத் தெரிந்திருந்தன. அதைப் பற்றியோ சூசகமோ குறிப்போ சொல்லி பக்தரை ஆச்சரியத்தில் ஆழ்த்திவிடுவார்.

ஒன்றுமறியாதவர்  போன்று நடித்த ஞானக்கடல் அவர். உலகம் தம்மை ஏற்றுக் கொள்வதற்காகவும் புகழுக்காகவும் பாடுபடுவதென்பது அவருக்கு மகா எரிச்சலூட்டிய விஷயம். இதுவே சாயியின் லக்ஷணம்.

மனித தேஹத்தில் இருந்தாலும் அவருடைய செய்கைகள் தெய்வங்களுடையதைப் போன்று அபூர்வமானவை. பாபா ஷீரடியில் வாழும் பிரத்யக்ஷமான தெய்வம் என்றே அனைத்து  மக்களும் பாவித்தனர்.

பாபாவினுடைய அற்புதச் செயல்கள் என்னே ! பாமாரனாகிய நான் அதை எவ்வளவுதான் வர்ணிக்க முடியும்! மூர்த்திகளுக்கும் கோயில்களுக்கும் பாபா செய்த புனருத்தான பணிகள் அபாரமானவை.

ஷிர்டியிலிருந்த சனி, கணபதி, சங்கர் - பார்வதி, கிராம தேவி, மற்றும் மாருதி கோயில்களினுடைய சீரமைப்பு தாத்யா பாட்டீல்  மூலம் செய்யப் பட்டது.

மக்களிடமிருந்து பாபா தக்ஷிணை ரூபமாக வாங்கிய பணத்தில் ஒரு பகுதி தர்ம காரியங்களுக்காகச் செலவிடப்பட்டது. ஒரு பகுதி மக்களுக்கு வழங்கப் பட்டது.

சிலருக்கு 30 ரூபாய், சில பேருக்கு 10 ரூபாய், 15 ரூபாய் அல்லது 50 ரூபாய் என்று, பாபா யாருக்கெல்லாம் கொடுக்க வேண்டுமென்று விரும்பினாரோ அவர்களுக்கெல்லாம் வழங்கினார்.

இந்தப் பணம் அனைத்தும் தருமத்திலிருந்து வந்ததே; வாங்கிக் கொண்டவர்களும் அதை தருமம்  என்றே கருதினர். பாபாவும் அத்  தொகைகள் நல்ல காரியங்களுக்காகச் செலவிடப் படவேண்டுமென்று விரும்பினார்.

இவ்விதமாக சாயி தரிசனத்தால் சிலர் ஆரோக்கியமாகவும் திடகாத்திரமாகவும் ஆனார்கள். பலர் குஷ்டரோகத்திலிருந்து நிவாரணமடைவார்கள் . பலர் ஷேமத்தை அடைந்தார்கள்.

பாபாவின் பாதங்களை பணிந்ததாலேயே மை ஏதும் இட்டுக்கொள்ளாமல்  பல குருடர்கள் கண் பார்வை பெற்றனர். மூலிகைத் தைலம் ஏதும் தேய்க்காமலேயே முடவர்கள் கால்களில் சக்தி பெற்றனர்.

பாபாவினுடைய  மகிமை அபாரமானது. எவராலும் அளவிடமுடியாதது. நான்கு திசைகளிலிருந்தும் மக்கள் அவருடைய தரிசனத்திற்காக ஷிர்டியை நோக்கி வந்தனர்.

காலைகடன்களை முடித்த பின், சில நாள்களில் குளித்து விட்டும், சில நாள்களில் குளிக்காமலும் துனியின்  அருகில் ஒரே இடமாக தினமும் தியானத்தில் அமர்ந்திருப்பார்.

இடுப்பைச் சுற்றி ஒரு சுத்தமான  வேட்டியை கட்டிக் கொண்டு, நீளமான சட்டையை போட்டுக்கொண்டு, தலையில் அழகான வெள்ளை நிறத் தலைப் பாகை அணிந்து கொண்டிருப்பார். ஆரம்ப காலத்தில் இதுவே அவருடைய உடை.

Thursday, 29 November 2012

ஷிர்டி சாயி சத்சரிதம்

அடுத்த ஆண்டு விளைச்சல் குறைந்துபோனால் பற்றாக்குறையைச்  சரிக் கட்ட உதவுமென்ற நோக்கத்தில், விவசாயிகள் நடப்பு ஆண்டின் அறுவடையைப் பெருமளவில் சேமித்து வைக்கிறார்கள்.

அவ்வாறே பாபா ஒரு மூட்டை கோதுமையைக் கொள்முதலாக எப்பொழுதும் வைத்திருந்தார். மாவு அரைப்பதற்கு ஓர் எந்திரமும் சலிப்பதற்கு ஒரு முறமும் ஜல்லடையும் மசூதியில் இருந்தன. வாழ்க்கை நடத்துவதற்கு வேண்டிய பொருள்கள் குறைவில்லாமல் இருந்தன.

முற்றத்தில் ஓர் அழகான துளசி மாடமும் இருந்தது. அவ்விடத்திலேயே அழகான வேலைப்பாடுகளுடன் கூடிய மரத்தாலான ஒரு தேரும்  இருந்தது.

பூர்வஜன்மங்களில் செய்த புண்ணியச் செயல்களின்  பயனாகவே நாம் ஓர் அவதார புருஷரை சந்தித்திருக்கிறோம். சாகும்வரை இழந்துவிடாதவாறு, உங்களுடைய மனமென்னும் பெட்டகத்தில் அவரை வைத்து நன்கு பூட்டி விடுங்கள்.

பூர்வ ஜன்மங்களில் சம்பாதித்த பாக்கியமே அவருடைய பொன்னடிகளுக்கு நம்மை இழுத்திருக்கிறது.  இதுவே நமக்கு மனதில் சாந்தியையும் உலகியல் தொல்லைகளில் இருந்து விடுதலையும் அளிக்கிறது.

வருங்காலத்தில் எவ்வளவு செல்வச் செழிப்பும் சந்தோஷமும் வந்தாலும், ஸ்ரீ சமர்த்த  சாயியின் புனித சங்கத்தால் தற்காலத்தில் எனக்கு அருளப்படும் சந்தோஷத்திற்கு எதவுமே இணையாகாது.

தன்னிலேயே மூழ்கி தன்னிலேயே மகிழும் சாயியின் அற்புதமான செயல்பாடுகளை நான் எவ்விதம் முழுமையாக வர்ணிப்பேன்? எவரெவர் அவருடைய பாதங்களிலேயே  மூழ்கி மனதுடன் இருக்கின்றனரோ, அவரவர் சாயியால் விசுவாசம் நிலைபெறும்படி செய்யப் படுகின்றனர்.

தண்டமும் மான் தோலும் ஏந்திய தவசிகள், ஹரித்துவாரம் போன்ற புனிதத் தலங்களில்  வசிப்பவர்கள், சந்நியாசிகள், சாமியார்கள், துறவிகள், உதாசீகள், இம்மாதிரியாகப் பலவகையான சாதுக்கள் பாபாவிடம் வந்தனர்.

பாபா அவர்களிடமெல்லாம் சிரித்துப் பேசி நன்றாகப் பழகினார் 'அல்லாமாலிக்' அவருடைய உதடுகளில் அகண்டமாகத் தவழ்ந்தது, வாதமும் விதண்டையும் அவருக்குப் பிடிக்காது. அவருடைய தண்டம் (சட்கா ) கை வீச்சுக்குள்ளேயே எப்பொழுதும் இருந்தது.

தவத்தை மேற்கொண்ட அவர், சாந்தமும் தாந்தமும் நிறைந்தவராக இருந்தார். அவருடைய பேச்சில் பூரணமான வேதாந்தமும் பொழிந்தது. கடைசி வரை பாபா வினுடைய உண்மையான பண்புகளை எவராலும் எடை போட முடியவில்லை

அரசராயினும் சரி, ஆண்டியாயினும் சரி, எல்லாரும் அவரால் எல்லா விதங்களிலும் ஒரே மாதிரியாக நடத்தப் பட்டனர். இலக்குமியின் புத்திரனாக இருப்பினும் சரி, ஓட்டாண்டியாக இருப்பினும் சரி, அவருடைய அளவுகோல் ஒன்றே!


Thursday, 22 November 2012

ஷிர்டி சாயி சத் சரிதம் 
 
கோகுலாஷ்டமி (ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி) பண்டிகையன்று கோபாலகாலா கொண்டாட வைப்பார். அது போன்றே, ஈத் பண்டிகையின்போது முஸ்லீம்கள் அவர் வாழ்ந்த மசூதியில் நமாஸ் செய்வதற்குத் தடை ஏதும் சொல்லவில்லை.

ஒருமுறை முஹர்ரம் பண்டிகை நெருங்கியபோது சில முஸ்லீம்கள் ஒரு தாபூதைக் (பாவாடையைக்) கட்டிக் கொண்டு கிராமத்தினுள் ஊர்வலமாக எடுத்து செல்லவேண்டுமென்று விரும்பினர்.

பாபாவின் அனுமதி கிடைத்த பிறகு ஒரு பாடை கட்டப்பட்டு நான்கு நாள்கள் வைக்கப் பட்டிருந்தது. ஐந்தாவது நாள், மனத்தில் சுகமும் இன்றி துக்கமும் இன்றி அது காலி செய்யப் பட்டது.

முஸ்லீம் என்று நினைத்தால் அவருக்குக் காத்து குத்தப் பட்டிருந்தது. ஹிந்து என்று நினைத்தால் அவருக்கு சுன்னத் செய்யப் பட்டிருந்தது. அவதார புருஷரான சாயி ஹிந்துவும்  அல்லர்; முஸ்லீமும் அல்லர்.

ஹிந்துவென்று சொன்னால், அவர் சதா மசூதியிலேயே வாழ்ந்தார். முஸ்லீம் என்று சொன்னால், இரவு பகலாக மசூதியில் அக்கினி எரிந்து கொண்டிருக்கிறது.

இந்த மசூதியில் எந்திரத்தில் மாவு அரைக்கப்பட்டது. சங்கும் மணிகளும் முழங்கின. அக்கினியில் ஹவிஸ் (படையல்) இடப்பட்டது. இச் சூழலில் அவரை முஸ்லீம் என்று எவ்வாறு சொல்ல முடியும்? (மேற்கண்டவை இஸ்லாமிய மதத்தினருக்கு சம்மதம் இல்லாதவை)

மசூதியில் சதா பஜனை நடந்தது. அன்னதானமும் நடந்தது. ஹிந்துக்கள் அவருக்குப் பாத பூஜை செய்தனர்; அவர் எப்படி முஸ்லீம் ஆக முடியும்?

முஸ்லீமாக இருப்பின் உயர்குல பிராமணர்கள் எப்படி அவரை வணங்கினர்? அக்கினி ஹோத்திரம் செய்யும் வேதம் ஓதிய பிராமணர்கள், மடி, ஆசார நியதிகளை தூக்கி எறிந்துவிட்டு, எப்படி அவருக்கு நமஸ்காரம் செய்தனர்?

இவ்விதமாக மக்கள் வியந்து போனார்கள். இது எவ்வாறு நடக்க முடியும் என்று நேரில் கண்டு கொள்ள வந்தவர்களும் மேற்சொன்னவாறே நடந்து கொண்டார்கள்! தரிசனம் செய்தவுடனே ஊமையராகிப் போனார்கள்!

சதாசர்வ காலமும் ஹரியைச் சரணடைந்தவரை ஹிந்துவேன்றோ முஸ்லீமேன்றோ எவ்வாறு சொல்ல முடியும்? அவர் பிற்படுத்தப் பட்டவராக இருக்கலாம்; அல்லது ஜாதியே எதுவும் இல்லாதவராகவும் இருக்கலாம். ஜாதி இவர் விஷயத்தில் அணுவளவு கூடப் பிரமாணம் ஆகாது.

தேஹாபிமானம் இல்லாத சித்தருக்கு ஹிந்துவோ, முஸ்லீமோ, கீழ் ஜாதியோ, மேல் ஜாதியோ, எந்த வித்தியாசமும் இல்லை. ஜாதிப் பாகுபாடு என்னும் எண்ணமே அவருக்கு இல்லை.

பக்கீர்களுடன் அமர்ந்து உணவு உண்ணும்போது அவர் மாமிசம் சாப்பிடுவார்; சமயம் நேர்ந்தபோது மீனும் சாப்பிடுவார். சோற்றை நாய் தீண்ட நேர்ந்து விட்டாலும்  சரி, வெறுப்படைந்து முகம் கோண மாட்டார்.



Thursday, 8 November 2012

ஷிர்டி சாயி சத் சரிதம்

புராதனமான கோயில்களைப் புதுப்பிப்பதில் பாபா எவ்வளவு பிரீதியுடையவராக இருந்தார் என்ற முந்தய காதையின் தொடர்ச்சியை நினைவு கூர்வோம்.

பரோபகார ரீதியில் பாபா எவ்வாறு சிரமங்களை மேற்கொண்டார் என்பது பற்றியும், பக்தர்களுடைய துக்கங்களையும் உபாதிகளையும்  தம்முடலில் ஏற்றுக் கொண்டு அவர்களுக்காகத் தம்முடலை வருத்திக் கொண்டு எவ்வாறு அவர்களைக் காத்தருளினார் என்பது பற்றியும்,

சமாதி நிலையில் எவ்வாறு கண்டயோகம், தோதி - போதி, இத்யாதி பிரயோகங்களை செய்தார் என்பது பற்றியும், சில சமயங்களில் உடம்பிலிருந்து தலை, கை, கால் ஆகிய அவயங்களை பிரித்தெடுத்து வைத்து, மறுபடியும் அவற்றை முன்போலவே எப்படி ஒன்று கூறினார் என்பது பற்றியும் இப்பொழுது சொல்கிறேன்.

ஹிந்து என்று கருதினால் அவர் பார்வைக்கு ஒரு முஸ்லீமைப்  போல இருந்தார். முஸ்லீம் என்று நினைத்தால் அவர் ஒரு ஹிந்துவின் லக்ஷணங்களுடன் விளங்கினார். இந்த அபூர்வமான  அவதாரத்தை எந்தப் பேரறிக்னரால் விளக்க முடியும். ?

அவர் ஹிந்துவா, முஸ்லீமா என்று எவராலும் அணுப்  பிரமாணமும் கண்டு பிடிக்க முடியவில்லை. இரண்டு வர்க்கத்தினரை யும் அவர் ஒன்று போலவே நடத்தினார்.

ஸ்ரீ ராம நவமி ஒரு ஹிந்துப் பண்டிகை. ஆனால், அவர்தான் அதைக் கொண்டாட வைத்தார். சபா மண்டபத்தில் தொட்டில் கட்டிக் கதாகாலட் சேபமும்  நடக்கும்படி செய்தார்.

மசூதியின் எதிரிலிருந்த சவுக்கதில் தொட்டில் கட்டப்படும். ஸ்ரீ ராம் ஜனன கதா காலத்செபமும்  செய்ய வைப்பார். அன்றிரவே முஸ்லீம்களுக்குச் சந்தக் கூடு ஊர்வலம் நடத்தவும் அனுமதி தந்தார்.

முஸ்லீம்கள் எவ்வளவு பேர்களைச் சேர்க்க முடியுமோ அவ்வளவு பேர்களையும் சேர்த்து, சந்தனக் கூடு ஊர்வலம் மரியாதையுடன் நடத்தப்பட்டது. இவ்விதமாக அவர் இரண்டு பண்டிகைகளையும் மகிழ்ச்சியுடன் சரிசமமாகக் கொண்டாட வைத்தார்.

ஸ்ரீ ராம நவமி உற்சவ சமயத்தில் மல்யுத்தப் போட்டிகள் நடத்துவதிலும் குதிரைகள், தோடாக்கள் , தலைப் பாகைகள் போன்ற பொருள்களைப் பரிசாக அளிப்பதிலும் மிக மகிழ்ச்சியடைந்தார். 


Thursday, 1 November 2012

ஷிர்டி சாய் சத் சரிதம்

தக்ஷிணை கேட்டு வாங்கிய பணம் பழைய கோயில்களைப் புதிப்பிக்க எவ்வாறு செலவிடப் பட்டது என்பது பற்றியும் தோதீ - போதீ, கண்ட யோகம் போன்ற யோகப் பயிற்சிகளில் பாபா தம் உடலை வருத்திக் கொண்ட விவரமும் -

எவ்வாறு பாபா மற்றவர்களின் நல்வாழ்வுக்காக கஷ்டப் பட்டார் என்பது பற்றியும் பக்தர்களின் சங்கடங்களை எவ்வாறு நிவாரணம் செய்தார் என்பது பற்றியும் - இவையனைத்தும் அடுத்த அத்தியாயத்தில் தெளிவாகச் சொல்லப் பட்டு கதை கேட்பவர்களைத் திருப்தி செய்யும்.

எல்லாருக்கும் சேமம் உண்டாகட்டும்! ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப் பட்டு, சாயி பக்தன் ஹெமாத் பந்தால் இயற்றப் பட்ட, "ஸ்ரீ சமர்த்த சாயி சத் சரித்திரம்" என்னும் காவியத்தில், 'ஸ்ரீராம ஜன்ம உற்சவம்" என்னும் ஆறாவது அத்தியாயம் முற்றும்.

ஸ்ரீ சத்குரு சாயி நாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.


Thursday, 25 October 2012

ஸ்ரீ சாயி சத் சரிதம்

மக்களனைவரும் செயலற்றுப் போனார்கள்! 'இன்று என்ன என்றுமில்லாதவாறு துர்ச்சகுணம்? தாத்யா பாடீலை இந்த ஆபத்திலிருந்து விடுவிப்பது எப்படி?" என்று மக்கள் வியந்தனர்.

பாகோஜி சிந்தே (பாபாவுக்கு பணியால் போல் சேவை செய்த அடியவர்.) தைரியமாகவும் உஷாராகவும் முன்னேறினார். பாபாவிடம் சுலபமாக மாட்டிக்கொண்டு அவருடைய கோபத்திற்கு இரையானார். பாபாவால் இஷ்டம் போல் துவம்சம் செய்யப் பட்டார்.

மாதவராவும் பாபாவிடம் மாட்டிக்கொண்டார். பாபா அவர்மீது சில செங்கற்களை எறிந்தார். தாத்யாவை விடுவிக்க முயன்றவர்கள் அனைவரும் அதே போன்று செங்கற்களால் தாக்கப் பட்டார்கள்.

'இந்நிலையில் யார் பாபாவை தைரியமாக நெருங்கித் தாத்யாவை விடுவிக்க முடியும்?" என்று மக்கள் யோசித்துக் கொண்டிருந்த போதே பாபாவின் கோபம் தணிய ஆரம்பித்தது.  கடைசியில் பாபா அமைதியடைந்தார்.

உடனே ஒரு ஜவுளிக்கடைக்காரர் அழைக்கப் பட்டு, தங்கச் சரிகை போட்ட தலைப் பாகை கொண்டு வரச் செய்யப் பட்டது. ஓர் அரசரிடமிருந்து வரும் மரியாதையைப் போன்று பாபாவே அத் தலைப் பாகையைத் தாத்யாவுக்கு கட்டி விட்டார்.

இந்த திடீர்க் கோபத்திற்கும் வசவுகளுக்கும் தாத்யாவின்மீது நடந்த தாக்குதலுக்கும் என்ன காரணம் என்பது மக்களுக்கு இன்னும் புரியாத புதிராகவே இருந்தது.

எக்காரணம் பற்றி அவர் கடும் கோபமடைந்தார்? எப்படிக் காண நேரத்தில் சாந்தியடைந்து சந்தோசம் ஆகிவிட்டார்? இதற்கெல்லாம் காரணம் என்ன என்பது ஒருவருக்கமே புரியவில்லை.

சில சமயங்களில் பாபாவினுடைய மனம் சாந்தமாக இருக்கும்; எல்லாருடனும் பிரீதியுடன் பேசுவார். சில சமயங்களில் திடீரென்று எக்காரணமும் இல்லாமல் அவருடைய மனம் கொந்தளிக்கும்.

பாபாவினுடைய காதைகள் இம்மாதிரியானவை; ஒன்றைச் சொல்லிக் கொண்டிருக்கும்போதே இன்னொன்று மனதில் தோன்றுகிறது; எதை முதலில் சொல்வது, எதைப் பிறகு சொல்வது என்று பிரவசனம் செய்பவரின் மனம் திக்கு முக்காடுகிறது. இந்தத் தேர்வில் பாரபட்சம் காட்டுவது முறையாகாது.

எந்நாளும் பாரபட்சம் காட்ட முடியவில்லை. செவிமடுப்பவர்களின், கதை கேட்க வேண்டுமென்ற ஆவலைத் திருப்தி செய்யும் வகையில், எக்காதை எச்சமயத்திற்கு பொருத்தமாக இருக்கிறதோ, அக்காதை அச்சமயத்தில் அவர்களுக்கு வந்து சேரும்.

அடுத்த அத்தியாயத்தில், பாபா ஹிந்துவா முஸ்லீமா என்பது பற்றிய வாய்மொழி விவரங்களையும் முதியோர்களிடம் நான் கேட்டவாறு ஆதிகாலக் கதைகளையும் என்னுடைய சக்தி அனுமதிக்கும் அளவில் சொல்கிறேன்; கேளுங்கள்.